Monday, July 16, 2012

மகாத்மா கிறீஸ்துவர்களை வெறுத்தது ஏன்?

மகாத்மா ஒருமுறை 'நான் கிறிஸ்துவை நேசிக்கிறேன். ஆனால் கிறீஸ்துவர்களை அல்ல.' என்று கூறியதாக சொல்வார்கள். ஆனால் அவர் எப்போது, எதற்காக இவ்வாறு கூறினார் என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை.

நேற்று ஞாயிறு மாலை திருப்பலிக்கு இடையில் குருவானவர் இந்த கேள்வியை மையமாக வைத்து உரையாற்றினாலும் காந்திஜி எதற்காக இவ்வாறு கூறியிருக்கலாம் என்பதற்கு பதிலளிக்கவில்லை.

ஆகவே இன்று இதே கேள்வியை கூகுளில் அடித்துப் பார்த்தேன். 'எப்போது' என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லையென்றாலும் 'எதற்காக'  என்ற கேள்விக்கு பல விதமான விடைகள் இணையத்தில் சிதறிக் கிடக்கின்றன.

காந்திஜி ஆங்கிலேய பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இவ்வாறு கூறியதாகவும் அப்போது பேட்டியாளர் ஏன் இவ்வாறு கூறுகிறீர்கள் என்று கேட்டதற்கு, 'கிறீஸ்து கூறியவாறு கிறீஸ்துவர்கள் எவரும் இப்போது வாழ்வதில்லையே' என்று காந்திஜி பதிலளித்ததாகவும் ஒரு வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது!

காந்திஜியின் இந்த பதில்தான் இணையத்திலுள்ள பல கட்டுரைகளில் எள்ளி நகையாடப்பட்டுள்ளன. அப்படி பார்த்தால் எந்த மதத்தினர்தான் தங்களுடைய மதத்தில் கூறப்பட்டுள்ளவாறு நடக்கின்றனர் அல்லது வாழ்கின்றனர் என்ற பதில் கேள்வியும் காந்திஜி இவ்வாறு கூறியதற்கு முக்கிய காரணம் அவருடைய சொந்த வாழ்க்கையில் அவருக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவம்தான் என்று ஒரு சம்பவத்தையும் குறிப்பிடுகின்றனர்.

காந்திஜி தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் ஒரு கிறிஸ்துவ நண்பரின் பரிந்துரையின் பேரில் கிறிஸ்துவ மதத்தைப் பற்றி அறிய விரும்பினாராம். கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு என கருதப்படும் வேதாகம ஆசிரியர்கள் எழுதியவற்றையும் (பைபிள்) படித்தபிறகு ஒரு கிறீஸ்துவ தேவாலயத்திற்கு சென்றாராம். ஆனால் அவர் கருப்பர் என்ற காரணத்திற்காக அவரை தேவாலய காவலாளி உள்ளே அனுமதிக்கவில்லையாம்!

இதுவும் கற்பனையாக இருக்கலாம். ஏனெனில் இதே நிகழ்ச்சி கொல்கொத்தா தேவாலயத்தில் நடந்ததாகவும் வேறொரு வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது!

ஆகவே காந்திஜி இவ்வாறு கூறினாரா என்பதற்கே சரித்திர சான்றுகள் இல்லாதபோது ஏன் அவ்வாறு கூறினார் என்ற வினாவுக்கு விடையாக முன்னுக்கு பின் முரணாக பல இடுகைகள், கட்டுரைகள், அதற்கு பதிலுரைகள், பதிலுக்கு பதிலுரைகள்.....

ஆனால் காந்திஜி இவ்வாறு கூறினார் என்றே வைத்துக்கொண்டாலும் ஏன் அவ்வாறு கூறியிருப்பார் என்று பார்த்தால்....

அன்று இந்தியாவை மட்டுமல்லாமல் உலகிலுள்ள பல நாடுகளையும் தன்னுடைய ஆதிக்கத்தில் வைத்திருந்த இங்கிலாந்து ஒரு பெரும்பான்மையான கிறீஸ்துவர்களைக் கொண்ட நாடு. தன்னுடைய ஆதிக்கத்திலிருந்த மக்களை வதைத்து அடிமைப்படுத்தி வந்தது மட்டுமல்லாமல் கிறிஸ்துவர்களல்லாத பலரையும்  வலுக்கட்டாயமாக மதம் மாற்றிய நாடு என்ற எண்ணமும் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் இருந்தது. ஆங்கிலேய ஆதிக்க காலத்தில் இந்தியாவிற்குள் நுழைந்த கிறீஸ்துவ மிஷினரிகள் எனப்படும் குருக்கள், கன்னியர்களில் பலர் ஆங்கிலேயர்கள் இந்தியர்களைக் கொடுமைப்படுத்தியதைக் கண்டும்  காணாதவாறு இருந்தனர் என்ற குற்றச்சாட்டும் இருந்து வந்தது. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு என்ற இயேசுவின் போதனைக்கு நேர்மாறாக நடந்துக்கொண்ட பல ஆங்கிலேய அதிகாரிகளுடைய நடத்தையும் காந்திஜியை கிறிஸ்துவர்களை வெறுக்க வைத்திருக்கலாம்.

ஆனால் காந்திஜியும் ஒரு சராசரி மனிதர்தான் என்றும் அவருடைய கருத்துக்களுக்கு அத்தன முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை என்பதையும் மறுப்பதற்கில்லை. அவர் மரணதருவாயில் 'ஹே ராம்' என்று அழைத்த ராமரைப் போல் அல்லாமல் ஏக பத்தினி விரதத்தை காற்றில் பறக்கவிட்ட நேருவை தன்னுடைய வாரிசாக ஏற்றுக்கொண்டவர்தானே அவர்? மதத்தின் பெயரால் இந்திய துணைக்கண்டத்தையே இரண்டாக பிளந்த இந்துக்களும் இஸ்லாமியர்களும் தங்கள் மதத்தில் கூறியவற்றைத்தான் கடைப்பிடித்தார்களா என்ன? அவர்களை எப்படி காந்திஜி சகோதரர்களாக ஏற்றுக்கொண்டார்?

ஆக, காந்திஜி இவ்வாறு கூறியிருந்தால் அதற்கு முக்கியமான ஒரு காரணம் தனக்கு ஏற்பட்ட அவமானமும் இருக்கலாம் என்றுதான் கருதுகிறேன். இந்திய விடுதலைப் போராட்டத்தின் துவக்கமே அவருக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அவமானம்தான் என்பதை மறுக்கமுடியாதே? அதற்கு முன்பிருந்தே லட்சோப லட்ச தென்னாப்பிரிக்க இந்தியர்கள் தனிமைப்படுத்தப்பட்டதை அவர் கண்டுக்கொள்ளவில்லையே, ஏன்?

