Friday, September 28, 2007

அரசியலும் ஆன்மீகமும்

Bowler should bowl, batsman should bat என்பார்கள். இரண்டிலும் வல்லவரானாலும் மட்டை பிடிக்க வேண்டிய நேரத்தில் பந்து எரிபவரைப் போல் ஓடிவந்து கையிலுள்ளதை வீசினால் என்னாவது!

அதுபோலத்தான் அரசியலும் ஆன்மீகமும்.

ஆன்மீகவாத அரசியல் பேசுவது எவ்வளவு தவறோ அதுபோலத்தான் அரசியல்வாதி ஆன்மீகம் பேசுவதும்.

ஆட்சியில் இருந்தாலும் ஆட்சிக்கு வெளியில் இருந்தாலும் அரசியல்வாதி அரசியல்வாதிதான், மறுப்பதற்கில்லை. ஆனால் ஆட்சிக்கு வெளியில் இருக்கும் சமயங்களில் பேசுகிற அதே தோரணையில் (பொறுப்பற்ற முறையில் என்று சொன்னால் சற்று அதிகபட்சமாகிவிடும்) ஆட்சியில் இருக்கும் சமயத்திலும் பேசினால்? பிரச்சினைதான். அதிலும் மதம் அல்லது இறைநம்பிக்கையைப் பற்றி பேசும்போது...

எதிரணியில் இருக்கும் அரசியல்வாதி ஆட்சியாளரை குறைகூற ஆன்மீகம் என்ன எதை வேண்டுமானாலும் கையில் எடுத்துக்கொள்வது சகஜம்தான். அவர் ஆட்சியில் இருந்தபோது எடுக்கப்பட்ட முடிவுகளையே ஆட்சியை இழந்த பிறகு வேறொருவர் செயல்படுத்த முனையும்போது அதை எப்படியாவது தடுத்து நிறுத்த முனைவதும் ஒன்றும் புதிதல்ல.

அதைத்தான் இன்று எதிரணியில் அமர்ந்திருக்கும் பா.ஜ.கவும் அ.இ.அ.தி.மு.கவும் செய்கின்றன. அந்த வகையில் அவர்களுக்கு இப்போது ஆயுதமாக பயன்படுவது ஆன்மீகம். அது வலுவிழந்து போகின்ற சூழலில் வேறெதையாவது கையில் எடுத்துக்கொள்ளவும் தயங்க மாட்டார்கள். ஆட்சியை மீண்டும் பிடிக்க வேண்டும். அவ்வளவுதான். அதற்கு அயோத்தி ராமரானாலும் ராமேஸ்வரம் ராமரானாலும் ஒன்றுதான். காலத்திற்கேற்ப, சந்தர்ப்பத்திற்கேற்ப எடுத்துக்கொள்ளப்படும் கருவியும் கருத்தும் மாறிக்கொண்டே போகும்.

இதுபோலத்தான் கூட்டணிகளும். காங்கிரஸ் ஆட்சியை பதவியிழக்க செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மதசார்பற்ற ஜனதா தளம் மதவாத பா.ஜ.கவுடன் இணைந்து ஆட்சியை பகிர்ந்துக்கொள்ளவில்லையா? இதெல்லாம் இந்தியா போன்றதொரு நாட்டில் மிகவும் சகஜமப்பா என்கிற நிலைதான் இன்று!

மதம், இறை நம்பிக்கை என்பது அதில் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு மட்டும்தான் புனிதமானது. இறைவனில் நம்பிக்கையில்லை என்று கூறுபவர்களிடம் அதையெல்லாம் எதிர்பார்ப்பதே முட்டாள்தனம். நான் இறை நம்பிக்கையில் நம்பிக்கை வைத்திருக்கிறேனா என்பதைப் பற்றி யாருக்கும் கவலையில்லை. அது என்னுடைய சொந்த விஷயம். ஆனால் பிறருடைய நம்பிக்கையை குறைத்துக் கூறுவதற்கோ அல்லது எள்ளி நகையாடுவதற்கோ எனக்கு உரிமையில்லை. அது என்னுடைய சொந்த கருத்து என்று ஒரு பொறுப்பான பதவியிலிருந்துக்கொண்டு நான் கூறினால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அரசியல்வாதியானாலும் சரி ஆன்மீகவாதியானாலும் சரி, அவர்கள் சொல்வதற்கெல்லாம் ஜால்ரா அடிப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கும். அவர்கள் முழுநேர அரசியல்வாதிகளாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. அந்த கூட்டத்தில் பத்திரிகையாளர்களும் இருக்கலாம் உயர் பதவியில் உள்ளவர்களும் இருக்கலாம். அவரவர் தேவைக்கேற்ப அதை வளைத்து, உருமாற்றி அர்த்தம் கொள்வது வழக்கமாகிப் போன ஒன்று.

இன்று மு.க அவர்கள் கூறியதை சரி என்று சொல்ல ஒரு கூட்டம் இருப்பது போல் வேதாந்தி சொல்வதிலும் தவறில்லை என்று சொல்லவும் ஒரு கூட்டம் இல்லையா?

இந்த இரண்டு கூட்டங்களுமே தங்களுக்கு பொதுவான எதிரியை தாக்க நாளைக்கு ஒன்று சேர்ந்துக்கொண்டாலும் வியப்பதற்கில்லை.

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்கிற நிலை நாளை ஆன்மீகத்திலும் இதெல்லாம் சகஜமப்பா என்கிற நிலை வந்தாலும் வரும்.. யார் கண்டது!!

