Wednesday, February 21, 2007

சாகரனின் மரணம்.. ஒரு ஃப்ளாஷ்பேக்...

12.02.2007

முந்தைய சனியன்று சென்னையில் நடந்து முடிந்திருந்த முத்தமிழ்மன்ற வலைஞர்களின் முதல் கூட்டத்தின் புகைப்படங்களுடனான செய்தியை வாசிக்கும் ஆவலுடன் மன்றத்தில் நுழைகிறேன்.

முகப்பு பக்கத்திலேயே 'மன்றத்தின் மாமனிதர் சாகரனுக்கு கண்ணீர் அஞ்சலி' என்று கருப்பு வெள்ளை பேனர் வரவேற்கிறது.

யாரிந்த சாகரன்? இரண்டாண்டு காலமாக வலைஞராக இருந்த நான் கேட்டிராத பெயராயிற்றே என்று மருகுகிறேன்.

சில நிமிடங்களில் நண்பர் மூர்த்தி அவர்களின் பதிவு.

ரியாத் தமிழ் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், எழுத்துக் கூடத்தின் ஒருங்கிணைப்பாளருமான சாகரன் என்கிற திரு. கல்யாண் அவர்கள் மாரடைப்பால் காலமானார். அவருடைய உடல் ஒபய்த் மருத்துவமனையில் தற்சமயம் வைக்கப்பட்டுள்ளது. முத்தமிழ் மன்றத்தின் அஸ்திவாரமாகவும், அதன் தூண்களில் ஒருவராகவும் இருந்தவர் என்கிறது அந்த பதிவு.

பிறகு தமிழ்மண நிர்வாகத்தின் பதிவு, மதி அவர்களின் பதிவு.. அதனைத் தொடர்ந்து துளசி துவங்கி பல வலைஞர்களின் பதிவுகள் அதனை உறுதிப்படுத்துகின்றன..

முத்தமிழ் மன்றம் சாகரன் அவர்களின் மரண அஞ்சலியைத் தவிர வேறெந்த பதிவும் தற்சமயம் இடவேண்டாம் என்று தன்னுடைய உறுப்பினர்களைக் கோருகிறது.

மன்றத்தின் இளம் கவிஞர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு சாகரனுக்கு கவியஞ்சலியை செலுத்துகின்றனர்.
.
சாகரன் எங்கள் மன்றத் தூண்
சாக வயதில்லா எங்கள் தோழனை
வேகமாய் காலன் இடித்த தூண்
ஆகமம் அடுக்கா பழி இதுகாண்

அஞ்சலி செய்யும் வயதா உனக்கு?
நெஞ்சு பொறுக்கு தில்லையே மனம்
மிஞ்சும் எதிர் காலம் யாதென்றே
நஞ்சு அருந்திய உடலாய் பதறுதே

மன்றத்தின் தெய்வமாய் உயர்ந்திட்ட சாகரன்
தென்றலாய் நண்பர் மனமதில் உறையட்டும்
இன்றுநாம் சூளுரைப்போம் உயிர் கொடுத்தும்
என்றும் இம்மாமன்ற மாறாப்புகழ் காக்க.

என்கிறார் மன்றத்தின் வழிநடத்துனர்களில் ஒருவரான நண்பர் ரத்தினகிரி..

முகம் பாராது
இதயத்தால் இணைந்து நின்றோம்
பேசாமல் பேசப்படுவது கண்டேன்
இன்று பேசாமல் இருக்கிறாயே?

அஜீவன்..

இன்னும் பலர்..

அரைகுறைத் தமிழில் கட்டுரையும் கதையும் எழுதப்பழகியிருந்த எனக்கு கவிதை வராமல் சண்டித்தனம் செய்கிறது..

நண்பர் பாலராஜன் கீதா தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டு கேள்விப்பட்டீர்களா என்கிறார். கேள்விப்பட்டேன்.. காலையிலிருந்து அவர் புகழ் பாடி வராத பதிவுகள் இல்லையே ஆனால் எனக்குத்தான் அவரை பரிச்சயமில்லாமல் போய்விட்டது என்றுவிட்டு அவரைப் பற்றி சற்று சொல்லுங்களேன் என்கிறேன்..

