Wednesday, February 21, 2007

சாகரனின் மரணம்.. ஒரு ஃப்ளாஷ்பேக்...

12.02.2007

முந்தைய சனியன்று சென்னையில் நடந்து முடிந்திருந்த முத்தமிழ்மன்ற வலைஞர்களின் முதல் கூட்டத்தின் புகைப்படங்களுடனான செய்தியை வாசிக்கும் ஆவலுடன் மன்றத்தில் நுழைகிறேன்.

முகப்பு பக்கத்திலேயே 'மன்றத்தின் மாமனிதர் சாகரனுக்கு கண்ணீர் அஞ்சலி' என்று கருப்பு வெள்ளை பேனர் வரவேற்கிறது.

யாரிந்த சாகரன்? இரண்டாண்டு காலமாக வலைஞராக இருந்த நான் கேட்டிராத பெயராயிற்றே என்று மருகுகிறேன்.

சில நிமிடங்களில் நண்பர் மூர்த்தி அவர்களின் பதிவு.

ரியாத் தமிழ் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், எழுத்துக் கூடத்தின் ஒருங்கிணைப்பாளருமான சாகரன் என்கிற திரு. கல்யாண் அவர்கள் மாரடைப்பால் காலமானார். அவருடைய உடல் ஒபய்த் மருத்துவமனையில் தற்சமயம் வைக்கப்பட்டுள்ளது. முத்தமிழ் மன்றத்தின் அஸ்திவாரமாகவும், அதன் தூண்களில் ஒருவராகவும் இருந்தவர் என்கிறது அந்த பதிவு.

பிறகு தமிழ்மண நிர்வாகத்தின் பதிவு, மதி அவர்களின் பதிவு.. அதனைத் தொடர்ந்து துளசி துவங்கி பல வலைஞர்களின் பதிவுகள் அதனை உறுதிப்படுத்துகின்றன..

முத்தமிழ் மன்றம் சாகரன் அவர்களின் மரண அஞ்சலியைத் தவிர வேறெந்த பதிவும் தற்சமயம் இடவேண்டாம் என்று தன்னுடைய உறுப்பினர்களைக் கோருகிறது.

மன்றத்தின் இளம் கவிஞர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு சாகரனுக்கு கவியஞ்சலியை செலுத்துகின்றனர்.
.
சாகரன் எங்கள் மன்றத் தூண்
சாக வயதில்லா எங்கள் தோழனை
வேகமாய் காலன் இடித்த தூண்
ஆகமம் அடுக்கா பழி இதுகாண்

அஞ்சலி செய்யும் வயதா உனக்கு?
நெஞ்சு பொறுக்கு தில்லையே மனம்
மிஞ்சும் எதிர் காலம் யாதென்றே
நஞ்சு அருந்திய உடலாய் பதறுதே

மன்றத்தின் தெய்வமாய் உயர்ந்திட்ட சாகரன்
தென்றலாய் நண்பர் மனமதில் உறையட்டும்
இன்றுநாம் சூளுரைப்போம் உயிர் கொடுத்தும்
என்றும் இம்மாமன்ற மாறாப்புகழ் காக்க.

என்கிறார் மன்றத்தின் வழிநடத்துனர்களில் ஒருவரான நண்பர் ரத்தினகிரி..

முகம் பாராது
இதயத்தால் இணைந்து நின்றோம்
பேசாமல் பேசப்படுவது கண்டேன்
இன்று பேசாமல் இருக்கிறாயே?

அஜீவன்..

இன்னும் பலர்..

அரைகுறைத் தமிழில் கட்டுரையும் கதையும் எழுதப்பழகியிருந்த எனக்கு கவிதை வராமல் சண்டித்தனம் செய்கிறது..

நண்பர் பாலராஜன் கீதா தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டு கேள்விப்பட்டீர்களா என்கிறார். கேள்விப்பட்டேன்.. காலையிலிருந்து அவர் புகழ் பாடி வராத பதிவுகள் இல்லையே ஆனால் எனக்குத்தான் அவரை பரிச்சயமில்லாமல் போய்விட்டது என்றுவிட்டு அவரைப் பற்றி சற்று சொல்லுங்களேன் என்கிறேன்..

