Tuesday, September 14, 2010

நிதானம் தவறிய நிமிடங்கள் (AA - ஒரு அறிமுகம்)

குடிப்பழக்கமும் (நான் குடிப்பதுண்டு, ஆனால் குடித்தே தீரவேண்டும் என்பதில்லை) குடிக்கு அடிமையாவதும் (என்னால் குடிக்காமல் இருக்க முடியவில்லை) வெவ்வேறு.

இன்றைய சூழலில், குறிப்பாக மேல்மட்டத்தில், மது அருந்தாமல் இருப்பது அபூர்வம் என்று கூட கூறலாம். எந்த ஒரு வர்த்தக அல்லது நட்பு கூட்டமும் Fellowship எனப்படும் மதுவுடன் கூடிய விருந்து இல்லாமல் முடிவதில்லை. இத்தகைய கூட்டங்களில் மது அருந்தாதவர்கள் வரவேற்கப்படுவதில்லை என்று கூட கூறலாம்.

கீழ்மட்டத்திலும் அப்படித்தான். இன்று தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளில் நிரம்பிவழியும் கூட்டத்தைப் பார்த்தாலே தெரியும் நான் கூற வருவது என்னவென்று. தினக்கூலி தொழிலாளர்கள், அரசு பணியில் உள்ள கடைநிலை ஊழியர்கள், ஆட்டோ, லாரி மற்றும் மூன்று சக்கர பளுதாங்கும் வாகன ஓட்டுனர்கள் இவர்கள்தான் இத்தகைய கடைகளின் நிரந்தர வாடிக்கையாளர்கள்.

இவர்களுள் பெரும்பாலானோர் நான் துவக்கத்தில் கூறிய 'குடிக்கு அடிமையானவர்கள்' என கூறலாம். காலையில் கடை திறக்கப்படுவதற்கு முன்னரே வாசலில் காத்திருப்பவர்களும் இவர்கள்தான். அதாவது தங்களுடைய அன்றாட அலுவலை துவக்க வேண்டுமென்றால் சில மில்லிகளை விழுங்க வேண்டிய நிர்பந்தத்திற்குள்ளானவர்கள். அப்போதுதான் அவர்களால் செயலாற்ற முடியும். சிலருக்கு 'நிதானம்' தவறினால்தான் எதையும் நிதானமாக சிந்திக்க முடியும். நடுங்கும் கரங்களை, கால்களை ஒரு நிதானத்திற்கு கொண்டுவர உதவுவதும் இந்த திரவம்தான் என்றால் மிகையில்லை.

இது தமிழகத்திற்கு மட்டுமே சொந்தமல்ல. அண்டை மாநிலமான கேரளம்தான் நாட்டிலேயே அதிகம் 'குடிமக்களை' கொண்ட மாநிலம் என்றால் நம்ப முடிகிறதா? நாட்டிலேயே அதிகம் படித்தவர்களைக் கொண்ட மாநிலமும் அதுதான். கேரளம் நாட்டின் மற்ற மாநிலங்களிலிருந்து வேறுபடுவது எதில் என்றால் 'குடிமகன்களின்' வரையறுப்பில்தான்! அதாவது அங்குதான் மேல்மட்டமும் இல்லாமல் அடிமட்டமும் இல்லாமல் நடுத்தரம் அல்லது அலுவலகவாசிகள் எனப்படுபவர்களும் இதற்கு அடிமையாகியுள்ளனர்.
நான் கேரளத்தில் சில வருடங்கள் பணியாற்றிய அனுபவத்தில் இதை கூறுகிறேன். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் Bankers' Club கூட்டங்கள் பெரும்பாலும் கூடி குடிப்பதற்குத்தான் நடத்தப்படுகின்றன என்பதுபோல் கூட்டம் ஒரு மணி நேரத்தில் முடிந்துவிடும். ஆனால் அதனைத் தொடர்ந்து நடத்தப்படும் Fellowship பெரும்பாலும் 'கையிருப்பு' தீரும்வரையிலும் நடப்பதுண்டு. கூட்டத்தின் இறுதியில் பலர் சிறு, சிறு கிளைகளாக பிரிந்து நள்ளிரவு வரை 'தனி ஆவர்த்தனம்' செய்வதையும் பார்த்திருக்கிறேன்!

