Tuesday, September 07, 2010

நிதானம் தவறிய நிமிடங்கள் - ரோஹினி

இத்தொடரில் என்னுடைய முதல் கட்டுரையை படித்துவிட்டு சில பெயர் சொல்ல விரும்பாத பதிவர்கள் 'ஏ.ஏ.' இயக்கமும் கிறிஸ்துவர்களின் மதமாற்ற யுக்திகளில் ஒன்று என்றும் தேவாலயங்களில் நடக்கும் கூட்டங்களில் கிறீஸ்துவை நம்பினால் மட்டுமே குடிபழக்கத்திலிருந்து முற்றிலுமாக விடுபட முடியும் என்பதுபோல் பேசுவார்கள் என்று பின்னூட்டம் இட்டிருந்தனர்.

அவர்களுக்கு நான் கூற விரும்புவது:

நிச்சயம் இந்த இயக்கத்தின் நோக்கம் அதுவல்ல. இந்த இயக்கம் நடத்தும் கூட்டங்கள் தேவாலயங்களில் நடைபெறுவதில்லை. ஆலய வளாகங்களில் அமைந்துள்ள பள்ளி, அல்லது அலுவலகத்தில் அமைந்துள்ள அறைகளில் மட்டுமே நடைபெறுவதுண்டு. இந்த கூட்டங்களில் பாதிரிமார்கள் எவரும் கலந்துக்கொள்வதில்லை. கூட்டங்களில் இயக்க அமைப்பாளர்கள் தவிர இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

இவற்றைப் பற்றி இத்தொடரின் இறுதியில் நிச்சயம் விவரமாக எழுதுவேன்.

இனி நான் முந்தைய பதிவில் குறிப்பிட்ட சிலருடைய அனுபவங்களை கூறுகிறேன்.

இவருடைய பெயர் ரோஹினி. ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் இந்த பழக்கத்திற்கு அடிமையாகிப்போகின்றனர் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்.

செல்வந்த குடும்பத்திலிருந்து வந்தவர். கட்டிட பொறியியல் பட்டம் பெற்றவர். அவருடன் கல்லூரியில் படித்த வசந்தை காதலித்து பெற்றோர்களை எதிர்த்துக்கொண்டு திருமணம் புரிந்துக்கொண்டவர். இருவரும் இணைந்து கட்டிட வடிவமைப்பு நிறுவனம் ஒன்றை அந்த நகரில் நடத்தி வந்தனர். ஆகவே செல்வந்தர் அற்றும் வர்த்தக வட்டங்களில் பெரும்பாலானோருக்கு பரிச்சயமானவர்.

இவர் எப்படி இந்த பழக்கத்திற்கு அடிமையானார் என்பதை அவர் அன்று கூட்டத்தில் விவரித்ததை என்னால் முடிந்தவரை இங்கு தருகிறேன்.

"எனக்கு சின்ன வயசுலருந்தே இந்த பழக்கம் இருந்துதுன்னு சொன்னா உங்களால நம்ப முடியாம போகலாம், ஆனா அதான் உண்மை. அப்பாவுக்கு குடி பழக்கம் உண்டு. ஏறக்குறைய டெய்லி அப்பாவோட பிசினெஸ் ஃப்ரெண்ட்ஸ் யாராச்சும் வீட்டுக்கு வருவாங்க. ராத்திரி ரொம்ப நேரம் பார்ட்டி நடக்கும். அதனால வீட்ல எப்பவுமே ட்ரிங்க்ஸ் ஸ்டாக் வச்சிருப்பார் அப்பா. விளையாட்டா ஒரு நாள் வீட்ல யாரும் இல்லாத நேரத்துல ஒரு பாட்டிலருந்து கொஞ்சம் ஊத்தி அப்பா மாதிரியே சோடா, ஐஸ் சேர்த்து குடிச்சி பார்த்தேன். ஆரம்பத்துல கசப்பாருந்தாலும் அதுக்கப்புறம் ஏற்பட்ட ஒருவிதமான போதை சந்தோஷமா இருந்துது. அப்போ எனக்கு பத்து வயசு இருக்கும். அன்னையிலருந்து அப்பாவும் அம்மாவும் வீட்ல இல்லாதப்போ கொஞ்சம், கொஞ்சம் குடிக்க ஆரம்பிச்சேன்.

