Monday, December 02, 2013

பாலகன் ஏசுவின் வருகைக் காலம்

திருவருகைக் காலம் (Advent) என்பது மேலைக் கிறித்தவ திருச்சபைகளில் (Western Christian churches) கடைப்பிடிக்கப்படுகின்ற திருவழிபாட்டுக் காலங்களுள்ஒன்றாகும். இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழாவை எதிர்நோக்கிக் காத்திருந்து, அதற்காகத் தயாரிக்கும் காலமாகத் திருவருகைக் காலம் உள்ளது. இலத்தீன் மொழியில் adventus (பொருள்: "வருகை") என்று அழைக்கப்படுகின்ற இக்காலம் பழைய கிறித்தவ வழக்கில் "ஆகமன காலம்" என்றும் அறியப்பட்டது. திருவருகைக் காலம் திருச்சபையின் வழிபாட்டு ஆண்டின் தொடக்கமும் ஆகும்.[1]
திருவருகைக் காலம் என்பது இப்போதும் கீழைத் திருச்சபைகளில் (Eastern churches) "கிறித்து பிறப்பு விழா நோன்பு" (Nativity Fast) என்னும் பெயர்கொண்டுள்ளது.

ஆனால் நம்முடைய நாட்டிலும் உலகின் பிற பகுதிகளிலும் இது மகிழ்ச்சியின் காலம் என கருதப்படுவதால் நோன்பு (உபவாசம்) அனுசரிக்கப்படுவதில்லை. 

இது நவம்பர் மாதத்தில் வரும் கடைசி ஞாயிற்றுக்கிழமை துவங்கி கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25ம் தேதி வரையிலும் சுமார் நான்கு வாரங்களுக்கு கொண்டாடப்படுகிறது. 

இறைமகன் ஏசுவின் வருகைக்கு தங்களைத் தயாரித்துக்கொள்ள ஏற்படுத்தப்பட்ட காலம் இது என்றும் கூறலாம். 

ஆடை ஆபரணங்கள் வாங்குதல் வீட்டை அலங்கரித்தல் என்பதெல்லாம் ஒருபுறம் இருக்க வரவிருக்கும் ஏசு பாலகனை நம் உள்ளத்தில் வரவேற்க ஆன்ம ரீதியாக நம்மை ஏற்புள்ளவர்களாக ஆக்கிக்கொள்வதே உண்மையான தயாரிப்பு என்கிறது திருச்சபை!

இந்த காலத்தின் சிறப்புகளை விவரிக்க ஒரு கவிதை. 

காலம் இது காலம்
திருவருகைக் காலம்
இறைமகன் ஏசு
பாலகனாய் வந்துதித்த காலம்

காலம் இது காலம்
திருவருகைக் காலம்
கடையர்களாம் இடையருக்கும் - ஏசு
தன்னை காட்சியிட்ட காலம்

காலம் இது காலம்
திருவருகைக் காலம்
முத்திசை ஞானிகளும் - அவரை
பணிந்து வணங்கிய காலம்

காலம் இது காலம்
திருவருகைக் காலம்
தேடி வாரா உறவுகளையும்
தேடிச் செல்லும் காலம்

காலம் இது காலம்
திருவருகைக் காலம்
நம் நட்பை துறந்துச்
சென்றவரையும்
நாடிச் செல்லும் காலம்

காலம் இது காலம்
திருவருகைக் காலம்
பாலன் ஏசு நம்மிடையே
பிறக்கப் போகும் காலம்.

*******

Tuesday, May 14, 2013

தேவாலய பாடல்கள்


கிறிஸ்துவ தேவாலயங்களில் நடைபெறும் வழிபாடுகளின் இடையில் பாடல்களை பாடுவது வழக்கம்.

இவற்றில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களை முன்பொருகாலத்தில் ஒரு குறுந்தொடராகவே பதிவிட்டு வந்துள்ளேன்.

