Wednesday, November 17, 2010

போலி, பகுதி-நேர பகுத்தறிவாளர்கள்.

பகுத்தறிவது என்ற சொல்லை பகுத்து+அறிவது என்று பிரிக்கலாம். அதாவது எந்த ஒரு விஷயத்தையும் கேட்டு அதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதன் நதிமூலம், ரிஷிமூலத்தை ஆய்ந்து அதன் பொருளை அறிவது. இதை அப்படியே முழுமையாக கடைபிடிப்பவர்களை பகுத்தறிவாளர்கள் என்கிறார்கள்!

உதாரணத்திற்கு கடவுள் இருக்கிறார் என்று யாரோ சொன்னதை அப்படியே பகுத்தறிவாளர்களுடைய பகுத்தறியும் திறன் ஏற்றுக்கொள்வதில்லை. அதை அவர்களுக்கு சரியான ஆதாரங்களைக் கொண்டு நிரூபிக்க வேண்டும்.

'இவர்தாண்டா உங்க அப்பா' என்ற என் தாயின் சொல்லை எப்படி அப்படியே ஏற்றுக்கொண்டு அவருடைய கணவரை என் தந்தையாக ஏற்றுக்கொண்டேனோ அப்படித்தான் கடவுள் இருக்கிறார் என்ற என்னுடைய பெற்றோர் கூறியதையும் இதுவரை ஏற்றுக்கொண்டேன். ஆனால் இப்போது எனக்கு எதையும் பகுத்து அறிந்துக்கொள்ளும் திறன் வந்துவிட்டது. ஆகவே சந்தேகத்திற்கு இடமில்லாமல் (beyond reasonable doubt) தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாதபட்சத்தில் கடவுள் இருக்கிறார் என்பதை இனியும் ஏற்றுக்கொள்ள இயலாது என்பவர்கள் இத்தகையோர்.

அதாவது இவர்கள் பிறப்பால் இந்துக்களாகவோ, கிறிஸ்துவர்களாகவோ இருந்தவர்கள். அன்று பெற்றோர் வைத்த இந்து மற்றும் கிறிஸ்துவ கடவுள்/புனிதர்களின் பெயரை இப்போதும் வைத்துக்கொண்டிருப்பவர்கள். இன்றும் இவர்களுடைய குழந்தைகள் மற்றும் பேர குழந்தைகள் மதம் சார்ந்த பெயர்களைத்தான் சூட்டுவார்கள். இவர்களுள் பலருடைய வீடுகளிலும் மதம் சார்ந்த படங்களைக் காணலாம். தினசரி பூஜைகள் நடைபெறும். ஆனால் இதெல்லாம் வீட்டிலுள்ள பெண்களூக்காக என்பார்கள். தீபாவளி, கிறிஸ்துமஸ் விழாக்களை சம்பிரதாயமாக கொண்டாடுவார்கள். கேட்டால் இதுவும் வீட்டுப் பெண்களூக்காகத்தான் என்பார்கள்.

மதம் மற்றும் சாதிகளின் அடிப்படையில் கிடைத்த, கிடைக்கக் கூடிய அனைத்து சலுகைகளையும் பெற்று மதம் சார்ந்தோர் நடத்தும் பள்ளி/கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்று சிறந்த நிறுவனங்களில் பணிக்கு அமர்ந்தவர்கள். தங்களுடைய பிள்ளைகள் ஏன் பேரக் குழந்தைகளூக்கும் இவற்றை பெற்றுத் தந்தவர்கள்.

'யாருக்கு தேவைகள் அதிகமோ அவர்கள் மட்டுமே கோவிலுக்கும், தேவாலயங்களுக்கும் செல்கிறார்கள்' என்பார்கள். ஆனால் இவர்கள் வீட்டுப் பெண்கள் சாமி கும்பிடுவதையும் கோவிலுக்கு செல்வதையும் இவர்களால் தடுக்க முடியாது. ஒருவேளை இவர்களுடைய தேவைகளுக்கும் சேர்த்து வீட்டிலிருப்பவர்கள் கோவில்களுக்கு செல்கிறார்களோ என்னவோ.