இத்தகையோரை இந்த ஒருவகை 'நோயில்' இருந்து மீட்கத்தான் Alchoholics Anonymous என்ற அமைப்பு உருவானது. இன்று அது சுமார் 180 நாடுகளில் செயல்படுகின்றன!

'A.A.' அமைப்பைப் பற்றி ஆய்வு செய்கையில் இந்த 'நோய்' இன்று உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது என்பது அவர்களுடைய அறிக்கைகளில் இருந்தே தெரிகிறது. இந்த அமைப்பில் அங்கத்தினர்களாக உள்ளவர்கள் சுமார் 20 லட்சம் பேர் என்பதிலிருந்தே தெரியவில்லையா இந்த 'நோயின்' தீவிரம்!

'ஆல்கஹாலிக் அனானிமஸ்' என்ற இந்த அமைப்பு 1935ம் ஆண்டு இந்த 'நோய்க்கு' அடிமையாகிப் போன ஒரு பொறியாளர் (பில் வில்சன்) மற்றும் ஒரு மருத்துவர் (டாக்.பாப்) என்ற இரு அமெரிக்கர்களால் அதே நோய்க்கு அடிமையாயிருந்த தங்களுடைய நெருங்கிய நண்பர்களுடன் இணைந்து துவக்கப்பட்டது.

இந்த அமைப்பில் அங்கத்தினர்களாக சேர்வதற்கு சாதி, இனம், மதம், மொழி, வர்க்கம் என்ற எந்த பாகுபாடும் இல்லை. 'நான் இந்த நோய்க்கு அடிமையாகிவிட்டேன். இதிலிருந்து நான் மீள வேண்டும்.' என்று கருதும் எவரும் இதில் அங்கத்தினர்களாகலாம். இத்தகையோர் தங்களுடைய அனுபவங்களை பாதிக்கப்பட்ட மற்ற அங்கத்தினர்களுடன் பகிர்ந்துக்கொண்டு அதிலிருந்து மீள்வதற்கு ஒருங்கிணைந்து போராடுவதே இந்த அமைப்பின் அடிப்படை நோக்கம்.

இதில் அங்கத்தினர்களாக இணைவோரின் பின்புலத்தைப் பற்றி ஆராயவோ அல்லது அவர்களுடைய பெயர்,விலாசம் போன்ற விவரங்களை பதிவுசெய்து அவர்கள் தொடர்ந்து இந்த போதைக்கு அடிமையாகாமல் வாழ்கின்றனரா என்றெல்லாம் இந்த அமைப்பு செய்வதில்லை. அதுபோன்றே உளவியல் அல்லது மருத்துவ ஆலோசனைகளோ அல்லது சிகிச்சைகளை வழங்குவதும் இந்த அமைப்பின் நோக்கமல்ல.

இந்த அமைப்பை துவக்கியவர்கள் இதில் அங்கத்தினர்களாக விழைவோர்க்கு என  12 அம்ச கோட்பாட்டை நிர்ணயித்திருந்தாலும் இவற்றை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயமோ அல்லது நியதியோ இல்லை.

அவை என்ன?

1. நான் இந்த பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டேன். இதை என்னுடைய கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை.

2. என்னையும் விட வலிமையான சக்தி ஒன்று உள்ளது என்பதையும் அதால் என்னை இந்த பழக்கத்திலிருந்து விடுவிக்க முடியும் என்று நம்புகிறேன்.

3. அந்த சக்தியிடம் என்னையும் என்னுடைய வாழ்வையும் ஒப்படைக்க விரும்புகிறேன்.

4. என்னை ஒரு முழுமையான ஆன்ம சோதனைக்கு ஆட்படுத்தி அதன் மூலம் இந்த பழக்கத்திலிருந்து மீளமுடியாத என்னுடைய இயலாமையை அறிந்துக்கொண்டுள்ளேன்.