நானும் அவரும் ஆரம்பகாலத்தில் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்தோம். பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். தேன்கூடு திரட்டியைத் துவக்கியவர். அத்துடன் நண்பர்கள் பலருக்கும் இணையதளங்களைத் துவக்குவதில் இலவசமாக துணைபுரிந்தவர்.. அடுக்கிக் கொண்டே போகிறார்.

வாழுங்காலத்தில் அவருடன் பழக முடியாமற்போனதற்கு பிராயச்சித்தமாக அவருடைய இறுதிச்சடங்கில் பங்குகொள்ள வேண்டும் என்ற முடிவுடன் மன்றத்தில் என் பரிந்துரையை வைக்கிறேன். ஈராயிரம் அளவே உறுப்பினர்கள் கொண்டுள்ள மன்றத்தில் என் கருத்தொத்த நண்பர்கள் உடனே அதனை ஏற்றுக்கொள்கின்றனர்.

முந்தைய சனியன்று நடந்த கூட்டத்தில் பங்குபெற்ற சென்னைவாழ் உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் யாரெல்லாம் முடியுமோ அவர்கள் ஒரு குழுவினராக இறுதிச்சடங்கில் பங்குபெற்று மன்றத்தின் சார்பில் ஒரு மலர் வளையம் வைப்பதென முடிவெடுக்கப்படுகிறது.

நண்பர்கள் பாலராஜன் கீதா, மூர்த்தி இருவரும் தொடர்ந்து சாகரனின் இறுதிச்சடங்கைப் பற்றிய செய்தியை அளித்தவண்ணம் இருக்கின்றனர்.

இத்தனை நல்ல உள்ளம் கொண்ட நண்பர்கள் ரியாத்தில் இருந்தும் வழமையான ரெட் டேப்பிசம் திங்களன்று மரித்தவரை சனியன்றுதான் சென்னைக்கு அனுப்பிவைக்க முடிகிறது. இதுதான் எங்களுடைய அவலம் என்று எழுதுகின்றனர் அயல்நாட்டில் வாழும் பல நண்பர்கள்..

சனியன்று..

முன்னமே சொல்லி வைத்திருந்த மலர் வளையத்துடன் சரியாக பிற்பகல் 1.30 மணிக்கு என்னுடைய அலுவலகத்திலிருந்து கிளம்புகிறேன்..

வீட்டு வாசலில் கவலை தேங்கிய முகங்களுடன் எல்லோரும் ஒரே திசையை நோக்கி நிற்பதைக் காண்கிறேன். எனக்கு முன்பாகவே வந்திருந்த மன்ற நண்பர் சுதாகரைப் பார்க்கிறேன். முதல் முறையக சந்தித்தும் அதன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துக்கொள்ள இயலாத சூழல்.. அழுகுரல் இல்லாத நிச்சலனமான சூழலைப் பார்த்து அருகிலிருந்தவர் ஒருவரை அணுகி இன்னும் 'பாடி வரலையா சார்' என்கிறேன்.. 'ஏர்போர்ட்லருந்து புறப்பட்டாச்சாம் சார்.. வர்ற நேரம்தான்.' காலை 10.40 மணிக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய விமானம்.. யாருக்கும் கவலைப்படாத நடைமுறை தொல்லைகள்.. வீடு வந்து சேர சுமார் மூன்று மணிநேரம்..

நேர்த்தியான மரப்பெட்டியில் சாகரனின் பூத உடல் வந்து இறங்குகிறது..

பெட்டிக்குள்ளே.. சில நெற்மணிகள்... மத்தியில் தலையிலிருந்து கால்வரை வெள்ளைக் கோடித் துணியால் போர்த்தப்பட்டு..

நான்கு நாட்களாக அழுது அழுது பாறையாகிப்போன முகங்களுடன் சொந்தமும் பந்தமும்.. நான்கு பேர் அப்படியே அணைத்து தூக்கி செல்ல மெல்லிதாக, மிக மெல்லிதாக அழுகைக்குரல்கள்..

படித்த படிப்பு நம்முடைய உணர்வுகளைக் கூட நாகரீகமாகத்தான் வெளிப்படுத்த வைக்கிறது!

