Tuesday, April 24, 2012

சாலமோனின் நீதிமொழிகள் 12

சாலமோன் அரசரின் நீதிமொழிகள் தொடர்ச்சி...

161. விவேகமுள்ளவர்களுக்கு அவர்களது விவேகமே வாழ்வளிக்கும் ஊற்றாகும்; மூடருக்கோ அவரது மடமையே போதிய தண்டனையாகும்.

162. விவேகமுள்ளவரின் மனம் அவருடைய பேச்சை விவேகமுள்ளதாக்கும்; அவருடைய சொற்களை எவரும் ஏற்பர்.

163. இன்சொற்கள் தேன்கூடு போன்றவை; மனத்திற்கு இனிமையானவை, உடலுக்கு நலம் தருபவை.

164. ஒரு பாதை ஒருவருக்கு நல்ல வழி போன்று தோன்றலாம்; முடிவிலோ அது சாவுக்கு வழிநடத்தும் பாதையாகிவிடக் கூடும்.

165. உழைப்பவருடைய பசி அவரை மேலும் உழைக்கச் செய்கிறது; உண்ண விரும்பும் அவரது வயிற்றுப்பசி அவரை அதற்குத் தூண்டுகிறது.

166. பிறர் குற்றங்களைக் கிண்டிக் கிளறித் தூற்றுபவர் கயவர்; எரிக்கும் நெருப்பு போன்றது அவரது நாக்கு.

167. கோணல் புத்திக்காரர் சண்டையை மூட்டிவிடுவார்; புறங்கூறுவோர் நண்பரைப் பிரித்து விடுவர்.

168. வன்முறையாளர் அடுத்தவரை ஏமாற்றி, கெட்ட வழியில் அவரை நடக்கச் செய்வார்.

169. கண்ணை மூடிக்கொண்டிருப்போர் முறைகேடானதைச் சிந்திப்பர்; வாயை மூடிக்கொண்டிருப்போர் தீமை செய்யத் திட்டமிடுவர்.

170. நரைமுடி மதிப்பிற்குரிய மணிமுடி; அது நேர்மையான நடத்தையால் வரும் பயன்.

171. வலிமை உடையவரைவிடப் பொறுமை உடையவரே மேலானவர்; நகரை அடக்குகிறவரைவிடத் தன்னை அடக்குகிறவரே சிறந்தவர்.

172. மடியிலுள்ள திருவுளச் சீட்டை ஒருவர் குலுக்கிப் போடலாம்; ஆனால் திருவுளத் தீர்ப்பை வெளிப்படுத்துபவர் இறைவனே.

173. சண்டை நடக்கும் வீட்டில் விருந்துண்பதைவிட மன அமைதியோடு பழஞ்சோறு உண்பதே மேல்.

174. முதலாளியின் மகன் ஒழுக்கங்கெட்டவனாயிருந்தால், அறிவுள்ள வேலைக்காரன் அவனை அடக்கி ஆள்வான்; ஏனைய சகோதரர்களோடு உரிமை சொத்தில் பங்கு பெறுவான்.

175.வெள்ளியை உலைக்கலமும் பொன்னை புடக்குகையும் சோதித்துப் பார்க்கும்; உள்ளத்தைச் சோதித்துப் பார்ப்பவர் இறைவன்.

176. தீங்கு விளைவிக்கும் பேச்சைத் தீயவன் விருப்பத்தோடு கேட்பான்; அவதூறான கூற்றினைப் பொய்யன் ஆவலாய் கேட்பான்.

177. ஏழையை ஏளனம் செய்கிறவர் அவரைப் படைத்த இறைவனையே இகழ்கிறார்; பிறருடைய இக்கட்டைப் பார்த்து மகிழ்கிறவர் தண்டனைக்கு தப்பமாட்டார்.

178. முதியோருக்கு அவர்களுடைய பேரப்பிள்ளைகள் மணிமுடி போன்றவர்கள்; பிள்ளைகளின் பெருமை அவர்களது தந்தையே.

179. பயனுள்ள பேச்சுக்கும் மதிகேடனுக்கும் தொடர்பேயில்லை; பொய்யான பேச்சு அரசனுக்கு பொருந்தவே பொருந்தாது.

