Tuesday, November 02, 2010

இன்று மரித்தோர் தினம்!

இன்று உலகெங்குமுள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் தங்கள் குடும்பம் மற்றும் உறவினர், நண்பர்கள் குடும்பத்தில் மரித்துப்போனவர்கள் நினைவாக பிரார்த்தனை செய்யும் தினம்.

இதை ஆங்கிலத்தில் All Souls Day என்கிறார்கள்.

இன்று மரித்தவர்களுடைய கல்லறைகளுக்குச் சென்று மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்திகள் ஏற்றி அவர்களுக்காக செபிப்பது வழக்கம். சிலர் மரித்தவர்களுக்கு மிகவும் பிடித்த உணவு பண்டங்களையும் எடுத்துச் சென்று கல்லறையில் வைப்பதும் உண்டு.

நான் தஞ்சை மற்றும் தூத்துக்குடி போன்ற சிறிய நகரங்களில் பணியாற்றியபோதுதான் இந்த தினத்தின் மகிமையை முழுவதுமாக உணர முடிந்தது. அங்குள்ள தேவாலயங்களில் தொடர்ந்து நடைபெற்ற பிரார்த்தனைகளில் கலந்துக்கொள்ளும் மக்கள் கூட்டமும் அன்று நாள் முழுவதும் கல்லறைகளுக்கு கைநிறைய மலர்களுடன் படையெடுக்கும் கூட்டமும்... நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும். குறிப்பாக தஞ்சையில் அதிகாலையிலேயே நகரைச் சுற்றியுள்ள பல கிராமங்களிலும் இருந்து மக்கள் மாட்டு வண்டிகளில் பூக்களை கூடை, கூடையாக கொண்டு வந்து சர்ச் வளாகம் மற்றும் அதை சுற்றியுள்ள சாலைகளில் கடைகளை பரப்பி விடுவார்கள். அன்றைய நாள் முழுவதுமே வியாபாரம் படுஜோராக நடைபெறும். கிறிஸ்துவர்கள் மட்டுமல்லாமல் இந்துக்களும் இதில் கலந்துக்கொண்டு தங்கள் கிறிஸ்துவ நண்பர்களுடன் இணைந்து கல்லறைக்கு செல்வதைக் கண்டிருக்கிறேன்.

படிப்பும் நாகரீகமும் அதிகம் இல்லாத அந்த பாமரர்கள் மத்தியில்தான் இத்தகைய பாசமும் நேசமும் மரித்துப்போனவர்களையும் வருடம் ஒரு நாளாவது நினைத்துப் பார்க்கும் பழக்கமும் இன்றும் இருக்கிறது. சற்று கேள்வி ஞானமும், பகுத்தறியும் திறனும் வந்துவிட்டாலே இத்தகைய வழக்கங்களை மூட நம்பிக்கை என அழைக்கும் குணமும் நம்மில் சிலருக்கு வந்துவிடுகிறது.

ஒருவர் அவர் எத்தனைத்தான் புனிதமான வாழ்க்கையை வாழ்ந்திருந்தாலும் மரித்ததும் நேரே மோட்சத்திற்கு (சொர்க்கவாசல்) சென்றடைவதில்லையாம். படுபாதகராய் வாழ்ந்து மரிப்பவர்கள் நேரே நரகத்திற்கும் அற்ப தவறுகளுடன் மரிப்பவர்கள் சொர்க்கம் மற்றும் நரகத்திற்கிடையில் இருக்கும் உத்தரிக்கும் ஸ்தலம் (Purgatory) என அழைக்கப்படும் இடம் தங்களுடைய அற்ப தவறுகளுக்காக தங்களை சுத்திகரித்துக்கொள்ளும் இடமாக இருப்பதாக கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் நம்புகின்றனர்.

இத்தகையோர் நினைவாகத்தான் மரித்தோர் தினத்தை அவரைச் சார்ந்த குடும்பத்தினர் பிரார்த்தனகளில் செலவிடுகின்றனர். அவர்கள் நினைவாக ஏழை, எளியோரை அழைத்து உணவு கொடுப்பது, மரித்தவர்க்ள் பயன்படுத்திய ஆடைகளை அவர்களுக்கு அளிப்பது போன்றவற்றையும் செய்வதன் மூலம் கிடைக்கும் புண்ணியம் மரித்தவர்களுடைய உத்தரிக்கும் காலத்தை குறைத்து அவர்களை விரைவிலேயே சொர்க்கத்திற்குள் நுழைய வழிவகுக்கும் என்று நம்புகின்றனர்.

உற்றார் உறவினர் என யாரும் இல்லாத அனாதை ஆன்மாக்களுக்காகவும் இன்றைய தினத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் தேவாலயங்களில் நடைபெறுவதுண்டு.

இந்துச் சகோதரர்கள் தங்கள் குடும்பத்தில் மரித்தவர்களுடைய ஆன்மாக்கள் சாந்தியடைய அவர்களுடைய பிறந்த மற்றும் இறந்த தினங்களில் செய்யும் பூஜைகளைப் போன்றவைதான் கிறிஸ்துவர்கள் செய்யும் இத்தகைய பிரார்த்தனைகளும்.

அதாவது இவற்றிலெல்லாம் இன்றும் நம்பிக்கைக் கொண்டுள்ளவர்கள்....

கடவுளே இல்லை என்றும் எல்லாவற்றையும் அறிவியல் பூர்வமாக மட்டுமே அணுக வேண்டும் என்றும் மதங்களை வெறும் மேல் சட்டைகளாக மட்டுமே கருதும் சிலருக்கு இவையெல்லாம் ஒரு பொருட்டே இல்லை...

4 comments:

துளசி கோபால் said...

குடும்பத்தில் இறந்து போனவங்களை வருசத்துலே ஒரு நாளாவது நினைச்சுப் பார்க்கணும் என்பது நல்ல பழக்கம்தானே!

கல்லறை கட்டும் வழக்கம் பொதுவா நம்ம குடும்பங்களில் வழக்கமில்லை. மாளய அமாவாசைக்கு குடும்பத்தில் மறைந்தவர் அனைவருக்கும் சேர்த்துப் படையல் போடும் வழக்கம் உண்டு.

டி.பி.ஆர் said...

வாங்க துளசி,

கல்லறை கட்டும் வழக்கம் பொதுவா நம்ம குடும்பங்களில் வழக்கமில்லை. //

மரித்தவர்கள் உடலை தகனம் செய்வதுதான் சிறந்தது.
புதைப்பது என்பது இந்த காலத்தில் பொருந்தாத விஷயம். சென்னையில் இனி புதைக்கவே இடம் இல்லை என்கிற சூழல்.

புருனோ Bruno said...

//கடவுளே இல்லை என்றும் எல்லாவற்றையும் அறிவியல் பூர்வமாக மட்டுமே அணுக வேண்டும் என்றும் மதங்களை வெறும் மேல் சட்டைகளாக மட்டுமே கருதும் சிலருக்கு இவையெல்லாம் ஒரு பொருட்டே இல்லை...
//

வெல் செட் சார்

டி.பி.ஆர் said...

மிக்க நன்றி ப்ரூனோ.

Post a Comment