Friday, March 09, 2012

சாலமோனின் நீதிமொழிகள்.

நீதிமொழிகள் நூலின் ஆசிரியர் கிறீஸ்து பிறப்பதற்கு முன் இஸ்ராயேலை ஆண்ட பல அரசர்களுள் ஒருவரான சாலமோன்அரசர். அவர்  கி.மு. சுமார் 962இலிருந்து 922வரை இஸ்ராயேலை ஆட்சி செய்தார். இவர் அளவில்லா ஞானத்தை பெற்றிருந்தார். இவருக்கு இத்தகைய பரந்த ஞானம் எப்படி வந்தது என்பதை சுருக்கமாக நான் எழுதிய இந்த பதிவில் கூறியிருக்கிறேன்.

இவர் எழுதிய நீதிமொழிகள், கிறீஸ்துவர்கள் புனித நூலாக கருதும் பைபிளின் ஒரு பகுதியான பழைய வேதாகமத்தில் நான்கு பகுதிகள் கொண்ட ஒரு தனி நூலாக அமைந்துள்ளது. சாலமோன் அரசர் இறைவனால் அருளப்பட்ட அளவுகடந்த ஞானத்துடன் சுமார் நாற்பதாண்டு காலம் இஸ்ராயேலை சிறப்புடன் ஆண்டார் என்கிறது வேதாகமம். அவர் அரசராக இருந்த காலத்தில் அவரோ அல்லது அவரது காலத்தில் வேறு சிலரோ நீதிமொழிகள் பலவற்றை உருவாக்கியிருக்கலாம் அல்லது தொகுத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இந்நூலின் ஒரு பகுதியாவது கி.மு 8ஆம் நூற்றாண்டளவில் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். கி.மு. 5ஆம் நூற்றாண்டு வரை வாய்மொழியாக மக்களிடையே நிலவிய நீதிமொழிகள் பின்னர் கி.மு 3ஆம் நூற்றாண்டளவில் தற்போதுள்ள நூலாகத் தொகுக்கப்பட்டிருக்கலாம் என்றும் பல வரலாற்று அறிஞர்கள் கூறியுள்ளனர். ஆயினும் இந்நூலின் பெரும் பகுதி சாலமோன் அரசருடைய ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்டதென கருதப்படுவதால் இந்நூல் சாலமோனின் நீதிமொழிகள் என்றே கூறப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் the Book of Proverbs என்று கூறுகின்றனர்.

இந்நூல் 'இறைவனிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்' என துவங்கி சமய ஒழுக்கம், நல்லறிவு, நன்னடத்தை ஆகியவற்றைப் பற்றி விளக்குகிறது. மேலும் குடும்ப உறவுகள், பொருள் மற்றும் பணம் ஈட்டும் முறைகள், சுயக்கட்டுப்பாடு, தாழ்ச்சி, பொறுமை, ஏழைகள் மீது இரக்கம் ஆகிய பல நற்பண்புகளின் அவசியத்தைப் பற்றியும் உரைக்கிறது.

இந்நூலில் கூறப்பட்டுள்ள பல அறிவுரைகள் இறவாப் புலவர் வள்ளுவர் இயற்றிய திருக்குறளுடனும் பல இடங்களில் ஒத்துப்போவதாக பல ஆய்வாளர்கள், தமிழ் அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளதும் இதன் சிறப்பம்சமாகும்.  ஞானம்  நீதிமொழிகள் நூலில் மைய இடம் பெறுகிறது. வள்ளுவர் அதனை அறிவு என்பார். அறிவுடைமை என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் அமைத்துள்ள பத்து குறள்களும் அறிவு என்றால் என்னவென்பதை விளக்குகின்றன. இவ்விரண்டு நூல்களையும் ஒப்பிட்டு தமிழ் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளவற்றையும் இத்தொடரில் அவ்வப்போது கூறுகிறேன்.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சாலமோன் அரசருடைய காலத்தில் எழுதி வைத்த பல அறிவுரைகள் இன்றும் மிகவும் பொருத்தமாக உள்ளதால் இவற்றைப் பற்றி ஒருசில பதிவுகள் எழுதலாம் என்று நான் கருதுகிறேன். இந்நூலில் அடங்கியுள்ள அனைத்து அதிகாரங்களையும் (chapters) எழுதாமல் இன்றைய சூழலுக்கு பொருத்தமானதை மட்டும் எழுதுவேன். ஆகவே இதை எந்த மதத்தைச் சார்ந்தவர்களாயிருப்பினும் வாசித்து பயனடையலாம்.

