Wednesday, September 15, 2010

நிதானம் தவறிய நிமிடங்கள்...(நிறைவு)

இந்த அமைப்பில் இணைந்து தங்களை இந்த கொடிய நோயிலிருந்து மீட்டுக்கொள்ள விரும்புபவர்கள் நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்த பன்னிரண்டு கோட்பாடுகளை கடைபிடித்தே ஆகவேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு உட்படுத்தப்படுவதில்லை.

ஆனால் இந்த நோயால் பாதிக்கப்பட்டு எதிர்காலமே ஒரு சூன்யமாக தோன்றும் நபர்கள் ஏதாவது ஒரு பிடிப்பு அது எத்தனை சிறிய துரும்பாக இருந்தாலும், அதை பிடித்துக்கொண்டு கரையேறிவிட மாட்டோமா என்ற அங்கலாய்ப்புடன் வருவதால் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட தங்களை மீறிய சக்தி ஒன்று உண்டு என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள் என்கின்றனர் இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள்.

அந்த சக்தியை இறை நம்பிக்கையுள்ளவர்கள் 'கடவுள்' என்றும் அது இல்லாதவர்கள் 'தங்களை மீறிய சக்தி' என்றும் உருவகப்படுத்திக்கொள்கின்றனர். மருத்துவர்கள் பலரிடம் சிகிச்சை பெற்றும் பலனளிக்காத நிலையில் இந்த அமைப்பை  அணுகுகின்ற சூழலில் கடவுள் என்கின்ற விஷயம் இவர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக தெரிவதில்லை.

இந்த அமைப்பில் இணைய விரும்புபவர்களுக்கு இருக்க வேண்டிய ஒரே தகுதி 'நான் குடிபோதைக்கு அடிமையாகிவிட்டேன். அதிலிருந்து மீள முடிய விரும்புகிறேன்.' என்று மனமார ஏற்றுக்கொள்வதுதான்.

நான் முன்பே கூறியபடி இந்த அமைப்பில் மருத்துவ வசதிகளோ அல்லது உளவியல் ஆலோசனைகளோ அளிக்கப்படுவதில்லை.

இந்த அமைப்பு செய்வதெல்லாம் அங்கத்தினர்கள் வாரம் ஒருமுறையாவது ஒரு பொது இடத்தில் கூடி மனம் திறந்து பேசிக்கொள்ள வசதி செய்து தருவதுதான். அதற்கு யார் இலவசமாக இடவசதி செய்து கொடுக்க முன்வந்தாலும் ஏற்றுக்கொள்கிறது இந்த அமைப்பு. ஆனால் சென்னையிலும் தமிழகத்தின் மற்ற நகரங்களிலும் ஏன் உலகெங்குமே எனக்கு தெரிந்தவரை இந்த அமைப்பின் கூட்டங்கள் கிறிஸ்தவ தேவாலயங்களில் அமைந்துள்ள அலுவலக அல்லது பள்ளி அறைகளில்தான் நடக்கின்றன.

இந்த கூட்டங்களில் இருவகை உண்டு.

1. பொதுக் கூட்டங்கள்.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், அவர்களுடைய நலனில் அக்கறையுள்ளவர்கள் அல்லது இந்த அமைப்பைப் பற்றி அறிந்துக்கொள்ள விரும்புபவர்கள் (ஆனால் ஊடகங்களை சார்ந்த நிரூபர்கள் அனுமதிக்கப்படுவதில்லை! அப்படியே குறிப்பிட்ட சிலர் அனுமதிக்கப்பட்டாலும் கூட்டத்தில் நடைபெறும் நிகழ்வுகளை பற்றி அவர்கள் எழுதும் கட்டுரைகளில் சம்பந்தப்பட்டவர்களுடைய பெயர்களையோ அல்லது புகைப்படங்களையோ வெளியிடலாகாது என்ற நிபந்தனை விதிக்கப்படுகிறது.) கலந்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.

இத்தகைய கூட்டங்களில் ஒருமுறை நீங்கள் கலந்துக்கொண்டால் இந்த நோயினால் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் அவர்களுடன் வாழ்கின்ற எத்தனைபேர் மனரீதியாகவும் பொருள் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிந்துக்கொள்ளலாம். சில குடும்பங்களுடைய சோக கதைகளை கேட்டால் கல்மனமும் கரைந்துபோகும். பாதிக்கப்பட்டவர்களை அதிலிருந்து மீட்டு மீண்டும் தங்களுடைய வாழ்க்கையில் இணைத்துக்கொள்ள இவர்கள் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல என்பதும் விளங்கும்.