**********

Tuesday, April 24, 2012

சாலமோனின் நீதிமொழிகள் 12

சாலமோன் அரசரின் நீதிமொழிகள் தொடர்ச்சி...

161. விவேகமுள்ளவர்களுக்கு அவர்களது விவேகமே வாழ்வளிக்கும் ஊற்றாகும்; மூடருக்கோ அவரது மடமையே போதிய தண்டனையாகும்.

162. விவேகமுள்ளவரின் மனம் அவருடைய பேச்சை விவேகமுள்ளதாக்கும்; அவருடைய சொற்களை எவரும் ஏற்பர்.

163. இன்சொற்கள் தேன்கூடு போன்றவை; மனத்திற்கு இனிமையானவை, உடலுக்கு நலம் தருபவை.

164. ஒரு பாதை ஒருவருக்கு நல்ல வழி போன்று தோன்றலாம்; முடிவிலோ அது சாவுக்கு வழிநடத்தும் பாதையாகிவிடக் கூடும்.

165. உழைப்பவருடைய பசி அவரை மேலும் உழைக்கச் செய்கிறது; உண்ண விரும்பும் அவரது வயிற்றுப்பசி அவரை அதற்குத் தூண்டுகிறது.

166. பிறர் குற்றங்களைக் கிண்டிக் கிளறித் தூற்றுபவர் கயவர்; எரிக்கும் நெருப்பு போன்றது அவரது நாக்கு.

167. கோணல் புத்திக்காரர் சண்டையை மூட்டிவிடுவார்; புறங்கூறுவோர் நண்பரைப் பிரித்து விடுவர்.

168. வன்முறையாளர் அடுத்தவரை ஏமாற்றி, கெட்ட வழியில் அவரை நடக்கச் செய்வார்.

169. கண்ணை மூடிக்கொண்டிருப்போர் முறைகேடானதைச் சிந்திப்பர்; வாயை மூடிக்கொண்டிருப்போர் தீமை செய்யத் திட்டமிடுவர்.

170. நரைமுடி மதிப்பிற்குரிய மணிமுடி; அது நேர்மையான நடத்தையால் வரும் பயன்.

171. வலிமை உடையவரைவிடப் பொறுமை உடையவரே மேலானவர்; நகரை அடக்குகிறவரைவிடத் தன்னை அடக்குகிறவரே சிறந்தவர்.

172. மடியிலுள்ள திருவுளச் சீட்டை ஒருவர் குலுக்கிப் போடலாம்; ஆனால் திருவுளத் தீர்ப்பை வெளிப்படுத்துபவர் இறைவனே.

173. சண்டை நடக்கும் வீட்டில் விருந்துண்பதைவிட மன அமைதியோடு பழஞ்சோறு உண்பதே மேல்.

174. முதலாளியின் மகன் ஒழுக்கங்கெட்டவனாயிருந்தால், அறிவுள்ள வேலைக்காரன் அவனை அடக்கி ஆள்வான்; ஏனைய சகோதரர்களோடு உரிமை சொத்தில் பங்கு பெறுவான்.

175.வெள்ளியை உலைக்கலமும் பொன்னை புடக்குகையும் சோதித்துப் பார்க்கும்; உள்ளத்தைச் சோதித்துப் பார்ப்பவர் இறைவன்.

176. தீங்கு விளைவிக்கும் பேச்சைத் தீயவன் விருப்பத்தோடு கேட்பான்; அவதூறான கூற்றினைப் பொய்யன் ஆவலாய் கேட்பான்.

177. ஏழையை ஏளனம் செய்கிறவர் அவரைப் படைத்த இறைவனையே இகழ்கிறார்; பிறருடைய இக்கட்டைப் பார்த்து மகிழ்கிறவர் தண்டனைக்கு தப்பமாட்டார்.

178. முதியோருக்கு அவர்களுடைய பேரப்பிள்ளைகள் மணிமுடி போன்றவர்கள்; பிள்ளைகளின் பெருமை அவர்களது தந்தையே.

179. பயனுள்ள பேச்சுக்கும் மதிகேடனுக்கும் தொடர்பேயில்லை; பொய்யான பேச்சு அரசனுக்கு பொருந்தவே பொருந்தாது.

180. கைக் கூலி கொடுப்பவர் அதை ஒரு மந்திரத் தாயத்தைப் போல் பயன்படுத்துகிறார்; அதைக் கொண்டு அவர் எடுத்த காரியமனைத்தையும் நிறைவேற்றுவார்..

இனியும் வரும்...

Friday, April 20, 2012

சாலமோனின் நீதிமொழிகள் 11

சாலமோன் அரசரின் நீதிமொழிகள் தொடர்ச்சி...

141. எண்ணிப் பாராமல் செய்யும் செயல் தோல்வியில் முடியும்; பலமுறை திட்டமிட்டுச் செய்யும் செயல் வெற்றியடையும்.

142. தக்க மறுமொழி அளிப்பவன் மிக்க மகிழ்ச்சி அடைவான்; காலமும் வேலையும் அறிந்து சொல்லும் சொல்லால் வரும் மகிழ்ச்சி இன்னும் பெரிது.

143. விவேகமுள்ளவன் செல்லும் பாதை பாதாளத்திற்குச் செல்லும் பாதை அல்ல; அது வாழ்விற்குச் செல்லும் பாதையாகும்.

144. வன்முறையில் செல்வம் சேர்ப்பவர் தம் குடும்பத்திற்குத் தொல்லை வருவிப்பார்; கைக்கூலி வாங்க மறுப்பவர் நீடித்து வாழ்வார்.

145.  சான்றோர் எண்ணிப் பார்த்து மறுமொழி கூறுவர்; பொல்லாரின் வாய் தீய சொற்களைப் பொழியும்.

146. இன்முகம் மனத்திற்கு மகிழ்ச்சி தரும்; நல்ல செய்தி உடம்புக்கு உரமளிக்கும்.

147. நலன் தரும் அறிவுரையைக் கவனமாக கேட்பவர், ஞானிகளோடு உறவு கொண்டிருப்பதை விரும்புவார்.

148. தண்டிக்கப்படுவதைப் புறக்கணிக்கிறவர் தமக்கே கேடு வருவித்துக் கொள்கிறார்; அறிவுரையைக் கவனமாக கேட்பவர் உயர்வை அடைவார்.

149.  எண்ணங்களை மனிதர் எண்ணலாம்; ஆனால் எதற்கும் முடிவு கூறுபவர் இறைவனே.

150. மனிதருடைய நடத்தையெல்லாம் அவர் பார்வையில் களங்கமற்றதாய்த் தோன்றலாம்; ஆனால் இறைவன் அவருடைய உள்ளத்தைச் சீர்தூக்கிப் பார்க்கிறார்.

151. உன் செயல்களை இறைவனிடம் ஒப்படைத்துவிடு; அவற்றை நீ வெற்றியுடன் நிறைவேற்றுவாய்.