சொந்தபந்தத்துடன் அக்கம்பக்கத்து பெண்களும் சரசரவென உள்ளே செல்கின்றனர்.. கண்களை துடைத்தவாறு வெளியே வருகின்றனர்..

இதற்குள் மன்ற நண்பர்கள் பலரும் வந்து சேர.. 'மலர் வளையத்த வச்சிரலாம் சார்.. அப்புறம் கூட்டம் சேர்ந்துட்டா கஷ்டமாயிரும்..' என்கிறார் நண்பர் ஒருவர். என்னுடைய வாகனத்திலிருந்து வளையத்தை எடுத்து தயக்கத்துடன் நுழைகிறோம்..

சிறியதொரு கூடத்தில் தரையில் வெள்ளைத் துணியகற்றப்பட்டு.. மன்றப் பதிவுகள் ஒன்றில் வெளியாகியிருந்த புகைப்படத்தில் இருந்ததைவிடவும் இளமையாய்.. தூக்கத்தில் இருப்பதைப் போல..

மலர் வளையத்தை தலைமாட்டில் வைக்கிறோம்.. என்னுடன் வந்திருந்த நண்பர் ஒருவருடைய பாதம் சாகரனின் தலையை எங்கே தொட்டுவிடுமோ என்ற பதற்றத்தில் ஒரு நொடி சாகரனின் இளம் மனைவி ஐயோ என் புருசன் என்பதுபோல் தலையை அணைத்துக்கொள்கிறார்.

என்னையுமறியாமல் கண்கள் கலங்கி குளமாகின்றன. சிறியதாயிருந்த கூடத்தில் கூட்டம் நெருக்குகிறது.. பிரிய மனமில்லாமல் இறுதியாய் ஒரு பார்வை அமைதியாய்போன அந்த முகத்தை.. வெளியேறி வாசலில் நிற்கிறோம்..

யாரோ சொல்கிறார்கள்..'பாப்பாவ கூட்டிக்குட்டு வாங்கோ.. பாத்துரட்டும்..'

சாகரனின் மகளைத்தான்.. பாப்பா அங்கு இல்லை.. இருவர் ஓடிச் சென்று அழைத்துவருகிறார்கள்..

வாகனத்தில் இருந்த மூன்று வயது பெண் குழந்தையை சாகரனின் தங்கை தூக்கி வருகிறார். குழந்தை அடம் பிடித்து இறங்கி முகமெல்லாம் புன்னகையுடன் குதித்தவாறு ஓடி வருகிறது....சுற்றிலும் நின்றிருந்த ஆண்களும் திகைப்பை வெளிக்காட்டாமல் பரிதாபத்துடன் குழந்தையையே பார்த்தவாறு..

அடுத்த சில நிமிடத்தில் வீட்டை விட்டு வெளியே ஓடிவருகிறது.. விளையாடப் போணும்.. என்னெ விடு..

உறவினர்களுள் ஒருவர்.. 'இன்னும் ஒரு மணிநேரத்துல பொறப்பட்டுருவோம்.. சரியா நாலுமணிக்கு அங்க இருப்போம்..' எங்கிருப்போம்..? மயானத்தில் என்பது அவர் சொல்லாமலே புரிகிறது..

வாசலில் வேதியர்கள் (பூசாரிகள்) மந்திரத்தை துவக்குகின்றனர்.. அமைதியாய் ஆர்ப்பட்டமில்லாமல் நான்கு செங்கற்குளுக்குள் தீச்சுவாலை.. மஞ்சள் நிறத்தில்.. சற்றுத் தள்ளி மூங்கில் பாடை தயாராகிறது.. இதாண்டாப்பா வாழ்க்கை.. வாழற நேரத்துல போற வாகனங்கள் எதுவானாலும்.. கடைசியில போறது இதுலதாண்டா என்கிறது..

வேதியர் ஓதும் எதுவும் விளங்கவில்லை..

சாகரன் தமிழுக்கு சேவையாற்றியவராயிற்றே.. இதுவே தமிழில் இருந்திருந்தால்..

எங்களுடைய வீடுகளில் நடக்கும் கூட்டுப் பிரார்த்தனையை நினைவுகூறுகிறேன்.

'எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்..
மரித்த விசுவாசிகளின் ஆத்மா நித்திய சமாதானத்தில் இளைப்பாரக் கடவது..

மரித்த சகோதரனின் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி..
அவரை நித்திய தீச்சூளையில் தள்ளிவிடாதேயும்
உம்முடைய நிழலில் வைத்து நித்தியத்திற்கும் காத்தருளும் சுவாமி

இந்த ஆத்மாவை அமைதியாய் போகவிடும் சுவாமி
அமைதியாய் போகவிடும்..

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி.. எங்கள் பேரில் தயவாயிரும்..'

விடைபெற்றுச் செல்கையில் வாசலிலிருந்து எழுதி வைக்கப்பட்டிருந்த வாசகம் கண்ணில் படுகிறது..

'திரு. கல்யாண்.. பெயரில் வரும் கடிதங்களை மேல் வீட்டில் கொடுக்கவும்..' சாகரனின் சொந்த கையெழுத்தா தெரியவில்லை..

ஆனால் அந்த 'மேல் வீட்டில்' என்ற வார்த்தைகள்.. இப்போது தீர்க்கதரிசனமாய் படுகிறது..

அதுமட்டும் முடிந்தால்.. சாகரனுக்கு அஞ்சலியாய் எத்தனை பதிவுகள்.. எத்தனை கவிதைகள்..

இவையெல்லாவற்றையும் அனுப்பி வைக்க முடியாதா?

Saturday, February 17, 2007

அயரா உழைப்பும், விடா முயற்சியும்!

'இன்று சாதனையாளர்கள் பட்டியலில் முதன்மை இடத்தை வகிப்பவர்களூள் பலரும் சோதனைகளையும் வேதனைகளையும் சந்தித்தவர்களே. ஆனால் அவற்றால் முடங்கிப் போய்விடாமல் மீண்டு வந்தவர்கள்.'

"சோதனைகள் ஒன்று அல்லது இரண்டு என்றால் பரவாயில்லை. ஆனால் வாழ்க்கையே சோதனையாகிப் போயிற்றே என்ன செய்வேன்." என்று கலங்கி நிற்கும் நம்மைப் போன்றோர் இன்றைய சாதனையாளர்கள் பட்டியலில் முதன்மை இடத்தில் இருப்பவர்களுடைய வாழ்க்கையை சற்றே புரட்டிப் பார்த்தால் தெளிவு பிறந்துவிடும்.

நாம் வாழும் காலத்திலேயே, நம் கண் முன்பே வாழ்க்கையின் அடிமட்டத்திலிருந்த எத்தனை பேர் தாங்கள் உயர்ந்தது மட்டுமல்ல தன்னைச் சார்ந்திருப்பவர்களையும் உயர்த்தியுள்ளனர்.

அவர்களுக்கும் நமக்குமுள்ள வேறுபாடு என்ன?

நாம் சோதனைகளை வேதனைகளாக்கி சோர்ந்து போகிறோம்.

அவர்கள் அதே சோதனைகளை சாதனைகளாக்கி வெற்றிகொண்டார்கள்.

இது சிலருக்கு மட்டும் சாத்தியமாவதென்ன?

நம்மால் ஏன் முடியவில்லை?

'அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்'

அதாவது இது செய்வதற்கு முடியாத செயல் என்று சோர்வடையாமல் இருக்க வேண்டும்; இடைவிடாத முயற்சி அதைச் செய்து முடிக்கும் வலிமையைத் தரும் என்கிறார் வள்ளுவர்.

அவரே தொடர்ந்து

'ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவுஇன்றித்
தாழாது உஞற்று பவர்' என்கிறார்.

அதாவது மனத்தளர்ச்சியில்லாமல் எத்தகைய குறைபாடும் இன்றி மேன்மேலும் முயன்று உழைப்பவர் வெற்றிபெறும் முயற்சிக்கு இடையூறாக வரும் விதியையும் வென்றுவிடுவார்.

சொல்வது எளிது. ஆனால் அவற்றை வாழ்க்கையில் கடைபிடிப்பது கடினம்.

உண்மைதான்.

