Monday, September 08, 2008

மலேஷியாவில் தேவாலய வழிபாடு

சமீபத்தில் கோலாலம்பூர் (மலேசியா) சென்றிருந்தபோது என்னை மிகவும் கவர்ந்தவற்றுள் ஒன்று அங்குள்ள கத்தோலிக்க தேவலாயங்களில் நடைபெற்ற வழிபாடுகளில் அனைத்து பக்தர்களின் ஈடுபாடு.

வழிபாடுகளில் கலந்துக்கொள்ளும் மக்கள் பல இனங்களைச் சார்ந்தவர்களாகவும் பல மொழிகளைப் பேசுபவர்களாகவும் உள்ளதால் வழிபாடு சமயங்களில் உரைக்கப்படும் ஜெபம் மற்றும் பதிலுரைகளை ஆங்கிலம்,சீனம் மற்றும் தமிழில் ஆலய சுவற்றில் Power Point Slides வடிவத்தில் ஒளிபரப்புகின்றனர்.

ஆகவே வழிபாட்டில் கலந்துக்கொள்ளும் அனைவரும் தங்கள், தங்கள் மொழியிலேயே ஜெபிக்க முடிகிறது.

அதுபோலத்தான் பாடகர் குழுக்களூம்.

கடந்த வருடம் கிறீஸ்துமஸ் திருவிழா அன்று என்னுடைய மகள் சார்ந்திருந்த பங்கு தேவாலயத்திற்குச் செல்லாமல் சற்றே தள்ளியிருந்த திருக்குடும்ப தேவாலயத்தில் நடைபெற்ற தமிழ் திருப்பலிக்குச் சென்றிருந்தேன்.

ஒரு தமிழக தேவாலயத்திற்குள் நுழைந்ததுபோன்ற ஒரு பிரமையை ஏற்படுத்தியது அங்கு குழுமியிருந்த மலேசிய வாழ் தமிழ் கத்தோலிக்கர்களின் கூட்டம்.

தமிழக தேவாலயங்களிலும் நான் அத்தகைய பாடகர் குழுவைப் பார்த்ததில்லை என்றால் மிகையாகாது. சுமார் இருபது பாடகர்களைக் கொண்ட (பெரும்பாலும் பள்ளி, கல்லூரி மாணவியர்) குழு ஆர்மோனியம், தபேலா, வயலின் போன்ற பாரம்பரிய இசைக்கருவிகளுடன் பாடல்களைப் பாடி பரவசப்படுத்தினர்.

என் கவனத்தை ஈர்த்த இன்னொன்று அங்குள்ள குருமார்கள் வழிபாட்டை நடத்திய விதம். சரியான நேரத்தில் வழிபாட்டைத் துவங்குவது, சிறிய கச்சிதமான பிரசங்கம் (பத்து நிமிடத்திற்கு மேல் செல்லவில்லை)பங்கைச்சார்ந்த மூத்த பக்தர்களையும் (Laymen) திவ்விய நற்கருணையை வழங்குவதற்கு அனுமதிப்பது போன்றவை.

விளைவு? மொத்த வழிபாடும் வாரநாட்களில் அரை மணி நேரத்திலும் ஞாயிற்றுக்கிழமைகள் 45 முதல் 60 நிமிடங்களிலும் திருவிழா காலங்களில் அதிகபட்சம் 75 நிமிடங்களுக்குள்ளும் முடிந்துவிடுகிறது.

இதனால் இங்கு நடைபெறுவது போன்று திவ்விய நற்கருணையோடு முடித்துக்கொண்டு யாரும் தேவாலயத்தை விட்டு வெளியேறிடுவதில்லை. இறுதி ஆசீர் வரை மட்டுமல்லாமல் நன்றி கீதத்திலும் அனைவரும் பங்கு பெறுகின்றனர்.