180. கைக் கூலி கொடுப்பவர் அதை ஒரு மந்திரத் தாயத்தைப் போல் பயன்படுத்துகிறார்; அதைக் கொண்டு அவர் எடுத்த காரியமனைத்தையும் நிறைவேற்றுவார்..

இனியும் வரும்...

Friday, April 20, 2012

சாலமோனின் நீதிமொழிகள் 11

சாலமோன் அரசரின் நீதிமொழிகள் தொடர்ச்சி...

141. எண்ணிப் பாராமல் செய்யும் செயல் தோல்வியில் முடியும்; பலமுறை திட்டமிட்டுச் செய்யும் செயல் வெற்றியடையும்.

142. தக்க மறுமொழி அளிப்பவன் மிக்க மகிழ்ச்சி அடைவான்; காலமும் வேலையும் அறிந்து சொல்லும் சொல்லால் வரும் மகிழ்ச்சி இன்னும் பெரிது.

143. விவேகமுள்ளவன் செல்லும் பாதை பாதாளத்திற்குச் செல்லும் பாதை அல்ல; அது வாழ்விற்குச் செல்லும் பாதையாகும்.

144. வன்முறையில் செல்வம் சேர்ப்பவர் தம் குடும்பத்திற்குத் தொல்லை வருவிப்பார்; கைக்கூலி வாங்க மறுப்பவர் நீடித்து வாழ்வார்.

145.  சான்றோர் எண்ணிப் பார்த்து மறுமொழி கூறுவர்; பொல்லாரின் வாய் தீய சொற்களைப் பொழியும்.

146. இன்முகம் மனத்திற்கு மகிழ்ச்சி தரும்; நல்ல செய்தி உடம்புக்கு உரமளிக்கும்.

147. நலன் தரும் அறிவுரையைக் கவனமாக கேட்பவர், ஞானிகளோடு உறவு கொண்டிருப்பதை விரும்புவார்.

148. தண்டிக்கப்படுவதைப் புறக்கணிக்கிறவர் தமக்கே கேடு வருவித்துக் கொள்கிறார்; அறிவுரையைக் கவனமாக கேட்பவர் உயர்வை அடைவார்.

149.  எண்ணங்களை மனிதர் எண்ணலாம்; ஆனால் எதற்கும் முடிவு கூறுபவர் இறைவனே.

150. மனிதருடைய நடத்தையெல்லாம் அவர் பார்வையில் களங்கமற்றதாய்த் தோன்றலாம்; ஆனால் இறைவன் அவருடைய உள்ளத்தைச் சீர்தூக்கிப் பார்க்கிறார்.

151. உன் செயல்களை இறைவனிடம் ஒப்படைத்துவிடு; அவற்றை நீ வெற்றியுடன் நிறைவேற்றுவாய்.

152. அன்பும் வாய்மையும் தீவினையைப் போக்கும்; இறைவனிடம் கொள்ளும் அச்சம் ஒருவரை தீமையினின்று விலகச் செய்யும்.

153. தீய வழியில் சம்பாதிக்கும் பெரும் பொருளைவிட, நேர்மையோடு ஈட்டும் சிறு தொகையே மேல்.

154. மனிதர் தம் வழியை வகுத்தமைக்கின்றார்; ஆனால் அதில் அவரை வழி நடத்துபவரோ இறைவன்.

155. பொன்னைவிட ஞானத்தைப் பெறுவதே மேல்; வெள்ளியைவிட உணர்வைப் பெறுவதே மேல்.

156. நேர்மையானவன் செல்லும் பாதை தீமையை விட்டு விலகிச் செல்லும்; தன் நடையைக் குறித்து அவ்வாறு விழிப்புடனிருப்பவன் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வான்.

157. அழிவுக்கு முந்தியது அகந்தை; வீழ்ச்சிக்கு முந்தியது வீண் பெருமை.

158. மேட்டுக்குடி மக்களுடன் கொள்ளையடித்ததை பகிர்ந்து மகிழ்வதைவிட மனத்தாழ்மையுடன் சிறுமைப் படுகிறவர்களோடு கூடியிருப்பது நலம்.

