Friday, September 14, 2007

தரம் இறங்குவது சரியா?

கடந்த வாரத்தில் ஒரு நாள் அலுவலக விஷயமாக சென்னை டைடல் பார்க் வரை செல்ல வேண்டியிருந்தது.

சாதாரணமாக அலுவலக அலுவல் நிமித்தம் வெளியில் செல்லும் சமயங்களில் என்னுடைய வாகனத்தில் செல்வதில்லை. அதற்கென வங்கி நியமித்திருக்கும் டிராவல் நிறுவனத்திலிருந்து அமர்த்தப்பட்ட வாகனத்தில் செல்வது வழக்கம்.

போக்குவரத்து குறைந்திருக்கும் நேரங்களிலேயே (non peak hours) அடையாறு மத்திய கைலாஷ் சந்திப்பில் வாகனங்கள் நிறம்பி வழிவதுண்டு. காலை நேரத்தில் கேட்கவே வேண்டாம். அந்த சந்திப்பிலிருந்து வலப்புறம் திரும்பும் (It corridor) வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது.

அன்றும் அப்படித்தான். என்னுடைய வாகனம் சந்திப்பை நெருங்கவும் சிவப்பு விளக்கு விழவும் சரியாக இருந்தது. அதற்கு முன் எப்படியாவது சந்திப்பைக் கடந்துவிடவேண்டுமென்ற எண்ணத்துடன் வேகமாய் சென்ற என்னுடைய ஓட்டுனர் எத்தனை முயன்றும் அவருக்கு முன்பு சென்றுக் கொண்டிருந்த வாகனத்தின் மீது தொடாமால் நிறுத்த முடியவில்லை.

என்னுடைய வாகனத்தின் முகப்பு பம்ப்பர் அவருடைய வாகனத்தை 'தொட்டது' என்றுதான் சொல்ல வேண்டும். நிச்சயம் 'இடிக்க'வில்லை.

ஆனால் அவருக்கு வந்ததே கோபம். வாகனத்தை என்னுடைய வாகனத்திற்கு குறுக்கே நிறுத்திவிட்டு (அதாவது வழிமறித்துவிட்டு) இறங்கி வந்து என்னுடைய ஓட்டுனரின் கதவைத் திறந்து சரமாரியாக வசைமாரி பொழிந்து தள்ளிவிட்டார். அதாவது எழுத்தில் வடிக்க முடியாத வார்த்தைகளால்.

என்னுடைய ஓட்டுனர் மட்டும் சளைத்தவரா என்ன? அவரும் வாகனத்திலிருந்து இறங்கி பதிலுக்கு வார்த்தை விளையாட்டில் இறங்கினார். அக்கம் பக்கத்து வாகன ஓட்டுனர்கள் காதுகளைப் பொத்திக்கொள்ளும் அளவுக்கு.

சிறிது நேரம் பொறுத்துப் பார்த்தேன். நின்றபாடில்லை.

வேறு வழியின்றி இறங்கி அந்த இளைஞரைப் பார்த்தேன். கழுத்தில் தொங்கிய ஐ.டி கார்டிலிருந்தே அவரும் டைடல் பார்க்கிலிருந்த மிகப் பெரிய ஐ.டி நிறுவனத்தில்தான் பணியாற்றுகிறார் என்பது தெரியவந்தது. நிச்சயம் பொறியாளர். பார்ப்பதற்கு படு ஸ்மார்ட்டாக இருந்தார்.

நான் அவரிடம், 'என்ன தம்பி நீங்க. பாக்கறதுக்கு ஸ்மார்ட்டா ஒரு எக்ஸ்க்யூட்டிவ் மாதிரி இருக்கீங்க, நீங்களும் இவர் லெவலுக்கு இறங்கி வந்து பேசறீங்களே, ரிலாக்ஸ்.' என்றேன்.

