Tuesday, August 31, 2010

நிதானம் தவறிய நிமிடங்கள்...

இந்த கட்டுரை தொடரில் நான் விவரிக்கப்போகும் சம்பவங்கள் அனைத்தும் நிஜம். ஆனால் சம்பவங்கள் நடந்ததாக குறிப்பிடப்படும் இடம், நபர்களின் பெயர்கள் அனைத்தும் கற்பனை. சம்பந்தப்பட்டவர்களின் நற்பெயருக்கு எவ்வித களங்கமும் ஏற்படலாகாது என்பதற்காகவே இந்த மாற்றங்கள்.

இவர்கள் அனைவரும் குடிப் பழக்கத்திற்கு தங்களையும் அறியாமல் அடிமையாகி தங்களுடைய நிதானத்தை, மன நிம்மதியை தொலைத்தவர்கள். ஆனால் சென்னையிலும் நம் நாட்டின் பல பகுதிகளிலும் இயங்கிவரும் ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் (Alchoholics Anonymous) என்ற அமைப்பில் தங்களை இணைத்துக்கொண்டு அவர்களுடைய வழிகாட்டுதலில் தங்களுடைய வாழ்க்கையை, நிம்மதியை மீட்டெடுத்தவர்கள்.

அத்தகைய ஒருசிலரின் அனுபவங்களை எழுதலாம் என்றிருக்கிறேன். அவற்றின் இறுதியில் இந்த அமைப்பைப் பற்றியும் அதன் செயல்பாடுகளைப் பற்றியும் எழுதுவேன்.

நான் கூறிப்பிட்ட ஒருசிலரில் ஒருவர் கேரள மாநிலத்தைச் சார்ந்த மாத்யூஸ்.

நான் பணியாற்றிய நகரங்கள் ஒன்றில் எனக்கு அறிமுகமானவர். பெரிய தொழிலதிபர்.

நான் அந்த நகரத்தில் வசித்து வந்த பகுதியில் வசித்தவர். நான் சென்ற தேவாலய அங்கத்தினர்களுள் மிகவும் பிரபலமானவர். பழகுவதற்கு மிகவும் நல்லவர்.

நான் வசித்த பகுதி நகரத்தின் செல்வந்தர்கள் பலரும் வசித்துவந்த பகுதி. என்னுடைய வங்கியின் பல மதிப்புமிக்க வாடிக்கையாளர்களும் அந்த பகுதியில்தான் வசித்தனர். அவர்களுள் ஒருவருக்கு சொந்தமான வீட்டு ஒன்றின் மாடிப்பகுதியில்தான் நானும் என் மனைவியும் குடியிருந்தோம். அந்த பகுதியில் குடியிருந்த ஆண்கள் வார இறுதி நாட்களில் அருகிலிருந்த க்ளப் ஒன்றில் மாலையில் 'கூடுவதுண்டு'. இந்த 'கூடுவது' என்ற வார்த்தையின் பொருள் கேரளவாசிகளுக்கு மட்டுமே தெரியும். அந்த கூட்டத்திற்கு வருகை தரும் அனைவரும் ஆளுக்கொளு மது பாட்டிலை (அனைத்தும் விலையுயர்ந்த மேலைநாட்டு சரக்கு) கொண்டு வருவார்கள். சுமார் ஐந்தாறு மணி நேரத்தில் அனைத்தையும் குடித்து தீர்த்துவிடுவார்கள். அத்தகைய கூட்டத்தில்தான் மாத்யூஸை நான் முதன் முதலாக சந்தித்தேன்.

கேரள மாநிலத்தில் மதுபானம் அருந்துவது என்பது மிக, மிக சாதாரண விஷயம் என்பதை நான் அறிந்திருந்ததால் நான் அதை தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. அப்போது நான் அந்த அளவுக்கு 'குடிமகனாக' இல்லாததுடன் அவர்களுடைய 'பொருளாதார அந்தஸ்த்தும்' அந்த கூட்டங்களில் பெரும்பாலும் ஒரு பார்வையாளனாகவே பங்குகொள்வேன்.