நானும் அவரும் ஆரம்பகாலத்தில் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்தோம். பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். தேன்கூடு திரட்டியைத் துவக்கியவர். அத்துடன் நண்பர்கள் பலருக்கும் இணையதளங்களைத் துவக்குவதில் இலவசமாக துணைபுரிந்தவர்.. அடுக்கிக் கொண்டே போகிறார்.

வாழுங்காலத்தில் அவருடன் பழக முடியாமற்போனதற்கு பிராயச்சித்தமாக அவருடைய இறுதிச்சடங்கில் பங்குகொள்ள வேண்டும் என்ற முடிவுடன் மன்றத்தில் என் பரிந்துரையை வைக்கிறேன். ஈராயிரம் அளவே உறுப்பினர்கள் கொண்டுள்ள மன்றத்தில் என் கருத்தொத்த நண்பர்கள் உடனே அதனை ஏற்றுக்கொள்கின்றனர்.

முந்தைய சனியன்று நடந்த கூட்டத்தில் பங்குபெற்ற சென்னைவாழ் உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் யாரெல்லாம் முடியுமோ அவர்கள் ஒரு குழுவினராக இறுதிச்சடங்கில் பங்குபெற்று மன்றத்தின் சார்பில் ஒரு மலர் வளையம் வைப்பதென முடிவெடுக்கப்படுகிறது.

நண்பர்கள் பாலராஜன் கீதா, மூர்த்தி இருவரும் தொடர்ந்து சாகரனின் இறுதிச்சடங்கைப் பற்றிய செய்தியை அளித்தவண்ணம் இருக்கின்றனர்.

இத்தனை நல்ல உள்ளம் கொண்ட நண்பர்கள் ரியாத்தில் இருந்தும் வழமையான ரெட் டேப்பிசம் திங்களன்று மரித்தவரை சனியன்றுதான் சென்னைக்கு அனுப்பிவைக்க முடிகிறது. இதுதான் எங்களுடைய அவலம் என்று எழுதுகின்றனர் அயல்நாட்டில் வாழும் பல நண்பர்கள்..

சனியன்று..

முன்னமே சொல்லி வைத்திருந்த மலர் வளையத்துடன் சரியாக பிற்பகல் 1.30 மணிக்கு என்னுடைய அலுவலகத்திலிருந்து கிளம்புகிறேன்..

வீட்டு வாசலில் கவலை தேங்கிய முகங்களுடன் எல்லோரும் ஒரே திசையை நோக்கி நிற்பதைக் காண்கிறேன். எனக்கு முன்பாகவே வந்திருந்த மன்ற நண்பர் சுதாகரைப் பார்க்கிறேன். முதல் முறையக சந்தித்தும் அதன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துக்கொள்ள இயலாத சூழல்.. அழுகுரல் இல்லாத நிச்சலனமான சூழலைப் பார்த்து அருகிலிருந்தவர் ஒருவரை அணுகி இன்னும் 'பாடி வரலையா சார்' என்கிறேன்.. 'ஏர்போர்ட்லருந்து புறப்பட்டாச்சாம் சார்.. வர்ற நேரம்தான்.' காலை 10.40 மணிக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய விமானம்.. யாருக்கும் கவலைப்படாத நடைமுறை தொல்லைகள்.. வீடு வந்து சேர சுமார் மூன்று மணிநேரம்..

நேர்த்தியான மரப்பெட்டியில் சாகரனின் பூத உடல் வந்து இறங்குகிறது..

பெட்டிக்குள்ளே.. சில நெற்மணிகள்... மத்தியில் தலையிலிருந்து கால்வரை வெள்ளைக் கோடித் துணியால் போர்த்தப்பட்டு..

நான்கு நாட்களாக அழுது அழுது பாறையாகிப்போன முகங்களுடன் சொந்தமும் பந்தமும்.. நான்கு பேர் அப்படியே அணைத்து தூக்கி செல்ல மெல்லிதாக, மிக மெல்லிதாக அழுகைக்குரல்கள்..

