Wednesday, February 24, 2010

தினமொரு சிந்தனை - 2 - பிறரை தீர்ப்பிடாதே

பைபிளில் ஒரு இடத்தில் இயேசு கூறுவார். "உன் கண்ணில் இருக்கும் விட்டத்தை எடுத்துவிட்டு உன் சகோதரனின் கண்களில் இருக்கும் துரும்பைப் பார்"

ஆம். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு கூறப்பட்ட வார்த்தைகள் என்றாலும் இன்றைக்கும் மிகவும் பொருத்தமான அறிவுரை.

நம்மில் பலரும் இப்படித்தான். பிறரைப் பற்றி தீர்ப்பிடுவதற்கு முன்பு சம்பந்தப்பட்டவரை தீர விசாரிக்க வேண்டியது அவசியம் என்பதை
மறந்துவிடுகிறோம்.

என்னுடைய பணிக்காலத்தில் என்னுடைய வங்கியின் ஒழுங்குமுறை கமிட்டியின் உத்தரவுப்படி பல விசாரனைகளை தலைமையேற்று நடத்தியிருக்கிறேன். அவற்றில் பெரும்பாலனவைகளில் விசாரனையின் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குற்றம் சுமத்துபவர்களின்
கற்பனையாகவே இருப்பதை உணர்ந்திருக்கிறேன். அல்லது தனிப்பட்ட பகையின் வெளிப்பாடக இருக்கும். அல்லது மிகைப்படுத்தப்பட்ட
குற்றச்சாட்டாக இருக்கும்.

ஒரு நிறுவனத்தில் பணியாற்றுகையில் அனைவரையும் அனுசரித்துக்கொண்டு செல்வதென்பது இயலாத காரியம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் யாரையாவது நம்மையும் அறியாமல் பகைத்துக்கொள்ள வேண்டியிருக்கும். அதை மனதில் அப்படியே வைத்துக்கொண்டு சமயம் பார்த்து திருப்பித்தாக்குவதில் நம்மில் பலரும் வல்லவர்கள். அதுவும் hitting below the belt என்பார்களே அதுபோன்று
கேவலமாக தாக்குவதில் சிலர் சூரர்கள். என்னுடன் சாராதவன் எனக்கு எதிரி என்கிற எண்ணத்தில் பணியாற்றும் சில உயர் அதிகாரிகளும் தங்களுக்கு வேண்டாதவர்கள் சிலரை தூண்டிவிட்டு குற்றம் சுமத்தை வைத்து  விசாரணை என்ற பெயரில் நாடகமும் நடத்தி தண்டிப்பதும் உண்டு.

ஆனால் இத்தகையோர் தங்களுக்கும் இதுபோன்றதொரு நிலை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை மறந்துவிடுவார்கள். என்னுடைய முப்பத்தாண்டு
கால அலுவலக அனுபவத்தில் இத்தகையோர் தாங்களாகவே பிரச்சினையில் சிக்கிக்கொள்வதும், வேறு சிலர் செய்யாத தவற்றுக்கு தண்டிக்கப்படுவதையும் கண்டிருக்கிறேன்.

ஆகவே இன்றைய சிந்தனை இதுதான். ஒருவரை தீர்ப்பிடுவதற்கு முன்பு குற்றச்சாட்டை முழுமையாக புரிந்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
குற்றம் சாட்டப்பட்டவரை விட குற்றம் சுமத்துபவர்களின் பின்னனியை விசாரித்து அவர்களுடைய குற்றச்சாட்டு உண்மையானதுதான் என்பதை
உறுதி செய்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு குற்றம் சாட்டப்பட்டவருக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வாய்ப்பளிக்க வேண்டும். அவர்
அளிக்கும் விளக்கத்திலிருந்தே விசாரனைக்குட்படுத்தப்பட வேண்டியவர் அவர்தானா அல்லது குற்றம் சுமத்தியவர்களா என்பது தெளிவாகிவிடும்.

*************

Saturday, February 20, 2010

தினம் ஒரு சிந்தனை - 1 இறை நம்பிக்கை

கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்பது மறைநூல் வாக்கு.

இறைவனில் நம்பிக்கைக் கொள்வோர் என்றுமே தனிமையை உணர்வதில்லை. நம்மைச் சுற்றியுள்ளவர்கள் - இதில் நம் பெற்றோர், உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் அனைவரும் அடங்குவர் - ஏதாவது சமயங்களில் குறிப்பாக நமக்கு மிகவும் தேவைப்படும்போது, நம் அருகில் இல்லாமல் போய்விடக் கூடும். அல்லது இருந்தும் நமக்கு துணையாய், ஆறுதலாய் இருக்க இயலாமல் போய்விடக் கூடும்.

ஆனால் இறைவன் ஒருவர்தான் நம்முடன் என்றும், எப்போதும், எங்கும் இருக்கக் கூடியவர். ஏனெனில் அவர் நம்மில், நம்முள், நம்முடன் இருக்கிறார். அவரை தொட்டுணர முடியாமல் அளவுக்கும் நம்முடன் கலந்திருக்கிறார். நம் உள்ளுணர்வுகளை எப்படி தொட்டுணர முடிவதில்லையோ அதுபோலத்தான் இறை பிரசன்னமும். இறைவனை உணர அவரை நேரிலோ, கனவிலோ காண வேண்டும் என்பதில்லை. நம் உணர்வுகளால்  காண முடிந்தாலே போதும்.