152. அன்பும் வாய்மையும் தீவினையைப் போக்கும்; இறைவனிடம் கொள்ளும் அச்சம் ஒருவரை தீமையினின்று விலகச் செய்யும்.

153. தீய வழியில் சம்பாதிக்கும் பெரும் பொருளைவிட, நேர்மையோடு ஈட்டும் சிறு தொகையே மேல்.

154. மனிதர் தம் வழியை வகுத்தமைக்கின்றார்; ஆனால் அதில் அவரை வழி நடத்துபவரோ இறைவன்.

155. பொன்னைவிட ஞானத்தைப் பெறுவதே மேல்; வெள்ளியைவிட உணர்வைப் பெறுவதே மேல்.

156. நேர்மையானவன் செல்லும் பாதை தீமையை விட்டு விலகிச் செல்லும்; தன் நடையைக் குறித்து அவ்வாறு விழிப்புடனிருப்பவன் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வான்.

157. அழிவுக்கு முந்தியது அகந்தை; வீழ்ச்சிக்கு முந்தியது வீண் பெருமை.

158. மேட்டுக்குடி மக்களுடன் கொள்ளையடித்ததை பகிர்ந்து மகிழ்வதைவிட மனத்தாழ்மையுடன் சிறுமைப் படுகிறவர்களோடு கூடியிருப்பது நலம்.

159. போதனைக்குச் செவிகொடுப்பவன் வாழ்வடைவான்; இறைவனை நம்புகிறவன் நற்பேறு பெற்றவன்.

160. விவேகமுள்ளவன் பகுத்துணரும் ஆற்றல் பெற்றவன் என்று கொள்ளப்படுவான்; இனிமையாகப் பேசினால் சொல்வதை எவரும் ஏற்பர்.

இனியும் வரும்...

Tuesday, April 17, 2012

சாலமோனின் நீதிமொழிகள்..10

சாலமோனின் நீதிமொழிகள் தொடர்ச்சி....

121. மன அமைதி உடல் நலம் தரும்; சினவெறியோ எலும்புருக்கியாகும்.

122. ஏழையை ஒடுக்குகிறவர் அவரை உண்டாக்கினவரை இகழ்கிறார்; வறியவருக்கு இரங்குகிறவர் அவரைப் போற்றுகிறார்.

123. பொல்லாதோர் தம் தீவினையால் அழிவுறுவர்; இறைவனுக்கு அஞ்சி நடப்பவரோ சாகும்போதும் தம் நேர்மையைப் புகலிடமாக பெறுவார்.

124. விவேகமுள்ளவர் மனத்தில் ஞானம் குடிகொள்ளும்; மதிகேடரிடம் அதற்கு இடமேயில்லை.

125. நேர்மையுள்ள நாடு மேன்மை அடையும்; பாவம் நிறைந்த எந்த நாடும் இழிவடையும்.

126. கூர்மதியுள்ள பணியாளனுக்கு அரசர் ஆதரவு காட்டுவார்; தமக்கு இழிவு வருப்பவன் மீது சீற்றங்கொள்வார்.

127. கனிவான மறுமொழி கடுஞ் சினத்தையும் ஆற்றிவிடும்; கடுஞ்சொல்லோ சினத்தை எழுப்பும்

128. ஞானமுள்ளவரின் நா அறிவை வழங்கும்; மதிகேடரின் வாயோ மடமையை வெளியிடும்.

129. சாந்தப்படுத்தும் சொல் வாழ்வளிக்கும் மரம் போன்றது; வஞ்சகப் பேச்சாலோ மனம் உடைந்து போகும்.

130. தன் தந்தையின் நல்லுரையை புறக்கணிப்பவன் மூடன்; கண்டிப்புரையை ஏற்பவன் விவேகமுள்ளவன்.

131. நல்லோரின் வீட்டில் நிறைசெல்வம் நிலைத்திருக்கும்; பொல்லாரின்
வருவாயால் விளைவது  தொல்லையே.

132. ஏளனம் செய்வோர் தம்மை கடிந்து கொள்பவரை விரும்பார்; ஞானமுள்ளவரிடம் செல்லவும் மாட்டார்.

133. அகமகிழ்ச்சியால் முகம் மலரும்; மனத்துயரால் உள்ளம் உடையும்.

134. ஒடுக்கப்பட்டோருக்கு ஒவ்வொரு நாளும் தொல்லை நாளே; மனமகிழ்ச்சி உள்ளவர்க்கோ எல்லா நாட்களும் விருந்து நாட்களே.

135. பெருஞ்செல்வமும் அதனோடு கவலையும் இருப்பதைவிட, சிறு தொகையும் அதனோடு இறைவனிடம் கொள்ளும் அச்சமும் இருப்பதே மேல்.

136. பகை நெஞ்சம் கொன்டோர் படைக்கும் நல்ல இறைச்சி உணவைவிட அன்புள்ளம் கொண்டோர் படைக்கும் காய் கறி உணவே மேல்.

137. எளிதில் சினங்கொள்பவர் சண்டையை மூட்டுவார்; பொறுமையை உடையவர் சண்டையை தீர்த்து வைப்பார்.

138. சோம்பேறிக்கு எவ்வழியும் முள் நிறைந்த வழியே; சுறுசுறுப்புடையோர் செல்லும் பாதையோ நெடுஞ்சாலையாகும்.

139. ஞானமுள்ள மகன் தன் தந்தையை மகிழ்விப்பான்; அறிவற்ற மகனோ தன் தாயை இகழ்வான்.

140. மூடன் தன் மடமையைக் குறித்து மகிழ்ச்சியடைகிறான்; மெய்யறிவுள்ளவன் நேர்மையானதைச் செய்வான்.

இனியும் வரும்...Monday, April 09, 2012

சாலமோனின் நீதிமொழிகள் - 9

சாலமோன் அரசரின் நீதிமொழிகள் தொடர்ச்சி...

101. உழவு மாடுகள் இல்லையேல் விளைச்சலும் இல்லை; வலிமை வாய்ந்த காளைகள் மிகுந்த விளைச்சலை உண்டாக்கும்.

102. வாக்குப் பிறழாத சாட்சி பொய்யுரையான்; பொய்ச்சாட்சியோ மூச்சுக்கு மூச்சு பொய் பேசுவான்.

103. ஒழுங்கீனன் ஞனத்தைப் பெற முயலுவான்; ஆனால் அதை அடைய மாட்டான்; விவேகமுள்ளவனோ அறிவை எளிதில் பெறுவான்.

104. மூடனை விட்டு விலகிச் செல்; அறிவுடைய பேச்சு அவனிடம் ஏது?

105. விவேகமுள்ளவரது ஞானம் அவரை நேர்வழியில் நடத்தும்; மதிகேடரின் மடமை அவரை எளிதில் ஏமாற்றிவிடும்.

