Monday, September 13, 2010

நிதானம் தவறிய நிமிடங்கள்... (சலீம் பாய்)

இதய நோய் என்பது இன்னாருக்குத்தான் வரும் இன்னாருக்கு வராது என்று நியதி ஏதும் இல்லை. கடந்த வாரம் அகாலமாய் மரித்த நடிகர் முரளியின் உடல்வாகுவைப் பார்த்தால் இவருக்கா உறக்கத்திலேயே மரித்துப்போகும் அளவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்ற கேட்க தோன்றுகிறதல்லவா?

அதுபோலத்தான் குடிப்பழக்கமும். உல்லாசமாக நண்பர்களுடன் பொழுதை கழிக்க அல்லது நமக்கு ஏற்பட்ட ஏதாவது ஒரு தோல்வியிலிருந்து அல்லது இழப்பிலிருந்து தேற்றிக்கொள்ள என்று துவங்குகிற குடிப்பழக்கம் நாளடைவில் நம்மை அறியாமலேயே நம்மை முழுவதுமாக ஆட்கொள்கிறது.

என்னுடைய முதல் இரண்டு பதிவுகளிலும் நான் விவரித்த இருவரில் முதல்வர் (மாத்யூஸ்) வாழ்க்கையில் தன்னுடைய மகளால் ஏற்பட்ட அவமானத்திலிருந்து விடுபட அவர் தஞ்சம் அடைந்தது மதுவை. இரண்டாமவர் (ரோஹினி) ஒரு ஜாலிக்காக, ஒரு புது அனுபவத்திற்காக குடிக்க துவங்கி இறுதியில் தன்னுடைய மணவாழ்வையே இழக்கும் அளவுக்கு மதுவில் தன்னை இழந்தவர்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையாவதற்கு வயது, பாலினம் ஏதும் விலக்கில்லை. இதில் இளம் வயதினர் மட்டுமே அடிமையாவார்கள் என்றோ அல்லது ஆண்கள் மட்டுமே அடிமையாவார்கள் என்றோ நியதி ஏதும் இல்லை. அதுபோன்றே படித்தவன், படிக்காதவன், பணக்காரன், பரமஏழை என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அவர்கள் தங்களை உணர்ந்து நிதானித்துக்கொள்வதற்கு முன்பே அடிமையாக்கிக்கொள்வதுதான் இந்த பழக்கம்.

இன்று நான் விவரிக்க இருக்கும் நபர் ஒரு முதியவர். அவர் இந்த பழக்கத்திற்கு அடிமையானதாக உணர்ந்தபோது அவருக்கு வயது 70!

இவருடைய பெயர் சலீம். இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர். இளம் வயதிலேயே அதாவது திருமணமாகி பதினைந்து வருடங்களுக்குள்ளாகவே மனைவியை இழந்தவர். தன்னுடைய இரண்டு மகன்களுக்காக மறு திருமணம் செய்துக்கொள்ளாமல் வாழ்ந்தவர். ஒரு வங்கியில் உயர் அதிகாரியாக சிறப்பாக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

அவர் எப்படி இந்த போதைப் பழக்கத்திற்கு அடிமையானார்? இதோ அவரே விவரிக்கிறார்.

'நான் பேங்க்லருந்து ரிட்டையர் ஆற வரைக்கும் குடிச்சதே இல்லைன்னு சொன்னா உங்களுக்கு நம்பறதுக்கு கஷ்டமா இருக்கும். ஆனா அதுதான் உண்மை. ரிட்டையர் ஆறதுக்கு பத்து வருசத்துக்கு முன்னாலருந்து ஒரு சீனியர் எக்ஸ்க்யூட்டிவா இருந்தேன். அப்போ கலந்துக்கிட்ட பார்ட்டிகள்ல எல்லாம் வெறும் லைம் ஜூஸ் கிளாஸ் ஒன்னெ கையில வச்சிக்கிட்டு கம்பெனி குடுக்கறேன்னு நின்னப்போ லிக்கர் சாப்டுக்கிட்டு இருந்த என்னெ பார்த்து கிண்டலா சிரிச்சாங்க.