தோல்வியைக் கண்டு சோர்ந்துவிடாமல் இருப்பது எளிதல்ல. அதற்கு மிகுந்த மனப்பக்குவம் தேவை.

ஓரிரண்டு நாட்களிலோ ஏன், ஓரிரண்டு ஆண்டுகளிலோ வந்துவிடுவத்தல்ல இந்த பக்குவம்..

ஆனால் தொடர்ந்து முயற்சித்தால் கைகூடாதது எதுவுமில்லையல்லவா?

முயற்சி திருவினையாக்கும்!

****

Saturday, February 10, 2007

நான் ஒரு அசைவம்!

'நான் சைவம், அசைவம் என்பது நான் உண்ணும் உணவை மட்டுமே பொருத்ததல்ல. நம்முடைய வாயிலிருந்து வரும் வார்த்தைகளையும்தான்.'

'நீங்கள் உண்ணும் உணவு உங்களுடைய இதயத்தை மாசுபடுத்துவதில்லை. அது நேரடியாக வயிற்றிற்குச் சென்று ஜீரணிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு விடுகிறது. மாறாக உங்களுடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு சொல்லுமே உங்களை யாரென்று காட்டுகின்றது' என்கிறது பைபிள்.

நம் வாயிலிருந்து வார்த்தைகள் நம் உள்ளத்தில் உதிக்கும் எண்ணங்களிலிருந்தே பிறக்கின்றன. நம்முடைய எண்ணங்கள் நல்லவையாக இருக்குமானால் நம்முடைய வார்த்தையும் சுத்தமானதாக இருக்கும். நம் செயல்களும் அப்படியே.

நல்ல எண்ணங்கள் உதிக்கும் அதே உள்ளத்திலிருந்தே காமம், களவு, பொறாமை, அகங்காரம் போன்ற தீய எண்ணங்களும் உதிக்கின்றன.

தீய எண்ணங்கள் உதிக்கும் உள்ளம் வாயிலிருந்து உதிரும் வார்த்தைகளையும் தீயதாக்குகின்றன என்பது மறுக்கவியலாத உண்மை.

நல்லவற்றையே நினைக்கும் உள்ளம் இவ்வுலகில் காணும் அனைத்தையும் நல்ல கண்ணோட்டத்துடனே பார்க்கின்றன.

மாறாக தீயவன் கண்ணுக்கு தென்படுவதெல்லாமே தீயதாகவே தென்படுகின்றன.

இறைவனின் படைப்புகளில் உன்னதமானது மனிதன்!

அவனுடைய பயன்பாட்டுக்கென்றே படைக்கப்பட்டவைதான் மற்ற படைப்புகள் அனைத்துமே.

எதை உண்பது எதை உண்ணலாகாது என்பதெல்லாம் மனிதனாகவே வரித்துக்கொண்டதுதான்.

ஆகவே இவற்றை உண்பவன் மட்டுமே நல்லவன் மற்றவரெல்லாம் தீயவர்கள் அல்லது மற்றவர்களைவிட தரம் தாழ்ந்தவர்கள் என்பதில்லை.

தெய்வப் புலவர் 'புலால் மறுத்தல்' என்னும் அதிகாரத்தின் கீழ் அளித்துள்ள கீழ்காணும் குறள்களை வாசித்தால் புலால் (மாமிசம்) உண்பவன் இரக்கமற்றவன், அருளுடையவனாகும் தகுதியற்றவன் என்பதுபோன்ற தோற்றமளிக்கிறது.

"தன்ஊண் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்"

தன் உடலைப் பெரிதாய் வளர்ப்பதற்காகத் தான் பிறிதோர் உயிரின் தசையைத் தின்கின்றவன் எவ்வாறு இரக்கமுள்ளவனாக இருக்க முடியும்?

"பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருள்ஆட்சி
ஆங்கில்லை ஊந்தின் பவர்க்கு"

பொருளுடையவராக இருக்கும் தகுதி அப்பொருளைக் காப்பாற்றாதவருக்கு இல்லை. அவ்வாறே அருள் உடையவராகும் தகுதி ஊனைத் தின்பவருக்கு இல்லை.