இறை நம்பிக்கை என்பது மூளையால், பகுத்தறிவால் ஆய்ந்து அறியக் கூடிய ஒன்றல்ல. மாறாக நம் உள் உணர்வுகளால் அனுபவிக்க வேண்டிய ஒன்று. அவர் நம் உள்ளிருந்து நம்மை வழி நடத்தும் ஆசான், சோர்ந்திருக்கையிலே நமக்கு ஆறுதலாய் வரும் மருத்துவன், ஆபத்திலிருந்து நம்மை காப்பாற்றும் காவலன், நம்மை உள்ளார்ந்த அன்புடன் நேசிக்கும் காதலன்..

இன்னும் எத்தனையோ அவதாரங்களை எடுக்கக் கூடிய ஒரே வல்லவன்.

எந்த ரூபத்திலும், வடிவிலும் வணங்கப்பட்டாலும் நம் அனைவருக்கும் அவந்தான் தலைவன்.

அவனை நம்புவோம். ஆறுதலடைவோம்.

Thursday, February 18, 2010

சாதிகள் இருக்குதடி பாப்பா!!

சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிவிட்டு சென்றான் இறவா புலவன் பாரதி.

ஆனால் அது வெறும் கனவே என மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றன சமீப கால நிகழ்வுகள்.

நேற்று பத்திரிகைகளில் வெளியான கல்லூரி பேராசிரியை ஒருவர் தான் பணியாற்றிய கல்லூரியின் மேல்மாடியிலிருந்தே குதித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அவற்றுள் ஒன்று.

இந்த தற்கொலைக்குக் காரணம் பெற்றோர் விரும்பாத காதல் என்றுதான் வெளியாகியுள்ளது என்றாலும் அதன் பின்னணி சாதியாகத்தான் இருக்க முடியும் என்று கருதுகிறேன்.

காதல் என்பது ஒரு இனிமையான அனுபவம். அது இரு மனங்களுக்கிடையிலுள்ள உறவே அன்றி வேறில்லை. அது ஆண்-பெண் என்ற இரு வேறு பாலாருக்கிடையில் மட்டும்தான் ஏற்பட முடியும் என்ற இயற்கையின் நியதியையே மாற்றி போட்டுவிட்ட இந்த கலிகாலத்தில் இன்னும் ஒரே சாதியைச் சார்ந்தவர்களுக்கிடையில் மட்டும்தான் காதல் மலர வேண்டும் என்கிற நிலையில் பிடிவாதமாய் நிற்கும் பழைய தலைமுறையை என்னவென்பது?

அதுவும் இருபத்தைந்து வயதைக் கடந்துவிட்ட, சுயமாய் சிந்தித்து முடிவெடுக்கவும் ஏன் ஒரு பேராசிரியராக, கல்லூரி மாணவர்களை வழிநடத்தக் கூடிய திறனுள்ள ஒரு வாலிப பெண்ணை அவர் விரும்பியவரை காதலிப்பதை தங்களுடைய சுய கவுரத்திற்காக தடுத்து நிறுத்தும் பெற்றோரையும் கூட தற்கொலைக்கு காரணமாய் இருந்ததாக தண்டிக்க சட்டம் வரவேண்டிய காலம் வந்தாகிவிட்டதாகவே கருதுகிறேன்.

ஆனால் இத்தகைய தற்கொலைகளுக்கு பெற்றோரை மட்டுமே குற்றஞ்சாட்ட முடியுமா என்பதும் கேள்விக்குறிய விஷயம்தான். காதல்  பொருளாதார மற்றும் சாதி, மத பேதங்களை பார்த்து ஏற்படுவதில்லையென்பது உண்மை. அதாவது பள்ளிப் பருவத்தில் ஏற்படும்போது அதை இத்தகையை பேதங்களைப் பற்றி சிந்தித்துப் பார்க்கமுடியாத ஒரு விடலைக் காதல் - இனக்கவர்ச்சியால் ஏற்படும் ஒரு உடல் சார்ந்த உணர்வு - எனலாம். ஆனால் அதுவே வாலிபப் பருவத்தை அடைந்த, தான் யார், தன்னுடைய குடும்பம் எப்படிப்பட்டது, தன்னுடைய பெற்றோர் எத்தகையவர்கள் என்பதை தெளிவாக அறிந்துள்ள இருவர் ஒருவரையொருவர் விரும்பும்போது இதைப்பற்றியெல்லாம் சிந்தித்துப் பார்ப்பது அவசியம் இல்லையா?

மேலும் எல்லா காதலுமே திருமணத்தில்தான் முடிய வேண்டும் என்றோ அல்லது காதலிப்பவர்கள் எல்லாமே காதலித்தவர்களையே திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்றோ நியதியில்லை என்பதையும் மாணவப் பருவத்தைக் கடந்தபின் காதல்வசப்படுபவர்கள் உணர்ந்திருக்க வேண்டிய ஒன்று.

காதல் இல்லையேல் சாதல் என்பது பண்டைய காலத்து, முட்டாள்தனமான கூற்று. எதிர்வரும் காலத்தில் தாங்கள் எப்படியெல்லாம் வாழவேண்டும் என்று கற்பனை செய்து இருபதாண்டுகளுக்கும் மேலாக மாணவப்பருவத்தில் பட்ட கஷ்டங்களையெல்லாம் காதலுக்காக உணர்வுபூர்வமாக முடிவெடுத்து தன்னையே மாய்த்துக்கொள்வது எந்த வகையில் நியாயம்?