Tuesday, May 06, 2014

நாத்திகன் எப்போது உருவாகிறான் - 2

இறைவனை ஒரு மாயப் பொருளாக அதாவது மனிதனின் கற்பனைக்கு எட்டாத ஒரு பொருளாக சித்தரிப்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. 

ஏன்?

அறிவியலின் வளர்ச்சியும்  இதற்கு ஒரு காரணம். 'Is God there?' என்ற வினாவை கூகுள் தளத்தில் ஏற்றி பார்த்தால் கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்பதை ஆணித்தரமாக கூறும் இணையதளங்கள்தான் மிக அதிக அளவில் விடையாக கிடைக்கின்றன.

ஆத்திகர்களும் நாத்திகர்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடைய வாதத்தை நிரூபிக்க பல சான்றுகளை எடுத்துவைப்பதைக் காண முடிகிறது. 

கடவுள் இருக்கிறார் அவரால்தான் இவ்வுலகம் படைக்கப்பட்டது என்று வாதிடும் இணையதளங்களும் கூட கிறிஸ்துவ பைபிளில் உள்ளவற்றை மேற்கோள் காட்டியே வாதிடுகின்றன. அதை மறுப்பவர்களும் கூட பைபிளிலுள்ள சில வசனங்களை மேற்கோள் காட்டித்தான் அவை எவ்வளவு பொய்யானவை என்று நிருபிக்க முயல்கின்றன.

உண்மையில் பார்க்கப்போனால் இன்று உலகெங்கும் உள்ள இறை மறுப்பாளர்களுள் தொன்னூறு விழுக்காடுக்கும் மேற்பட்டவர்கள் ஒரு காலத்தில் கிறிஸ்தவர்களாக இருந்தவர்கள்தான் போலுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை இன்று நாத்தீகம் பேசும் பலரும் பரம்பரை பரம்பரையாக ஆத்திக குடும்பத்திலிருந்து வந்தவர்கள்தான். ஏனெனில் இன்று கிறிஸ்த்துவம், இஸ்லாமியம்,  புத்தம் என்று பல மதங்களை சார்ந்திருப்பவர்கள் அனைவருமே ஒரு காலத்தில் இந்துக்களாக இருந்தவர்கள் என்பதையும் மறந்துவிடக்கூடாது. அன்னிய நாட்டினரின் வருகையால் ஏற்பட்ட மாற்றங்களே இவை!

இன்று இறைவன் இல்லை என்பதை நிரூபிக்க பைபிளை கையில் எடுத்துக்கொள்வதற்கு முக்கிய காரணம் உலகிலுள்ள மதங்களில் மிகவும் பழமையான மதங்களில் ஒன்றும் பெரும்பான்மையான மக்களால் பின்பற்றப்படும் மதங்களில் ஒன்றுமான கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தவர்கள் நம்பும் பைபிளில்தான்  இந்த உலகத்தை படைத்தவர் அவர்தான் என்று கூறப்பட்டுள்ளது. உலகம் மற்றும் அதன் முதல் மனிதன் ஆதாம் படைக்கப்பட்டதைக் கூறும் பைபிளின் முதல் பாகமான பழைய வேதாகமத்தில் (Old Testament) கூறப்பட்டுள்ளவை அனைத்துமே இஸ்லாமியர்களின் குரானிலும் கூறப்பட்டுள்ளதும் உண்மைதான். ஆயினும் இன்று உலகிலுள்ள பல பிரபல இறைமறுப்பாளர்களின் அடிப்படை வாதமே பைபிளில் காணப்படும் இந்த தகவலை மறுப்பதில்தான் துவங்குகிறது. அதாவது, உலகம் எவராலும் படைக்கப்படவில்லை, அது காலங்காலமாகவே இருந்து வருகிறது என்பதில் இருந்துதான் இறை மறுப்பு துவங்குகிறது. 