படித்த படிப்பு நம்முடைய உணர்வுகளைக் கூட நாகரீகமாகத்தான் வெளிப்படுத்த வைக்கிறது!

சொந்தபந்தத்துடன் அக்கம்பக்கத்து பெண்களும் சரசரவென உள்ளே செல்கின்றனர்.. கண்களை துடைத்தவாறு வெளியே வருகின்றனர்..

இதற்குள் மன்ற நண்பர்கள் பலரும் வந்து சேர.. 'மலர் வளையத்த வச்சிரலாம் சார்.. அப்புறம் கூட்டம் சேர்ந்துட்டா கஷ்டமாயிரும்..' என்கிறார் நண்பர் ஒருவர். என்னுடைய வாகனத்திலிருந்து வளையத்தை எடுத்து தயக்கத்துடன் நுழைகிறோம்..

சிறியதொரு கூடத்தில் தரையில் வெள்ளைத் துணியகற்றப்பட்டு.. மன்றப் பதிவுகள் ஒன்றில் வெளியாகியிருந்த புகைப்படத்தில் இருந்ததைவிடவும் இளமையாய்.. தூக்கத்தில் இருப்பதைப் போல..

மலர் வளையத்தை தலைமாட்டில் வைக்கிறோம்.. என்னுடன் வந்திருந்த நண்பர் ஒருவருடைய பாதம் சாகரனின் தலையை எங்கே தொட்டுவிடுமோ என்ற பதற்றத்தில் ஒரு நொடி சாகரனின் இளம் மனைவி ஐயோ என் புருசன் என்பதுபோல் தலையை அணைத்துக்கொள்கிறார்.

என்னையுமறியாமல் கண்கள் கலங்கி குளமாகின்றன. சிறியதாயிருந்த கூடத்தில் கூட்டம் நெருக்குகிறது.. பிரிய மனமில்லாமல் இறுதியாய் ஒரு பார்வை அமைதியாய்போன அந்த முகத்தை.. வெளியேறி வாசலில் நிற்கிறோம்..

யாரோ சொல்கிறார்கள்..'பாப்பாவ கூட்டிக்குட்டு வாங்கோ.. பாத்துரட்டும்..'

சாகரனின் மகளைத்தான்.. பாப்பா அங்கு இல்லை.. இருவர் ஓடிச் சென்று அழைத்துவருகிறார்கள்..

வாகனத்தில் இருந்த மூன்று வயது பெண் குழந்தையை சாகரனின் தங்கை தூக்கி வருகிறார். குழந்தை அடம் பிடித்து இறங்கி முகமெல்லாம் புன்னகையுடன் குதித்தவாறு ஓடி வருகிறது....சுற்றிலும் நின்றிருந்த ஆண்களும் திகைப்பை வெளிக்காட்டாமல் பரிதாபத்துடன் குழந்தையையே பார்த்தவாறு..

அடுத்த சில நிமிடத்தில் வீட்டை விட்டு வெளியே ஓடிவருகிறது.. விளையாடப் போணும்.. என்னெ விடு..

உறவினர்களுள் ஒருவர்.. 'இன்னும் ஒரு மணிநேரத்துல பொறப்பட்டுருவோம்.. சரியா நாலுமணிக்கு அங்க இருப்போம்..' எங்கிருப்போம்..? மயானத்தில் என்பது அவர் சொல்லாமலே புரிகிறது..

வாசலில் வேதியர்கள் (பூசாரிகள்) மந்திரத்தை துவக்குகின்றனர்.. அமைதியாய் ஆர்ப்பட்டமில்லாமல் நான்கு செங்கற்குளுக்குள் தீச்சுவாலை.. மஞ்சள் நிறத்தில்.. சற்றுத் தள்ளி மூங்கில் பாடை தயாராகிறது.. இதாண்டாப்பா வாழ்க்கை.. வாழற நேரத்துல போற வாகனங்கள் எதுவானாலும்.. கடைசியில போறது இதுலதாண்டா என்கிறது..

வேதியர் ஓதும் எதுவும் விளங்கவில்லை..

சாகரன் தமிழுக்கு சேவையாற்றியவராயிற்றே.. இதுவே தமிழில் இருந்திருந்தால்..

