Sunday, September 05, 2010

நான் இந்து. இல்லை, இல்லை கிறிஸ்துவன் (சிறுகதை)

பாதிரியார் தேவசகாயம் தன்னுடைய அலுவலக அறையில் அமர்ந்து பணியில் மூழ்கியிருந்தார். தன் எதிரில் யாரோ வந்து நிற்பதை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தார். அவருடைய அலுவலக பணியாளன் லாரன்ஸ்.

'என்ன லாரன்ஸ்?'

'இவர் உங்கள பாக்கணும்னு வந்திருக்கார், ஃபாதர்.'

தேவசகாயம் அவன் நீட்டிய விசிட்டிங் கார்டை வாங்கி பார்த்தார். இவரா? என்னை எதற்கு பார்க்க வந்திருப்பார்?

'சரி, ஒரு அஞ்சி நிமிஷம் கழிச்சி வரச் சொல்லு.'

அவன் சென்றதும் தன்னுடைய மேசையை ஒட்டி இருந்த அலமாரியில் துழாவி இரண்டு நாட்களுக்கு முந்தைய ஹிந்து தினத்தாளை எடுத்து அவசரமாக பக்கங்களை புரட்டினார். ஏழாம் பக்கத்தில் தன்னை காண வந்திருந்த அரசு அதிகாரியின் புகைப்படத்தையும் அவர் அளித்திருந்த பேட்டியையும் படித்துவிட்டு தன்னுடைய உதவியாளர்களுடன் விமர்சித்தது நினைவுக்கு வந்தது.

'நான் சட்டப்படி ஹிந்து ஆனால் என்னுடைய நம்பிக்கையின்படி நான் ஒரு கிறீஸ்துவன்!'

'இத பார்த்தீங்களா ஃபாதர்.' என்றவாறு அந்த செய்தியை அவரிடம் சுட்டிக்காட்டினார் அவருடைய உதவியாளர் 'இவர் சொன்னத இப்படியும் எடுத்துக்கலாமில்ல? அரசாங்கத்துலருந்து சலுகைகள் கிடைக்கறதுக்காகத்தான் நான் இந்துவா இருக்கேன். ஆனா உண்மையில நா கிறிஸ்துவன்.'

தேவசகாயம் புன்முறுவலுடன், 'நீங்க சொல்றா மாதிரியும் எடுத்துக்கலாம். ஆனா இவர் ரொம்பவும் நேர்மையானவர், தைரியம் உள்ளவராமே?'

'அப்போ இவர தவிர மத்த ஐஏஎஸ் அதிகாரிகள் எல்லாருமே நேர்மையற்றவர்கள் அல்லது கோழைகள் என்று அர்த்தமா ஃபாதர். Honesty is not a virtue. Everyone is expected to be honest and straight forward இல்லையா ஃபாதர்? ஏதோ இவர் மட்டும்தான் நேர்மையானர் என்பதுபோல இவர் தன்னை முன்நிறுத்திக்கொள்வது சரியா?'

'தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அதற்கு பணியமாட்டார் நிறைய பேர் சொல்றாங்களே!' என்றார்.

'முதலம்மைச்சர பத்தியும் அவரோட குடும்பத்த பத்தியும் இவர் தைரியமா பத்திரிகைகளுக்கு சொன்னத வச்சி சொல்றீங்களா ஃபாதர்?'

தேவசகாயம் ஆமாம் என்று தலையை அசைத்தார்.

உதவியாளர் சிரித்தார். 'நீங்க ஒன்னு ஃபாதர். இவர் உண்மையிலேயே நேர்மையானவரா இருந்தா அந்த தவறுகள் நடந்த உடனேயே வெளியில சொல்லியிருக்க வேண்டாமா? இவர் செய்த ஒரு தவறுக்காக தண்டிக்கப்பட்டவுடன் வெளியில் கூறுவது பெரிய விஷயமா ஃபாதர்? அதாவது நான் செய்த தவற்றை நீ வெளியில் சொல்லாதவரை நானும் உன்னுடைய தவறுகளை கண்டுகொள்ளமாட்டேன் என்றுதானே அர்த்தம்?'