ஆனா இது ரொம்ப நாள் நடக்கல. ஒருநாள் என் ரூமுக்கு வந்த அம்மா நா குடிச்சிட்டு கழுவாம வச்சிருந்த டம்ளர ஸ்மெல் பண்ணி பாக்க, மாட்டிக்கிட்டேன். எவ்வளவு நாளா இந்த பழக்கம்னு அம்மா அடிச்சி கேட்டப்போ எல்லாத்தையும் சொல்லிட்டேன். இதுக்கு நீங்கதான் காரணம்னு அம்மா அப்பாவை திட்ட அப்பா என்னெ அடுத்த மாசமே ஒரு போர்டிங் ஸ்கூல்ல சேர்த்துவிட்டுட்டார். துவக்கத்துல குடிக்காம இருக்கறது கஷ்டமா இருந்தாலும் நாளடைவில அத மறந்து போய்ட்டேன்.

அதுக்கப்புறம் காலேஜ்ல வசந்த சந்திச்சேன். செக்கண்ட் இயர்ல அவனும் நானும் க்ளோசா நெருங்கி பழக ஆரம்பிச்சோம். அவனுக்கும் குடிப்பழக்கம் இருந்தது. அவனோட ரூம்ல லிக்கர பார்த்ததும் லேசா ஒரு சபலம். அவனெ கம்பெல் பண்ணி கொஞ்சமா குடிச்சேன். மறுபடியும் குடிக்கணும்போல இருந்தது. நான் தங்கியிருந்தது காலேஜ் ஹாஸ்டல்ங்கறதால லிக்கர் வச்சிக்கவும் முடியல. குடிக்கணுங்கற ஆசை ஏற்படறப்பல்லாம் ஒருமாதிரி பைத்தியம் புடிக்கறாமாதிரி வர ஆரம்பிச்சிது. லிக்கர் கிடைக்கணும்னா அது வசந்த் மூலமாத்தான் முடியும்னு நினைச்சி அவனெ நச்சரிக்க ஆரம்பிச்சேன். ஆனா அவன் ஒத்துக்க மாட்டேன்னுட்டான். எனக்காக அவனும் லிக்கர் பார்ட்டிக்கு போறத நிறுத்திட்டேன்னு சொன்னான்.

ஆனா என்னால குடிக்கறத மறக்க முடியல. படிப்புலயும் கான்சண்ட்ரேட் பண்ண முடியாம ரொம்ப தவிச்சேன். அப்பல்லாம் வசந்த் சஜ்ஜஸ்ட் பண்ணா மாதிரி ச்சூயிங் கம் மெல்ல ஆரம்பிச்சேன். கொஞ்சம், கொஞ்சமா குடிக்கற ஆசைய கண்ட்ரோல் பண்ணி நாளடைவில அத முழுசுமா மறந்துட்டேன். காலேஜ் முடிஞ்சி வீட்டுக்கு திரும்பறவரைக்கும் அந்த நினைவே இல்லாம இருந்தேன்.

வீட்டுக்கு திரும்பி வந்த உடனே எனக்கு கல்யாணம் செஞ்சி வைக்க அப்பா ப்ரப்போஸ் பண்ணப்போ நான் வசந்த் விஷயத்த சொன்னேன். அதுல ஆரம்பிச்ச பிரச்சினைதான் என்னெ மறுபடியும் ட்ரிங்க் பண்ண வச்சிதுன்னு நினைக்கறேன். நா என்ன சொல்லியும் அப்பாவும் அம்மாவும் கேக்கற மூட்ல இல்ல. அதால ஏற்பட்ட டிப்ரெஷன்லருந்து எஸ்கேப் ஆறதுக்கு எனக்கு வேற வழி தெரியாம எனக்க ஏரியாவுலருந்த ஸ்டார் ஹோட்டல்லருந்த பாருக்கு போக ஆரம்பிச்சேன். அப்பாவுக்கு விஷயம் தெரிஞ்சி வீட்ல பெரிய ரகளையாயிருச்சி. அப்பா கோபத்துல வீட்ட வெளிய போடின்னு சொல்லிட்டார். ஹாஸ்டல்ல தங்கிக்கிட்டு ஒரு வேலைய தேடிப் பிடிச்சிக்கிட்டேன். அதுலருந்துக்கிட்டே ஆர்கிடெக்ட்ல டிப்ளமா வாங்கினேன். ஆனா தனியா இருக்கறா மாதிரியான ஃபீலிங்ஸ் வர்றப்பல்லாம் டிர்ங்ஸ் சாப்பிடாம இருக்க முடியல. நீ லிக்கர் சாப்பிடறத விட்டாத்தான் நம்ம கல்யாணம்னு வசந்த் கண்டிஷன் போட்டார். வசந்த விட்டா எனக்கு அப்போ வேற யாரும் இல்லை. அதனால கஷ்டமா இருந்தாலும் லிக்கர ஒதுக்கி வச்சேன். ரெண்டு வருசம் கழிச்சி வசந்தும் நானும் சேர்ந்து ஒரு கன்சல்டன்சி ஃபர்ம் ஸ்டார்ட் பண்ணோம். அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சி எனக்கும் வசந்துக்கும் கல்யாணம். ரெண்டு பேர் வீட்லருந்தும் யாரும் வரலை. ஃப்ரெண்ட்ஸ் சாட்சி கையெழுத்துபோட ரிஜிஸ்தர் மேரேஜ்.