மாத்யூஸ் மது அருந்தும் விதம் அங்கு குழுமியிருந்த நண்பர்களின் அருந்தும் விதத்திலிருந்து சற்று மாறுபட்டிருந்ததை முதல் கூட்டத்திலேயே கவனித்தேன். மற்றவர்கள் 'டைம் பாஸ்' செய்ய மது அருந்த இவர் மட்டும் ஏதோ போட்டியொன்றில் பங்கெடுப்பவரைப் போன்று அவசர, அவசரமாக அருந்துவதை பார்வையாளனாக பங்குபெற்ற என்னால் மட்டுமே உணரமுடிந்தது. கூட்டத்தின் இறுதியில் தன்னுடைய முழு நிதானத்தையும் இழந்து கூட்ட சூழலையே நிர்மூலமாக்க அவருடைய நண்பர்கள் சிலர் அவரை குண்டுக்கட்டாக தூக்கி அவருடைய வாகனத்தில் ஏற்றி அவருடைய வீட்டில் கொண்டு விட்டனர்.

அன்று மட்டும்தான் அவர் அப்படியென்று நினைத்த எனக்கு அடுத்தடுத்த வாரங்களில் நடைபெற்ற கூட்டங்களிலும் அவர் அப்படியே நடந்துக்கொள்ள குடிபோதைக்கு அவர் அடிமையாகி 'குடிகாரர்' (alchoholic) என்ற நிலையை அடைந்துவிட்டார் என்பதை உணர முடிந்தது.

ஆனால் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிப்போன பலரும் அதை எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை என்பதுதான் வேதனை. மாத்யூசும் அப்படித்தான். அவருடைய நண்பர்கள் பலருடன் நான் சூசகமாக விசாரித்து அறிந்தது இதுதான்.

அவர் பரம்பரை பரம்பரையாகவே செல்வந்த குடும்பத்திலிருந்து வந்தவர். அவருடைய குடும்பம் என்றால் அந்த நகரில் அறியாதவர்களே இல்லை என்னும் அளவுக்கு மதிப்புமிக்க குடும்பத்திலிருந்து வந்தவர். அவருடைய ஒரே மகள் (அவருக்கு ஒரேயொரு மகன் என்றுதான் முதலில் நான் நினைத்திருந்தேன். அவருக்கு ஒரு மகளும் இருந்தது பிறகுதான் தெரிந்தது) அவருடைய வீட்டு வாகன ஓட்டியுடன் ஓடிப்போய் திருமணம் செய்துக்கொண்டது அவருடைய குடும்பத்துக்கே பெரிய அவமானமாகப் போய்விட அவருடைய பெற்றோர், சகோதர, சகோதரிகள் என மொத்த குடும்பமும் அவருடைய மனைவி, மகன் அடங்கிய குடும்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டனர். மாத்யூஸ் மனமுடைந்துபோய் அதிக அளவு குடியில் தன்னை இழக்கத் துவங்கினார். அதுவே நாளடைவில் அவரை முழுவதுமாக ஆட்கொண்டுவிட்டது.

அவருடைய குடிப்பழக்கம் அவருடைய தொழிலையும் பாதிக்க பொருளாதாரத்திலும் நலிவடைந்தார். நல்ல வேளையாக அவருடைய மகன் படிப்பு முடிந்ததும் தந்தையின் தொழிலை கையிலெடுத்துக்கொள்ள அதை மீட்டெடுக்க முடிந்தது. ஆனால் மாத்யூசின் போக்கில் எந்த மாறுதலும் ஏற்படாததால் மனைவிக்கும் மகனுக்கும் கூட வேண்டாவராகிவிட்டார்.

அவருடைய நண்பர்களுள் பலரும் அவரிடமிருந்து விலகினாலும் அவர் குடியிருந்த பகுதியில் 'கூடும்' கூட்டங்களிலிருந்து மட்டும் அவரை விலக்க முடியவில்லை என்றனர் அந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட நண்பர்கள்.

