Monday, March 18, 2013

இந்தியாவில் கிறிஸ்துவம் (நிறைவு பகுதி)


வாழ்க்கை முறையிலும் சடங்கு சம்பிரதாயங்களைக் கடைபிடிப்பதிலும் இரு பிரிவினருக்கும் இடையில் பல வேறுபாடுகளைக் காண முடிகிறது.
1. கத்தோலிக்கர்கள் குறிப்பாக தமிழகத்தில், பெரும்பான்மை சமூகத்தினருடைய வாழ்க்கை முறைகளோடு தங்களை ஐக்கியப்படுத்திக்கொண்டவர்கள். அவர்களுடைய நடை, உடை, பாவனைகளிலிருந்து அவர்களை கிறிஸ்தவர்கள் என்று இனம்கண்டுக் கொள்வது சிரமம். பெண்களைப் பொருத்தவரை பொட்டு வைப்பது, பூ வைப்பது, நகை அணிவது என பல வகைகளிலும் இந்துக்களை போலவே செய்வார்கள். கத்தோலிக்கரல்லாத கிறிஸ்தவர்களுடைய நடை, உடை, பாவனையிலிருந்தே அவர்கள் இன்ன சபையைச் சார்ந்தவர்கள் என கண்டுகொள்வது எளிது.

2.கத்தோலிக்கர்கள் மூகூர்த்த நாள் பார்த்துத்தான் திருமணங்கள் அல்லது சுபகாரியங்களை வைத்துக்கொள்வார்கள். சகுணம் பார்ப்பது, எமகண்டம், ராகுகாலம் பார்ப்பதெல்லாம் இல்லையென்றாலும் அமங்கல நாள் எனப்படும் செவ்வாய் கிழமைகளில் சுபகாரியங்களை விலக்கிடுவார்கள். ஆடி மாதத்தில் திருமணத்தை வைத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் மற்ற சபையினர் பெரும்பாலும் இவற்றையெல்லாம் பொருட்படுத்துவதேயில்லைஅவர்களைப் பொருத்தவரை இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அனைத்து நாட்களும் எல்லா நேரமும் ஒன்றுதான்.

3.ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளும்போது கர்த்தருக்கு தோஸ்த்திரம் என்றெல்லாம் கத்தோலிக்கர்கள் கூறிக்கொள்வதில்லை. முன்பெல்லாம் கத்தோலிக்க குருக்களை சந்திக்கும்போது சர்வேஸ்ரனுக்கு தோஸ்த்திரம் சாமி என்பார்கள். இப்போதெல்லாம் Hi Father அல்லது வணக்கம் சாமி என்பதோடு சரி.

இப்படி பல வேறுபாடுகள் உள்ளன.

கிறிஸ்த்துவ விசுவாசத்தில் மிக அடிப்படையான விசுவாசம் தமத்திருத்துவம்: அதாவது இறைவன் பிதா, சுதன் (ஏசு), பரிசுத்த ஆவி என்ற மூன்று ஆட்களாகவும் அதே சமயம் ஒரே ஆளாகவும் இருக்கிறார் என்பதாகவும், படைப்புத் தொழிலை பிதா செய்ய மீட்பு செயலை அவருடைய மகன் ஏசு நிறைவேற்ற பரிசுத்த ஆவி கிறிஸ்தவர்கள் தங்களுடைய விசுவாசத்தில் உறுதியாய் நிற்கவும் அதை எடுத்துரைக்கவும் தேவையான மன உறுதியை அளிக்கிறார் என்பது நம்பிக்கை. இதை முழுமையாக விசுவசித்து மூவருக்கும் முக்கியம் கொடுப்பவர்கள் கத்தோலிக்கர்கள்.

பிரிந்து சென்ற சகோதர சபைகளில் சில பிதாவுக்கும், சில சுதனுக்கும் சில பரிசுத்த ஆவிக்கும் முக்கியத்துவம் கொடுப்பதுதான் கத்தோலிக்கர்களுக்கும் அவர்களுக்கும் உள்ள மிக அடிப்படையான வித்தியாசம் என கருதுகிறேன்.

நான் இதுவரை எழுதிய என்னுடைய கருத்துக்களுக்கு நிச்சயம் மாற்று கருத்து பலருக்கும் இருக்கும் என்பது எனக்கு தெரியும். ஆகவேதான் கட்டுரையின் துவக்க பகுதியில் 'எனக்கு தெரிந்தவரை....' என்ற வார்த்தைகளை பயன்படுத்தினேன்.

*********

2 comments:

தருமி said...

’நம் வயதுக்காரர்களின்’ இளம் பருவத்தில் ”பரிசுத்த ஆவி” என்ற கருத்து அதிகமாக இருந்ததில்லை. ஆனால் நாளாவட்டத்தில் பரிசுத்த ஆவிக்கு வெகு சிறந்த இடம் இப்போதுள்ளது. இந்த வளர்ச்சியின் ஆரம்பத்தை, காரணத்தைக் கண்டுபிடிக்க முயன்றேன். பதிலேதும் கிடைக்கவில்லை.

எப்போது, யாரால், எதற்காக பரிசுத்த ஆவிக்கு இப்போதுள்ள இடம் கிடைத்தது?

Tbr Joseph said...

எப்போது, யாரால், எதற்காக பரிசுத்த ஆவிக்கு இப்போதுள்ள இடம் கிடைத்தது?//

இதுவும் தனியாக ஒரு பதிவு எழுதி விளக்கப்பட வேண்டிய விஷயம்.