கடந்த ஞாயிறு வழிபாட்டில் பாடிய இந்த பாடலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.

எனக்கு இசையைப் பற்றிய விவரம் இல்லாததால் இது எந்த ராகத்தில் பாடப்பட்டது என்று சொல்லத் தெரியவில்லை.

ஆனால் பாடகர் குழு இதை பாடிய ராகம் என்னை பல இடங்களில் உணர்ச்சிவசப் பட வைத்தது என்பது மட்டும் உண்மை.

இதில் பல்லவி இறைவன் பக்தனிடம் கூ


பல்லவி:

இறைவன் பக்தனிடம்:

தாயாகி தந்தையாகி
நெஞ்சமெல்லாம் உனதாகி
கண்களில் உன்னை தாங்கினேன் - என்
செல்லமே கண்களில் உன்னை தாங்கினேன்.

பக்தனின் புகழ்பாடல்:

காக்கின்ற தெய்வமல்லவா - நீ
கனிவுள்ள தெய்வமல்லவா

சரணங்கள்:

இறைவனின் உறுதிமொழிகள்:

1. உன்னை என் கைகளில் பொறித்துள்ளேன்
பயம் வேண்டாம் இனி கலங்க வேண்டாம்
காப்பாற்றும் தேவன் உந்தன் கரம் பற்றினேன்
தோள்களில் சுமந்து வழிநடப்பேன்.

காக்கின்ற தெய்வமல்லவா - நீ
கனிவுள்ள தெய்வமல்லவா

2. அடைக்கலப் பாறையாக நான் இருப்பேன்
அரணும் கோட்டையுமாய் காத்து நிற்பேன்
இருளில் நீ இடறாமல் துணை இருப்பேன்
சிறகினில் உனை மூடி பலம் அளிப்பேன்

காக்கின்ற தெய்வமல்லவா - நீ
கனிவுள்ள தெய்வமல்லவா

Monday, March 18, 2013

இந்தியாவில் கிறிஸ்துவம் (நிறைவு பகுதி)


வாழ்க்கை முறையிலும் சடங்கு சம்பிரதாயங்களைக் கடைபிடிப்பதிலும் இரு பிரிவினருக்கும் இடையில் பல வேறுபாடுகளைக் காண முடிகிறது.
1. கத்தோலிக்கர்கள் குறிப்பாக தமிழகத்தில், பெரும்பான்மை சமூகத்தினருடைய வாழ்க்கை முறைகளோடு தங்களை ஐக்கியப்படுத்திக்கொண்டவர்கள். அவர்களுடைய நடை, உடை, பாவனைகளிலிருந்து அவர்களை கிறிஸ்தவர்கள் என்று இனம்கண்டுக் கொள்வது சிரமம். பெண்களைப் பொருத்தவரை பொட்டு வைப்பது, பூ வைப்பது, நகை அணிவது என பல வகைகளிலும் இந்துக்களை போலவே செய்வார்கள். கத்தோலிக்கரல்லாத கிறிஸ்தவர்களுடைய நடை, உடை, பாவனையிலிருந்தே அவர்கள் இன்ன சபையைச் சார்ந்தவர்கள் என கண்டுகொள்வது எளிது.

2.கத்தோலிக்கர்கள் மூகூர்த்த நாள் பார்த்துத்தான் திருமணங்கள் அல்லது சுபகாரியங்களை வைத்துக்கொள்வார்கள். சகுணம் பார்ப்பது, எமகண்டம், ராகுகாலம் பார்ப்பதெல்லாம் இல்லையென்றாலும் அமங்கல நாள் எனப்படும் செவ்வாய் கிழமைகளில் சுபகாரியங்களை விலக்கிடுவார்கள். ஆடி மாதத்தில் திருமணத்தை வைத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் மற்ற சபையினர் பெரும்பாலும் இவற்றையெல்லாம் பொருட்படுத்துவதேயில்லைஅவர்களைப் பொருத்தவரை இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அனைத்து நாட்களும் எல்லா நேரமும் ஒன்றுதான்.