சனிக்கிழமை இரவில் நடக்கும் கூட்டங்களில் குடித்து மயங்கி விழுந்தாலும் ஞாயிற்றுக்கிழமை காலை தேவாலயத்தில் நடக்கும் வழிபாட்டில் கலந்துக்கொள்வதிலிருந்து ஒரு வாரம் கூட தவறியதில்லை மாத்யூஸ். முந்தைய நாள் இரவில் குடித்து ரகளை செய்தவரா இவர் என்பதை அவரைக் காண்பவர்கள் வியந்துபோகும் அளவுக்கு மென்மையாக பழகுவார்.

நான் சென்னையிலிருந்த காலத்திலேயே நான் செல்லும் தேவாலயத்தில் இயங்கி வந்த 'A.A.' என அழைக்கப்பட்ட 'Alchoholic Anonymous' என்ற இயக்கத்தைப் பற்றி அறிந்திருந்தேன். வார இறுதி நாட்களில் நடைபெறும் அந்த கூட்டங்களில் மாத்யூஸ் போன்று குடிபோதைக்கு அடிமையாகிப் போய் அதிலிருந்து மீண்டவர்கள் தங்களுடைய அனுபவங்களை அவர்களைப் போன்றே அடிமையாகி அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பர்களுடன் பகிர்ந்துக்கொள்வார்கள். அத்தகைய கூட்டங்களில் கலந்துக்கொள்ளும்போதுதான் இது ஒன்றும் பெரிய வியாதியல்ல என்றும் தங்களைப் போலவே பலரும் இதில் சிக்கிக்கொண்டு வெற்றிகரமாக மீண்டுள்ளனர் என்பதையும் அறிந்து தாங்களும் முயன்றால் அதிலிருந்து மீள முடியும் என்பதை உணர்வார்கள்.

மாத்யூசையும் இத்தகைய அமைப்பால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்று எனக்கு தோன்றியது. தமிழகத்தில் இத்தகைய அமைப்பின் கூட்டங்கள் பெரும்பாலும் கிறிஸ்துவ தேவாலய வளாகங்களில் மட்டுமே நடைபெற்று நான் கண்டிருந்தேன். ஆனால் நான் கலந்துக்கொண்ட தேவாலய தலைவரை அணுகியபோது அந்த பாதிரியாருக்கு அதில் அவ்வளவாக நம்பிக்கையில்லை. 'இது சரிவராது சார். இங்கல்லாம் குடும்ப விஷயங்கள டிஸ்கஸ் பண்ணவே முன்வரமாட்டாங்க. இதுல குடிப்பழக்கத்துக்கு நா அடிமையாய்ட்டேன்னு யார் ஒத்துக்கிட்டு வரப்போறாங்க? நம்ம டைம்தான் வேஸ்டாகும். அதோட மாத்யூஸ் மட்டுமில்லாமல் அவரோட ஃபேமிலியும்தான் நம்ம சர்ச்சோட பெரிய டோனர்ஸ் (Donors). மாத்யூஸ் இந்த பழக்கத்துக்கு அடிமையாகிப்போனது இப்ப அவ்வளவா வெளியில தெரியாது. அவருக்கு நல்ல செய்யிறதா நினைச்சி இப்படியொரு அமைப்பை ஸ்டார்ட் பண்ணி அவர இன்வைட் பண்ணி அவங்க பிரதர்சயும் அப்பாவையும் பகைச்சிக்க நா விரும்பல சார்.' என்றார்.

ஆனால் அதே நகரத்தில் இயங்கிவந்த ஒரு பெரிய மருத்துவமனையில் இத்தகைய அமைப்பு சிறிய அளவில் ஆனால் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதை அறிந்த நான் அதன் அமைப்பாளர்கள் ஒருவரை சென்று சந்தித்தேன். மாத்யூஸ் பற்றி விவரித்தேன். அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் நகரில் இருந்த செல்வாக்கை அறிந்திருந்த அவர் முதலில் தயங்கினாலும் சில வாரங்களுக்குப் பிறகு என்னுடைய காலனியில் வார இறுதி நாட்களில் நடக்கும் கூட்டம் ஒன்றிற்கு வந்து மாத்யூசை சந்திக்க ஒப்புக்கொண்டார்.