இந்தியாவைப் பொருத்தவரை 1924ம் ஆண்டு இந்திய பெந்தகோஸ்த் சபை துவக்கப்பட்டது. அவர்களுடைய போதனைகளில் தூய ஆவிக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தூய ஆவியாரை தேவாலயத்தில் குழுமியுள்ள விசுவாசிகள் மீது இறங்கிவரச் செய்வது அவர்களுடைய மிக முக்கியமான வழிபாட்டு முறைகளில் ஒன்று. ஆவியானவர் இறங்கியதும் பரவசப்பட்ட நிலையில் விசுவாசிகள் பல மொழிகளில் உரத்தக் குரலில் பிரார்த்திப்பதையும் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அவர்களுடைய புரட்சிகரமான போதக முறையிலும் participative வழிபாடு எனப்படும் முறையில் அனைத்து விசுவாசிகளையும் இணைத்து இசைக்கேற்ப கரவொலிகள் எழுப்பி மகிழ்ச்சியுடன் பங்குபெற வைக்கும் முறையால் கவரப்பட்டு மற்ற சபைகளிலிருந்து, குறிப்பாக கத்தோலிக்க சபையிலிருந்து பலரும் வெளியேறியதையும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இத்தகைய மதமாற்றங்களில் மிகத்தீவிரமாக பெந்தகோஸ்தே சபையினர் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் நடைபெறுவதைக் கண்ட கத்தோலிக்க தலைமையிடம் 1967ல் கரிஸ்மாட்டிக் ரினீயுவல் என்கிற ஒரு முயற்சியை (Initiative) அப்போதிருந்த திருத்தந்தை 6ம் பவுல் அவர்களின் ஆசியுடன் கத்தோலிக்க திருச்சபையிலும் துவங்கினர்.

இதன் அடிப்படையில் ஏறத்தாழ அனைத்து கத்தோலிக்க பங்குகளிலும் (Parish) ஒரு கரிஸ்மாட்டிக் குழு அமைக்கப்பட்டது. இதில் இணைந்துக்கொள்ள விரும்பிய விசுவாசிகள் மட்டும் சேர்ந்தனர். இந்த குழு வாரத்தில் ஒரு நாள் தேவாலயங்களில் கூடி பெந்தகோஸ்தே சபையினருடைய முறைகளில் ஜெப வழிபாடுகளில் ஈடுபட்டனர். பரிசுத்த ஆவியை வேண்டுவது, உரத்த குரலில் கைகளை அசைத்தும், கரவொலி எழுப்பியும் பாடுவது, பரவச மொழி பேசுவது என கத்தோலிக்க தேவாலயங்களுக்கே உரித்தான் நிசப்தத்தை (peace and tranquility) முறியடித்து ஒரு ஆரவார சூழலை செயற்கையாக உருவாக்கினர். இதன் மூலம் கத்தோலிக்க விசுவாசத்தை மேலும் உறுதிப்படுத்த முடியும் என்பது இந்த முயற்சியினரின் வாதமாக இருந்தாலும் அதை எதிர்த்து திருச்சபைக்குள்ளேயே பல எதிர்க் குரல்கள் எழும்பத்தான் செய்தன. இத்தகைய குழுவினரின் வழிபாடுகள் தேவாலய வளாகத்தினுள் நடைபெறலாகாது எனவும் இக்குழுவைச் சாராத கத்தோலிக்கர்கள் எதிர்த்து அதையும் மீறி வழிபாடுகள் நடத்தப்பட்டபோது எதிர்ப்பாளர்கள் அதற்கு இடையூறு விளைவிக்கவும் முயன்றனர். சென்னை பாரிமுனையிலுள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் 1970ம் வருடம் இவ்விரு குழுவினருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் காவல்துறை தலையிட்டு சமாதானம் செய்ய வேண்டிய சூழலும் ஏற்பட்டது. இந்த குழுக்கள் நடத்திய பல பொது வழிபாடுகளை முதன்மையேற்று நடத்தியவர் பாதிரியார் பெர்க்மான்ஸ் அவர்கள். அவர் நடத்திய பொது வழிபாடுகளுக்கு கத்தோலிக்கர்களை விடவும் மற்ற சபையினர் - பெரும்பாலானோர் இந்துக்கள் மற்றும் பெந்தகோஸ்தே சபையினர் - அதிக அளவில் கலந்துக்கொண்டதைக் கண்ட அப்போதிருந்த சென்னை ஆயர் அவருடைய கூட்டங்களுக்கு தேவாலயங்களை பயன்படுத்த அனுமதிக்கலாகாது என்ற உத்தரவை பிறப்பித்தார். மேலும் அத்தகைய கூட்டங்களில் நன்கொடைகள் பெருமளவில் வசூலிக்கப்பட்டதை கேள்விப்பட்டு அதை மேற்றிராசனத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டார். இதில் ஆயர் அவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திருச்சபையிலிருந்து அவர் ex-communicate செய்யப்பட்டதும் நினைவிருக்கும் என்று நம்புகிறேன்.
ஆனால் காலப்போக்கில் இந்த முயற்சிக்கு கத்தோலிக்கர்களுக்கிடையில் போதிய ஆதரவு இல்லாததால் தூய ஆவியை முன்னிறுத்தி நடத்தப்பட்ட வழிபாடுகள் குறைந்து போயின. ஆனாலும் இளம் தலைமுறை போதகர்கள் இப்போதும் இத்தகைய வழிபாடுகளை தியானம் (Retreat) என்ற பெயரில் நடத்திக்கொண்டுதான் உள்ளனர். கேரளத்திலுள்ள Pota Retreat Centreல் நடைபெறும் வழிபாடுகள் பெரும்பாலும் இந்த முறையைத்தான் கடைபிடிக்கின்றனர்.

Post a Comment