ஆரம்பத்துல சந்தோஷமாத்தான் இருந்தோம். குடிக்கறத சுத்தமா மறந்துட்டேன். ஆனா வசந்துக்கு நான் மறுபடியும் ட்ரிங்ஸ் பக்கம் போயிருவேனோன்னு பயம். அதனாலயே வெளியூருக்கு பிசினஸ் விஷயமா போறத நிறுத்திட்டு உள்ளூர் அசைன்மெண்ட் மட்டும் போறும்னு சொல்லிட்டார். உள்ளூர்ல பெரிசா புது ப்ராஜக்ட்ஸ் இல்லாம கன்சல்டன்சி பிசினஸ் டல்லடிக்க ஆரம்பிச்சி கொஞ்ச நாள்ல எங்க கைவசம் ப்ராஜக்ட்சே இல்லாம போயிருச்சி. இதுக்கெல்லாம் உன்னோட வீக்னஸ்தான் காரணம்னு என்னெ குத்தம் சொல்ல ஆரம்பிச்சார் வசந்த். அதனாலயே அடிக்கடி எங்களுக்குள்ள வாக்குவாதம் வரும். வேணும்னா நீங்க வெளியூர் அசைன்மெண்ட்ஸ் ஒத்துக்குங்க என்னெ என்னால பாத்துக்க முடியும்னு சொன்னேன்.

ஆனா கொஞ்ச நாள்ல என்னையும் அறியாம மறுபடியும் குடிக்க ஆரம்பிச்சேன். வசந்துக்கு இது தெரிஞ்சி என்னெ விட்டு விலக ஆரம்பிச்சார். வெளியூர்ல கிடைச்ச ப்ராஜக்ட்ஸ் சைட் ஒர்க்க நா பாத்துக்கறேன் நீ ஆஃபீச பாத்துக்கோன்னு சொல்லிட்டு ஊருக்கு வர்றதயே கொஞ்சம் கொஞ்சமா நிறுத்திட்டார்.

ஆறு மாசத்துக்கு முன்னால டைவர்ஸ் நோட்டீஸ் வந்துது. அவர் இல்லன்னா எனக்கு லைஃப் இல்லேன்னு நினைச்சேன். குடிக்கறத குறைக்க ட்ரை பண்ணேன். முடியல. சாயந்தரம் ஆனா குடிக்கணும். இல்லன்னா கை, கால் எல்லாம் நடுங்க ஆரம்பிச்சிரும். எனக்கு தெரிஞ்ச டாக்டர்ஸ் கிட்டல்லாம் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டேன். சக்சஸ் ஆகல. 'நீங்க முதல்ல குடிக்கறதுல்லன்னு டிசைட் பண்ணாத்தான் எந்த மருந்தும் வேலை செய்யும்னு எல்லா டாக்டர்சும் சொல்லிட்டாங்க.'

அப்பத்தான் மாத்யூஸ் சார ஒரு ப்ராஜக்ட் விஷயமா மீட் பண்ணேன். என்னோட மூச்சுல இருந்த லிக்கர் ஸ்மெல் அவருக்கு என்னெ பத்தி சொல்லியிருக்கும் போல இருக்கு. அடுத்த ரெண்டு வாரம் டெய்லி சாயந்தரம் ஆனா என்னெ ஏதாவது ஒரு காரணம் சொல்லி அவரோட ஆஃபீசுக்கு கூப்டுவார். நாங்க செய்யப் போற ப்ராஜக்ட்ட பத்தியே பேசிக்கிட்டிருப்பார். ப்ராஜக்ட் டிஸ்கஷன் முடிஞ்சதும் அவங்க வீட்டுக்கு கூப்ட்டுக்கிட்டுப் போய் சாப்பிட வைப்பார். அதுக்கப்புறம் அவரே வீடு வரைக்கும் வந்து ட்ராப் பண்ணிட்டு போவார். ஆரம்பத்துல இவர் எதுக்கு இப்படி பண்றார்னு தோனும். ஒருவேளை எங்கிட்ட தவறா நடக்க பாக்கறாரோன்னு கூட தோனும். ரொம்ப நாளைக்கப்புறம் அந்த ரெண்டு வாரம் நா குடிக்கணும்கற நினைவே இல்லாம இருந்தேன். நமக்கு ரொம்ப புடிச்ச விஷயத்துல நாம கவனத்த செலுத்த ஆரம்பிச்சா இந்த வியாதியிலருந்து கொஞ்சம், கொஞ்சமா மீண்டு வர முடியும்னு மாத்யூஸ் சொன்னப்போ என் பொசிஷன தெரிஞ்சிக்கிட்டுத்தான் இவர் இப்படியெல்லாம் செஞ்சிருக்கார்னு எனக்கு புரிஞ்சிது.