3.ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளும்போது கர்த்தருக்கு தோஸ்த்திரம் என்றெல்லாம் கத்தோலிக்கர்கள் கூறிக்கொள்வதில்லை. முன்பெல்லாம் கத்தோலிக்க குருக்களை சந்திக்கும்போது சர்வேஸ்ரனுக்கு தோஸ்த்திரம் சாமி என்பார்கள். இப்போதெல்லாம் Hi Father அல்லது வணக்கம் சாமி என்பதோடு சரி.

இப்படி பல வேறுபாடுகள் உள்ளன.

கிறிஸ்த்துவ விசுவாசத்தில் மிக அடிப்படையான விசுவாசம் தமத்திருத்துவம்: அதாவது இறைவன் பிதா, சுதன் (ஏசு), பரிசுத்த ஆவி என்ற மூன்று ஆட்களாகவும் அதே சமயம் ஒரே ஆளாகவும் இருக்கிறார் என்பதாகவும், படைப்புத் தொழிலை பிதா செய்ய மீட்பு செயலை அவருடைய மகன் ஏசு நிறைவேற்ற பரிசுத்த ஆவி கிறிஸ்தவர்கள் தங்களுடைய விசுவாசத்தில் உறுதியாய் நிற்கவும் அதை எடுத்துரைக்கவும் தேவையான மன உறுதியை அளிக்கிறார் என்பது நம்பிக்கை. இதை முழுமையாக விசுவசித்து மூவருக்கும் முக்கியம் கொடுப்பவர்கள் கத்தோலிக்கர்கள்.

பிரிந்து சென்ற சகோதர சபைகளில் சில பிதாவுக்கும், சில சுதனுக்கும் சில பரிசுத்த ஆவிக்கும் முக்கியத்துவம் கொடுப்பதுதான் கத்தோலிக்கர்களுக்கும் அவர்களுக்கும் உள்ள மிக அடிப்படையான வித்தியாசம் என கருதுகிறேன்.

நான் இதுவரை எழுதிய என்னுடைய கருத்துக்களுக்கு நிச்சயம் மாற்று கருத்து பலருக்கும் இருக்கும் என்பது எனக்கு தெரியும். ஆகவேதான் கட்டுரையின் துவக்க பகுதியில் 'எனக்கு தெரிந்தவரை....' என்ற வார்த்தைகளை பயன்படுத்தினேன்.

*********

Thursday, March 14, 2013

இந்தியாவில் கிறிஸ்துவம் - 3


தேவாலய வழிபாடுகளில் மட்டுமல்லாமல் வாழ்க்கை முறையிலும் கத்தோலிக்க (RC) சபையிலுள்ளவர்களுக்கும், மற்ற கத்தோலிக்கரல்லாத சபைகளில் உள்ளவர்களுக்கும் இடையில் பல வேறுபாடுகளை காண முடியும்.

(தொடர்ச்சி..) 

3.கத்தோலிக்க தேவாலயங்களில் பிரார்த்தனைக்கு முக்கியம் அளிக்கப்படுகிறது. மற்ற தேவாலயங்களில் கூட்டு பாடல்கள்தான் அதிகம் முக்கியத்துவம் பெறுகின்றன. CSI தேவாலயங்களில் வழிபாட்டிற்கிடையே பாடல்கள் பாடப்படும்போது விசுவாசிகள் அனைவருமே தாளத்திற்கேற்றபடி கரவொலி எழுப்பி பாடகர் குழுவினருடன் இணைந்து பாடுவதை பலரும் கேட்டிருப்பீர்கள். ஆனால் கத்தோலிக்க தேவாலயங்களுக்கு வரும் விசுவாசிகளில் பலருக்கு தேவாலயத்தில் பாடப்படும் பாடல் வரிகளே தெரிந்திருக்காது. ஆங்கிலத்தில் இதை while protestants participate in the church services catholics only witness the same என்பார்கள். உண்மைதான் பெரும்பான்மை கத்தோலிக்கர்கள் வழிபாடுகளில் வெறும் பார்வையாளர்களாகவே கலந்துக்கொள்கின்றனர்.