இந்த உலகம மற்றும் அதிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் படைத்தவர் இறைவன் என்கிற வாதமும் ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து அதில் தன் ஆவியை ஊதி ஆதாம் என்கிற உலகின் முதல் மனிதனைப் படைத்தார் என்கிற தகவல்  கிறிஸ்தவர்களின் பைபிளிலும் இஸ்லாமியர்களின் குரானிலும்தான் உள்ளது. இதே போன்றதொரு தகவல் வேறெந்த மதத்தைச் சார்ந்த நூல்களிலும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இவ்விரண்டு மதங்கள் தோன்றுவதற்கு சுமார் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய இந்து மதத்தில் உலகம் படைக்கப்பட்டதைக் குறித்து சொல்லப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறினால் பயனுள்ளதாக இருக்கும். 

உலகம் இறைவனால் படைக்கப்படவில்லை என்றால் அது எப்போது, எவ்வாறு உருவானது?

பெரு வெடிப்புக் கொள்கை(Big Bang Theory)

'வாயுக்களும், தூசுக்களும் ஒன்றாகச் சேர்ந்து உருவான பொருள்கள் வியாழனை ஒத்த ஆனால் மிக அடர்த்தியான ஒரு பொருளுக்குள் அடைக்கப்பட்டிருந்தது. அப்பொருள் ஒரு வானியல் காரணத்தாலும் அழுத்தத்தாலும் இரசாயன மாற்றத்தாலும் திடீரென வெடித்துச் சிதறி அண்டம் முழுவதும் ஒரே தூசு மண்டலமாக பரவியது. ஒரே புகை மூட்டமாக இருந்த அந்த தூசுகள் வாயுக்கள் ஈர்ப்பு விசையின் காரணமாக படிப் படியாக பெரிதாகி பூமி மற்றும் விண்ணில் காணப்படுகின்ற சூரியன், சற்திரன் மற்றும் அனைத்துக் கிரகங்களையும் நட்சத்திரங்களையும் தோற்றுவித்தது.' என்கிறது.

உலகம் படைக்கப்பட்டதற்கும் இறைவனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதில் துவங்கும் விவாதம் இறுதியில் 'ஆகவே அப்படியொரு இறைவன் இல்லவே இல்லை' என்பதுடன் முடிவடைகிறது. 

அப்படியானால் உலகம் தோன்றியது ஒரு மூல கிரகத்திலிருந்துதான் என்பது பொருளாகிறது. ஆனால் நாம் உலகம் என்று குறிப்பிடும் பூமியில் (earth) மட்டுமே அனைத்து ஜீவராசிகளும் வாழ்வதற்கு ஏதுவான சூழல் உள்ளது என்கிறார்களே அதெப்படி?

ஒரு மூலப் பொருளில் இருந்து வெடித்து சிதறிய கிரகங்கள் அல்லது கோள்கள் அனைத்துமே ஒரே தன்மை வாய்ந்தவையாகத்தானே இருக்க முடியும்? இங்கு வசிக்கும் கோடானு கோடி ஜீவராசிகளில் ஓரிரண்டு விழுக்காடாவது பூமியைத் தவிர வேறு ஏதாவது கிரகங்களில் வாழ்வதாக தகவல்கள் இல்லையே? ஏன்?

இறைவன் இருக்கிறார் அவரால்தான் நாம் வாழும் பூமி (earth) படைக்கப்பட்டது என்பதை மெய்ப்பிக்க பல சான்றுகள் உள்ளன என்கிறார் ஒரு இறைவனை நம்பும் ஒரு அறிவியல் ஆய்வாளர். அவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கத்தை சுருக்கமாக கீழே அளித்துள்ளேன்:


1. நம்முடைய பூமியை (Earth) எடுத்துக்கொள்வோம். அதை கடவுள் படைக்கவில்லை அது பல மில்லியன் ஆண்டுகளாகவே இருந்துவருகிறது என்கிறார்கள். வேறு சிலர் ஒரு கிரகம் வெடித்து பல துகள்களாக சிதறின என்றும் அவ்வாறு சிதறியவைகளுள் ஒன்றே நாம் வாழும் பூமி என்றும் கூறுகின்றனர்.