'நானும் ஒன்னெ மாதிரிதாம்மா இருந்தேன். ஆனா ஒன்னெ கைட் பண்றதுக்கு நா இருந்தா மாதிரி எனக்கு யாரும் இருக்கல. என் ஃப்ரெண்ட் ஒருத்தர் சொல்லித்தான் இந்த ஏ.ஏ. மூவ்மெண்ட பத்தி தெரிஞ்சிக்கிட்டேன். ஆரம்பத்துல எனக்கு இதுல பிலீஃப் இல்லன்னாலும் என்னெ மாதிரியே அஃபெக்ட் ஆயி மீண்டு வந்தவங்களோட அனுபவங்கள கேட்டப்போ என்னாலயும் இதுலருந்து மீண்டு வர முடியுங்கற நம்பிக்கை வந்துது'ன்னு அவர் சொன்னப்போதான் இந்த மூவ்மெண்ட பத்தியே எனக்கு தெரியும். இது எனக்கு மூனாவது மீட்டிங். இந்த மூனு வாரமா குடிக்காம இருக்கேன். கஷ்டமாத்தான் இருக்கு. ஆனா ஒங்கக் கூட பேசினதுக்கப்புறம் இந்த வியாதியிலருந்து மீண்டு வர முடியுங்கற நம்பிக்கை வந்துருக்கு.'

அடுத்த அறையில் அமர்ந்து ரோஹினியின் இந்த சுய அனுபவத்தை கேட்டுக்கொண்டிருந்த எனக்கே கண்கள் கலங்கிப்போயின. அத்தனன உருக்கமாக இருந்தது அவர் விவரித்த விதம். ஆனால் ஒரு இடத்திலும் தன்னுடைய நிதானத்தை இழக்காமல், உணர்ச்சிவசப்படாமல் அவர் விவரித்ததை இப்போது நினைத்தாலும் வியப்படையாமல் இருக்க முடியவில்லை.
அந்த கூட்டம் நடந்த ஒரு சில தினங்களிலேயே நான் அந்த நகரத்திலிருந்து மாற்றலாகி வந்துவிட்டேன். ஆனால் நிச்சயம் ரோஹினி மட்டுமல்லாமல் அவருடன் அன்றைய கூட்டத்தில் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டவர்கள் தங்களுடைய குடிப்பழக்கத்திலிருந்து மீண்டு வந்திருப்பார்கள் என்பது நிச்சயம்...

அடுத்து ஒரு முதியவரின் அனுபவங்களை கூறுகிறேன்..

தொடரும்..

1 comments:

Anonymous said...

குடிப்பவர்கள் அனைவரும் குடிகாரர்களாவது இல்லை.ஆனால் குடிகாரர் ஆகப் போகிறவ்ர்களுக்கு அதில் மீள முடியாமல் மாட்டிக்கொண்ட பின் தான் தெரியும்.என்னால் எப்பொழுது நினைத்தாலும் நிறுத்த முடியும் என்று சொல்ல ஆரம்பிப்பதுவே ஆரம்பம்.நிறுத்திப் பாருங்கள் முடிய வில்லையா அனைத்தையும் இழப்பதற்கு முன் ஏ ஏ யில் சேர்ந்து விடுங்கள்.குடி ஒரு மன நோய். குடும்பத்தையே கெடுத்துவிடும்.தனியாகக் குணப்படுத்த முடியாது.ஏ ஏ எந்த மதத்தையும் சார்ந்ததல்ல.அதில் கிடைக்கும் வழி முறைகள் தான் உலகில் இன்று கோடிக்கனக்கானவர்களை குடியிலிருந்து குணப்படுத்தியுள்ளது.ஆரம்பத்தில் வெறுப்பாக இருக்கும்.ஆனால் கட்டாயம் மூன்று,ஆறு மாதங்களுக்குப்பின் வாழ்க்கையே முன்னேறிவிடும்.மன அமைதியும்,இழந்தவற்றைத் திரும்ப அடைவதும் கட்டாயம் கிடைக்கும்.

Post a Comment