Wednesday, March 13, 2013

இந்தியாவில் கிறிஸ்துவம் - 2


இவற்றுள் கணிசமான அளவு பக்தர்களைக் கொண்ட சபை: இந்திய பென்டகோஸ்டல் சபை (Indian Pentecostal Church- IPC). இவர்களைத்தான் தமிழ்நாட்டில் அல்லேலுயா கூட்டம் என்று பொதுவாக குறிப்பிடுகிறார்கள். கிறிஸ்துவை விசுவசிக்காவிட்டால் நரகத்திற்குத்தான் செல்வீர்கள் என்று தெருமுனைகளில் நின்று பிரசங்கிப்பவர்களும் இவர்கள்தான்! இந்த சபைக்குத்தான் மேற்கத்திய நாடுகளிலிருந்து நன்கொடைகள் என்ற பெயரில் பெருமளவு தொகை வருகிறது. 1900களிலு துவக்கப்பட்ட இந்த சபை இன்று மிகப்பெரிய அளவுக்கு வளர்ந்திருப்பதற்குக் காரணம் இந்த பண வரவு. மதமாற்றங்களில் பெருமளவில் ஈடுபடுவதும் இந்த சபையைச் சார்ந்த போதகர்கள்தான்.

இத்தகைய சபைகள் பெரும்பாலும் யாருடைய கட்டுப்பாட்டுக்கும் பணிய மறுத்த காரணத்தால் கத்தோலிக்க மற்றும் ப்ராட்டஸ்டன்ட் சபைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட போதகர்களால் (excommunicated priests/bishops) துவக்கப்பட்ட சபைகள் என்றும் கூறலாம்இன்று சமூக சேவை என்ற போர்வையில் பிறமதத்தைச் சார்ந்த பல ஏழை எளியவர்களையும் ஆசை வார்த்தைகள் கூறி கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்வதும் இந்த சபைகளைச் சார்ந்த போதகர்கள்தான். இத்தகையை போதகம் ஒரு பணம் ஈட்டும் தொழிலாகவே பலராலும் நடத்தப்படுகிறது என்றாலும் மிகையாகாது. இவர்களுள் பலர் அரசு பதவிகளிலிருந்து ஓய்வு பெற்றதும் போதகர்களாக உருமாறி அதுவரை இணைந்திருந்த சபைகளிலிருந்து பிரிந்து தனி சபைகளை துவக்குவதும் வாடிக்கையாகி வருகிறது. இத்தகைய சபைகளுக்கும் பெரும்பான்மையான கத்தோலிக்க மற்றும் CSI சபைகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

கிறிஸ்தவர்கள் என்றாலே ஆதிதிராவிடர்கள் அல்லது கீழ் சாதியினர் என்றதொரு மாயையை ஏற்படுத்தியதும் இத்தகைய அநாமதேய சபைகள்தான். தங்களுடைய சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற இழிநிலைக்குள்ளாக்கி வேதனையடைந்திருந்த பல ஆதிதிராவிட குடும்பங்கள் இத்தகைய போதகர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி மதம் மாறியதன் விளைவாகத்தான் இத்தகைய எண்ணம் பரவலாகியுள்ளது என்றும் கூறலாம். கிறிஸ்துவத்தில் நுழைந்தால் சாதி பாகுபாடுகளிலிருந்து விடுபடலாம் என்ற எண்ணத்தில் மதம் மாறிய பலரும் மேல்சாதி கிறிஸ்தவர்களால் ஒதுக்கப்படுவதுதான் இன்றைய நிதர்சனம். Indianised Christianity என அழைக்கப்படும் இந்திய மயமாக்கப்பட்ட  கிறிஸ்துவத்தில் மதமாற்றத்திற்கு முன்பு எந்த சாதியைச் சார்ந்தவர்களாக இருந்தனரோ அதே சாதியில் தொடர்ந்து நீடிப்பதுதான் உண்மை. நாடார் கிறிஸ்தவன், செட்டியார் கிறிஸ்தவன், பிள்ளைமார் கிறிஸ்தவன், பரவ கிறிஸ்தவன், முக்குவ கிறிஸ்தவன் என சாதி அடிப்படையில் திருமணம் புரிவதும் சர்வ சாதாரணம். தேவாலயங்களில் இணைந்து வழிபடும் பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் வெளியில் சாதி அடிப்படையிலேயே உறவாடுவது வழக்கமாகிப்போன ஒன்று.

தேவாலய வழிபாடுகளில் மட்டுமல்லாமல் வாழ்க்கை முறையிலும் கத்தோலிக்க (RC) சபையிலுள்ளவர்களுக்கும், மற்ற கத்தோலிக்கரல்லாத சபைகளில் உள்ளவர்களுக்கும் இடையில் பல வேறுபாடுகளை காண முடியும்.