அப்படியானால்

அ) நம்முடைய பூமி மட்டும் எப்படி நாம் அதாவது மனிதர்களும் மற்ற மிருகங்களும் செடி கொடிகளும் வாழ்வதற்கு ஏதுவானதாக உள்ளது? குறிப்பாக அதனுடைய அளவையும் (Size)வும் வடிவத்தையும்  (Shape) எடுத்துக்கொள்வோம். நம்முடைய பூமியின் அளவுக்கும் (size) அதனுடைய ஈர்ப்பு சக்திக்கும்(Gravity ஏற்றவாறு அதனைச் சுற்றிலும் வளிமண்டலத்தில் சுமார் ஐம்பது மைல் சுற்றளவில் நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் கலந்த போர்வையால் (இதைத்தான் ozone layer என்கிறோம்) மூடப்பட்டுள்ளது என்பதை யாராவது விளக்குவீர்களா? நம்முடைய பூமி சற்று சிறிதாக இருந்திருந்தால் இந்த போர்வை சாத்தியமாக இருந்திருக்காது (உதாரணம்: மெர்க்குரி). மாறாக அது பெரிதாக இருந்திருந்தால் அதனுடைய  வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் வாயுவும் அதிக அளவில் கலந்து ஜீவராசிகள் வாழ்வதற்கு ஏற்றதாக இருந்திருக்க வாய்ப்பில்லை (உதாரணம்: ஜூப்பிட்டர்), 

இதிலிருந்து என்ன தெரிகிறது?

தொடரும்..

12 comments:

வே.நடனசபாபதி said...

//இதிலிருந்து என்ன தெரிகிறது?//
புரிந்ததுபோலவும் இருக்கிறது. புரியாதது போலவும் இருக்கிறது. விவாதத்தை தொடங்கிய நீங்கள் தான் விளக்கவேண்டும்.

Bagawanjee KA said...

என்ன தெரிகிறது ?சஸ்பென்சாய் நிறுத்திட்டீங்களே ,அடுத்தது படிக்க ஆவல் !
த ம 1

காரிகன் said...

பல வருடங்களுக்கு முன்பு இது போன்ற ஒரு விவாதத்தில் என்னை ஒருவர் கேட்டார்; " உலகில் மனிதனே இல்லை என்றால் கடவுள் இருப்பாரா?" சிந்திக்க வேண்டிய கேள்வி இது என்று நினைக்கிறேன்.

டிபிஆர்.ஜோசப் said...வே.நடனசபாபதி said...
//இதிலிருந்து என்ன தெரிகிறது?//
புரிந்ததுபோலவும் இருக்கிறது. புரியாதது போலவும் இருக்கிறது. விவாதத்தை தொடங்கிய நீங்கள் தான் விளக்கவேண்டும்

நிச்சயமாக. நாளைய பதிவில் அதற்கு பதில் இருக்கும்.

உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...

Bagawanjee KA said...
என்ன தெரிகிறது ?சஸ்பென்சாய் நிறுத்திட்டீங்களே ,அடுத்தது படிக்க ஆவல் !

ஒரு கட்டுரை தொடரில் ஓரளவு சஸ்பென்ஸ் இருந்தால்தான் அடுத்த பதிவை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும் அல்லவா? நாளை சொல்கிறேன்.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...

5:04 PM காரிகன் said...
பல வருடங்களுக்கு முன்பு இது போன்ற ஒரு விவாதத்தில் என்னை ஒருவர் கேட்டார்; " உலகில் மனிதனே இல்லை என்றால் கடவுள் இருப்பாரா?" சிந்திக்க வேண்டிய கேள்வி இது என்று நினைக்கிறேன்


உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இணையத்தில் இன்று அதிக நாத்திக ஆத்திக விவாதங்களே நடைபெற்றுவருகின்றன. நாத்திகர்களின் கையே ஒங்கி இருப்பதான தோற்றம் இருக்கிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

பதிலை அறிய ஆவலுடன்...