தேவசகாயம், 'சரி விடுங்கள். நமக்கு எதுக்கு இந்த அரசியல் எல்லாம்? இன்றைக்கு அடித்துக்கொள்வார்கள். நாளைக்கு சேர்ந்துக்கொள்வார்கள். நம் வேலையை பார்ப்போம்.' என்று அந்த விவாதத்தை முடித்து வைத்ததும் நினைவுக்கு வந்தது.

இவர் எதற்காக நம்மை சந்திக்க வந்திருப்பார். ஒருவேளை நம்முடைய உதவியாளர் வாய் துடுக்காக இவரைப் பற்றி வேறு எங்காவது சென்று பேசியிருப்பாரோ?

யோசனையில் ஆழ்ந்திருந்த தேவசகாயம் தன் முன் வந்து நின்றவரைப் பார்த்தார்.

'உக்காருங்க.'

வந்தவருடைய பார்வை அவருடைய மேசை மீது கிடந்த ஹிந்து பத்திரிகை மீது விழுவதை பாதிரியார் பார்த்தார்.'சொல்லுங்க, நா என்ன செய்யணும்?'

'என்னெ பத்தி பத்திரிகையில படிச்சிருப்பீங்கன்னு நினைக்கேன் ஃபாதர்.'

'ஆமாம்... நீங்க ரெண்டு நாளைக்கு முன்னால குடுத்த இண்டர்வ்யூவ ஹிந்துல பார்த்த ஞாபகம்.'

'என்னோட சஸ்பென்ஷன ரிவோக் ஆனா என்னோட ஒரு மாச சம்பளத்த சர்ச்சுக்கு டொனேட் பண்லாம்னு நேந்துக்கிட்டேன் ஃபாதர். நா இந்த பேரிஷ் மெம்பர் இல்லன்னாலும் நீங்க செய்யிற சோஷியல் சர்வீச பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கேன். அதான் இந்த சர்ச்சுக்கே டொனேட் பண்லாம்னு வந்தேன்.'

தேவசகாயம் அவரை வினோதத்துடன் பார்த்தார். சட்டப்படி நான் ஹிந்து என்று கூறியவராயிற்றே?'

'நீங்க எங்க சர்ச்சுக்கு வர்றதுண்டா?'

'இல்ல ஃபாதர். ஆனா அம்மா ரெகுலரா வருவாங்க.'

'உங்களுடைய மனைவி, குழந்தைகள்...?'

'அவங்க எல்லாரும் ஹிந்துக்கள்தான் ஃபாதர். அப்பாவோட நிர்பந்தம். மீற முடியல.'

'நீங்க கிறிஸ்துவரா? ஏன் கேக்கறேன்னா நீங்க ஸ்கூல்ல படிக்கறப்போ கிறிஸ்துவர்னு குடுத்திருந்தீங்க போலருக்கு.'

'உண்மைதான் ஃபாதர். ஆனா அப்புறம் அப்பா நிர்பந்தத்தால ஹிந்துவா மாற வேண்டிய சூழல்.'

தேவசகாயம் அவரை ஏளனத்துடன் பார்த்தார்.'நீங்க பேட்டியில சொன்னத வச்சி பார்த்தா  நீங்க ஹிந்துவா மாறுனப்போ உங்களுக்கு வயசு 25 இருக்கும். அந்த வயசுல உங்கள உங்க அப்பா நிர்பந்தத்துக்கு பயந்து நீங்க ஹிந்துவா மாறுனீங்களா?'

