இந்தியாவிலுள்ள
மதங்களில் 3வது பெரிய மதம்
கிறிஸ்துவ மதம். இந்துக்கள் மற்றும்
இஸ்லாமியர்களுக்கு அடுத்து சுமார் 2.50 கோடி
மக்கள் கிறிஸ்தவர்கள் உள்ளனர்.
ஆனால் கிறிஸ்துவர்களுக்கிடையில் பல பிரிவுகள் (denominations) உள்ளன. 2012ல்
வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி இந்தியாவில்
சுமார் 150க்கும் கூடுதலான கிறிஸ்துவ
பிரிவுகள் உள்ளன. அதில் முதன்மையானது
ரோமையிலுள்ள போப்பாண்டவரை தலைவராகக் கொண்ட ரோமன் கத்தோலிக்கர்கள்
(RC). அதற்குப் பிறகு , தென்னிந்திய திருச்சபை
எனப்படும் Church of South
India (CSI), 3வது இடத்தில் கேரள மாநிலத்தைச் சார்ந்த சிறியன்
கிறிஸ்தவர்கள் (Syrian
Christians - இவர்களுக்கிடையிலும்
பல உட்பிரிவுகள் உள்ளன). இந்த மூன்று
பெரும் பிரிவுகளைச் சார்ந்த கிறிஸ்தவர்கள் மொத்தமுள்ள
2.50 கோடி விசுவாசிகளில் சுமார் எழுபத்தைந்து விழுக்காடு
உள்ளனர்.
ஆனால் கிறிஸ்தவரல்லாத இந்தியர்களுக்கு அனைத்து கிறிஸ்துவர்களும் ஒன்றுதான்
என்ற எண்ணம் மிகவும் பரவலாக,
படித்தவர்கள் மத்தியிலும் இருப்பதை பல திரைப்படங்களில் அவர்கள்
சித்தரிக்கப்படுவதிலிருந்து
காண முடிகிறது (உதாரணம் சமீபத்தில் வெளிவந்த
'கடல்' திரைப்படம்).
இந்த குழப்பத்தை ஓரளவுக்கு தெளிவுபடுத்துவதே இந்த கட்டுரையின் நோக்கம்.
மாறாக கிறிஸ்துவத்தையோ (Christianity) அல்லது நான் சார்ந்துள்ள
ரோமன் கத்தோலிக்க சபையையோ (Roman Catholic Church)முன்நிறுத்திக்கொள்ள எழுதப்பட்டதல்ல என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
ஏசு கிறிஸ்துவின் சீடர்களுள் ஒருவரான புனித தோமையார்
(St. Thomas) அவர்கள் வழியாகத்தான் இந்தியாவில் கிறிஸ்துவம் அறிமுகப்படுத்தப்பட்டது, குறிப்பாக கேரளாவில். நம்மை
அடிமைப்படுத்தி ஆட்சி செய்த ஆங்கிலேயர்களுக்கு இந்தியாவில் நுழைவதற்கு முன்பே நம்முடைய நாட்டில் கிறிஸ்துவம் நுழைந்திருந்தது எனலாம். கேரள மாநிலத்தில்
உள்ள கிறிஸ்தவர்களே ஆதி இந்திய கிறிஸ்தவர்கள்
எனப்படும் அளவுக்கு அங்கு கிறஸ்துவம் ஊன்றியிருந்தது.
அங்கிருந்துதான் நாட்டின் பல பகுதிகளுக்கும் கிறிஸ்துவம்
பரவியது என்றாலும் மிகையாகாது. ஆனால் அதே நேரத்தில்
கேரளத்தில்தான் மிக அதிக அளவிலான கிறிஸ்தவ பிரிவுகளும் (Christian denominations) உள்ளன என்பதும் உண்மை. அதில் அதிக
அளவிலான (majority)பக்தர்களைக் கொண்டது சிறியன் கத்தோலிக்க
சபை. இச்சபை கி.பி.
ஐந்தாம் நூற்றாண்டில் சிறியா நாட்டிலிருந்து நம்
நாட்டில் குடியேறிய சில சிறிய வணிகர்களால்
அறிமுகப்படுத்தப்பட்டது என்பதால் இன்றும் இவர்கள் சிறியன்
கிறிஸ்தவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். இவர்களுக்குள்ளும் பல
பிரிவுகள் உள்ளன. குறிப்பாக மலங்கரா
சிறியன் கத்தோலிக்கர்கள், ஜாக்கபைட்ஸ், மார்த்தோமா என்பன அவற்றுள் சில.