106. ஒருவரது இன்பமோ துன்பமோ, அது அவருடையதே; வேறவரும் அதைத் அனுபவிக்க இயலாது.

107. ஒரு பாதை ஒருவருக்கு நல்வழி போலத் தோன்றலாம். முடிவிலோ அது சாவுக்கு நடத்தும் பாதையாகிவிடும்.

108. நகைப்பிலும் துயரமுண்டு; மகிழ்ச்சியை அடுத்து வரும் வருத்தமும் உண்டு.

109. உண்மையற்றவர் தம் நடத்தையின்  விளைவை அனுபவிப்பார்; நல்லவர் தம் செயல்களின் பயனை அடைவார்.

110. பேதை தன் காதில் விழும் எதையும் நம்புவார்; விவேகமுள்ளவரோ நேர்வழி கண்டு அவ்வழி செல்வார்.

111. விவேகமுள்ளவர் விழுப்புடையவர்; தீமையை விட்டு விலகுவார்; மதியற்றவரோ மடத்துணிச்சலுள்ளவர்; எதிலும் பாய்வார்.

112. எளிதில் சினம் கொள்பவர் மதிகேடானதைச் செய்வார்; விவேகமுள்ளவரோ பொறுமையோடிருப்பார்.

113. தீயவர் நல்லவர் முன் பணிவார்; பொல்லாதவர் சான்றோரின் வாயிற்படியில் காத்து நிற்பார்.

114. ஓர் ஏழையை அடுத்திருப்போர் அவரை அருவருப்பானவர் என கருதுவர்; செல்வருக்கோ நண்பர் பலர் இருப்பர்.

115. அடுத்திருப்பவரை இகழ்தல் பாவமாகும்; ஏழைக்கு இரங்குகிறவர் இன்பம் துய்ப்பார்.

116. தீய சூழ்ச்சி செய்பவர் தவறிழைப்பவர் அன்றோ? நலம் தரும் திட்டம் வகுப்போர் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவர்.

117. கடும் உழைப்பு எப்போதும் பயன் தரும்; வெறும் பேச்சினால் வருவது வறுமையே.

118. விவேகமுள்ளவர்களுக்கு அவர்களது விவேகமே மணிமுடி; விவேகமற்றோர்க்கு அவர்களது மடமைதான் பூமாலை.

119. உண்மைச் சான்று உயிரைக் காப்பாற்றும்; பொய்ச் சான்று ஏமாற்றத்தையே தரும்

120. பொறுமையுள்ளவர் மெய்யறிவாளர்; எளிதில் சினங்கொள்பவர் தம் மடமையை வெளிப்படுத்துவார்.

இனியும் வரும்...

Tuesday, April 03, 2012

சாலமோனின் நீதிமொழிகள் 8

சாலமோனின் நீதிமொழிகள் தொடர்ச்சி...

81. நல்லோர் தம் சொற்களின் பலனான நல்லுணவை உண்கிறார்;வஞ்சக் செயல்களே வஞ்சகர் உண்ணும் உணவு.

82. சோம்பேறிகள் உண்ண விரும்புகின்றனர், உணவோ இல்லை; ஊக்கமுள்ளவரோ உண்டு மகிழ்கின்றனர்.

83. நல்லார் பொய்யுரையை வெறுப்பர்; பொல்லாரோ வெட்கக் கேடாகவும் இழிவாகவும் நடந்துக்கொள்வர்.

84. நேர்மையாக நடப்பவர்களை நீதி பாதுகாக்கும்; பொல்லாதவர்களை அவர்களின் தீச்செயல் கீழே வீழ்த்தும்.

85. ஒன்றுமில்லாதிருந்தும் செல்வர் போல் நடிப்பவருமுண்டு; மிகுந்த செல்வமிருந்தும் ஏழைகள் போல் நடிப்பவருமுண்டு.

86. அச்சுறுத்தப்படும்போது செல்வர் தம் பொருளைத் தந்து தம் உயிரை மீட்டுக்கொள்வர்; ஏழையோ அச்சுறுத்தலுக்கு அஞ்சுவர்.

87. மூடன் தன் இறுமாப்பினாலே சண்டை மூட்டுவான்; பிறருடைய அறிவுரையை ஏற்போரிடம் விவேகம் காணப்படும்.

88. விரைவில் வரும் செல்வம் விரைவில் கரந்துபோகும்; சிறிது சிறிதாகச் சேர்ப்பவனின் செல்வமே பெரும்.

89. அறிவுரையை புறக்கணிக்கிறவர் அழிவுறுவர்; போதிக்கிறவரின் சொல்லை மதிக்கிறவர் பயனடைவர்.

90. விவேகமுள்ளவரது அறிவுரை வாழ்வளிக்கும் ஊற்றாகும்; அது ஒருவரைச் சாவை விளைவிக்கும் ஆபத்துகளிலிருந்து தப்புவிக்கும்.

91. நல்லறிவு மக்களின் நல்லெண்ணத்தை வருவிக்கும்; நம்பிக்கைத் துரோகமோ கேடு அடையச் செய்யும்.

92. கூர்மதிவாய்ந்த எவரும் நல்லறிவோடு நடந்துக்கொள்வர்; மூடர் தன் மடமையை விளம்பரப்படுத்துவர்.

93. நல்லுரையைப் புறக்கணிப்பவர் வறுமையும் இகழ்ச்சியும் அடைவர்; கண்டிப்புரையை ஏற்பவரோ புகழடைவர்.

94. நினைத்தது கிடைத்தால் மனதிற்கு இன்பம்; மூடர் தம் தீமையை வெறுக்காதிருப்பதும் இதனாலேயே.

95. விவேகமுள்ளவரோடு உறவாடுபவர் விவேகமுள்ளவராவார்; மூடரோடு நட்புக்கொள்கிறவர் துன்புறுவார்.

96. நல்லவரது சொத்து அவருடைய மரபினரைச் சேரும்; தீயவர் சேர்த்த செல்வமோ வீணாய் போகும்.

97. தரிசு நிலம் ஏழைக்கு ஓரளவு உணவு தரும்; ஆனால் நியாயம் கிடைக்காத இடத்தில் அதுவும் பறிபோகும்.

98. பிரம்பைக் கையாளாதவர் தம் மகனை நேசிக்காதவர்; மகனை நேசிப்பவர் அவனை தண்டிக்க தயங்க மாட்டார்.

99. விவேகமுள்ள பெண்கள் தங்கள் இல்லத்தைக் கட்டி எழுப்புகின்றனர்; விவேகமற்ற பெண்களோ தங்கள் கைகளைக் கொண்டே அதை அழித்துவிடுகின்றனர்.

100. மூடரது இறுமாப்பு அவரை மிகுதியாக பேசச் செய்யும்; விவேகமுள்ளவரது சொற்களோ அவரை பாதுகாக்கும்..