அப்படியிருந்த நானா இப்படி ஆல்கஹாலிக்குன்னு முத்திரை குத்தப்படற அளவுக்கு போய்ட்டேன்னு அவங்க யாராலயும் நம்ப முடியல. ஏன், என்னாலயே எப்படி இதுக்கு அடிமையானேன்னு நம்ப முடியல. ஆனா அதுதான் உண்மை. சாயந்தரம் ஆனா குடிக்காம இருக்க முடியல. கை, கால் எல்லாம் நடுங்குது. அஞ்சி நிமிசத்துக்கு மேல ஒரு இடத்துல உக்காந்து இருக்க முடியல. எதுக்கு வாழணும்னு தோனுது. தற்கொலை பெரிய பாவம்னு எங்க குரான் சொல்லுது. எந்த பாவத்துக்கும் விமோசனம் உண்டு. ஆனா தற்கொலைக்கு இல்லைன்னு சொல்லுது. அதனாலதான் இன்னும் உயிரோட இருக்கேன். உங்களோட தனிமைதான் இதுக்கு காரணம். பேசாம உங்க பிள்ளையோட சமாதானமாயி அவனோட போய் இருந்தீங்கன்னா இந்த பழக்கம் தன்னால போயிரும்னு என்னோட ஃப்ரெண்ட்ஸ் பல பேர் சொன்னாங்க. ஆனா எனக்கு அதுல விருப்பம் இல்ல. நம்மள வேணாம்னு சொல்லிட்டு போய்ட்டவங்கள தேடி நாம எதுக்குப் போகணும்னு....

தனிமை எனக்கு புதுசு இல்ல. என் மனைவி இறந்து ஏறக்குறைய முப்பது வருசம் ஆயிருச்சி. என் பசங்க ரெண்டு பேரையும் வளர்த்து ஆளாக்கணுமேன்னுதான் நா கல்யாணமே பண்ணிக்கலை. என் பசங்கதான் எனக்கு எல்லாமேன்னு இருந்துட்டேன். என்னோட வேலையில அடிக்கடி ஊர் ஊரா மாத்துவாங்கங்கறதால என் மனைவி இறந்ததும் என் பசங்க ரெண்டு பேரோட படிப்புக்காக அவங்கள இங்க ஹாஸ்டல்ல சேர்த்துட்டு நா மட்டும் போனேன். அதுதான் நா செஞ்ச பெரிய தப்பு. என் பசங்களுக்காகத்தான் நா மறு கல்யாணம் செய்யாம இருந்தேங்கற விஷயத்த என் பசங்களுக்கு நான் புரியவைக்க தவறிட்டேன். அம்மாவ இழந்துட்டு நின்ன பசங்களுக்கு ஒரு மாரல் சப்போர்ட்டா என்னெ எதிர்பார்த்திருப்பாங்க போலருக்குது. இத என்னால ரொம்ப வருசமா புரிஞ்சிக்க முடியல.

அவங்களுக்கு தேவையான படிப்பு, கைச்செலவுக்கு பணம், உடுத்த ஆடை இப்படிப்பட்ட தேவைகளை நிறைவேற்றி வச்சா போறும்னு நினைச்சிட்டேன். நான் தனியா ரூம் எடுத்து தங்கியிருந்ததால சம்மர் வெக்கேஷன்ல கூட அவங்கள என்னோட வந்து தங்க வச்சி சப்போர்ட்டிவா இருக்கணும்னு எனக்கு தோனியதே இல்ல. அது அவங்க ரெண்டு பேரையும் மனத்தளவுல நிறையவே பாதிச்சிருக்கு.
ஸ்கூல் முடிஞ்சி, காலேஜ், அதுக்கப்புறம் ஃபாரின்ல ஹையர் எஜுகேஷன் அப்படீன்னு அவங்களோட வாழ்க்கைக்கு என்னவெல்லாம் தேவையோ எல்லாத்தையும் செஞ்சி குடுத்த என்னெ அவங்களுக்கு என் மேல மதிப்பு மட்டுந்தான் இருந்துது, அப்பாங்கற பாசம் இருந்ததே இல்லைன்னு புரிஞ்சிக்கவே இல்லை. மேல படிக்கறதுக்காக ஃபாரின் போன பெரியவன் அங்கேயே வேலையை மட்டுமில்லாம ஒரு மனைவியையும் தேடிக்கிட்டான். கல்யாணம் பண்ணதுக்கப்புறந்தான் 'I would like to inform you Dad..' பேருக்கு ஒரு ஈமெய்ல் அனுப்பினன். ஏறக்குறைய பதினஞ்சி வருசம் கழிச்சி ஒரு கார் ஆக்சிடெண்ட்ல ஸ்பாட்லயே இறந்துட்டான்னு ஃபோன் வந்தப்போ எனக்கு போகணும்னு கூட தோனல.