4.கத்தோலிக்க மத குருமார்கள் (Priests) இல்லறத்தை துறந்தவர்கள். மற்ற சபிகளின் குருமார்கள் இல்லறவாசிகளாகவும் இருக்கலாம்.

5.கத்தோலிக்க குருத்துவத்தில் பெண்களுக்கு இடமில்லை (கன்னியர்கள் குருக்களுக்கு இணையானவர்கள் அல்ல).

6.கத்தோலிக்கர்கள் பாவசங்கீர்த்தனத்தில் (பாவத்தை குருவிடம் தெரிவித்து மன்னிப்பு பெறுதல்) நம்பிக்கையுள்ளவர்கள் (சமீப காலங்களில் குறிப்பாக இன்றைய தலைமுறையினரிடம் இது குறைந்துவருகிறது என்பது உண்மைதான்).

7.திவ்விய நற்கருனையில் ஏசு எப்போதும் வீற்றிருக்கிறார் என்று கத்தோலிக்கர்கள் நம்புகின்றனர். தங்கள் கரங்களில் ஏந்தி ஏசு என்னுள் வருகிறார் என்று அதை பெறுபவர் விசுவசிக்கிறபோது மட்டுமே ஏசு அதில் இருக்கிறார் என்று நம்புகின்றனர் பிராட்டஸ்டன்ட் சபையினர்ஏனைய சபைகளில் நற்கருணை என்பதே இல்லை என்று நினைக்கிறேன்.

8. ஞாயிற்றுக்கிழமைகளிலும் மத்திய திருச்சபை அறிவிக்கும் சில முக்கிய திருநாட்களிலும் கண்டிப்பாய் தேவாலயம் செல்ல வேண்டும் என்ற நியதி கத்தோலிக்க சபையில் உண்டு. மற்ற சபையினருக்கு அத்தகைய கட்டாயம் ஏதும் இல்லை.

9.பைபிளை கரைத்துக் குடித்த கத்தோலிக்கர்கள் நூற்றில் பத்து பேர் என்றால் மற்ற சபைகளில் பைபிளை முழுவதுமாக அறிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் உண்டு. பைபிள் வாக்கியங்களை மனப்பாடமாக எடுத்துரைப்பதென்பது பல கத்தோலிக்க குருமார்களுக்கே கைவராத கலை. ஆனால் மற்ற சபையினரில் மிகச் சிறிய விசுவாசிக்கும் பைபிள் முழுவதும் அத்துப்படியாக இருக்கும்.

10. கத்தோலிக்கர்களுக்கு ஏசுபிரான் மட்டுமல்லாமல் அவருடைய தாயார் மரியாள் மற்றும் திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்ட புனிதர்கள் என பலர் மீதும் நம்பிக்கையுண்டு. தங்களுடைய பிள்ளைகளுக்கு புனிதர்களுடைய பெயரையே வைப்பார்கள். கத்தோலிக்கரல்லாத சபையினர் ஏசுவை மட்டுமே ஏற்றுக்கொள்கின்றனர். மரியாளை இறைவனால் தெரிவு செய்யப்பட்ட ஒரு கருவியாகவே காண்கின்றனர். ஆகவே அவர்கள் பெரும்பாலும் ஏசுவின் சீடர்களுடைய் பெயர்கள் (உ.ம்: பால், தாமஸ், ஆன்ட்ரூ) அல்லது பழைய வேதாகமத்தில் (Old Testament) வரும் நபர்களுடைய (.ம்: சாமுவேல் (Sam) சாலமோன், யோசுவா, ஆபிரகாம்...) பெயர்களே குழந்தைகளூக்கு வைக்கின்றனர். இத்துடன் ஒரு தமிழ் பெயரும் இருக்கும் (.ம்: ரஞ்சித், ஜெயசேகர், பிரபாகரன், மோகன்...).

