Saturday, February 10, 2007

நான் ஒரு அசைவம்!

'நான் சைவம், அசைவம் என்பது நான் உண்ணும் உணவை மட்டுமே பொருத்ததல்ல. நம்முடைய வாயிலிருந்து வரும் வார்த்தைகளையும்தான்.'

'நீங்கள் உண்ணும் உணவு உங்களுடைய இதயத்தை மாசுபடுத்துவதில்லை. அது நேரடியாக வயிற்றிற்குச் சென்று ஜீரணிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு விடுகிறது. மாறாக உங்களுடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு சொல்லுமே உங்களை யாரென்று காட்டுகின்றது' என்கிறது பைபிள்.

நம் வாயிலிருந்து வார்த்தைகள் நம் உள்ளத்தில் உதிக்கும் எண்ணங்களிலிருந்தே பிறக்கின்றன. நம்முடைய எண்ணங்கள் நல்லவையாக இருக்குமானால் நம்முடைய வார்த்தையும் சுத்தமானதாக இருக்கும். நம் செயல்களும் அப்படியே.

நல்ல எண்ணங்கள் உதிக்கும் அதே உள்ளத்திலிருந்தே காமம், களவு, பொறாமை, அகங்காரம் போன்ற தீய எண்ணங்களும் உதிக்கின்றன.

தீய எண்ணங்கள் உதிக்கும் உள்ளம் வாயிலிருந்து உதிரும் வார்த்தைகளையும் தீயதாக்குகின்றன என்பது மறுக்கவியலாத உண்மை.

நல்லவற்றையே நினைக்கும் உள்ளம் இவ்வுலகில் காணும் அனைத்தையும் நல்ல கண்ணோட்டத்துடனே பார்க்கின்றன.

மாறாக தீயவன் கண்ணுக்கு தென்படுவதெல்லாமே தீயதாகவே தென்படுகின்றன.

இறைவனின் படைப்புகளில் உன்னதமானது மனிதன்!

அவனுடைய பயன்பாட்டுக்கென்றே படைக்கப்பட்டவைதான் மற்ற படைப்புகள் அனைத்துமே.

எதை உண்பது எதை உண்ணலாகாது என்பதெல்லாம் மனிதனாகவே வரித்துக்கொண்டதுதான்.

ஆகவே இவற்றை உண்பவன் மட்டுமே நல்லவன் மற்றவரெல்லாம் தீயவர்கள் அல்லது மற்றவர்களைவிட தரம் தாழ்ந்தவர்கள் என்பதில்லை.

தெய்வப் புலவர் 'புலால் மறுத்தல்' என்னும் அதிகாரத்தின் கீழ் அளித்துள்ள கீழ்காணும் குறள்களை வாசித்தால் புலால் (மாமிசம்) உண்பவன் இரக்கமற்றவன், அருளுடையவனாகும் தகுதியற்றவன் என்பதுபோன்ற தோற்றமளிக்கிறது.

"தன்ஊண் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்"

தன் உடலைப் பெரிதாய் வளர்ப்பதற்காகத் தான் பிறிதோர் உயிரின் தசையைத் தின்கின்றவன் எவ்வாறு இரக்கமுள்ளவனாக இருக்க முடியும்?

"பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருள்ஆட்சி
ஆங்கில்லை ஊந்தின் பவர்க்கு"

பொருளுடையவராக இருக்கும் தகுதி அப்பொருளைக் காப்பாற்றாதவருக்கு இல்லை. அவ்வாறே அருள் உடையவராகும் தகுதி ஊனைத் தின்பவருக்கு இல்லை.

ஆனால் அதைத்தான் அவர் கூற விழைந்தாரா என்பது சந்தேகமே.

*********

2 comments:

வினையூக்கி said...

//நல்ல எண்ணங்கள் உதிக்கும் அதே உள்ளத்திலிருந்தே காமம், களவு, பொறாமை, அகங்காரம் போன்ற தீய எண்ணங்களும் உதிக்கின்றன.
//
சார், இதில் காமம் தீய எண்ணம் எனக்குறிப்பிடப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அது ஒரு இயற்பான எண்ணம்தானே.

"தகாத காம எண்ணங்கள்" வேண்டுமெனில் தவறாக இருக்கலாம்.

புலால்மறுத்தல் அதிகாரத்தை அந்தக்கால கட்ட நிகழ்வுகளை வைத்து எழுதி இருக்கலாம். மேலும் இயற்கை உணவுகள் மிகுதியாக கிடைக்கும்போது எதற்கு புலால் உணவு எனக் கருதி இருக்கலாம். புத்த/சமண மத தாக்கமாகக்கூட இருக்கலாம்

Xavier said...

வாழ்த்துக்கள் சார்.

http://xavi.wordpress.com

Post a Comment