Friday, October 01, 2010

கண்ணதாசனின் நெஞ்சம் மறப்பதில்லை

கவிஞர் கண்ணதாசனுடைய மகள் விசாலி வழங்கும் 'நெஞ்சம் மறப்பதில்லை' நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் மீண்டும் ஒளிபரப்பாகிறது.

தந்தையை அப்படியே உரித்து வைத்திருக்கும் விசாலி அழகான புன்னகையுடன் அவருடைய நினைவுகளை பகிர்ந்துக்கொள்ளும் அழகே அழகு. அவரே ஒரு சிறந்த கவிஞை என்பதை அவருடைய அழகு பேச்சு எடுத்துக்காட்டுகிறது.

இன்றைய நிகழ்ச்சியில் அவர் பகிர்ந்துக்கொண்ட நிகழ்வு மிகவும் அருமையாக இருந்தது.

கவிஞர் ஒரு கவியரங்கத்திற்கு தலைமையேற்கிறார். நடக்கும் இடம் ஒரு கல்லூரி. கவிஞருக்கு முன் கவிதை வாசித்த அனைவரையும் மாணவர்கள் எள்ளி நகையாடி வெளியேற்றுகின்றனர். இறுதியில் கவிஞர் எழுந்து தன்னுடைய கவிதையை வாசிக்கிறார்.

அவர் வாசித்த கவிதையின் ஒவொரு வரிக்கும் எழும் கைதட்டல் அவருடைய கவிதையையே கேட்க முடியாமல் செய்துவிடுகிறது. கைதட்டல் ஓயும்வரை காத்திருக்கிறார் கவிஞர். இறுதியில் புன்னகையுடன் கூறுகிறார்.

'இப்போது நான் வாசித்த கவிதை என்னுடையதல்ல. எனக்கு முன்பு நான் எழுதிய கவிதையை வாசித்துவிட்டு சென்றாரே ஒரு இளம் கவிஞர் அவர் எழுதியது. என்னுடைய கவிதையை அவர் வாசிக்க நீங்கள் அனுமதிக்கவில்லை. ஆனால் அவருடைய கவிதையை நான் வாசித்தபோது நீங்க கரவொலியுடன் வரவேற்றீர்கள். நீங்கள் மதிப்பது என்னுடைய கவிதையை அல்ல கண்ணதாசன் என்ற ஒரு மனிதனைத்தான்.'

இந்த நிகழ்வை தனக்கே உரிய பாணியில் புன்னகை மாறாமல் விசாலி கூறியபோது கேட்பதற்கு மிகவும் அழகாக இருந்தது...

அவர் கூறியதில் நினைவில் நிற்பது:

'பாட்டு எழுத கவிஞர் கண்ணதாசன், இசை அமைக்க MSV, பாடுவதற்கு TMS, அதற்கு தத்ரூபமாக வாயசைத்து அற்புதமாக தன்னுடைய நடிப்பால் உயிர்கொடுக்க நடிகர் திலகம். இப்படியொரு கூட்டணி இனி அமைய வாய்ப்பே இல்லை.'

இந்த கூட்டணியின் வெற்றிக்கு நடிகர் திலகம் முக்கிய காரணமாக இருந்தார் என்பதை மறக்க முடியுமா?

நடிகர் திலகத்தின் பிறந்தநாளாகிய இன்று இதை நினைவுகூர்வது மகிழ்ச்சியாக இருக்கிறது.

2 comments:

சகாதேவன் said...

புதிய ஆனந்தவிகடனில் சிவாஜி பற்றி சிலர் கூறிய தகவல்கள். கவிஞர் வைரமுத்து சொல்லியிருக்கிறார்:
புதிய பறவை படப்பிடிப்பின்போது சிவாஜி பாடவேண்டிய ஒரு சோகமான சிச்சுவேஷன் சொல்லி டைரக்டர் போய்விட்டாராம். எம்.எஸ்.வியும் கண்ணதாசனும் பாட்டுக்கு மெட்டா அல்லது மெட்டுக்கு பாட்டா? என்று இருவருமே முடியாமல் இருக்க, அவர்கள் சிவாஜியிடம், இந்த சிச்சுவேஷனில் எப்படி நடிப்பீர்கள்னு கேட்க அவருடைய நடிப்பைப் பார்த்து கவிஞர் வரிகள் சொல்ல எம்.எஸ்.வி சந்தம் சொல்ல உருவான பாட்டு -"எங்கே நிம்மதி".
சகாதேவன்

டி.பி.ஆர் said...

வாங்க சகாதேவன்,

உண்மைதான். நடிகர் திலகத்தின் நடிப்பே இவர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக பல சமயங்களில் இருந்திருக்கிறது. இப்படி பல பாடல்கள் அமைந்திருக்க வாய்ப்புள்ளது.

Post a Comment