இப்படி வழிபாடுகளிலும் அடிப்படை நம்பிக்கைகளிலும் இவ்விரு பிரிவினருக்கும் இடையில் பல வேறுபாடுகள் உள்ளன.

வாழ்க்கை முறையிலும் சடங்கு சம்பிரதாயங்களைக் கடைபிடிப்பதிலும் இரு பிரிவினருக்கும் இடையில் பல வேறுபாடுகளைக் காண முடிகிறது.

தொடரும்..

Wednesday, March 13, 2013

இந்தியாவில் கிறிஸ்துவம் - 2


இவற்றுள் கணிசமான அளவு பக்தர்களைக் கொண்ட சபை: இந்திய பென்டகோஸ்டல் சபை (Indian Pentecostal Church- IPC). இவர்களைத்தான் தமிழ்நாட்டில் அல்லேலுயா கூட்டம் என்று பொதுவாக குறிப்பிடுகிறார்கள். கிறிஸ்துவை விசுவசிக்காவிட்டால் நரகத்திற்குத்தான் செல்வீர்கள் என்று தெருமுனைகளில் நின்று பிரசங்கிப்பவர்களும் இவர்கள்தான்! இந்த சபைக்குத்தான் மேற்கத்திய நாடுகளிலிருந்து நன்கொடைகள் என்ற பெயரில் பெருமளவு தொகை வருகிறது. 1900களிலு துவக்கப்பட்ட இந்த சபை இன்று மிகப்பெரிய அளவுக்கு வளர்ந்திருப்பதற்குக் காரணம் இந்த பண வரவு. மதமாற்றங்களில் பெருமளவில் ஈடுபடுவதும் இந்த சபையைச் சார்ந்த போதகர்கள்தான்.

இத்தகைய சபைகள் பெரும்பாலும் யாருடைய கட்டுப்பாட்டுக்கும் பணிய மறுத்த காரணத்தால் கத்தோலிக்க மற்றும் ப்ராட்டஸ்டன்ட் சபைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட போதகர்களால் (excommunicated priests/bishops) துவக்கப்பட்ட சபைகள் என்றும் கூறலாம்இன்று சமூக சேவை என்ற போர்வையில் பிறமதத்தைச் சார்ந்த பல ஏழை எளியவர்களையும் ஆசை வார்த்தைகள் கூறி கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்வதும் இந்த சபைகளைச் சார்ந்த போதகர்கள்தான். இத்தகையை போதகம் ஒரு பணம் ஈட்டும் தொழிலாகவே பலராலும் நடத்தப்படுகிறது என்றாலும் மிகையாகாது. இவர்களுள் பலர் அரசு பதவிகளிலிருந்து ஓய்வு பெற்றதும் போதகர்களாக உருமாறி அதுவரை இணைந்திருந்த சபைகளிலிருந்து பிரிந்து தனி சபைகளை துவக்குவதும் வாடிக்கையாகி வருகிறது. இத்தகைய சபைகளுக்கும் பெரும்பான்மையான கத்தோலிக்க மற்றும் CSI சபைகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

