Monday, July 16, 2012

மகாத்மா கிறீஸ்துவர்களை வெறுத்தது ஏன்?

மகாத்மா ஒருமுறை 'நான் கிறிஸ்துவை நேசிக்கிறேன். ஆனால் கிறீஸ்துவர்களை அல்ல.' என்று கூறியதாக சொல்வார்கள். ஆனால் அவர் எப்போது, எதற்காக இவ்வாறு கூறினார் என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை.

நேற்று ஞாயிறு மாலை திருப்பலிக்கு இடையில் குருவானவர் இந்த கேள்வியை மையமாக வைத்து உரையாற்றினாலும் காந்திஜி எதற்காக இவ்வாறு கூறியிருக்கலாம் என்பதற்கு பதிலளிக்கவில்லை.

ஆகவே இன்று இதே கேள்வியை கூகுளில் அடித்துப் பார்த்தேன். 'எப்போது' என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லையென்றாலும் 'எதற்காக'  என்ற கேள்விக்கு பல விதமான விடைகள் இணையத்தில் சிதறிக் கிடக்கின்றன.

காந்திஜி ஆங்கிலேய பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இவ்வாறு கூறியதாகவும் அப்போது பேட்டியாளர் ஏன் இவ்வாறு கூறுகிறீர்கள் என்று கேட்டதற்கு, 'கிறீஸ்து கூறியவாறு கிறீஸ்துவர்கள் எவரும் இப்போது வாழ்வதில்லையே' என்று காந்திஜி பதிலளித்ததாகவும் ஒரு வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது!

காந்திஜியின் இந்த பதில்தான் இணையத்திலுள்ள பல கட்டுரைகளில் எள்ளி நகையாடப்பட்டுள்ளன. அப்படி பார்த்தால் எந்த மதத்தினர்தான் தங்களுடைய மதத்தில் கூறப்பட்டுள்ளவாறு நடக்கின்றனர் அல்லது வாழ்கின்றனர் என்ற பதில் கேள்வியும் காந்திஜி இவ்வாறு கூறியதற்கு முக்கிய காரணம் அவருடைய சொந்த வாழ்க்கையில் அவருக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவம்தான் என்று ஒரு சம்பவத்தையும் குறிப்பிடுகின்றனர்.

காந்திஜி தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் ஒரு கிறிஸ்துவ நண்பரின் பரிந்துரையின் பேரில் கிறிஸ்துவ மதத்தைப் பற்றி அறிய விரும்பினாராம். கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு என கருதப்படும் வேதாகம ஆசிரியர்கள் எழுதியவற்றையும் (பைபிள்) படித்தபிறகு ஒரு கிறீஸ்துவ தேவாலயத்திற்கு சென்றாராம். ஆனால் அவர் கருப்பர் என்ற காரணத்திற்காக அவரை தேவாலய காவலாளி உள்ளே அனுமதிக்கவில்லையாம்!

இதுவும் கற்பனையாக இருக்கலாம். ஏனெனில் இதே நிகழ்ச்சி கொல்கொத்தா தேவாலயத்தில் நடந்ததாகவும் வேறொரு வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது!

ஆகவே காந்திஜி இவ்வாறு கூறினாரா என்பதற்கே சரித்திர சான்றுகள் இல்லாதபோது ஏன் அவ்வாறு கூறினார் என்ற வினாவுக்கு விடையாக முன்னுக்கு பின் முரணாக பல இடுகைகள், கட்டுரைகள், அதற்கு பதிலுரைகள், பதிலுக்கு பதிலுரைகள்.....

ஆனால் காந்திஜி இவ்வாறு கூறினார் என்றே வைத்துக்கொண்டாலும் ஏன் அவ்வாறு கூறியிருப்பார் என்று பார்த்தால்....

அன்று இந்தியாவை மட்டுமல்லாமல் உலகிலுள்ள பல நாடுகளையும் தன்னுடைய ஆதிக்கத்தில் வைத்திருந்த இங்கிலாந்து ஒரு பெரும்பான்மையான கிறீஸ்துவர்களைக் கொண்ட நாடு. தன்னுடைய ஆதிக்கத்திலிருந்த மக்களை வதைத்து அடிமைப்படுத்தி வந்தது மட்டுமல்லாமல் கிறிஸ்துவர்களல்லாத பலரையும்  வலுக்கட்டாயமாக மதம் மாற்றிய நாடு என்ற எண்ணமும் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் இருந்தது. ஆங்கிலேய ஆதிக்க காலத்தில் இந்தியாவிற்குள் நுழைந்த கிறீஸ்துவ மிஷினரிகள் எனப்படும் குருக்கள், கன்னியர்களில் பலர் ஆங்கிலேயர்கள் இந்தியர்களைக் கொடுமைப்படுத்தியதைக் கண்டும்  காணாதவாறு இருந்தனர் என்ற குற்றச்சாட்டும் இருந்து வந்தது. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு என்ற இயேசுவின் போதனைக்கு நேர்மாறாக நடந்துக்கொண்ட பல ஆங்கிலேய அதிகாரிகளுடைய நடத்தையும் காந்திஜியை கிறிஸ்துவர்களை வெறுக்க வைத்திருக்கலாம்.

ஆனால் காந்திஜியும் ஒரு சராசரி மனிதர்தான் என்றும் அவருடைய கருத்துக்களுக்கு அத்தன முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை என்பதையும் மறுப்பதற்கில்லை. அவர் மரணதருவாயில் 'ஹே ராம்' என்று அழைத்த ராமரைப் போல் அல்லாமல் ஏக பத்தினி விரதத்தை காற்றில் பறக்கவிட்ட நேருவை தன்னுடைய வாரிசாக ஏற்றுக்கொண்டவர்தானே அவர்? மதத்தின் பெயரால் இந்திய துணைக்கண்டத்தையே இரண்டாக பிளந்த இந்துக்களும் இஸ்லாமியர்களும் தங்கள் மதத்தில் கூறியவற்றைத்தான் கடைப்பிடித்தார்களா என்ன? அவர்களை எப்படி காந்திஜி சகோதரர்களாக ஏற்றுக்கொண்டார்?

ஆக, காந்திஜி இவ்வாறு கூறியிருந்தால் அதற்கு முக்கியமான ஒரு காரணம் தனக்கு ஏற்பட்ட அவமானமும் இருக்கலாம் என்றுதான் கருதுகிறேன். இந்திய விடுதலைப் போராட்டத்தின் துவக்கமே அவருக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அவமானம்தான் என்பதை மறுக்கமுடியாதே? அதற்கு முன்பிருந்தே லட்சோப லட்ச தென்னாப்பிரிக்க இந்தியர்கள் தனிமைப்படுத்தப்பட்டதை அவர் கண்டுக்கொள்ளவில்லையே, ஏன்?

**********