1.அவற்றுள் தலையாய வேறுபாடு ரோமையிலுள்ள மத்திய தலைமையை மற்ற சபைகள் ஏற்க மறுத்தது. இதன் பின்னணியில் பல மாறுபட்ட காரணங்களும் கூறப்பட்டாலும் கத்தோலிக்க திருச்சபையிலிருந்து எதிர்ப்பாளர்கள் (Protestants) பிரிந்து செல்ல இதுவே மிக முக்கியமான காரணமாக இருந்தது.

2. ஏசு கிறிஸ்துவால் ஏற்படுத்தப்பட்ட திருச்சபை மற்றும் அதன் தலைவருடைய அதிகாரத்தின் மீதுள்ள நம்பிக்கை, மத கோட்பாடுகள் மீதான விசுவாசம் ஆகியவற்றை அடித்தளமாக கொண்டு இயங்கிவரும் ஒரு சபை கத்தோலிக்க சபை. ஆனால் இதற்கெல்லாம் மேலாக நற்செய்தி (Holy Bible)களில் அடங்கியுள்ள இறைவார்த்தைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றார் பிரிந்து சென்ற சபையின் துவக்க கர்த்தாவாக கருதப்படும் மார்ட்டின் லூத்தர் என்ற ஆங்கிலேயே போதகர்.  இங்கிலாந்தில் துவங்கப்பட்ட இந்த Anglican Church எனப்படும் சபை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டபோது இதன் அடிப்படையிலேயே அதனுடைய சட்டதிட்டங்களும் அமைந்தன. இன்றும் CSI மற்றும் பிற சபைகளிலுள்ள விசுவாசிகளிடையே பைபிள்தான் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அப்படியென்றால் கத்தோலிக்கர்கள் பைபிளை மதிப்பதில்லையா என்றால் இல்லை என்பதுதான் விடை. ஆனால் பைபிளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதில்லை என்பதும் உண்மைதான். தேவாலய வழிபாடுகளுக்கு செல்லும் ஒவ்வொரு கத்தோலிக்கரல்லாத கிறிஸ்தவ விசுவாசியிடமும் - - குறைந்தபட்சம் ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் -- ஒரு பைபிளாவது இருக்கும், இருக்க வேண்டும். ஆனால் கத்தோலிக்கர்கள் மத்தியில் அந்த பழக்கம் காலம் காலமாகவே இருந்ததில்லை.

தொடரும்..

5 comments:

sharfu said...

nice article.

Robin said...

//மதமாற்றங்களில் பெருமளவில் ஈடுபடுவதும் இந்த சபையைச் சார்ந்த போதகர்கள்தான்.// தவறான தகவல். இவர்கள் பெரும்பாலும் மற்ற சபைகளிலிருந்து தங்கள் சபைக்கு ஆட்களை கொண்டுவரவே முயற்சிக்கிறார்கள்.

Tbr Joseph said...

தவறான தகவல். இவர்கள் பெரும்பாலும் மற்ற சபைகளிலிருந்து தங்கள் சபைக்கு ஆட்களை +கொண்டுவரவே முயற்சிக்கிறார்கள்.//

இல்லை. நான் தூத்துக்குடியில் இருந்தபோது தையல்கடை, பாத்திரக்கடை, லாண்டரி கடைகளை வைத்துக்கொடுத்து பல ஆதிதிராவிட ஏழை இந்துக்களை மதமாற்றம் செய்ததை நான் பார்த்திருக்கிறேன். இப்படி பல குடிசைவாழ் இந்து மக்களுக்கு கல் வீடு கட்ட பண உதவி அளித்தும் மதமாற்றம செய்துள்ளனர். சமீபத்தில் சென்னையில் நடந்த பெந்தகோஸ்த்தே ஆண்டு கன்வென்ஷனில் ஐம்பதுக்கும் மேற்பட்ட சேரி இந்துக்களை மேடையிலேயே மதமாற்றம் செய்ததையும் நான் பார்த்தேன்.

தருமி said...

எனக்குப் பல நாட்களாக ஒரு ஐயம். இதை என் பதிவின் கடைசிப் பத்தியில் கேட்டுள்ளேன். பதிலிருந்தால் தாருங்கள்.

கிறிஸ்துவின் வாழ்வின் நிகழ்வுகள், வரலாற்றுக் குறிப்புகள் அதிகமாக இல்லை. ஆனால் அவரிலிருந்து 600 ஆண்டுகள் கழித்து வந்த முகமதுவின் ஒவ்வொரு நிகழ்வும் - மதீனா, மக்கா சென்றது, நடந்த போர்களின் விரிவான விளக்கங்கள், சரியான நாட்கள் என்று எழுதிவைக்கப்பட்ட குறிப்புகள் இருப்பது எவ்வாறு? ஏன்?