கிறிஸ்தவர்கள் என்றாலே ஆதிதிராவிடர்கள் அல்லது கீழ் சாதியினர் என்றதொரு மாயையை ஏற்படுத்தியதும் இத்தகைய அநாமதேய சபைகள்தான். தங்களுடைய சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற இழிநிலைக்குள்ளாக்கி வேதனையடைந்திருந்த பல ஆதிதிராவிட குடும்பங்கள் இத்தகைய போதகர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி மதம் மாறியதன் விளைவாகத்தான் இத்தகைய எண்ணம் பரவலாகியுள்ளது என்றும் கூறலாம். கிறிஸ்துவத்தில் நுழைந்தால் சாதி பாகுபாடுகளிலிருந்து விடுபடலாம் என்ற எண்ணத்தில் மதம் மாறிய பலரும் மேல்சாதி கிறிஸ்தவர்களால் ஒதுக்கப்படுவதுதான் இன்றைய நிதர்சனம். Indianised Christianity என அழைக்கப்படும் இந்திய மயமாக்கப்பட்ட  கிறிஸ்துவத்தில் மதமாற்றத்திற்கு முன்பு எந்த சாதியைச் சார்ந்தவர்களாக இருந்தனரோ அதே சாதியில் தொடர்ந்து நீடிப்பதுதான் உண்மை. நாடார் கிறிஸ்தவன், செட்டியார் கிறிஸ்தவன், பிள்ளைமார் கிறிஸ்தவன், பரவ கிறிஸ்தவன், முக்குவ கிறிஸ்தவன் என சாதி அடிப்படையில் திருமணம் புரிவதும் சர்வ சாதாரணம். தேவாலயங்களில் இணைந்து வழிபடும் பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் வெளியில் சாதி அடிப்படையிலேயே உறவாடுவது வழக்கமாகிப்போன ஒன்று.

தேவாலய வழிபாடுகளில் மட்டுமல்லாமல் வாழ்க்கை முறையிலும் கத்தோலிக்க (RC) சபையிலுள்ளவர்களுக்கும், மற்ற கத்தோலிக்கரல்லாத சபைகளில் உள்ளவர்களுக்கும் இடையில் பல வேறுபாடுகளை காண முடியும்.

1.அவற்றுள் தலையாய வேறுபாடு ரோமையிலுள்ள மத்திய தலைமையை மற்ற சபைகள் ஏற்க மறுத்தது. இதன் பின்னணியில் பல மாறுபட்ட காரணங்களும் கூறப்பட்டாலும் கத்தோலிக்க திருச்சபையிலிருந்து எதிர்ப்பாளர்கள் (Protestants) பிரிந்து செல்ல இதுவே மிக முக்கியமான காரணமாக இருந்தது.

2. ஏசு கிறிஸ்துவால் ஏற்படுத்தப்பட்ட திருச்சபை மற்றும் அதன் தலைவருடைய அதிகாரத்தின் மீதுள்ள நம்பிக்கை, மத கோட்பாடுகள் மீதான விசுவாசம் ஆகியவற்றை அடித்தளமாக கொண்டு இயங்கிவரும் ஒரு சபை கத்தோலிக்க சபை. ஆனால் இதற்கெல்லாம் மேலாக நற்செய்தி (Holy Bible)களில் அடங்கியுள்ள இறைவார்த்தைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றார் பிரிந்து சென்ற சபையின் துவக்க கர்த்தாவாக கருதப்படும் மார்ட்டின் லூத்தர் என்ற ஆங்கிலேயே போதகர்.  இங்கிலாந்தில் துவங்கப்பட்ட இந்த Anglican Church எனப்படும் சபை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டபோது இதன் அடிப்படையிலேயே அதனுடைய சட்டதிட்டங்களும் அமைந்தன. இன்றும் CSI மற்றும் பிற சபைகளிலுள்ள விசுவாசிகளிடையே பைபிள்தான் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அப்படியென்றால் கத்தோலிக்கர்கள் பைபிளை மதிப்பதில்லையா என்றால் இல்லை என்பதுதான் விடை. ஆனால் பைபிளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதில்லை என்பதும் உண்மைதான். தேவாலய வழிபாடுகளுக்கு செல்லும் ஒவ்வொரு கத்தோலிக்கரல்லாத கிறிஸ்தவ விசுவாசியிடமும் - - குறைந்தபட்சம் ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் -- ஒரு பைபிளாவது இருக்கும், இருக்க வேண்டும். ஆனால் கத்தோலிக்கர்கள் மத்தியில் அந்த பழக்கம் காலம் காலமாகவே இருந்ததில்லை.