தமிழகத்தை
பொருத்தவரை இங்குள்ள பெரும்பாலான கிறிஸ்துவர்கள் ரோமன் கத்தோலிக்க சபையைச்
சார்ந்தவர்களே. பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த புனித ஃபிரான்சிஸ்
சேவியர் (St. Francis
Xavier) அவர்களால் இந்து மதத்திலிருந்து மதமாற்றம்
செய்யப்பட்டவர்களே. தமிழக கடலோர பகுதிகளில்
தன்னுடைய போதகத்தை துவங்கிய இந்த புனிதர் கேரளம்,
மங்களூர், கோவா போன்ற நகரங்களிலிருந்த
மீனவ குடும்பங்களுள் பெரும்பான்மையினரை மதமாற்றம் செய்ததால் இன்றும் கன்னியா குமரி
முதல் கோவா வரையிலுமுள்ள மீனவ
குடும்பங்களில் Fernando,
Fernandez, Machado, Gomez, Gonsalvez என்ற
பல பொதுவான குடும்பப் பெயர்கள்
கொண்ட கிறிஸ்தவர்களைக் காண முடிகிறது.
தமிழக கிறிஸ்தவர்களுள்ளும் பல பிரிவுகள் (denominations) உள்ளன. இப்பிரிவுகள் அனைத்துமே கத்தோலிக்க சபையிலிருந்து பிரிந்தவைகளே. இவற்றுள் மிகப் பெரிய பிரிவு அல்லது சபை: தென்னிந்திய திருச்சபை எனப்படும்
Church South of India அல்லது Protestants (பிரிவினைச் சகோதரர்கள்). இந்த சபை, ரோமையிலுள்ள கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் எனக் கருதப்படும் திருத்தந்தை (Pope) அவர்களுடைய தலைமையை ஏற்க மறுத்து தனியொரு சபையாக 15ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் துவக்கப்பட்டது. ஆங்கிலேயர்களுடைய ஆட்சிக் காலத்தில் நம் நாட்டிலும் இந்த சபை அறிமுகப்படுத்தப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு
1947ம் ஆண்டில் அப்போது இயங்கிவந்த நான்கு பெரும் பிரிவுகள் இணைந்து தென்னிந்திய கிறிஸ்தவ சபை (CSI)உருவாக்கப்பட்டது என வரலாறு கூறுகிறது.
காலப்போக்கில் இந்த சபையிலிருந்து பல பிரிவுகள் ஏற்பட்டு இன்று கணக்கிலடங்கா போதகர்களாலும்
(self-styled priests/bishops) சில போதக குழுக்களாலும் (pastoral groups) துவங்கப்பட்டு பல சபைகள் இயங்கி வருகின்றன. இவற்றுள் குறிப்பிட்ட அளவு பக்தர்களைக் கொண்ட சபை: இந்திய பென்டகோஸ்டல் சபை
(Indian Pentecostal Church- IPC). இவர்களைத்தான் தமிழ்நாட்டில் அல்லேலுயா கூட்டம் என்று பொதுவாக குறிப்பிடுகிறார்கள். கிறிஸ்துவை விசுவசிக்காவிட்டால் நரகத்திற்குத்தான் செல்வீர்கள் என்று தெருமுனைகளில் நின்று பிரசங்கிப்பவர்களும் இவர்கள்தான்!
தொடரும்..
தொடரும்..
2 comments:
//Church of South India (CSI),...//
இதே போல் chruch of North India - CNI - என்று ஒன்று உண்டா?
CSI சபையைப் போலவே வட இந்தியாவில் CNI என்ற சபையும் அதே சமயத்தில் துவக்கப்பட்டது உண்மைதான். ஆனால் அதிலுள்ள விசுவாசிகள் கணிசமான அளவுக்கு - அதாவது CSI அளவுக்கு - இல்லை என்பதும் வட இந்தியாவில் நிலவும் இந்துத்வா சூழலில் அது வளர்ச்சி அடைய முடியாமல் போனதும் உண்மை. ஆகவேதான் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய மூன்று கிறித்துவ சபைகளில் அது கணக்கிடப்படுவதில்லை.
Post a Comment