Tbr Joseph said...

ஏசு கிறிஸ்துவின் பிறப்புக்கு சரியான சரித்திர சான்றுகள் இருக்கான்னு கேட்டிருக்கீங்க. சான்றுன்னா என்னங்க? அந்த காலத்துல வாழ்ந்த யாராச்சும் எழுதி வச்சதத்தான சான்றுகள்னு சொல்லி பின்னால வர்றவங்க கண்டுபிடிச்சி சொல்றாங்க? ஏசு வாழ்ந்த காலத்துல அவரோட வாழ்ந்து அவருடைய சீடர்களா இருந்தவங்க நாலு பேர் எழுதி வச்சதத்தான New Testamentனு சொல்றோம். ஒருவேளை பைபிள்ல சொல்றத எதையுமே நம்ப மாட்டோம் அதுக்கு வெளிய யாராச்சும் சான்றுகளோட நிரூபிச்சிருக்காங்களான்னு கேட்டா ஆமான்னு தீர்க்க சொல்லத்தான் முடியல. ஆனா கி.பி. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஃப்ளேவியஸ் ஜோசஃபஸ் (Flavius Josephus) என்கிற ரோம-யூத சரித்திர ஆசிரியர் எழுதிய Antinquities of the Jews என்ற நூலில் கிறிஸ்துவைப் பற்றியும் அவருடைய சகோதரர்களுள் ஒருவர் என நம்பப்பட்ட ஜேம்ஸ் என்பவரைப் பற்றியும் சில குறிப்புகளை அளித்துள்ளார் என்கின்றனர் பல சரித்திர ஆசிரியர்கள். ஆனால் அவருடைய கூற்றை எதிர்த்தும் ஆதரித்தும் பல பிற்கால சரித்திர ஆய்வாளர்கள் எழுதியுள்ளதும் உண்மைதான்.

மேலும் கி.பி. 70ல் ரோமையர்களுடனான போரில் எருசலேம் நகரமே தரைமட்டமாக்கப்பட்டதையும் அதில் வசித்த ஏறத்தாழ அனைத்து யூத மக்களையும் - இவர்களுள் பெரும்பாலோனோர் ஏசு வசித்த காலத்தில் இஸ்ரவேலில் வசித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது - கொன்று அழித்ததையும் சரித்திர ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி இவ்வாறு ஏசு வாழ்ந்ததற்கான கிடைக்கக்கூடிய பல ஆதாரங்களும் சாட்சிகளும் படுசுத்தமாக அழிக்கபட்டுவிட்டதே அவர் இவ்வுலகில் வாழ்ந்து மரித்ததற்கான நம்பக்கூடிய வகையிலான ஆதாரங்கள் இல்லாமலே போய்விட்டன என்றும் கூறியுள்ளனர்.

அல்லாவின் இறுதி தூதரான முகம்மது நபி (ஸல்) கி.பி. 6ம் நூற்றாண்டில் வாழ்ந்ததற்கான சரித்திர சான்றுகள் உள்ளன என்று கூறுகின்றீர்கள். ஆகவே அவர் வாழ்ந்தார் என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள். அவர் மூலமாக அல்லா அருளிய இஸ்லாமிய மக்களுக்கான நூலான குரானையும் நம்புகிறீர்கள் என்று நினைக்கிறேன். அந்த நூலிலேயே பல இடங்களில் ஏசுவை 'மர்யம் மக ஈஸா' எனவும் அவர் யூத மக்களுக்கென அல்லாவால் அனுப்பப்பட்ட நபிகளில் ஒருவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதை படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அவற்றையெல்லாம் மேற்கோள் காட்டி தனியாக ஒரு பதிவு எழுதும் அளவுக்கு அவரைப் பற்றிய குறிப்புகள் குரானில் பல இடங்களில் காண முடிகிறது. மேலும் கியாமத் (hayamat) நாள் எனப்படும் இறுதி நாளில் ஈஸா மீண்டும் வருவார் எனவும் குரான் கூறுகிறது. முகம்மது நபி (ஸல்) இஸ்மாயிலின் சந்ததியினருக்கு அல்லா அனுப்பிய இறுதி நபி என்றால் ஈசா ஈசாக்கின் சந்ததியினருக்கு அல்லாவால் அனுப்பப்பட்ட இறுதி நபி எனவும் இஸ்லாம் கூறுகிறது. ஏசுவை இறைவனின் மகன் எனப்படுவதை மட்டும்தான் இஸ்லாம் மறுக்கிறது.

Post a Comment