Packirisamy N said...

//நம்முடைய பூமி மட்டும் எப்படி நாம் அதாவது மனிதர்களும் மற்ற மிருகங்களும் செடி கொடிகளும் வாழ்வதற்கு ஏதுவானதாக உள்ளது? //

இதனை உறுதியாகக் கூறமுடியாது. நமது சூரியக் குடும்பம்போல எத்தனையோ சூரியக் குடும்பங்கள் இருக்கக் கூடும் என்று நினைக்கிறேன். தொடர்கிறேன்.

டிபிஆர்.ஜோசப் said...

10:09 PM Packirisamy N said...
//நம்முடைய பூமி மட்டும் எப்படி நாம் அதாவது மனிதர்களும் மற்ற மிருகங்களும் செடி கொடிகளும் வாழ்வதற்கு ஏதுவானதாக உள்ளது? //

இதனை உறுதியாகக் கூறமுடியாது. நமது சூரியக் குடும்பம்போல எத்தனையோ சூரியக் குடும்பங்கள் இருக்கக் கூடும் என்று நினைக்கிறேன். தொடர்கிறேன்.

எத்தனையோ சூரியக் குடும்பங்கள் உள்ளன என்று கூறிவருகின்றனரே தவிர இதுவரை அது எங்குள்ளது என்று யாராலும் கூற முடியவில்லையே!

தி.தமிழ் இளங்கோ said...

இறைவனை நம்பும் ஒரு அறிவியல் ஆய்வாளர் என்று சொன்னீர்கள். அவரது பெயரைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அடுத்த பதிவை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.


இந்தியாவில் சார்வாகம் எனப்படும் லோகாயதம் - நாத்திகம் சம்பந்தப்பட்டது. படைத்தவன் யார் என்று வினவும்போது - நம்முடைய அப்பா அம்மா யார்? அப்புறம் அப்பா அம்மாக்களின் அப்பா அம்மா யார்? அப்புறம் அவர்களுடைய அப்பா அம்மா யார்? – இப்படியேதான் ஆத்திகம் – நாத்திகம் வாதம் போகும்.

(உங்களுடைய தளத்தின் பெயர் என்னுலகம் என்றே இருந்தேன்! இன்றுதான் கவனித்தேன். தங்களுடைய இந்த வலைத்தளத்தின் பெயரும், எனது வலைத் தளத்தின் பெயரும் ஒன்றே)

த.ம.5


டிபிஆர்.ஜோசப் said...

10:21 AM தி.தமிழ் இளங்கோ said...
இறைவனை நம்பும் ஒரு அறிவியல் ஆய்வாளர் என்று சொன்னீர்கள். அவரது பெயரைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அடுத்த பதிவை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.//

அது வேண்டுமென்றேதான் வெளியிடவில்லை. ஏனெனில் அவர் இறுதியில் கூறியுள்ளதை நான் சொல்லும்போது அந்த மதத்தைச் சார்ந்தவர்கள் இப்படித்தான் கூறுவார்கள் என்பார்கள்.

(உங்களுடைய தளத்தின் பெயர் என்னுலகம் என்றே இருந்தேன்! இன்றுதான் கவனித்தேன். தங்களுடைய இந்த வலைத்தளத்தின் பெயரும், எனது வலைத் தளத்தின் பெயரும் ஒன்றே)

என்னுடைய முதன்மை தளம் என்னுலகம்தான். இது என்னுடைய இரண்டாவது தளம். ஆன்மீகக் கருத்துக்களை மட்டுமே இதில் பதிந்துவருகிறேன். இதன் பெயர் 'என் உள்ளத்திலிருந்து...' என்று இருந்தது. இந்த வாரம்தான் அதை மாற்றி எனது எண்ணங்கள் என்று மாற்றினேன். இதேபோல் என்னுடைய சிறுகதைகளுக்கென்றே என் கதையுலகம் என்று ஒரு தளமும் உள்ளது. சமயம் கிடைக்கும்போது அதில் எழுதுவது வழக்கம்.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Post a Comment