159. போதனைக்குச் செவிகொடுப்பவன் வாழ்வடைவான்; இறைவனை நம்புகிறவன் நற்பேறு பெற்றவன்.

160. விவேகமுள்ளவன் பகுத்துணரும் ஆற்றல் பெற்றவன் என்று கொள்ளப்படுவான்; இனிமையாகப் பேசினால் சொல்வதை எவரும் ஏற்பர்.

இனியும் வரும்...

Tuesday, April 17, 2012

சாலமோனின் நீதிமொழிகள்..10

சாலமோனின் நீதிமொழிகள் தொடர்ச்சி....

121. மன அமைதி உடல் நலம் தரும்; சினவெறியோ எலும்புருக்கியாகும்.

122. ஏழையை ஒடுக்குகிறவர் அவரை உண்டாக்கினவரை இகழ்கிறார்; வறியவருக்கு இரங்குகிறவர் அவரைப் போற்றுகிறார்.

123. பொல்லாதோர் தம் தீவினையால் அழிவுறுவர்; இறைவனுக்கு அஞ்சி நடப்பவரோ சாகும்போதும் தம் நேர்மையைப் புகலிடமாக பெறுவார்.

124. விவேகமுள்ளவர் மனத்தில் ஞானம் குடிகொள்ளும்; மதிகேடரிடம் அதற்கு இடமேயில்லை.

125. நேர்மையுள்ள நாடு மேன்மை அடையும்; பாவம் நிறைந்த எந்த நாடும் இழிவடையும்.

126. கூர்மதியுள்ள பணியாளனுக்கு அரசர் ஆதரவு காட்டுவார்; தமக்கு இழிவு வருப்பவன் மீது சீற்றங்கொள்வார்.

127. கனிவான மறுமொழி கடுஞ் சினத்தையும் ஆற்றிவிடும்; கடுஞ்சொல்லோ சினத்தை எழுப்பும்

128. ஞானமுள்ளவரின் நா அறிவை வழங்கும்; மதிகேடரின் வாயோ மடமையை வெளியிடும்.

129. சாந்தப்படுத்தும் சொல் வாழ்வளிக்கும் மரம் போன்றது; வஞ்சகப் பேச்சாலோ மனம் உடைந்து போகும்.

130. தன் தந்தையின் நல்லுரையை புறக்கணிப்பவன் மூடன்; கண்டிப்புரையை ஏற்பவன் விவேகமுள்ளவன்.

131. நல்லோரின் வீட்டில் நிறைசெல்வம் நிலைத்திருக்கும்; பொல்லாரின்
வருவாயால் விளைவது  தொல்லையே.

132. ஏளனம் செய்வோர் தம்மை கடிந்து கொள்பவரை விரும்பார்; ஞானமுள்ளவரிடம் செல்லவும் மாட்டார்.

133. அகமகிழ்ச்சியால் முகம் மலரும்; மனத்துயரால் உள்ளம் உடையும்.

134. ஒடுக்கப்பட்டோருக்கு ஒவ்வொரு நாளும் தொல்லை நாளே; மனமகிழ்ச்சி உள்ளவர்க்கோ எல்லா நாட்களும் விருந்து நாட்களே.

135. பெருஞ்செல்வமும் அதனோடு கவலையும் இருப்பதைவிட, சிறு தொகையும் அதனோடு இறைவனிடம் கொள்ளும் அச்சமும் இருப்பதே மேல்.

136. பகை நெஞ்சம் கொன்டோர் படைக்கும் நல்ல இறைச்சி உணவைவிட அன்புள்ளம் கொண்டோர் படைக்கும் காய் கறி உணவே மேல்.

137. எளிதில் சினங்கொள்பவர் சண்டையை மூட்டுவார்; பொறுமையை உடையவர் சண்டையை தீர்த்து வைப்பார்.

138. சோம்பேறிக்கு எவ்வழியும் முள் நிறைந்த வழியே; சுறுசுறுப்புடையோர் செல்லும் பாதையோ நெடுஞ்சாலையாகும்.

139. ஞானமுள்ள மகன் தன் தந்தையை மகிழ்விப்பான்; அறிவற்ற மகனோ தன் தாயை இகழ்வான்.