8 comments:

?????????? said...

வலைபதிவுகளிலும் வேதாந்தியை நேரடியாக ஆதரிக்க பயந்து சுற்றி வளைத்து அன்புடன் நண்பர்கள் எழுதறதில்லயா?

கோவி.கண்ணன் said...

ஜோசப் ஐயா,
பின்னூட்டம் போடலாம் என்று எழுதினேன். நீளமாக போனதால் தனி இடுகை

tbr.joseph said...

வேதாந்தியை நேரடியாக ஆதரிக்க பயந்து சுற்றி வளைத்து அன்புடன் நண்பர்கள் எழுதறதில்லயா?//

உண்மைதான். எந்த ஒரு கருத்துக்கும் மாற்று கருத்து இருப்பது சகஜம்தானே.

tbr.joseph said...

வாங்க கண்ணன்,

உங்கள் பதில் இடுகையில் என்னுடைய எண்ணத்தை பதிந்துள்ளேன்.

G.Ragavan said...

ஜோசப் சார்....அந்த நெலமை வந்தாச்சு...மதங்கள்ள இதெல்லாம் சாதாரணமப்பா! உண்மைதாங்க. இந்தியால மட்டுமில்ல...பெரும்பாலும் ஊரூருக்கு அப்படித்தான் இருக்கு.

பதவீல இருக்குறவங்க இல்லாதவங்கன்னு எல்லாருக்கும் ஒளறிக் கொட்டும் சுதந்திரம் இந்தியாவில் மட்டுமே இருக்கிறது.

எனக்கு என்ன தோணுதுன்னா அமைதி என்பது மாயை. அது முன்பும் இருந்ததில்லை. இப்பொழுதும் இல்லை. நாளையும் இருக்கப் போவதில்லை. சண்டையும் சச்சரவும் போர்களும் சிந்தும் குருதியும் எப்பொழுதும் நடந்து கொண்டேயிருக்கும். மனிதன் இறுதிவரை மனிதாகவே வாழப் போவதில்லை. ஒரு சிலர் மனிதனாக வாழ்ந்தார்கள். வாழ்கிறார்கள். வாழுவார்கள். ஆனால் அவர்கள் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.

கோவி.கண்ணன் said...

ஜோசப் ஐயா,

உங்கள் கருத்தை மறுக்கும் நோக்கில் நான் எழுதவில்லை.

//ஆன்மீகவாத அரசியல் பேசுவது எவ்வளவு தவறோ அதுபோலத்தான் அரசியல்வாதி ஆன்மீகம் பேசுவதும்.//

இந்த வரிதான் காரணம். மேற்சொன்ன வரிகள் மதங்கள் தோன்றி வளர்ந்தகாலங்கள் முதல் ... இன்று இதற்கும் மேல் பரிணமிக்க முடியாது என்று இருக்கும் இன்றைய காலம் வரை அந்த வரிகள் நடைமுறையில் இருந்ததே இல்லை.

திபெத்தின் அடுத்த தலாய்லாமா யார் ? சீன அரசாங்கம் தீர்மாணிக்கிறது.. இதுபோன்றே பல ஆன்மிக தலைவர்கள் அடுத்த நாட்டை ஆளப்போகும் அரசியல் தலைவர் யார் ? என்பதை தீர்மானிக்கிறார்கள்.

நான் இறைநம்பிக்கை உள்ளவர்களை குறித்து அந்த இடுகை எழுதவில்லை என்பதை புரிந்தி கொண்டிருப்பீர்கள் என்றே நினைக்கிறேன்.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

பதவீல இருக்குறவங்க இல்லாதவங்கன்னு எல்லாருக்கும் ஒளறிக் கொட்டும் சுதந்திரம் இந்தியாவில் மட்டுமே இருக்கிறது.//

நூத்துல ஒரு வார்த்தைங்க. ஒளர்றதுக்கு ஒரு வரைமுறையே இல்லாம போய்க்கிட்டிருக்கு.

முதல்ல 'அவர்' இருந்ததுக்கு சரித்திர சான்றே இல்லைன்னு சொன்னவர் இப்ப 'அவர்' குடிச்சார், மாம்சம் சாப்ட்டார்னு சொல்றார். என்ன கூத்தோ போங்க:-)

tbr.joseph said...

//உங்கள் கருத்தை மறுக்கும் நோக்கில் நான் எழுதவில்லை.//


நானும் அப்படி நினைக்கவில்லை கண்ணன்.

இதுபோன்றே பல ஆன்மிக தலைவர்கள் அடுத்த நாட்டை ஆளப்போகும் அரசியல் தலைவர் யார் ? என்பதை தீர்மானிக்கிறார்கள்.//

இதில் தவறேதும் இல்லைங்க. ஆனால் அது ஒரு பொது நன்மைக்காக இருக்கும் வரைக்கும் சரி. ஆனா. தங்களுக்கு தேவைப்படும்போதெல்லாம் ஆன்மீகம் பேசுவது. தேவைகள் நிறைவேறியதும் அதை கிடப்பில் போடுவது போன்ற அத்வானி, ஜெ.லலிதாவின் போக்கும் தங்களுடைய எண்ணத்திற்கு இடையூறாக வருகிறதே என்பதற்காக கடவுளை எள்ளி நகையாடுகிற மு.க. மற்றும் எதிர்கட்சிகளின் போக்கும் சரியில்லை என்பதுதான் என்னுடைய கருத்து.

Post a Comment