தொடரும்..

Tuesday, March 12, 2013

இந்தியாவில் கிறிஸ்துவம்.


இந்தியாவிலுள்ள மதங்களில் 3வது பெரிய மதம் கிறிஸ்துவ மதம். இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு அடுத்து சுமார் 2.50 கோடி மக்கள் கிறிஸ்தவர்கள் உள்ளனர்.

ஆனால் கிறிஸ்துவர்களுக்கிடையில் பல பிரிவுகள் (denominations) உள்ளன. 2012ல் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி இந்தியாவில் சுமார் 150க்கும் கூடுதலான கிறிஸ்துவ பிரிவுகள் உள்ளன. அதில் முதன்மையானது ரோமையிலுள்ள போப்பாண்டவரை தலைவராகக் கொண்ட ரோமன் கத்தோலிக்கர்கள் (RC). அதற்குப் பிறகு , தென்னிந்திய திருச்சபை எனப்படும் Church of South India (CSI), 3வது இடத்தில் கேரள மாநிலத்தைச் சார்ந்த  சிறியன் கிறிஸ்தவர்கள் (Syrian Christians - இவர்களுக்கிடையிலும் பல உட்பிரிவுகள் உள்ளன). இந்த மூன்று பெரும் பிரிவுகளைச் சார்ந்த கிறிஸ்தவர்கள் மொத்தமுள்ள 2.50 கோடி விசுவாசிகளில் சுமார் எழுபத்தைந்து விழுக்காடு உள்ளனர்.

ஆனால் கிறிஸ்தவரல்லாத இந்தியர்களுக்கு அனைத்து கிறிஸ்துவர்களும் ஒன்றுதான் என்ற எண்ணம் மிகவும் பரவலாக, படித்தவர்கள் மத்தியிலும் இருப்பதை பல திரைப்படங்களில் அவர்கள் சித்தரிக்கப்படுவதிலிருந்து காண முடிகிறது (உதாரணம் சமீபத்தில் வெளிவந்த 'கடல்' திரைப்படம்).

இந்த குழப்பத்தை ஓரளவுக்கு தெளிவுபடுத்துவதே இந்த கட்டுரையின் நோக்கம். மாறாக கிறிஸ்துவத்தையோ (Christianity) அல்லது நான் சார்ந்துள்ள ரோமன் கத்தோலிக்க சபையையோ (Roman Catholic Church)முன்நிறுத்திக்கொள்ள எழுதப்பட்டதல்ல என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன்

ஏசு கிறிஸ்துவின் சீடர்களுள் ஒருவரான புனித தோமையார் (St. Thomas) அவர்கள் வழியாகத்தான் இந்தியாவில் கிறிஸ்துவம் அறிமுகப்படுத்தப்பட்டது, குறிப்பாக கேரளாவில்நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த ஆங்கிலேயர்களுக்கு இந்தியாவில் நுழைவதற்கு முன்பே நம்முடைய நாட்டில் கிறிஸ்துவம் நுழைந்திருந்தது எனலாம். கேரள மாநிலத்தில் உள்ள கிறிஸ்தவர்களே ஆதி இந்திய கிறிஸ்தவர்கள் எனப்படும் அளவுக்கு அங்கு கிறஸ்துவம் ஊன்றியிருந்தது. அங்கிருந்துதான் நாட்டின் பல பகுதிகளுக்கும் கிறிஸ்துவம் பரவியது என்றாலும் மிகையாகாது. ஆனால் அதே நேரத்தில் கேரளத்தில்தான் மிக அதிக அளவிலான கிறிஸ்தவ பிரிவுகளும் (Christian denominations) உள்ளன என்பதும் உண்மை. அதில் அதிக அளவிலான (majority)பக்தர்களைக் கொண்டது சிறியன் கத்தோலிக்க சபை. இச்சபை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் சிறியா  நாட்டிலிருந்து நம் நாட்டில் குடியேறிய சில சிறிய வணிகர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதால் இன்றும் இவர்கள் சிறியன் கிறிஸ்தவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். இவர்களுக்குள்ளும் பல பிரிவுகள் உள்ளன. குறிப்பாக மலங்கரா சிறியன் கத்தோலிக்கர்கள், ஜாக்கபைட்ஸ், மார்த்தோமா என்பன அவற்றுள் சில.