இனியும் வரும்...

Thursday, March 29, 2012

சாலமோனின் நீதிமொழிகள் 7


சாலமோன் அரசரி நீதிமொழிகளின் தொடர்ச்சி....

71. சிந்தனையற்ற பேச்சு வாள் போல புண்படுத்தும்; விவேகமுள்ளோரின் சொற்களோ புண்களை ஆற்றும்.

72. சதித்திட்டம் வகுப்போர் தம்மையே ஏமாற்றிக்கொள்வர்; பொது நலத்தை நாடுவோர் மகிழ்ச்சியோடிருப்பர்.

73. நல்லாருக்கு ஒரு கேடும் வராது; பொல்லாரின் வாழ்க்கையோ துன்பம் நிறைந்ததாய் இருக்கும்;

74. விவேகமுள்ளோர் தம் அறிவை மறைத்துக் கொள்வர்; மதிகெட்டவரோ தம் மூடத்தனத்தை விளம்பரப்படுத்துவர்.

75. ஊக்கமுடையோரின் கை ஆட்சி செய்யும்; சோம்போறிகளோ அடிமை வேலை செய்வர்.

76. மனக்கவலை மனிதரின் இதயத்தை வாட்டும்; இன்சொல் அவர்களை மகிழ்விக்கும்.

77. சான்றோரின் அறிவுரை நண்பர்களுக்கு நன்மை பயக்கும்; பொல்லாரின் பாதை அவர்களைத் தவறிழைக்கச் செய்யும்.

78. சேம்பேறிகள் தாம் வேட்டையாடியதையும் சமைத்துண்ணார்; விடாமுயற்சியுடையோரோ அரும் பொருளையும் ஈட்டுவர்.

79. நேர்மையாளரின் வழி வாழ்வு தரும்; முரணானவரின் வழி சாவில் தள்ளும்.

80. விவேகமுள்ள மகன் தன் தந்தையின் நற்பயிற்சியை ஏற்றுக்கொள்வான், இறுமாப்புள்ளவனோ கண்டிக்கப்படுவதை பொருட்படுத்த மாட்டான்.

இனியும் வரும்..

Monday, March 26, 2012

சாலமோனின் நீதிமொழிகள் 6


சிறந்த நிர்வாகத்திறம் கொண்ட சாலமோன் அரசர் தனதுஆட்சிக் காலத்தில் சமூக, பொருளாதா, கலை பண்பாட்டில் முன்னேற்றமடைந்த ஒரு நாட்டை உருவாக்குவதில் முழு மூச்சுடன்உழைத்தார். அதில் வெற்றியும் கண்டார். பல்வேறு நாடுகளுடன் திருமண உறவு கொள்வதன் மூலம் போரைதவிர்த்து நாடுகளுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்தியது சாலமோனது சிறப்பான ராஜதந்திரமாகும்.


அவர் எழுதி வைத்துச் சென்ற நீதிமொழிகளின் தொடர்ச்சி...

61. நேர்மையாளர்களின் கருத்துக்கள் நியாயமானவை; பொல்லாரின் திட்டங்களோ வஞ்சகமானவை.

62.   பொல்லார் நாளடைவில் வீழ்த்தப்பட்டு வழித்தோன்றலின்றி அழிவர்; நலாரின் குடும்பமோ நிலைத்திருக்கும்.

63.பொல்லாரின் சொற்கள் சாவுக்கான கண்ணிகளாகும்; நேர்மையாளரின் பேச்சு உயிரைக் காப்பாற்றும்.
 
64.  மனிதர் தம் விவேகத்திற்கேற்ப புகழைப் பெறுவர்; சீர்கெட்ட இதயமுடையவரோ இகழ்ச்சியடைவர்.

 

65. வீட்டில் உணவில்லாதிருந்தும் வெளியில் பகட்டாய்த் திரிவோரை விட தம் கையால் உழைத்து எளிய வாழ்க்கை நடத்துவோரே மேல்.

66.  நல்லார் தம் கால்நடைகளையும் பரிவுடன் பாதுகாப்பர்; பொல்லாரின் உள்ளமோ கொடுமை வாய்ந்தது.

67. தீயோர் தம் பொய்யுரையில் தாமே சிக்கிக்கொள்வர்; நேர்மையாளர் நெருக்கடியான நிலையிலிருந்தும் தப்புவர்.

68.  மூடர் செய்வது அவர்களுக்குச் சரியென தோன்றும்; விவேகமுள்ளவர்கள் பிறருடைய அறிவுரைக்குச் செவி கொடுப்பர்.

69. மூடர் தம் எரிச்சலை உடனடியாக வெளியிடுவர்; விவேகிகளோ பிறரது இகழ்ச்சியை பொருட்படுத்துவதில்லை.
 
70.  உண்மையை பேசுவோர் நீதியை நிலைநாட்டுவோர்;பொய்யுரைப்போரோ வஞ்சம் நிறைந்தவராவர்.

இனியும் வரும்
...

Friday, March 23, 2012

சாலமோனின் நீதிமொழிகள் 5

சாலமோன் ஓர் அமைதியின் அரசராக விளங்கினார் என்கிறது வேதாகமம். ஆதலால், அவர் உள்நாட்டுக் கொள்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். நீதி நிர்வாகம் சிறப்பாகச் செயல்பட ஏற்பாடு செய்தார். அதிகமாகப் புதிய பதவிகளை ஏற்படுத்தி, புதியவர்களைப் பதவியில் அமர்த்தினார். நாட்டை 12  மாவட்டங்களாகப் பிரித்து, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஓர் ஆளுனரை ஏற்படுத்தினார். மேலும், சாலமோன் தனது படைபலத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி அதன் மூலம் எதிரிகளின் ஊடுருவலைத்தவிர்த்தார்.

அவருடைய நீதிமொழிகளின் தொடர்ச்சி...

51. ஈகைக் குணமுள்ளோர் வளம்பட வாழ்வர்; குடிநீர் கொடுப்போர் குடிநீர் பெறுவர்.

52. தானியத்தை பதுக்கி வைப்போரை மக்கள் சபிப்பர்; அதை மக்களுக்கு விற்போரோ ஆசி பெறுவர்.

53. நன்மையானதை நாடுவோர் இறைவனின் தயவை நாடுவோர் ஆவர்; தீமையை நாடுவோரிடம் தீமைதான் வந்தடையும்.

54. தம் செல்வத்தை நம்பி வாழ்வோர் சருகென உதிர்வர்; இறைவனை நம்பி வாழ்வோரோ தளிரென தழைப்பர்.

55. குடும்பச்  சொத்தைக் கட்டிக் காக்காதவர்களுக்கு எஞ்சுவது வெறுங் காற்றே; அத்தகைய மூடர்கள் ஞானமுள்ளோர்க்கு அடிமையாவர்.