ஆனால் அதைத்தான் அவர் கூற விழைந்தாரா என்பது சந்தேகமே.

*********

வெற்றியும் தோல்வியும்..

'சூழ்நிலைகள் மட்டுமே நம்முடைய வெற்றிக்கும் தோல்விக்கும் காரணிகள் அல்ல.'

வங்கிகளில் எல்லா கிளை மேலாளர்களுக்கும் ஒரு நிதியாண்டில் அடைய வேண்டிய பல இலக்குகளை (Targets) வங்கி நியமிக்கும். அவற்றை வெற்றிகரமாக அடையாத மேலாளர்கள் (என்னையும் சேர்த்துத்தான்) தங்களுடைய கிளை இயங்கி வரும் இடம், வர்த்தக நிலை என பல சூழ்நிலைகளைக் காரணம் காட்டுவார்கள்.

சிலர் தங்களுக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகள் திறமையில்லாதவர்கள், ஊழியர்களின் சேவை தரம் சரியில்லை என்றெல்லாம் கூட குற்றம் சாட்டுவார்கள். சிலர் ஒரு படி மேலே சென்று தங்களுக்கு தங்களுடைய வட்டார அலுவலகத்திலிருந்து போதுமான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று தங்களுடைய மேலதிகாரிகள் மீதே குற்றம் சுமத்துவார்கள்.

அதாவது தங்களைத் தவிர மற்றெல்லாருமே தங்களுடைய இயலாமைக்கு காரணிகள் என்பதுபோலிருக்கும் அவர்களுடைய வாதம்.

ஒரு சமயம் இப்படித்தான். என்னுடைய வட்டாரத்தில் இயங்கிவந்த கிளை மேலாளர்களின் ஆண்டு கூட்டம் நடைபெற்றிருக்கையில் நான் மேலே குறிப்பிட்ட வாதங்களை பல மேலாளர்கள் முன்வைத்தனர். என்னுடைய வங்கி தலைவர் பதற்றமடையாமல் என்னுடைய வட்டார மேலாளரிடம், 'I think we can solve theri problem by transferring them from their respective branches.' என்றார்.

அவ்வளவுதான். அனைவரும் அவரவர் வாதங்களை மூட்டைக் கட்டிவிட்டு மவுனமாயினர்.

வங்கித் தலைவர் தொடர்ந்து கூறினார். 'சாதகமான சூழலில் திறம்பட பணியாற்றுவது மிகவும் எளிது. ஆனால் அது பெரிய சாதனையல்ல. சாதகமற்ற சூழலில் எந்த அளவுக்கு ஒருவரால் சாதிக்க முடிகிறதோ அதை வைத்துத்தான் அவருடைய திறமை கணக்கிடப்படுகிறது. A person who performs beyond his capacity in adverse conditions can only be a real performer.'

உண்மைதான்..

சாதகமற்ற ஒரு சூழலில் ஒருவருடைய செயல்திறனுக்கு அப்பால் செயலாற்றுகிறவனே ஒரு உண்மையான சாதனையாளன்.

நம்முடைய வாழ்விலும் இத்தகையோர் பலரை நாம் கண்டிருக்கிறோம். வெள்ளையனுடைய ஆதிக்கத்தில் இருந்த நம் முன்னோர்கள் சாதித்தவற்றுடன் ஒப்பிடுகையில் நம்முடைய சாதனை ஒன்றுமில்லை.

ஆகவே சாதகமற்ற சூழல்களை நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள பயிலுவோம். சாதிப்போம்.

இதைக்குறித்து தெய்வப் புலவர் கூறுகிறார்:

"ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலா
ஊக்கம் உடையான் உழை"

தளர்ச்சியில்லாத ஊக்கம் உடையவனிடம், செல்வம் (வெற்றி) வழி கேட்டுக் கொண்டு வந்து சேரும்.

"வெள்ளத்து அனைய மலர்நீட்டம்; மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு."

தண்ணீரிலே மலரும் பூவின் தாளினுடைய நீளம், தண்ணீர் உயரத்துக்கு இருக்கும். அதுபோல் மனத்தில் ஊக்கம் உள்ள அளவுக்கு உயர்வும் இருக்கும்.
******

Friday, February 02, 2007

என்னால் முடியும்!