தமிழகத்தை பொருத்தவரை இங்குள்ள பெரும்பாலான கிறிஸ்துவர்கள் ரோமன் கத்தோலிக்க சபையைச் சார்ந்தவர்களே. பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த புனித ஃபிரான்சிஸ் சேவியர் (St. Francis Xavier) அவர்களால் இந்து மதத்திலிருந்து மதமாற்றம் செய்யப்பட்டவர்களே. தமிழக கடலோர பகுதிகளில் தன்னுடைய போதகத்தை துவங்கிய இந்த புனிதர் கேரளம், மங்களூர், கோவா போன்ற நகரங்களிலிருந்த மீனவ குடும்பங்களுள் பெரும்பான்மையினரை மதமாற்றம் செய்ததால் இன்றும் கன்னியா குமரி முதல் கோவா வரையிலுமுள்ள மீனவ குடும்பங்களில் Fernando, Fernandez, Machado, Gomez, Gonsalvez என்ற பல பொதுவான குடும்பப் பெயர்கள் கொண்ட கிறிஸ்தவர்களைக் காண முடிகிறது.

தமிழக கிறிஸ்தவர்களுள்ளும் பல பிரிவுகள் (denominations) உள்ளன. இப்பிரிவுகள் அனைத்துமே கத்தோலிக்க சபையிலிருந்து பிரிந்தவைகளே. இவற்றுள் மிகப் பெரிய பிரிவு அல்லது சபை: தென்னிந்திய திருச்சபை எனப்படும் Church South of India அல்லது Protestants (பிரிவினைச் சகோதரர்கள்).  இந்த சபை, ரோமையிலுள்ள கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் எனக் கருதப்படும் திருத்தந்தை (Pope) அவர்களுடைய தலைமையை ஏற்க மறுத்து தனியொரு சபையாக 15ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் துவக்கப்பட்டது. ஆங்கிலேயர்களுடைய ஆட்சிக் காலத்தில் நம் நாட்டிலும் இந்த சபை அறிமுகப்படுத்தப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1947ம் ஆண்டில் அப்போது இயங்கிவந்த நான்கு பெரும் பிரிவுகள் இணைந்து தென்னிந்திய கிறிஸ்தவ சபை (CSI)உருவாக்கப்பட்டது என வரலாறு கூறுகிறது

காலப்போக்கில் இந்த சபையிலிருந்து பல பிரிவுகள் ஏற்பட்டு இன்று கணக்கிலடங்கா  போதகர்களாலும் (self-styled priests/bishops) சில போதக குழுக்களாலும் (pastoral groups) துவங்கப்பட்டு பல சபைகள் இயங்கி வருகின்றன. இவற்றுள் குறிப்பிட்ட அளவு பக்தர்களைக் கொண்ட சபை: இந்திய பென்டகோஸ்டல் சபை (Indian Pentecostal Church- IPC). இவர்களைத்தான் தமிழ்நாட்டில் அல்லேலுயா கூட்டம் என்று பொதுவாக குறிப்பிடுகிறார்கள். கிறிஸ்துவை விசுவசிக்காவிட்டால் நரகத்திற்குத்தான் செல்வீர்கள் என்று தெருமுனைகளில் நின்று பிரசங்கிப்பவர்களும் இவர்கள்தான்!

தொடரும்..