உலகில் நடக்கும் அனைத்துக்கும் ஏதோ ஒரு காரண காரியம் உண்டு ஆகவே இறைவனுக்கும் அவற்றிற்கும் சம்பந்தம் இல்லை என்பது இவர்களுடைய வாதம்.

இந்த சூழலில் என்னுடைய வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட இரு அனுபவங்களை இங்கு எழுதலாம் என்று நினைக்கிறேன்.

1. மகப்பேறு:

நான் சென்னை கிளைகளில் ஒன்றில் மேலாளராக இருந்த காலத்தில் என்னுடைய கிளைக்கு மிக அருகாமையில் ஒரு மகப்பேறு மருத்துவமனை இருந்தது. அதன் உரிமையாளரான பெண் மருத்துவரிடம் என்னுடைய கிளையில் கணக்கு ஒன்று திறக்க கூறி அணுகலாம் என்று முயன்றபோது அவரை சந்திக்கவே இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. அத்தனை கைராசியான மருத்துவர் என்று பெயரெடுத்தவர். அடுத்த சில மாதங்களில் அவரை அடிக்கடி அலுவல் விஷயமாக சந்தித்ததில் நட்பு ஏற்பட்டது. அவருடைய தந்தையும் கணவரும் கூட மகப்பேறுதுறையில் சிறந்த மருத்துவர்கள். மாதம் ஒன்றிற்கு நூற்றிற்கும் மேற்பட்ட பிரசவங்களைக் காணும் மருத்துவமனையின் உரிமையாளருக்கு திருமணமாகி பதினைந்து ஆண்டுகள் ஆகியும் குழந்தைப் பேறு இல்லை. இதைக் கேட்டதும் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அதை அவரிடமே ஒருமுறை விசாரித்தபோது அவர் கூறியது இதுதான். "எங்க ரெண்டு பேருக்குமே உடல் ரீதியா குழந்தை பிறப்பதற்கு தடையா எதுவும் இல்லை. பலமுறை கருத்தரித்தும் அது குறை பிரசவமாகவே முடிந்துபோனது. ஏன் என்று எங்கள் இருவருக்கும் இதுவரை விளங்கவில்லை.'

மேலும் அவருடைய அனுபவத்தில் குழந்தை பேறு ஏற்பட வாய்ப்பே இல்லை என்று அவர் ஆய்வு செய்து திருப்பி அனுப்பிய பல பெண்களுக்கும் குழந்தை பேறு கிடைத்ததையும் குழந்தையின் வளர்ச்சி சீராக உள்ளது என்ற குழந்தைகள் குறைபிரசவத்தில் மரித்து பிறந்ததையும் அவர் விளக்கிவிட்டு 'எல்லாமே நம்ம கையில இருக்குன்னு சொல்ல முடியறதில்லை சார்.' என்றது இப்போதும் நினைவில் நிற்கிறது.

என்னுடைய மூத்த மகள் விஷயத்திலும் இதை என்னால் உணர முடிந்தது. திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகளாகியும் மகப்பேறு இல்லாமல் மலேஷியாவில் பல மருத்துவர்களை கண்டும் ஒன்றும் பலனளிக்காமல் அவரை சென்னைக்கு வரவழைத்து இங்கு அத்துறையில் மிகவும் பிரபலமான ஜி.ஜி. (ஜெமினி கனேசனின் மகளுடையது) மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அங்கும் இருவருக்கும் உடல் ரீதியாக எந்த குறையும் இல்லை எப்போது வேண்டுமானாலும் கருத்தரிக்கலாம் என்றார்கள். அவர்களுடைய வாய் முகூர்த்தம் என்பார்களே அதே போல் அடுத்த ஒரு ஆண்டிற்குள்ளாகவே கருத்தரித்தார் என் மகள்.

அப்படியானால் கருத்தரிக்க ஏன் மூன்றாண்டுகள் ஆனது? இதற்கு என்ன காரணம் என்று இத்துறையில் தேர்ச்சிபெற்ற மருத்துவர்களிடம் எந்த விளக்கமும் இல்லை.

2. மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்.

என்னுடைய நண்பர் ஒருவருக்கு சிறு வயது முதலே ஆஸ்துமா. வருடத்தில் ஆறுமாதங்கள் படாதபாடு படுவார். அதன் தீவிரத்தை குறைக்க எண்ணி பல்வேறு மருத்துவங்களை செய்தார். இறுதியில் நண்பர் ஒருவரின் பேச்சை நம்பி ஒரு அரைகுறை மருத்துவரிடம் செல்ல அவர் தொடர்ந்து ஸ்டீராய்டை ஊசி மூலம் ஏற்ற நாளடைவில் ஆஸ்துமா குறைந்தது. ஆனால் அதை தொடர்ந்து ஒரு சில ஆண்டுகளில் அவருடைய கால் நடுக்கம் ஆரம்பித்து எழுந்து நிற்கவே முடியாமல் போனது. நானும் எனக்கு தெரிந்த பல மருத்துவர்களிடம் (அப்போல்லோ மருத்துவர்கள் உட்பட) அழைத்துச் சென்றதில் ஸ்டீராய்டின் தாக்கம்தான் இதற்குக் காரணம் இனி அவரால் யாருடைய துணையும் இல்லாமல் நடக்க முடியாது என்று கூறிவிட்டனர். சோர்ந்துபோன என்னுடைய நண்பர் இறுதியில் தெய்வமே கதி என்று தனக்கு குணமானால் தன் வாழ்நாள் முழுவதும் வேளாங்கண்ணி ஆலயத்திற்கு வருடம் ஒருமுறை கால்நடையாகவே வருகிறேன் என்று நேர்ந்துக்கொண்டார். முதல் வருடம் நண்பர்கள் துணையுடன் சக்கர நாற்காலியில் சென்னையிலிருந்து தஞ்சை மாவட்டத்திலுள்ள வேளாங்கண்ணி ஆலயத்திற்கு நடைபயணம் மேற்கொண்டார். இடை இடையில் நண்பர்கள் பற்றிக்கொள்ள சில அடிகள் எடுத்து வைப்பார். பதினைந்து வருடங்கள் ஆகின்றன. அவருடைய பயணம் இன்றும் தொடர்கிறது. சக்கர நாற்காலி இல்லை. நண்பர்கள் கைத்தாங்கல் இல்லை. எவ்வித சிகிச்சையும் பெறவில்லை.

அதற்காக நோய் வந்தால் மருத்துவரை அணுக வேண்டாம் என்பதல்ல. ஆனால் மருத்துவத்தால் கைவிடப்பட்ட பலரும் ஏதோ ஒரு சக்தியால், அந்த சக்தியின் மீதுள்ள அவர்களுடைய நம்பிக்கையால் குணமடைந்துள்ளார்கள் என்பது உண்மை.

இறை நம்பிக்கை என்பது அறிவுத்திறனை சார்ந்ததல்ல என்பதுதான் என்னுடைய வாதம். மனித மனங்களை ஆய்ந்து அறிந்தவர் எவரும் இல்லை. ஆகவே இறை நம்பிக்கையையும் எவராலும் ஆய்ந்து அறிந்துக்கொள்ள முடியாது.

நான் கிறிஸ்துவனாக பிறந்தேன், கிறிஸ்துவனாக வளர்ந்தேன், கிறிஸ்துவனாகவே மரிப்பேன். நான் படித்த படிப்போ, எனக்கு இதுவரை கிடைத்த அறிவு வளர்ச்சியோ இந்த நம்பிக்கையை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை.

நான் சிறுவனாக இருந்தபோது வேறுவழியில்லாமல் கிறிஸ்துவனாக இருந்தேன். இப்போது பகுத்தறியும் திறன் வந்துவிட்டது. ஆகவே கிறிஸ்து இருந்தார் என்பதற்கு சரியான சரித்திர சான்றுகள் கிடைக்காதவரை நான் அவரையோ அவர் ஏற்படுத்திய மதத்தையோ நம்பமாட்டேன் என்றால் நான் ஒரு பொய்யன், ஒரு சந்தர்ப்பவாதி, அரைகுறை பகுத்தறிவாளன்!