140. மூடன் தன் மடமையைக் குறித்து மகிழ்ச்சியடைகிறான்; மெய்யறிவுள்ளவன் நேர்மையானதைச் செய்வான்.

இனியும் வரும்...Monday, April 09, 2012

சாலமோனின் நீதிமொழிகள் - 9

சாலமோன் அரசரின் நீதிமொழிகள் தொடர்ச்சி...

101. உழவு மாடுகள் இல்லையேல் விளைச்சலும் இல்லை; வலிமை வாய்ந்த காளைகள் மிகுந்த விளைச்சலை உண்டாக்கும்.

102. வாக்குப் பிறழாத சாட்சி பொய்யுரையான்; பொய்ச்சாட்சியோ மூச்சுக்கு மூச்சு பொய் பேசுவான்.

103. ஒழுங்கீனன் ஞனத்தைப் பெற முயலுவான்; ஆனால் அதை அடைய மாட்டான்; விவேகமுள்ளவனோ அறிவை எளிதில் பெறுவான்.

104. மூடனை விட்டு விலகிச் செல்; அறிவுடைய பேச்சு அவனிடம் ஏது?

105. விவேகமுள்ளவரது ஞானம் அவரை நேர்வழியில் நடத்தும்; மதிகேடரின் மடமை அவரை எளிதில் ஏமாற்றிவிடும்.

106. ஒருவரது இன்பமோ துன்பமோ, அது அவருடையதே; வேறவரும் அதைத் அனுபவிக்க இயலாது.

107. ஒரு பாதை ஒருவருக்கு நல்வழி போலத் தோன்றலாம். முடிவிலோ அது சாவுக்கு நடத்தும் பாதையாகிவிடும்.

108. நகைப்பிலும் துயரமுண்டு; மகிழ்ச்சியை அடுத்து வரும் வருத்தமும் உண்டு.

109. உண்மையற்றவர் தம் நடத்தையின்  விளைவை அனுபவிப்பார்; நல்லவர் தம் செயல்களின் பயனை அடைவார்.

110. பேதை தன் காதில் விழும் எதையும் நம்புவார்; விவேகமுள்ளவரோ நேர்வழி கண்டு அவ்வழி செல்வார்.

111. விவேகமுள்ளவர் விழுப்புடையவர்; தீமையை விட்டு விலகுவார்; மதியற்றவரோ மடத்துணிச்சலுள்ளவர்; எதிலும் பாய்வார்.

112. எளிதில் சினம் கொள்பவர் மதிகேடானதைச் செய்வார்; விவேகமுள்ளவரோ பொறுமையோடிருப்பார்.

113. தீயவர் நல்லவர் முன் பணிவார்; பொல்லாதவர் சான்றோரின் வாயிற்படியில் காத்து நிற்பார்.

114. ஓர் ஏழையை அடுத்திருப்போர் அவரை அருவருப்பானவர் என கருதுவர்; செல்வருக்கோ நண்பர் பலர் இருப்பர்.

115. அடுத்திருப்பவரை இகழ்தல் பாவமாகும்; ஏழைக்கு இரங்குகிறவர் இன்பம் துய்ப்பார்.

116. தீய சூழ்ச்சி செய்பவர் தவறிழைப்பவர் அன்றோ? நலம் தரும் திட்டம் வகுப்போர் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவர்.

117. கடும் உழைப்பு எப்போதும் பயன் தரும்; வெறும் பேச்சினால் வருவது வறுமையே.

118. விவேகமுள்ளவர்களுக்கு அவர்களது விவேகமே மணிமுடி; விவேகமற்றோர்க்கு அவர்களது மடமைதான் பூமாலை.

119. உண்மைச் சான்று உயிரைக் காப்பாற்றும்; பொய்ச் சான்று ஏமாற்றத்தையே தரும்

120. பொறுமையுள்ளவர் மெய்யறிவாளர்; எளிதில் சினங்கொள்பவர் தம் மடமையை வெளிப்படுத்துவார்.

இனியும் வரும்...

Tuesday, April 03, 2012

சாலமோனின் நீதிமொழிகள் 8

சாலமோனின் நீதிமொழிகள் தொடர்ச்சி...