நம்முடைய தேவாலயங்களிலும் இத்தகைய முறை வருமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

5 comments:

.:: மை ஃபிரண்ட் ::. said...

me the first...

ரொம்ப நாளா ஆளை காணோம்? மலேசியாவிலிருந்து இப்போதான் வந்தீங்களா? :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

ம்ம்.. நீங்க சொன்ன இந்த விஷயத்தை ஏற்கனவே என் கிருஸ்துவ நண்பர்கள் சொல்லியிருக்காங்க. நானும் ஒரு தடவை கலந்திருக்கிறேன். இங்கே தேவாலயத்துக்கோ கோவிலுக்கு போகும்போது மதம் முக்கியமில்லை. எல்லாரும் எல்லா வழிப்பாட்டு தலத்துக்கும் போகலாம்.. :-)

டி.பி.ஆர் said...

ரொம்ப நாளா ஆளை காணோம்? மலேசியாவிலிருந்து இப்போதான் வந்தீங்களா? :-)//

ஒரு வாரம் ஆகிறது. ஆனால் திரும்பிய மறுநாளே மதறாஸ் ஐ (Conjectvitis) என்கிற கண் நோய் பிடித்து ஒரு வாரம் ஆகியும் இன்னும் சரியாகவில்லை.

செய்தித்தாளைக் கூட வாசிக்க முடியாதபோது வலைத்தளத்திற்கு எப்படி வருவது? இன்றுதான் அலுவலகம் வந்தேன்.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

ஜோ / Joe said...

ஜோசப் சார்,
சிங்கை வருவீர்கள் என எதிர்பார்த்தேன் .வசதி அமையவில்லை என நினைக்கிறேன்.

கத்தோலிக்க ஆலய வழிபாடு பற்றி நீங்கள் எழுதியிருப்பது முற்றிலும் உண்மை ..சிங்கப்பூரிலும் அச்சு அசல் இது போலவே என சொல்லத் தேவையில்லை .

பொதுவாக நம்மவர்களை விட சீனர்கள் மிகவும் இயல்பாகவும் பக்தியாகவும் வழிபாட்டில் கலந்து கொள்வார்கள் என்பது என் பார்வை ..நம்மவரில் பலர் தங்கள் ஆடை அலங்காரங்களை , ஒப்பனைகளை பிறர் பார்க்க ஒரு வாய்ப்பாகவே கோவிலுக்கு வரும் போது சீனர்கள் மிக இயல்பாக உள்ளார்ந்த ஈடுபாட்டோடு பலந்து கொள்வதாக எனக்கு பட்டது .

டி.பி.ஆர் said...

வாங்க ஜோ,

ஜோசப் சார்,
சிங்கை வருவீர்கள் என எதிர்பார்த்தேன் .வசதி அமையவில்லை என நினைக்கிறேன்.//

நான் நினைத்திருந்த அளவு விடுமுறை கிடைக்காமல் போனதுதான் காரணம். ஒரு வாரம் மட்டுமே அங்கு இருக்க முடிந்தது. அதில் சனியும், ஞாயிறும் விசேஷங்கள் நடைபெற எங்கும் செல்ல இயலாமல் போனது.

..சிங்கப்பூரிலும் அச்சு அசல் இது போலவே என சொல்லத் தேவையில்லை .//

அப்படியா? கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது.

பொதுவாக நம்மவர்களை விட சீனர்கள் மிகவும் இயல்பாகவும் பக்தியாகவும் வழிபாட்டில் கலந்து கொள்வார்கள் என்பது என் பார்வை ..//

மிகச்சரியாக கணித்துள்ளீர்காள். எனக்கும் அப்படித்தான் பட்டது. சமாதானத்தை அவர்கள் மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொள்ளும் அழகே அழகு. நாம்தான் கவுரவம் என்ற கவசத்தை ஆலயத்திற்குள்ளும் கொண்டு செல்கிறோமோ என தோன்றுகிறது.

Post a Comment