ஒரு போலியான, பகுதி-நேர, சந்தர்ப்பவாத பகுத்தறிவாளனாக இருப்பதைவிட ஒரு முழுமையான விசுவாசியாக இருப்பதே சிறந்தது என்பதை நம்புகிறவன்.

ஆனால் அதே சமயம் மதங்கள் பெயரால் மதகுருமார்கள் செய்யும் அக்கிரமங்களை ஏற்றுக்கொள்கிறவன் அல்ல. அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாயினும்....

2 comments:

ஜோ/Joe said...

ஜோசப் சார்,
சுவாரஸ்யமான பதிவு. உரிமையோடு சில கேள்விகள் கேட்கலாமென நினைக்கிறேன்.

முதலில் நான் நாத்திகன் அல்ல ..கடவுள் நம்பிக்கை உள்ளவன்.அதை சொல்லி விடுகிறேன் :)

1. கிறிஸ்து ஏற்படுத்திய மதம் என குறிப்பிடுகிறீர்கள் ..கிறிஸ்து எந்த மதத்தையும் ஏற்படுத்தியதாக நான் புரிந்திருக்கவில்லை ..விளக்கவும்.

2.அப்படியே உங்கள் கருத்துப்படி கிறிஸ்து உருவாக்கிய மதம் நீங்கள் பின்பற்றும் கத்தோலிக்க மதம் என்றால் , கிறிஸ்தவர்கள் என சொல்லிக்கொள்ளும் மற்றவர்கள் ? அவர்கள் உங்களையே இரட்சிக்கப்படாதவர் என்கிறார்களே ?

3. ஒரு வேளை நீங்கள் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்திருந்தால் , இப்போது இஸ்லாமில் இதை விட அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவராக இருந்திருப்பீர்கள் ..இல்லையா?

டி.பி.ஆர் said...

வாங்க ஜோ,

கிறிஸ்துவ மதம் (இதில் கத்தோலிக்கர்களும் ஒரு அங்கமே) கிறிஸ்துவை விசுவசித்தவர்களால் துவங்கப்பட்டது எனவும் கூறலாம். கிறிஸ்துவின் போதனைகளை பின்பற்றியவர்களைத்தான் முதன் முதலில் 'கிறிஸ்துவர்கள்' என அழைக்கப்பட்டனர்.
ஆகவே கிறிஸ்துவ மதத்தை ஸ்தாபகர் கிறிஸ்துதான் எனவும் பொருள் கொள்ளலாம் என கருதுகிறேன்.

மாற்று கருத்துடைய பிரிந்து சென்ற சகோதரர்களும் கிறிஸ்துவர்களே. அவர்கள் எங்களை எப்படி அழைக்கின்றனர் என்பதை பற்றி நாம் கவலைப்படுவதில் அர்த்தமில்லை.

நான் கூறியுள்ளதுபோல எந்த மதத்தில் பிறந்திருந்தாலும் அதுவே உண்மையான மதம் என்றுதான் உணர்ந்திருப்போம்.

என்னுடைய பதிவின் நோக்கம் கிறிஸ்துவ மதம்தான் உயர்ந்தது என்பதை பறைசாற்றுவதல்ல.

நான் சிறுவனாய் இருந்த காலத்தில் விவரமில்லாமல் இருந்தேன். அப்போது என்னுடைய பெற்றோர் கூறியதை கேட்டு இறைவனை நம்பினேன். இப்போது என்னுடைய அறிவு வளர்ந்துவிட்டது. ஆகவே பகுத்தறிவாளனாகிவிட்டேன் என்பதுபோன்ற சிலருடைய வெற்று வாதங்களை தவறு என கூறுவதே அதன் நோக்கம்.

நெடுநாட்களுக்குப் பிறகு வந்திருந்து தங்களுடைய கருத்துக்களை முன்வைத்தமைக்கு நன்றி!

Post a Comment