வந்தவருடைய முகம் சுருங்கியதை கவனித்தார் தேவசகாயம். தன்னுடைய கேள்விகள் அவரை எரிச்சலடைய வைத்திருந்ததை கண்டுக்கொள்ளாமல் தொடர்ந்தார். 'சரி அதுபோகட்டும். சாதாரணமா அப்பா எந்த ரெலீஜியனோ அந்த ரெலிஜியனைச் சார்ந்தவராத்தான் பிள்ளைகளையும் பள்ளிகள்ல பதிவு செய்வார்கள். உங்களுடைய தந்தையோ ஹிந்து. பிறகெப்படி உங்களுடைய மதம் கிறிஸ்துவன் என்று பதிவு செய்ய முடிந்தது?'

'எதுக்கு ஃபாதர் இந்த குறுக்கு கேள்வியெல்லாம் கேக்கறீங்க? நா யாராயிருந்தாலும் என்னுடைய நோக்கத்தை சந்தேகிக்காதீங்க ஃபாதர்.' என்று அவர் எரிச்சலுடன் கேட்டதை தேவசகாயம் கண்டுக்கொள்ளவில்லை..

'என்னுடைய கேள்விக்கு நீங்க பதில் சொல்லலை.' என்றார் பிடிவாதத்துடன்.

வந்த அரசு அதிகாரி எழுந்து நின்றார். 'உங்க க்ராஸ் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல அவசியம் எனக்கில்லை ஃபாதர். உங்களுக்கு விருப்பமில்லன்னா சொல்லிருங்க.. சிட்டியில எத்தனையோ சர்ச் இருக்கு. அங்க குடுத்துக்கறேன்.'

தேவசகாயம் புன்முறுவலுடன் எழுந்து நின்றார். 'அப்படியே செய்யுங்கள் சார். சிறிய விஷயங்களில் நேர்மையற்றவன் பெரிய விஷயங்களிலும் நேர்மையற்றவனாகவே இருக்கிறான் என்று வேதாகமம் கூறுகிறது. உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஒன்று முழு ஹிந்துவாக இருங்கள் அல்லது முழு கிறிஸ்துவனாக இருங்கள். நான் ஹிந்து ஆனால் கிறிஸ்துவை விசுவசிக்கிறேன் என்று கூறுவதில் தவறில்லை. சாதி அடிப்படையில் அரசாங்க சலுகைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக பெயரளவில் அதாவது, சட்டப்படி நான் ஹிந்து, ஆனால் மனத்தளவில் கிறிஸ்துவன் என்று கூறி கிறிஸ்துவத்தையும் ஹிந்துத்வைத்தையும் இழிவு படுத்தாதீர்கள். You don't deserve to be either a christian or a hindu, goodbye' என்றார்.

தேவசகாயத்தின் சாடலை சற்றும் எதிர்பார்க்காத அந்த அரசு அதிகாரி தலையை குனிந்தவாறு வெளியேறினார்.*******'

4 comments:

வே.நடனசபாபதி said...

அருமையான சிறுகதை. பலர் சொல்ல நினைத்து, சொல்லாமல் இருப்பதை கதையாக வடித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

சீனு said...

கதையெல்லாம் ஓகே. ஆனா, அந்த பாதர் பேசுவதை போல நிஜத்தில் எந்த பாதரும் பேசுவதில்லை. தமிழ் படங்கள் பார்ப்பது போல் உள்ளது. :)

டி.பி.ஆர் said...

அருமையான சிறுகதை. பலர் சொல்ல நினைத்து, சொல்லாமல் இருப்பதை கதையாக வடித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்//

நன்றி நடனசபாபதி.

டி.பி.ஆர் said...

கதையெல்லாம் ஓகே. ஆனா, அந்த பாதர் பேசுவதை போல நிஜத்தில் எந்த பாதரும் பேசுவதில்லை. தமிழ் படங்கள் பார்ப்பது போல் உள்ளது//

உங்களுடைய கருத்துக்கு நன்றி சீனு. ஆனால் இத்தகைய பாதிரியார்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Post a Comment