81. நல்லோர் தம் சொற்களின் பலனான நல்லுணவை உண்கிறார்;வஞ்சக் செயல்களே வஞ்சகர் உண்ணும் உணவு.

82. சோம்பேறிகள் உண்ண விரும்புகின்றனர், உணவோ இல்லை; ஊக்கமுள்ளவரோ உண்டு மகிழ்கின்றனர்.

83. நல்லார் பொய்யுரையை வெறுப்பர்; பொல்லாரோ வெட்கக் கேடாகவும் இழிவாகவும் நடந்துக்கொள்வர்.

84. நேர்மையாக நடப்பவர்களை நீதி பாதுகாக்கும்; பொல்லாதவர்களை அவர்களின் தீச்செயல் கீழே வீழ்த்தும்.

85. ஒன்றுமில்லாதிருந்தும் செல்வர் போல் நடிப்பவருமுண்டு; மிகுந்த செல்வமிருந்தும் ஏழைகள் போல் நடிப்பவருமுண்டு.

86. அச்சுறுத்தப்படும்போது செல்வர் தம் பொருளைத் தந்து தம் உயிரை மீட்டுக்கொள்வர்; ஏழையோ அச்சுறுத்தலுக்கு அஞ்சுவர்.

87. மூடன் தன் இறுமாப்பினாலே சண்டை மூட்டுவான்; பிறருடைய அறிவுரையை ஏற்போரிடம் விவேகம் காணப்படும்.

88. விரைவில் வரும் செல்வம் விரைவில் கரந்துபோகும்; சிறிது சிறிதாகச் சேர்ப்பவனின் செல்வமே பெரும்.

89. அறிவுரையை புறக்கணிக்கிறவர் அழிவுறுவர்; போதிக்கிறவரின் சொல்லை மதிக்கிறவர் பயனடைவர்.

90. விவேகமுள்ளவரது அறிவுரை வாழ்வளிக்கும் ஊற்றாகும்; அது ஒருவரைச் சாவை விளைவிக்கும் ஆபத்துகளிலிருந்து தப்புவிக்கும்.

91. நல்லறிவு மக்களின் நல்லெண்ணத்தை வருவிக்கும்; நம்பிக்கைத் துரோகமோ கேடு அடையச் செய்யும்.

92. கூர்மதிவாய்ந்த எவரும் நல்லறிவோடு நடந்துக்கொள்வர்; மூடர் தன் மடமையை விளம்பரப்படுத்துவர்.

93. நல்லுரையைப் புறக்கணிப்பவர் வறுமையும் இகழ்ச்சியும் அடைவர்; கண்டிப்புரையை ஏற்பவரோ புகழடைவர்.

94. நினைத்தது கிடைத்தால் மனதிற்கு இன்பம்; மூடர் தம் தீமையை வெறுக்காதிருப்பதும் இதனாலேயே.

95. விவேகமுள்ளவரோடு உறவாடுபவர் விவேகமுள்ளவராவார்; மூடரோடு நட்புக்கொள்கிறவர் துன்புறுவார்.

96. நல்லவரது சொத்து அவருடைய மரபினரைச் சேரும்; தீயவர் சேர்த்த செல்வமோ வீணாய் போகும்.

97. தரிசு நிலம் ஏழைக்கு ஓரளவு உணவு தரும்; ஆனால் நியாயம் கிடைக்காத இடத்தில் அதுவும் பறிபோகும்.

98. பிரம்பைக் கையாளாதவர் தம் மகனை நேசிக்காதவர்; மகனை நேசிப்பவர் அவனை தண்டிக்க தயங்க மாட்டார்.

99. விவேகமுள்ள பெண்கள் தங்கள் இல்லத்தைக் கட்டி எழுப்புகின்றனர்; விவேகமற்ற பெண்களோ தங்கள் கைகளைக் கொண்டே அதை அழித்துவிடுகின்றனர்.

100. மூடரது இறுமாப்பு அவரை மிகுதியாக பேசச் செய்யும்; விவேகமுள்ளவரது சொற்களோ அவரை பாதுகாக்கும்..

இனியும் வரும்...