56. நேர்மையான நடத்தை வாழ்வளிக்கும் மரத்திற்கு இட்டுச் செல்லும்; ஆனால் வன்செயல் உயிராற்றலை இழக்கச் செய்யும்.

57. நேர்மையாளர் இவ்வுலகிலேயே கைம்மாறு பெறுவர் எனில் பொல்லார் தண்டனை பெறுவது சத்தியம்.

58. அறிவை விரும்புவோர் கண்டித்துத் திருத்தப்படுவதை விரும்புவர்; கண்டிக்கப்படுவதை வெறுப்போர் அறிவற்ற விலங்குகளுக்கு நிகராவர்.

59. நல்லார் இறைவனின் கருணையை அடைவர்; தீய சூழ்ச்சி செய்வோரை அவர் கண்டிப்பார்.

60. பண்புள்ள மனைவி தன் கணவனுக்கு மணி முடியாவாள்; இழிவு வருவிப்பவள் அவனுக்கு எலும்புருக்கி போலிருப்பாள்.

இனியும் வரும்...

Wednesday, March 21, 2012

சாலமோன் அரசரின் நீதிமொழிகள் 4


சாலமோனின் ஆட்சிக்காலத்தை இஸ்ரயேலின் பொற்காலம் என வேதாகமம் கூறுகிறது. இஸ்ரயேல் மக்கள் சமூக, பொருளாதார வாழ்வில் மேம்பட்ட நிலையில் ஓர் அமைதியான வாழ்க்கை நடத்தினார்கள். சாலமோனது பிரம்மாண்டமான கட்டிடப் பணிகள் பலருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது. இதனால் பலர் வசதிபடைத்தவர்களாகத் திகழ்ந்தனர். பல புதிய நகரங்கள் உருவாக்கப்பட்டு குடியேற்ற வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டன. கட்டிடப் பணியில் மட்டுமல்லாது கலைப்பணியிலும் சாலமோன் சிறந்து விளங்கினார்.

அவர் எழுதி வைத்த நீதிமொழிகள் சிலவற்றின் தொடர்ச்சி...

41. திறமையுள்ள தலைமை இல்லையேல் நாடு வீழ்ச்சியுறும்; அறிவுரை கூறுவார் பலர் இருப்பின்  அதற்கு பாதுகாப்புண்டு.

42. அன்னியருக்காகப் பிணை (ஜாமீன்) நிற்போர் அல்லற்படுவர்: பிணை நிற்க மறுப்போர்க்கு இன்னல் வராது (இந்த நீதிமொழி இந்த காலத்திற்கும் எவ்வளவு பொருத்தமக உள்ளது!)

43. கனிவுள்ள பெண்ணுக்குப் புகழ் வந்து சேரும்; முயற்சியுள்ள ஆணுக்குச் செல்வம் வந்து குவியும்.

44. இரக்கமுள்ளோர் தம் செயலால் தாமே நன்மை அடைவர்; இரக்கமற்றோரோ தமக்கே ஊறு விளைவித்துக்கொள்வர்.

45. பொல்லார் பெறும் ஊதியம் ஊதியமல்ல; நீதியை விதைப்போரோ  உண்மையான ஊதியம் பெறுவர்.

46. நீதியில் கருத்தூன்றியோர் நீடு வாழ்வர்; தீமையை நாடுவோர் சாவை நாடிச் செல்வர்.

47. வஞ்சக நெஞ்சினர் இறைவனின் இகழ்ச்சிக்குரியவர்; மாசற்றோர் அவரது மகிழ்ச்சிக்கு உரியவராவார்.

48. தீயோர் தண்டனைக்குத் தப்பமாட்டார்; இறைவனுக்கு அஞ்சி நடப்போரின் மரபினருக்கோ தீங்கு வராது.

49. மதிகெட்டு நடக்கும் பெண்ணின் அழகு பன்றிக்கு போட்ட வைர மூக்குத்தியை போன்றது.

50. அளவின்றி செலவழிப்போர் செல்வராவது உண்டு; கஞ்சராய் வாழ்ந்து வறியவராவதும் உண்டு..

இனியும் வரும்...

Monday, March 19, 2012

சாலமோனின் நீதிமொழிகள் 3

சாலமோன் அரசரின் ஞானம் அவருடைய காலத்தில் இஸ்ராயேலை சுற்றிலுமுள்ள நாடுகளை ஆண்ட அரசர்களின் ஞானத்தை விட மிகவும் சிறந்ததாக இருந்தது. ஆகவே அத்தகைய நாடுகள் அனைத்திலும் அவருடைய புகழ் பரவியது.

அவர் சுமார் மூவாயிரம் நீதிமொழிகளை உரைத்தார் என்கிறது வேதாகமம். அவர் இயற்றிய பாடல்களின் ஆயிரத்து ஐந்து. அவர் தம் நாட்டிலுள்ள அனைத்து மர வகைகளை குறித்தும், நடப்பன, பறப்பன, ஊர்வன, நீந்துவன ஆகியவற்றைக் குறித்தும் கருத்துரை வழங்கினார்.

அவருடைய நீதிமொழிகளைக் கொண்ட பகுதி 'நீதிமொழிகள்' என்ற தலைப்பில் ஒரு தனி பகுதியாகவே தரப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன்...

அவர் எழுதி வைத்த நீதிமொழிகளில் சில....

31. இறுமாப்பு வரும் முனே, இகழ்ச்சி வரும் பின்னே; தன்னடக்கம் இருக்குமாயின் ஞானமும் இருக்கும்.

32. நேர்மையானவர்களின் நல்லொழுக்கும் அவர்களை வழி நடத்தும்; நம்ம்பிக்கை துரோகிகளின் வஞ்சகம் அவர்களை பாழ்படுத்தும்.

33.இறைவனின் சினம் வெளிப்படும் நாளில் செல்வம் பயன்படாது; நேர்மையான நடத்தையோ சாவுக்குத் தப்புவிக்கும்.

34.குற்றமில்லாதவர்களின் நேர்மை அவர்களின் வழியை நேராக்கும்; பொல்லார் தம் பொல்லாங்கினால் வீழ்ச்சியுறுவர்.

35.நேர்மையானவர்களின் நீதி அவர்களைப் பாதுகாக்கும்; நம்பிக்கை துரோகிகள் தங்களுடைய சதித்திட்டங்களில் தாங்களே பிடிபடுவார்கள்.

36.பொல்லார் எதிர்நோக்கியிருந்தது அவர்கள் சாகும்போதும் கிட்டாமலே மறைந்துபோகும்; அவர்கள் எதிர்நோக்கியிருந்த செல்வம் கிடைக்காமற் போகும்.

37.இறைவனுக்கு அஞ்சி நடப்போர் துயரினின்று விடுவிக்கப்படுவர்; பொல்லார் அதில் அகப்பட்டு உழல்வர்.

