Thursday, February 18, 2010

சாதிகள் இருக்குதடி பாப்பா!!

சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிவிட்டு சென்றான் இறவா புலவன் பாரதி.

ஆனால் அது வெறும் கனவே என மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றன சமீப கால நிகழ்வுகள்.

நேற்று பத்திரிகைகளில் வெளியான கல்லூரி பேராசிரியை ஒருவர் தான் பணியாற்றிய கல்லூரியின் மேல்மாடியிலிருந்தே குதித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அவற்றுள் ஒன்று.

இந்த தற்கொலைக்குக் காரணம் பெற்றோர் விரும்பாத காதல் என்றுதான் வெளியாகியுள்ளது என்றாலும் அதன் பின்னணி சாதியாகத்தான் இருக்க முடியும் என்று கருதுகிறேன்.

காதல் என்பது ஒரு இனிமையான அனுபவம். அது இரு மனங்களுக்கிடையிலுள்ள உறவே அன்றி வேறில்லை. அது ஆண்-பெண் என்ற இரு வேறு பாலாருக்கிடையில் மட்டும்தான் ஏற்பட முடியும் என்ற இயற்கையின் நியதியையே மாற்றி போட்டுவிட்ட இந்த கலிகாலத்தில் இன்னும் ஒரே சாதியைச் சார்ந்தவர்களுக்கிடையில் மட்டும்தான் காதல் மலர வேண்டும் என்கிற நிலையில் பிடிவாதமாய் நிற்கும் பழைய தலைமுறையை என்னவென்பது?

அதுவும் இருபத்தைந்து வயதைக் கடந்துவிட்ட, சுயமாய் சிந்தித்து முடிவெடுக்கவும் ஏன் ஒரு பேராசிரியராக, கல்லூரி மாணவர்களை வழிநடத்தக் கூடிய திறனுள்ள ஒரு வாலிப பெண்ணை அவர் விரும்பியவரை காதலிப்பதை தங்களுடைய சுய கவுரத்திற்காக தடுத்து நிறுத்தும் பெற்றோரையும் கூட தற்கொலைக்கு காரணமாய் இருந்ததாக தண்டிக்க சட்டம் வரவேண்டிய காலம் வந்தாகிவிட்டதாகவே கருதுகிறேன்.

ஆனால் இத்தகைய தற்கொலைகளுக்கு பெற்றோரை மட்டுமே குற்றஞ்சாட்ட முடியுமா என்பதும் கேள்விக்குறிய விஷயம்தான். காதல்  பொருளாதார மற்றும் சாதி, மத பேதங்களை பார்த்து ஏற்படுவதில்லையென்பது உண்மை. அதாவது பள்ளிப் பருவத்தில் ஏற்படும்போது அதை இத்தகையை பேதங்களைப் பற்றி சிந்தித்துப் பார்க்கமுடியாத ஒரு விடலைக் காதல் - இனக்கவர்ச்சியால் ஏற்படும் ஒரு உடல் சார்ந்த உணர்வு - எனலாம். ஆனால் அதுவே வாலிபப் பருவத்தை அடைந்த, தான் யார், தன்னுடைய குடும்பம் எப்படிப்பட்டது, தன்னுடைய பெற்றோர் எத்தகையவர்கள் என்பதை தெளிவாக அறிந்துள்ள இருவர் ஒருவரையொருவர் விரும்பும்போது இதைப்பற்றியெல்லாம் சிந்தித்துப் பார்ப்பது அவசியம் இல்லையா?

மேலும் எல்லா காதலுமே திருமணத்தில்தான் முடிய வேண்டும் என்றோ அல்லது காதலிப்பவர்கள் எல்லாமே காதலித்தவர்களையே திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்றோ நியதியில்லை என்பதையும் மாணவப் பருவத்தைக் கடந்தபின் காதல்வசப்படுபவர்கள் உணர்ந்திருக்க வேண்டிய ஒன்று.

காதல் இல்லையேல் சாதல் என்பது பண்டைய காலத்து, முட்டாள்தனமான கூற்று. எதிர்வரும் காலத்தில் தாங்கள் எப்படியெல்லாம் வாழவேண்டும் என்று கற்பனை செய்து இருபதாண்டுகளுக்கும் மேலாக மாணவப்பருவத்தில் பட்ட கஷ்டங்களையெல்லாம் காதலுக்காக உணர்வுபூர்வமாக முடிவெடுத்து தன்னையே மாய்த்துக்கொள்வது எந்த வகையில் நியாயம்?

1 comments:

கோவி.கண்ணன் said...

//
இந்த தற்கொலைக்குக் காரணம் பெற்றோர் விரும்பாத காதல் என்றுதான் வெளியாகியுள்ளது என்றாலும் அதன் பின்னணி சாதியாகத்தான் இருக்க முடியும் என்று கருதுகிறேன்.//

பின்னனி என்னவென்று தெரியவில்லை. பெரும்பாலும் சாதி விட்டு சாதி காதெல்லாம் நிறைவேறி விடுகிறது, அதற்காக தற்கொலை செய்யும் அளவுக்குச் செல்லமாட்டார்கள். நெருங்கிய உறவினர்களில் அதாவது திருமணம் முறை இல்லாத சித்தி, பெரியப்பா வீட்டு அண்ணன் தங்கை உறவு முறைகளை சிலர் அன்பு மிகுதியாக காதலாக மாற்றிக் கொண்டு விடுவதுண்டு, இதை எந்த ஒரு பெற்றோரும் எதிர்பது உண்டு.

Post a Comment