என்னோட ரெண்டாவது மகன் அண்ணன மாதிரி அங்கேயே செட்டில் ஆகாம படிச்சி முடிச்சிட்டு திரும்பி வந்தான். அப்பாடா இவனாவது என்னெ புரிஞ்சி வச்சிருப்பான். என் கூடவே இருப்பான்னு நினைச்சேன். ஆனா பெரியவனெ விடவும் இவன் என்னெ வெறுத்திருக்காங்கறது அப்புறம்தான் தெரிஞ்சது. 'அண்ணன் வெளிநாட்ல இருந்துக்கிட்டு உன்னெ இக்நோர் பண்ணான். ஆனா நா உள்ளூர்ல இருந்துக்கிட்டே உன்னெ கண்டுக்கிட மாட்டேன்னு' சொல்றா மாதிரி இதே டவுன்ல செட்டிலாகியும் என்னெ ஒரு பொருட்டாவே மதிக்கறதில்ல. அவனும் என்னெ கலந்துக்காமயே கல்யாணமும் செஞ்சிக்கிட்டான். எப்பவாவது மாஸ்க்ல வச்சி பாத்தாலும் யாரோ மூனாவது மனுசன பாக்கறமாதிரி பாத்துட்டு போயிருவான். அவனுக்கு ரெண்டு பசங்க. என் புள்ளைங்கள பாக்காம இருந்த எனக்கு என் பேரப் பசங்கள பாக்க முடியாம, அவங்களோட பழக முடியாம போயிருச்சேங்கற வேதனைதான் எனக்கு பெரிசா தெரிஞ்சது. என் பையன் வீட்ல இல்லாதப்பல்லாம் அங்க போவேன். ஆனா மருமக ஒங்க மகனுக்கு தெரிஞ்சா வீடே ரெண்டாயிரும் தயவு செஞ்சி இங்கன வராதீங்கன்னு சொல்லிட்டா.

இனி எதுக்கு வாழணும்னுதான் தோனிச்சி. டிப்ரெஷ்ன் ஜாஸ்தியாயி தூக்கம் வராம ரொம்ப நாள் கஷ்டப்பட்டுருக்கேன். 'என்ன பாய் நீங்க. ஒரு ரெண்டு பெக் போட்டுட்டு படுத்து பாருங்க. நிம்மதியா தூக்கம் வரும்னு என் ஃப்ரெண்ட் ஒருத்தன் சொன்னப்போ ட்ரை பண்ணி பார்த்தா என்ன தோன்றி..... தினம் ரெண்டுதானே... ட்ரை பண்ணேன்... முதல் ஒரு வாரம் நிம்மதியா தூங்கினேன்... அதுக்கப்புறம் ரெண்டு போறலை... கொஞ்சம், கொஞ்சமா... ஒரு முழு பாட்டில ரெண்டு மணி நேரத்துல காலி பண்ற அளவுக்கு போயி...... ப்ரெஷர் அதிகமாகி ஒருநாள் அன்கான்ஷியசாகி வீட்டுக்குள்ளேயே விழுந்துட்டேன்... நினைவு வந்து எழுந்து பார்த்தப்போ.... ஏறக்குறைய அரை நாள் அப்படியே விழுந்து கிடந்து இருந்தது புரிஞ்சிது... நெய்பர் ஒருத்தரோட உதவியோட பக்கதுலருக்கற ஹாஸ்ப்பிடல்ல சேர்த்தப்போ 'உங்களுக்கு ஹைப்பர் டென்ஷன் இருக்கு... குடிக்கறத உடனே நிறுத்தலைன்னா உயிருக்கே ஆபத்துன்னு சொல்லி... அவர்தான் இந்த க்ரூப்போட விவரத்த சொன்னார்...இதான் நான் அட்டெண்ட் பண்ற முதல் மீட்டிங்... ரொம்ப நம்பிக்கையோட வந்துருக்கேன்....'

இந்த மூவரின் அனுபவங்கள் போதும் என்று கருதுகிறேன். குடிபோதை என்பது யாருக்கு வேண்டுமானாலும் வரும் என்பதற்கு இந்த மூவரும் ஒரு உதாரணம். எந்த மதத்தைச் சார்ந்தவர்களானாலும்...

இந்த தொடரை எழுதுவதற்குமுன் சென்னையில் நான் செல்லும் தேவாலயத்தில் இயங்கிவரும் இந்த அமைப்பின் கூட்ட ஒருங்கிணைப்பாளரை சந்தித்து என்னுடைய எண்ணத்தை கூறினேன். 'நிச்சயமா எழுதுங்க சார். இப்ப நர்காட்டிக்ஸ் அனானிமஸ்னு ஒரு அமைப்பை உருவாக்கி போதைவஸ்துகளுக்கு அடிமையாகி அதிலிருந்து மீள முடியாதவர்களுக்கும் கூட்டங்கள் நடத்துகிறோம். குடிபோதைக்கு அடிமையாகியுள்ளவர்கள் பெரும்பாலும் நடுத்தர வயதைக் கடந்தவர்கள் என்றால் Drug க்கு அடிமையாகியுள்ளவர்கள் பெரும்பாலும் இளம்வயதினராகவே உள்ளது வேதனையளிக்கிறது. அதைப்பற்றியும் கூறுங்கள். எங்களுடைய கூட்டங்கள் சென்னையில் நடக்கும் விவரமெல்லாம் தினந்தோறும் ஏறக்குறைய எல்லா தினத்தாள்களிலும் வெளியாகின்றன என்றார்.

இந்த அமைப்பு யாரால், எப்போது, எங்கு உருவானது என்ற விவரங்களை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

தொடரும்..

0 comments:

Post a Comment