38.இறைப்பற்று இல்லாதோர் தம் பேச்சினால் அடுத்திருப்பாரைக் கெடுப்பர்; நேர்மையாளர் தம் அறிவாற்றலால் விடுவிக்கப்படுவர்.

39.நல்லாரின் வாழ்க்கை நலமடைந்தால் ஊரார் மகிழ்ந்து கொண்டாடுவர்; பொல்லார் அழிந்தால், அவர்களிடையே ஆர்ப்பரிப்பு உண்டாகும்.

40.அடுத்திருப்பாரை இகழ்வது மதிகெட்டோரின் செயல்; நாவடக்கம் விவேகமுள்ளோரின் பண்பு.

இனியும் வரும்...

Friday, March 16, 2012

சாலமோனின் நீதிமொழிகள் - 2

இஸ்ராயேல் நாட்டை ஆண்ட அரசர்களுள் ஞானத்திற்கு மிகவும் பிரபலமானவர் சாலமோன் அரசர். அவருடைய ஆட்சிகாலத்திலோ அல்லது அதற்கு பின்னரோ எழுதி வைக்கப்பட்டதாக கருதப்படும் நீதிமொழிகள் நூலில் இருந்து முதல் பத்து நீதிமொழிகளை முதல் பதிவில் எழுதியிருந்தேன்.

அதன் தொடர்ச்சியாக...


11. பகைமை சண்டைகளை எழுப்பிவிடும்; தனக்கிழைத்த தீங்கு அனைத்தையும் அன்பு மன்னித்து மறக்கும்.

12. விவேகமுள்ளவர்களின் சொற்களில் ஞானம் காணப்படும்; மதிகெட்டவர்களின் முதுகிற்குப் பிரம்பே ஏற்றது.

13. ஞான்முள்ளோர் அறிவைத் தம்மகத்தே வைத்திருப்பர்; மூடர் வாய் திறந்தால் அழிவு அடுத்து வரும்.

14. செல்வரின் சொத்து அவருக்கு அரணாயிருக்கும்; ஏழையரின் வறுமை நிலை அவர்களை இன்னும் வறியோராக்கும்.

15. நேர்மையாளர் தம் வருமானத்தை வாழ்வதற்குப் பயன்படுத்துகின்றனர்; பொல்லாதவரோ தம் ஊதியத்தைத் தீய வழியில் செலவழிக்கின்றனர்.

16. நல்லுரையை ஏற்போர் மெய்வாழ்வுக்கான பாதையில் நடப்பர்; கண்டிப்புரையைப் புறக்கணிப்போரோ தவறான வழியில் செல்வர்.

17.உள்ளத்தின் வெறுப்பை மறைப்போர் பொய்யோர்; வசைமொழி கூறுவோர் மடையர்.

18. மட்டுக்கு மிஞ்சின பேச்சு அளவற்ற தீமைகளை விளைவிக்கும்; நம் நாவை அடக்குவோர் விவேகமுள்ளோர்.

19. நல்லாரின் சொற்கள் தூயவெளிக்குச் சமம்; பொல்லாரின் எண்ணாங்களோ பதருக்குச் சமம்.

20. நல்லாரின் சொற்கள் பிறருக்கு உணவாகும்; செருக்கு நிறைந்தோரின் மதிகேடு அவர்களை அழித்துவிடும்.

21. இறைவனின் ஆசி செல்வம் அளிக்கும்; அச்செல்வம் துன்பம் கலவாது அளிக்கப்படும் செல்வம்.

22. தீங்கிழைப்பது மதிகெட்டோர்க்கு மகிழ்ச்சிதரும் விளையாட்டு; ஞானமே மெய்யறிவு உள்ளோர்க்கு மகிழ்ச்சி தரும்.

23. பொல்லார் எதற்கு அஞ்சுவரோ அதுவே அவர்களுக்கு வரும்; இறைவனுக்கு அஞ்சி நடப்போர் எதை விரும்புகின்றனரோ, அது அவர்களுக்கு கிடைக்கும்.

24. சுழல் காற்றுக்குப்பின் பொல்லார் இராமற்போவர்; இறைவனுக்கு அஞ்சி நடப்பவர்களோ என்றுமுள்ள அடித்தளம் போன்று நிற்பர்.

25. பல்லுக்குக் காடியும் கண்ணுக்குப் புகையும் எப்படி இருக்குமோ, அப்படியே சோம்பேறிகள் தங்களைத் தூது அனுப்பினோர்க்கு இருப்பர்.

26. இறைவனிடம் கொள்ளும் அச்சம் ஆயுளை நீடிக்கச் செய்யும்; பொல்லாரின் ஆயுட்காலம் குறுகிவிடும்.

27. நல்லார் தாம் எதிர்பார்ப்பவற்றை பெற்று மகிழ்வர்; பொல்லார் எதிர்ப்பார்ப்பதோ அவர்களுக்கு கிட்டாமற் போகும்.

28. இறைவனின் வழி நல்லார்க்கு அரணாகும்; தீமை செய்வோர்க்கோ அது அழிவைத் தரும்.

29. இறைவனுக்கு அஞ்சி நடப்போரை ஒருபோதும் அசைக்க இயலாது; பொல்லாரோ நாட்டில் குடியிருக்க மாட்டார்கள்.

30. இறைவனைக்கு அஞ்சி நடப்போரின் வாயினின்று ஞானம் பொங்கி வழியும்; வஞ்சகம் பேசும் நா துண்டிக்கப்படும்...

இதில் கூறப்பட்டுள்ள சில நீதிமொழிகள் இன்றைய அநியாய, அக்கிரம  உலகில் பொருத்தமற்றவையாக தோன்றினாலும் தீயவன் பெறும் வெற்றிகளும் வசதி வாய்ப்புகளும் தற்காலிகமானவையே என்பதையும் நினைவுகூறவேண்டும்.
இனியும் வரும்...

பி.கு: என்னுடைய பி.எஸ்.என்.எல் இணைப்பு கடந்த இரு வாரங்களாக கண்ணாமூச்சி ஆடியதால் என்னால் தொடர்ந்து எழுத முடியாமற் போனது. புதிதாக ரிலையன்ஸ் இணைப்பை பெற்றதால் இன்று பதிவு செய்ய முடிந்தது. இனி தொடர்ந்து வரும்...

 

Friday, March 09, 2012

சாலமோனின் நீதிமொழிகள்.

நீதிமொழிகள் நூலின் ஆசிரியர் கிறீஸ்து பிறப்பதற்கு முன் இஸ்ராயேலை ஆண்ட பல அரசர்களுள் ஒருவரான சாலமோன்அரசர். அவர்  கி.மு. சுமார் 962இலிருந்து 922வரை இஸ்ராயேலை ஆட்சி செய்தார். இவர் அளவில்லா ஞானத்தை பெற்றிருந்தார். இவருக்கு இத்தகைய பரந்த ஞானம் எப்படி வந்தது என்பதை சுருக்கமாக நான் எழுதிய இந்த பதிவில் கூறியிருக்கிறேன்.