‘உன்னால் இது முடியாது என்பவர்களைப் பற்றி கவலைப்படுவதில் பொருளில்லை. என்னால் முடியும் என்பதுதான் மிக முக்கியம்.’

நம்முடைய லட்சியம் பலருக்கு அதீத கனவுகளாய் தெரிய வாய்ப்புள்ளது.

‘வீணா கனவு காண்றத விட்டுட்டு ஒன்னால எது முடியுமோ அத செய்யப்பாரு.’ இது தினமும் நம் வீடுகளில் நாம் கேட்கும் அறிவுரை.

கனவு காண்பவனால் மட்டுமே வாழ்க்கையில் பிறரால் சாதிக்க முடியாதவற்றை சாதிக்க முடியும் என்பதற்கு நம்முடைய வாழ்நாளிலேயே பல சான்றுகள் உள்ளன.

ரிலையன்ஸ் அம்பானி அவர் நினைத்த இடத்தை அடைவதற்கு கையாண்ட முறைகளில் சில தவறானவையாக இருக்கலாம். ஆனால் அதை தன்னால் அடைய முடியும் என்று அவர் நினைத்தது கனவுதானே! இன்று அவருடைய நிறுவனம் ஒரு லட்சம் கோடி வருவாய் என்ற உன்னத நிலையை கடந்திருக்கிறதே அது எத்தனை இமாலய சாதனை!

கைத்தான் மின் விசிறி! பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்திருந்த துறையில் துணிவுடன் இறங்கி துவக்கத்தில் ஐந்தாறு பணியாளர்களை மட்டுமே துணைக்கு வைத்துக்கொண்டு துவக்கப்பட்ட நிறுவனம் பல பன்னாட்டு நிறுவனங்களையும் தோற்கடித்ததே அது கனவல்லவா?

ஒரு இந்திய நிறுவனம் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான கோரஸ் எஃகு நிறுவனத்தை பலமுனைப் போட்டியை சமாளித்து ஏற்றதே அது நிறைவேறும் என்று யாரால் நினைத்திருக்க முடியும்!

இருபது வயதை எட்டுவதற்கு முன்பே தன் நிறுவனத்தை நிறுவி சகல எதிர்ப்புகளையும் - ஒரு சமயத்தில் உலகின் மிகப் பெரிய கணினி நிறுவனங்களான ஐ.பி.எம், ஆப்பிள் – மீறி இன்று உலகின் நம்பர் ஒன் மென்பொருள் நிறுவனம் என்ற அளவில் வளர்ந்து நிற்கிறதே அதற்கு பில் கேட்ஸ் என்ற ஒரு இளைஞனின் கனவுதானே..

இன்று அனுதினம் நாம் கேட்கும் ‘உன்னால் முடியாது தம்பி’ என்ற அதே வார்த்தைகளை இவர்களும் எத்தனை முறை கேட்டிருப்பர்?

‘உன்னால் முடியாது’ என்பதை சக்தியுடன் எதிர்கொள்ளக் கூடிய ஒரு ஆயுதம் ‘என்னால் முடியும்’ என்ற தன்னம்பிக்கைதான்.

வானத்திற்கு எல்லை இல்லை என்பதுபோன்றே நாம் காணும் கனவுகளுக்கும் எல்லை இல்லை!

கனவை நனவாக்குவது அத்தனை எளிதல்ல என்பது நம் எல்லோருக்குமே தெரிந்ததுதான். அதை நமக்கு மற்றவர் எடுத்துக் காட்ட தேவையில்லை.

கனவு காணும் நமக்கு நமக்கு அவற்றை நனவாக்கவும் முடியும் என்பதை உணர்த்திக்காட்ட வேண்டும்..

அதற்கு ‘என்னால் எதுவும் முடியும்’ என்ற ஆழமான நம்பிக்கை வேண்டும். என்னுடைய அறிவுத் திறனில், உழைப்பில்..

தன்னம்பிக்கை! அதை வெற்றிக்கொள்ளக் கூடிய ஆயுதம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை..

நம்பிக்கை இழக்காமல் இருப்போம்.. கனவுகளை நனவாக்குவோம்..

****