2. பிரத்தியேக கூட்டங்கள்

இதில் பாதிக்கப்பட்ட அங்கத்தினர்களைத் தவிர வேறு எவரும் அனுமதிக்கப்படுவதில்லை.

இந்த கூட்டங்களில் பேசியே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் ஏதும் இல்லை. பெரும்பாலும் இந்த நோயிலிருந்து மீண்டும் வந்தவர்களே முதலில் தங்களுடைய அனுபவத்தை பகிர்ந்துக்கொள்ள முன் வருவார்கள். அவர்களுடைய அனுபவத்தை கேட்டு பல புதிய அங்கத்தினர்களும் தாங்கள் பாதிக்கப்பட்ட விவரத்தை கூறி தங்களுக்கு உதவ வேண்டுகின்றனர்.

இந்த கூட்டங்கள் அங்கத்தினர்களை உளரீதியாக இதிலிருந்து விடுபட தயார்படுத்துவதை மட்டுமே செய்கின்றன. இத்தனை கூட்டங்களில் கலந்துக்கொண்டால் நீங்கள் இதிலிருந்து விடுபட்டுவிட முடியும் என்பதுபோன்ற பொய்யான வாக்குறுதிகள் ஏதும் வழங்கப்படுவதில்லை. கூட்டம் நடைபெறும் நாள் மற்றும் இடம் பற்றிய விவரங்களை தினத்தாள்களில் வெளியிடுவதைத் தவிர வேறெந்த விளம்பரமும் இந்த அமைப்புகள் செய்வதில்லை. பத்திரிகைகளும் கூட தாங்களாகவே முன்வந்து இவற்றை இலவசமாக வெளியிடுகின்றன என்கின்றனர் ஒருங்கிணைப்பாளர்கள்.

'இலவசமாகவே நாங்கள் பெற்ற ஆலோசனைகளை இலவசமாகவே பிறருக்கு வழங்குகிறோம்' இதுதான் இந்த அமைப்பின் கொள்கை வாசகம்.

இந்த அமைப்பில் இணைவதற்கோ அல்லது கூட்டங்களில் பங்குகொள்ளவோ எவ்வித கட்டாய கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. இன்னுமொரு கூடுதல் தகவல் இந்த அமைப்பின் நியூயார்க் நகரில் இயங்கி வரும் தலைமையகமும் நம் நாட்டில் இயங்கிவரும் கிளைகளுக்கு எந்த நிதியுதவியும் செய்வதில்லை.

ஆகவே கூட்டங்களை நடத்துவதற்காக ஏற்படும் சில்லறை செலவினங்களை எதிர்கொள்ள கூட்டங்களில் கலந்துக்கொள்பவர்கள் தங்களுடைய விருப்பம் மற்றும் தகுதிக்கு ஏற்ப தாங்களாகவே முன்வந்து நன்கொடை வழங்குகின்றனர் என்பதும் உண்மை.

ஆகவே நண்பர்களே, இந்த நோயில் நாம் பாதிக்கப்படவில்லை என்றாலும் நம்மை சார்ந்தவர்கள் அல்லது நண்பர்கள் என பாதிக்கப்பட்டவர்கள் யாராயிருப்பினும் அவர்களை இந்த அமைப்பு நடத்தும் கூட்டங்களில் கலந்துக்கொண்டு இந்த கொடிய நோயிலிருந்து மீள ஊக்குவிப்போம்.நிறைவு.

2 comments:

துளசி கோபால் said...

நல்ல பதிவு.

தேவைப்படுபவர் கண்களில் 'பட வேண்டும்' என வேண்டிக்கொள்கின்றேன் அந்த 'சக்தி'யை.

டி.பி.ஆர் said...

வாங்க துளசி,

தேவைப்படுபவர் கண்களில் 'பட வேண்டும்' என வேண்டிக்கொள்கின்றேன் அந்த 'சக்தி'யை. //

சரியா சொன்னீங்க. இன்றைய சூழலில் இதுபோன்ற பதிவுகள் அனைவரின் கண்களிலும் 'படுவதே' சிரமம்தான்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Post a Comment