சமீபத்தில் கோலாலம்பூர் (மலேசியா) சென்றிருந்தபோது என்னை மிகவும் கவர்ந்தவற்றுள் ஒன்று அங்குள்ள கத்தோலிக்க தேவலாயங்களில் நடைபெற்ற வழிபாடுகளில் அனைத்து பக்தர்களின் ஈடுபாடு.
வழிபாடுகளில் கலந்துக்கொள்ளும் மக்கள் பல இனங்களைச் சார்ந்தவர்களாகவும் பல மொழிகளைப் பேசுபவர்களாகவும் உள்ளதால் வழிபாடு சமயங்களில் உரைக்கப்படும் ஜெபம் மற்றும் பதிலுரைகளை ஆங்கிலம்,சீனம் மற்றும் தமிழில் ஆலய சுவற்றில் Power Point Slides வடிவத்தில் ஒளிபரப்புகின்றனர்.
ஆகவே வழிபாட்டில் கலந்துக்கொள்ளும் அனைவரும் தங்கள், தங்கள் மொழியிலேயே ஜெபிக்க முடிகிறது.
அதுபோலத்தான் பாடகர் குழுக்களூம்.
கடந்த வருடம் கிறீஸ்துமஸ் திருவிழா அன்று என்னுடைய மகள் சார்ந்திருந்த பங்கு தேவாலயத்திற்குச் செல்லாமல் சற்றே தள்ளியிருந்த திருக்குடும்ப தேவாலயத்தில் நடைபெற்ற தமிழ் திருப்பலிக்குச் சென்றிருந்தேன்.
ஒரு தமிழக தேவாலயத்திற்குள் நுழைந்ததுபோன்ற ஒரு பிரமையை ஏற்படுத்தியது அங்கு குழுமியிருந்த மலேசிய வாழ் தமிழ் கத்தோலிக்கர்களின் கூட்டம்.
தமிழக தேவாலயங்களிலும் நான் அத்தகைய பாடகர் குழுவைப் பார்த்ததில்லை என்றால் மிகையாகாது. சுமார் இருபது பாடகர்களைக் கொண்ட (பெரும்பாலும் பள்ளி, கல்லூரி மாணவியர்) குழு ஆர்மோனியம், தபேலா, வயலின் போன்ற பாரம்பரிய இசைக்கருவிகளுடன் பாடல்களைப் பாடி பரவசப்படுத்தினர்.
என் கவனத்தை ஈர்த்த இன்னொன்று அங்குள்ள குருமார்கள் வழிபாட்டை நடத்திய விதம். சரியான நேரத்தில் வழிபாட்டைத் துவங்குவது, சிறிய கச்சிதமான பிரசங்கம் (பத்து நிமிடத்திற்கு மேல் செல்லவில்லை)பங்கைச்சார்ந்த மூத்த பக்தர்களையும் (Laymen) திவ்விய நற்கருணையை வழங்குவதற்கு அனுமதிப்பது போன்றவை.
விளைவு? மொத்த வழிபாடும் வாரநாட்களில் அரை மணி நேரத்திலும் ஞாயிற்றுக்கிழமைகள் 45 முதல் 60 நிமிடங்களிலும் திருவிழா காலங்களில் அதிகபட்சம் 75 நிமிடங்களுக்குள்ளும் முடிந்துவிடுகிறது.
இதனால் இங்கு நடைபெறுவது போன்று திவ்விய நற்கருணையோடு முடித்துக்கொண்டு யாரும் தேவாலயத்தை விட்டு வெளியேறிடுவதில்லை. இறுதி ஆசீர் வரை மட்டுமல்லாமல் நன்றி கீதத்திலும் அனைவரும் பங்கு பெறுகின்றனர்.
நம்முடைய தேவாலயங்களிலும் இத்தகைய முறை வருமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
Monday, September 08, 2008
Subscribe to:
Posts (Atom)