எங்களுடைய வீடுகளில் நடக்கும் கூட்டுப் பிரார்த்தனையை நினைவுகூறுகிறேன்.

'எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்..
மரித்த விசுவாசிகளின் ஆத்மா நித்திய சமாதானத்தில் இளைப்பாரக் கடவது..

மரித்த சகோதரனின் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி..
அவரை நித்திய தீச்சூளையில் தள்ளிவிடாதேயும்
உம்முடைய நிழலில் வைத்து நித்தியத்திற்கும் காத்தருளும் சுவாமி

இந்த ஆத்மாவை அமைதியாய் போகவிடும் சுவாமி
அமைதியாய் போகவிடும்..

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி.. எங்கள் பேரில் தயவாயிரும்..'

விடைபெற்றுச் செல்கையில் வாசலிலிருந்து எழுதி வைக்கப்பட்டிருந்த வாசகம் கண்ணில் படுகிறது..

'திரு. கல்யாண்.. பெயரில் வரும் கடிதங்களை மேல் வீட்டில் கொடுக்கவும்..' சாகரனின் சொந்த கையெழுத்தா தெரியவில்லை..

ஆனால் அந்த 'மேல் வீட்டில்' என்ற வார்த்தைகள்.. இப்போது தீர்க்கதரிசனமாய் படுகிறது..

அதுமட்டும் முடிந்தால்.. சாகரனுக்கு அஞ்சலியாய் எத்தனை பதிவுகள்.. எத்தனை கவிதைகள்..

இவையெல்லாவற்றையும் அனுப்பி வைக்க முடியாதா?

9 comments:

நிலா said...

மனதைத் தொட்ட பதிவு
நன்றி

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

நன்றி நிலா..

துளசி கோபால் said...

மனசை (மறுபடியும்) பிழிய வைக்கிற பதிவாப் போச்சுங்க.

அந்தக் குடும்பத்திற்கு சமாதானத்தை அந்த இறைவன் தான் தரணும்.

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க துளசி,

அந்தக் குடும்பத்திற்கு சமாதானத்தை அந்த இறைவன் தான் தரணும். //

ஆமாங்க.. இருவரையும் பார்த்ததும் எனக்கும் அப்படித்தான் தோன்றியது..

அதுவும் புன்னகையுடன் கூடிய அந்த பிஞ்சு முகம்.. மனதை விட்டு நீங்காமல் இன்னமும்...

Seemachu said...

என்ன சொல்றதூன்னே தெரியல.. ஒவ்வொருத்தர் எழுதும் பதிவுகளைப் பார்க்கும்போது அவர் நண்பர்களுடன் எத்தனை நேரம் செலவிட்டிருப்பார் என்று புரிகிறது..
அந்த ஒவ்வொரு மணித்துளியும் அவர் மனைவியுடனும், மகளுடனும், குடும்பத்துடனும் செலவிட்டிருக்க வேண்டியதல்லவா..

நேரடி ரிப்போர்ட்டுக்கு நன்றிகள்!!
அன்புடன்,
சீமாச்சு...

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க சீமாச்சு,

அந்த ஒவ்வொரு மணித்துளியும் அவர் மனைவியுடனும், மகளுடனும், குடும்பத்துடனும் செலவிட்டிருக்க வேண்டியதல்லவா..//

இது ஒரு கோணம். ஆனால் நண்பர்களுடன் செலவிடும் நேரம் தம் மனைவி மக்களுடைய நேரம் என்று சிந்திக்க ஆரம்பித்தால் நம்முடைய வட்டம் சுருங்கிப்போய்விடுமே..

SurveySan said...

மனதை வருத்தியது.

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க சர்வேசன்,

மனதை வருத்தியது. //

ஒரு பார்வையாளராக இருந்த நமக்கே இப்படியென்றால் அவருடைய மனைவியையும் அந்த பால்மணம் மாறா பிஞ்சையும் நினைத்துப் பார்க்கையில்...

John P. Benedict said...

வாசிக்கையில் மனமே உடைந்து நொறுங்குகிறது... இதுதான் வாழ்க்கையா?

Post a Comment