"இவற்றைப் படிப்பவர் ஞானமும் நற்பயிற்சியும் பெறுவர்; ஆழ்ந்த கருத்தடங்கிய நன்மொழிகளை உணர்ந்துக் கொள்வர்; நீதி, நியாயம், நேர்மை நிறைந்த விவேக வாழ்க்கையில் பயிற்சி பெறுவர்...."

இதை நான் கூறவில்லை. நூலின் அறிமுகத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

எம்மதமும் சம்மதம் என கருதுபவர்கள் வாசித்து பயனுறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இறைவனே இல்லை என்பவர்களுக்கும் இந்நூலில் வரும் நன்மொழிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன். ஏனெனில் இவை இறைவனை போற்றும் வாசகங்கள் அல்ல. மாறாக நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் கடைபிடிக்க வேண்டிய பல நல்ல அறிவுரைகளைக் கொண்ட தொகுப்பு.
***********
சாலமோனின் நீதிமொழிகள்:

1. ஞானமுள்ள பிள்ளைகள் தம் தந்தைய மகிழ்விக்கின்றனர்; அறிவற்ற மக்களோ தம் தாய்க்கு துயரமளிப்பர்.

2. தீய வழியில் ஈட்டிய செல்வம் பயன் தராது; நேர்மையுள்ள நடத்தையோ சாவிலிருந்து தப்புவிக்கும்.

3. வேலை செய்யாத கை வறுமையை வருவிக்கும். விடாமுயற்சியுடையவரின் கையோ செல்வத்தை உண்டாக்கும்.

4. கோடைக் காலத்தில் விளைச்சலைச் சேர்த்து வைப்போர் மதியுள்ளோர். அறுவடைக் காலத்தில் உறங்குவோர் இகழ்ச்சிக்குரியவர்கள்.

5. நேர்மையாளர் மீது ஆசி பொழியும்; பொல்லாதோர் பேச்சிலோ கொடுமை மறைந்திருக்கும்.

6. நேர்மையாளரைப்பற்றிய நினைவு ஆசி விளைவிக்கும்; பொல்லாரின் பெயரோ அழிவுறும்.

7. ஞானமுள்ளோர் அறிவுரைகளை மனமார ஏற்பர்; பிதற்றும் மூடரோ வீழ்ச்சியுறுவர்.

8. நாணயமாக நடந்து கொள்வோர் இடையூறின்றிநடப்பர்; கோணலான வழியைப் பின்பற்றுவோரோ வீழ்ச்சியுறுவர்.

9  தீய நோக்குடன் கண்ணடிப்போர் தீங்கு விளைவிப்பர்; பிதற்றும் மூடரோ வீழ்ச்சியுறுவர்.

10. நல்லாரின் சொற்கள் வாழ்வளிக்கும் ஊற்றாகும்; பொல்லாரின் பேச்சிலோ கொடுமை மறைந்திருக்கும்...

இனியும் வரும்..

2 comments:

Robin said...

சாலமோன் எழுதிய பிரசங்கியும் (Ecclesiastes) எனக்குப் பிடித்தமான ஓன்று.

Tbr Joseph said...

சாலமோன் எழுதிய பிரசங்கியும் (Ecclesiastes) எனக்குப் பிடித்தமான ஓன்று.//

எனக்கும் மிகவும் பிடிக்கும்.

Post a Comment