அடுத்த சில வாரங்களுக்குப் பிறகு எங்களால் மாத்யூசை அந்த அமைப்பின் வாராந்தர கூட்டங்களில் கலந்துக்கொள்ள சம்மதிக்க வைக்க முடிந்தது..

ஏறக்குறைய ஆறு மாதங்களுக்குப் பிறகு மாத்யூஸ் மீளவே மாட்டார் என்று நினைத்தவர்களும் வியக்கும் அளவுக்கு அதிலிருந்து மீண்டு வந்தார்...

நான் அந்த நகரிலிருந்து மாற்றலாவதற்கு முன்பு...

மாத்யூஸ் தன்னுடைய தேவாலய பாதிரியாரை சம்மதிக்க வைத்து அங்கு 'A.A.' அமைப்பை தன்னுடைய நண்பர்கள் சிலருடன் சேர்ந்து துவக்கினார்.  அவர் குடிப்பழக்கத்திலிருந்து முழுவதுமாக நம்ப மறுத்த தேவாலய அங்கத்தினர்கள் துவக்கத்தில் எதிர்ப்பை தெரிவித்தாலும் நாளடைவில் அவருடைய நடவடிக்கைகளை பார்த்து அமைதியடைந்தனர்.

அந்த நகரிலிருந்து புறப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு நான் அவரை சந்திக்க சென்றேன். அப்போது அவர் கூறியது இன்றும் நினைவில் நிற்கிறது. 'உங்களுக்கு எப்படி தாங்ஸ் சொல்றதுன்னு தெரியல ஜோசப். இன்னைக்கி நா ரொம்ப சந்தோசமா இருக்கேன். என் மகளை முழுசுமா ஏத்துக்கற மனப்பக்குவம் வந்துருச்சி. அதை விட பெரிய சந்தோசம் என்னெ மாதிரி இந்த பழக்கத்துக்கு அடிமையாகி அத ஏத்துக்க முடியாம தவிச்ச பலரை அதிலருந்து மீட்க முடிஞ்சதுதான். நா மட்டுமில்லாம என் வய்ஃபும் இதுல ரொம்ப ஆக்டிவா இருக்காங்க. நம்ம பேரிஷ் (Parish) சர்ச்சில மட்டுமில்லாம இன்னும் ரெண்டு சர்ச்சுலயும் இத ஆரம்பிச்சிருக்கோம். இதுதான் என்னோட இப்போதைய முழுநேர வேலை.'

சாதாரணமாக இந்த அமைப்பின் வாராந்தர கூட்டங்களில் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை மட்டுமே பங்குகொள்ள அனுமதிப்பார்கள். ஆனால் மாத்யூஸ் என்னுடைய வேண்டுகோளை ஏற்று அடுத்து வந்த வாரத்தில் கூட்டம் நடந்த அறைக்கு அடுத்த அறையில் அமர்ந்து கூட்டத்தில் பங்குகொண்டு தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டவர்கள் கூறுவதை அவர்களுக்கு தெரியாமல் கேட்க அனுமதியளித்தார்.

அந்த கூட்டத்தில்  நான் கேட்கமுடிந்த சிலவற்றை அடுத்துவரும் பதிவுகளில் எழுதுகிறேன்


தொடரும்...

2 comments:

Anonymous said...

மிக அருமையான பதிவு சார். மீதமுள்ளவர்களைப் பற்றியும் எழுதுங்கள். அத்துடன் நீங்கள் குறிப்பிட்ட இயக்கத்தைப் பற்றியும் தெளிவாக தெரிவிக்கவும்.

பெயர் குறிப்பிட விரும்பாத நண்பர்:(

DrPKandaswamyPhD said...

Good narration

Post a Comment