5. என்னுடைய தவறுகளை, என்னுடைய இந்த இயலாமையை, 'கடவுள்' என்ற என்னை மீறிய சக்தியிடமும் என்னுடைய நண்பர்களுடனும் ஒப்புக்கொள்ள தயங்கமாட்டேன்.

6. என்னுடைய இந்த இயலாமையை என்னிடமிருந்து முற்றிலும் அகற்றுவதில் அந்த சக்தியுடன் இணைந்து ஒத்துழைக்க முன்வருகிறேன்.

7. என்னுடைய குறைகளை ஏற்றுக்கொண்டு அவற்றிலிருந்து என்னை விடுவிக்க அந்த சக்தியிடம் தாழ்மையுடன் கோருகிறேன்.

8. என்னுடைய கடந்தகால வாழ்க்கையில் நான் யாருக்கெல்லாம் தீங்கிழைத்திருக்கிறேன் என்பதை ஆன்மசுத்தியுடன் ஆய்வுசெய்து அவர்களுக்கு என்னால் இயன்றவரை ஈடு செய்ய சித்தமாயுள்ளேன்.

9. என்னால் பாதிக்கப்பட்டவர்களுடைய நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படாதவரையில் என்னால் இயன்றவரை என்னுடைய தவறுகளுக்கு பிராயசித்தம் செய்யவும் முயல்வேன்.

10. நான் இனியும் பிறருக்கு தீங்கிழைக்காமல் இருக்கவும் என்னையும் அறியாமல் அவ்வாறு செய்ய நேரும்போதெல்லாம் அவற்றிற்கு பரிகாரம் செய்யவும் உறுதி கூறுகிறேன்.

11. தியானம் மற்றும் பிரார்த்தனைகள் மூலம் கடவுள் எனப்படும் சக்தியின் சித்தத்தை அறிந்துக்கொள்ளும் திறனையும் அவற்றை கடைபிடிக்க வேண்டிய வல்லமையை எனக்கு அளித்தருள வேண்டுமென்றும் கோருகிறேன்.

12. கடவுளை அறிந்துக்கொள்ள நான் செய்யவிருக்கும் முயற்சிகளின் பயனாக நான் அடையவுள்ள அனைத்து நன்மைகளையும் என்னைப்போன்றே இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ள என்னுடைய நண்பர்களுடன் பகிர்ந்துக்கொள்வதன் மூலம் அவர்களையும் இதிலிருந்து விடுவிக்க என்னால் இயன்ற அளவுக்கு முயல்வேன்.

இவற்றை முதலில் வாசிக்கும் எவருக்கும் இது ஏதோ இறை நம்பிக்கையை வளர்க்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பாக இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் புதிய அங்கத்தினர்கள் இந்த கோட்பாடுகளை அப்படியே ஏற்றுக்கொள்ளவோ அல்லது பின்பற்றவோ தேவையில்லை என்பதையும் இந்த அமைப்பின் அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

தொடரும்..

6 comments:

துளசி கோபால் said...

டாஸ்மாக் போகும் நம்ம மக்கள் இதை நிதானமாப் படிக்கவே, கொஞ்சம் ஊத்திக்கிட்டு வந்தால்தான் முடியுமாம்:(

Robin said...

நல்ல முயற்சி. வாழ்த்துகள்!

டி.பி.ஆர் said...

வாங்க துளசி,

படிக்கவே, கொஞ்சம் ஊத்திக்கிட்டு வந்தால்தான் முடியுமாம்:( //

உண்மைதான். அந்த அளவுக்கு இந்த நோய்க்கு அடிமையாகி கிடக்கிறார்கள்.

டி.பி.ஆர் said...

மிக்க நன்றி ராபின்

Anonymous said...

மிக்க நன்றி. தங்களுடைய சேவை தொடர இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.

ஸ்ரீனி

டி.பி.ஆர் said...

மிக்க நன்றி ஸ்ரீனி.

Post a Comment