சட்டென்று அவருடைய முகமே மாறிப்போனது. அக்கம்பக்கத்து வாகனங்களில் அமர்ந்திருந்த பெரும்பாலோனோர் அந்த இளைஞரைப் போன்றவர்கள்தான். அவர்களும் முகம் சுளிக்கும் அளவுக்கு அவர் பேசியிருந்ததை அவர் உணர்ந்திருப்பார் போலிருந்தது. சட்டென்று சென்று தன்னுடைய வாகனத்தை விலக்கிக் கொண்டார். அடுத்த நொடியே சிவப்பு விளக்கு பச்சையாக மாற புறப்பட்டுச் சென்றார்.

ஆனால் என்னுடைய வாகன ஓட்டிக்கு என் மீது வருத்தம். 'என்ன சார் என்னுடைய லெவல்லுன்னு சொல்லி என்னையும் மட்டம் தட்டிட்டீங்களே. அவன் அப்படி பேசறப்போ நா எப்படி சார் பேசாம இருக்கறது?' என்றார் வருத்தத்துடன்.

நான் புன்னகையுடன், 'நீங்க எதுவரைக்கும் படிச்சிருக்கீங்க தம்பி?' என்றேன்.

'எட்டாம் க்ளாஸ் சார். ஆனா அதுக்கும் இதுக்கும் என்ன சார் சம்பந்தம்?'

'இருக்கு தம்பி. படிக்கற படிப்புதான் நமக்கு ஒரு அந்தஸ்த்த ஏற்படுத்தி குடுக்குது, இல்லையா?'

நான் சொல்ல வந்தது புரிந்திருக்க வேண்டும். அவர் பதில் பேசாமல் இருந்தார்.

'அவர் நிச்சயம் எஞ்சினியரிங் படிச்சிருக்கணும். நல்ல அந்தஸ்த்துல இருக்கார். அதனால அப்படி சொன்னேன். உங்கள மட்டம் தட்டணும்னு இல்லை. ஆனா அதுக்காக உங்கள மாதிரி ஆளுங்களும் இந்த மாதிரி தரக்குறைவான பேச்சு பேசணும்னு இல்லை. சரிதானே?'

அவர் உடனே, 'நீங்க சொல்றது சரிதான் சார். மன்னிச்சிருங்க.' என்றார்.

ஒருவர் நம்மை தரக்குறைவாக பேசினார் என்பதற்காக நாமும் அதே பாணியில் பேசவோ, எழுதவோ செய்தால் பிறகு நமக்கும் அவருக்கும் என்ன வித்தியாசம்?

சிந்திக்க வேண்டிய விஷயம்...

5 comments:

செந்தழல் ரவி said...

அப்போ என்ன தான் சார் செய்யசொல்றீங்க ?

///ஒருவர் நம்மை தரக்குறைவாக பேசினார் என்பதற்காக நாமும் அதே பாணியில் பேசவோ, எழுதவோ செய்தால் பிறகு நமக்கும் அவருக்கும் என்ன வித்தியாசம்?///

ரவுத்திரம் பழகுன்னாரு பாரதியாரு...மொக்கையாவே எவ்ளோ நாளைக்கு குந்தினுகீறது ? தலையில மொளகா, மல்லின்னு அரைச்சுட்டு பூட மாட்டாங்களா ??

நாமக்கல் சிபி said...

//சிந்திக்க வேண்டிய விஷயம்...//

ரிப்பீட்டேய்!

SurveySan said...

Very valid point!

tbr.joseph said...

வாங்க ரவி,

ரவுத்திரம் பழகுன்னாரு பாரதியாரு...மொக்கையாவே எவ்ளோ நாளைக்கு குந்தினுகீறது ? தலையில மொளகா, மல்லின்னு அரைச்சுட்டு பூட மாட்டாங்களா ??//

உங்களுடைய ஆதங்கம் நியாயமானதுதான் ரவி. மறுப்பதற்கில்லை. ஆனால் நம் எதிரியின் இழிநிலைக்கு நாமும் இறங்க வேண்டுமா என்பதுதான் கேள்வி. உங்களுடைய கருத்தை எடுத்து வைப்பதில் தவறேதும் இல்லை. ஆனால் அதை உங்களுடைய லெவலில் இருந்து இறங்காமால் செய்ய முடியுமே.

tbr.joseph said...

நன்றி சிபி, சர்வேசன்

Post a Comment