இவர் எழுதிய நீதிமொழிகள், கிறீஸ்துவர்கள் புனித நூலாக கருதும் பைபிளின் ஒரு பகுதியான பழைய வேதாகமத்தில் நான்கு பகுதிகள் கொண்ட ஒரு தனி நூலாக அமைந்துள்ளது. சாலமோன் அரசர் இறைவனால் அருளப்பட்ட அளவுகடந்த ஞானத்துடன் சுமார் நாற்பதாண்டு காலம் இஸ்ராயேலை சிறப்புடன் ஆண்டார் என்கிறது வேதாகமம். அவர் அரசராக இருந்த காலத்தில் அவரோ அல்லது அவரது காலத்தில் வேறு சிலரோ நீதிமொழிகள் பலவற்றை உருவாக்கியிருக்கலாம் அல்லது தொகுத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இந்நூலின் ஒரு பகுதியாவது கி.மு 8ஆம் நூற்றாண்டளவில் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். கி.மு. 5ஆம் நூற்றாண்டு வரை வாய்மொழியாக மக்களிடையே நிலவிய நீதிமொழிகள் பின்னர் கி.மு 3ஆம் நூற்றாண்டளவில் தற்போதுள்ள நூலாகத் தொகுக்கப்பட்டிருக்கலாம் என்றும் பல வரலாற்று அறிஞர்கள் கூறியுள்ளனர். ஆயினும் இந்நூலின் பெரும் பகுதி சாலமோன் அரசருடைய ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்டதென கருதப்படுவதால் இந்நூல் சாலமோனின் நீதிமொழிகள் என்றே கூறப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் the Book of Proverbs என்று கூறுகின்றனர்.

இந்நூல் 'இறைவனிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்' என துவங்கி சமய ஒழுக்கம், நல்லறிவு, நன்னடத்தை ஆகியவற்றைப் பற்றி விளக்குகிறது. மேலும் குடும்ப உறவுகள், பொருள் மற்றும் பணம் ஈட்டும் முறைகள், சுயக்கட்டுப்பாடு, தாழ்ச்சி, பொறுமை, ஏழைகள் மீது இரக்கம் ஆகிய பல நற்பண்புகளின் அவசியத்தைப் பற்றியும் உரைக்கிறது.

இந்நூலில் கூறப்பட்டுள்ள பல அறிவுரைகள் இறவாப் புலவர் வள்ளுவர் இயற்றிய திருக்குறளுடனும் பல இடங்களில் ஒத்துப்போவதாக பல ஆய்வாளர்கள், தமிழ் அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளதும் இதன் சிறப்பம்சமாகும்.  ஞானம்  நீதிமொழிகள் நூலில் மைய இடம் பெறுகிறது. வள்ளுவர் அதனை அறிவு என்பார். அறிவுடைமை என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் அமைத்துள்ள பத்து குறள்களும் அறிவு என்றால் என்னவென்பதை விளக்குகின்றன. இவ்விரண்டு நூல்களையும் ஒப்பிட்டு தமிழ் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளவற்றையும் இத்தொடரில் அவ்வப்போது கூறுகிறேன்.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சாலமோன் அரசருடைய காலத்தில் எழுதி வைத்த பல அறிவுரைகள் இன்றும் மிகவும் பொருத்தமாக உள்ளதால் இவற்றைப் பற்றி ஒருசில பதிவுகள் எழுதலாம் என்று நான் கருதுகிறேன். இந்நூலில் அடங்கியுள்ள அனைத்து அதிகாரங்களையும் (chapters) எழுதாமல் இன்றைய சூழலுக்கு பொருத்தமானதை மட்டும் எழுதுவேன். ஆகவே இதை எந்த மதத்தைச் சார்ந்தவர்களாயிருப்பினும் வாசித்து பயனடையலாம்.

"இவற்றைப் படிப்பவர் ஞானமும் நற்பயிற்சியும் பெறுவர்; ஆழ்ந்த கருத்தடங்கிய நன்மொழிகளை உணர்ந்துக் கொள்வர்; நீதி, நியாயம், நேர்மை நிறைந்த விவேக வாழ்க்கையில் பயிற்சி பெறுவர்...."

இதை நான் கூறவில்லை. நூலின் அறிமுகத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

எம்மதமும் சம்மதம் என கருதுபவர்கள் வாசித்து பயனுறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இறைவனே இல்லை என்பவர்களுக்கும் இந்நூலில் வரும் நன்மொழிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன். ஏனெனில் இவை இறைவனை போற்றும் வாசகங்கள் அல்ல. மாறாக நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் கடைபிடிக்க வேண்டிய பல நல்ல அறிவுரைகளைக் கொண்ட தொகுப்பு.
***********
சாலமோனின் நீதிமொழிகள்:

1. ஞானமுள்ள பிள்ளைகள் தம் தந்தைய மகிழ்விக்கின்றனர்; அறிவற்ற மக்களோ தம் தாய்க்கு துயரமளிப்பர்.

2. தீய வழியில் ஈட்டிய செல்வம் பயன் தராது; நேர்மையுள்ள நடத்தையோ சாவிலிருந்து தப்புவிக்கும்.

3. வேலை செய்யாத கை வறுமையை வருவிக்கும். விடாமுயற்சியுடையவரின் கையோ செல்வத்தை உண்டாக்கும்.

4. கோடைக் காலத்தில் விளைச்சலைச் சேர்த்து வைப்போர் மதியுள்ளோர். அறுவடைக் காலத்தில் உறங்குவோர் இகழ்ச்சிக்குரியவர்கள்.

5. நேர்மையாளர் மீது ஆசி பொழியும்; பொல்லாதோர் பேச்சிலோ கொடுமை மறைந்திருக்கும்.

6. நேர்மையாளரைப்பற்றிய நினைவு ஆசி விளைவிக்கும்; பொல்லாரின் பெயரோ அழிவுறும்.

7. ஞானமுள்ளோர் அறிவுரைகளை மனமார ஏற்பர்; பிதற்றும் மூடரோ வீழ்ச்சியுறுவர்.

8. நாணயமாக நடந்து கொள்வோர் இடையூறின்றிநடப்பர்; கோணலான வழியைப் பின்பற்றுவோரோ வீழ்ச்சியுறுவர்.

9  தீய நோக்குடன் கண்ணடிப்போர் தீங்கு விளைவிப்பர்; பிதற்றும் மூடரோ வீழ்ச்சியுறுவர்.

10. நல்லாரின் சொற்கள் வாழ்வளிக்கும் ஊற்றாகும்; பொல்லாரின் பேச்சிலோ கொடுமை மறைந்திருக்கும்...

இனியும் வரும்..