Saturday, December 30, 2006

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

‘ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் நம்முடைய கணக்குப் புத்தகங்களை சரிபார்ப்பது போலவே நம்முடைய உள்ளத்தையும் ஆராய்ந்து பார்ப்போம். எதிர் வரும் புத்தாண்டுக்கு நம்மை நாமே தயார் செய்துக்கொள்வோம்.’

நம் அலுவலகங்களைப் பொருத்தவரை இன்று ஆண்டின் இறுதி வேலைநாள்.

முன்பெல்லாம் வங்கிகளின் கணக்குகளை முடிக்கும் நாளாகவும் இந்நாள் இருந்தது. அப்போதெல்லாம் வருட இறுதி வேலை நாளன்று வீடு திரும்பவே நள்ளிரவைக் கடந்துவிடும். பத்தாண்டுகளுக்கு முன் நிதியாண்டை ஏப்ரல் முதல் மார்ச் வரை என்று மாற்றிய பிறகு டிசம்பர் மாத இறுதி வேலை நாள் ஒரு சாதாரண வேலை நாள் போலாகிவிட்டது.

என்னுடைய வங்கியில் ஆண்டின் இறுதி வேலைநாளன்று வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட வைப்புக் கணக்குகளுக்கும், வழங்கப்பட்டிருந்த கடன் கணக்குகளுக்கும் கொடுக்க வேண்டிய, வரவு வைக்கப்பட வேண்டிய வட்டியைக் கணக்கிடுவது. மொத்த வருமானத்திலிருந்து வர்த்தகத்தை நடத்திச் செல்ல எத்தனை செலவழித்திருக்கிறோம் என்பதைக் கணக்கிட்டு என்னுடைய கிளையின் நிகர லாபம் என்ன என்பதை கணக்கிட்டு முடிக்கும் நேரத்தில் சில சமயம் மகிழ்ச்சியாகவும் சில சமயம் கவலையாகவும் இருக்கும்.

சில மேலாளர்களுக்கு பாராட்டும் சிலருக்கு ஏச்சும் மேலதிகாரிகளிடமிருந்து கிடைக்கும்.

அதுபோலவே நம்முடைய சொந்த வாழ்க்கையையும் ஆராய்ந்து பார்க்க வேண்டிய நாள் இது.

இன்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய சில கேள்விகள் இவை:

1. எனக்கு நானே உண்மையாக இருந்திருக்கிறேனா?

2. என்னுடைய உறவினர்கள், நண்பர்கள் இவர்களுக்கு உண்மையாக இருந்திருக்கிறேனா?

3. நான் கடமைப்பட்டவர்களிடத்தில் - பெற்றோர், மனைவி - மக்கள், நண்பர்கள் – விசுவாசமாக, நன்றியுள்ளவனாக இருந்திருக்கிறேனா?

4. உண்மைக்கு புறம்பாக பேசி பிறரை வஞ்சித்திருக்கிறேனா?

5. வேண்டுமே தெரிந்தும் பிறர் மீது சேற்றை வாரியிறைத்திருக்கிறேனா (Character assassination)?

6. பேராசை, அழுக்காறு கொண்டிருக்கிறேனா?

இன்னும் இதுபோன்ற எத்தனை கேள்விகளை வேண்டுமானாலும் நமக்கு நாமே கேட்டுக்கொள்ளலாம்.

நாம் புனிதர்கள் அல்ல. சாதாரண மனிதர்கள்.

ஒரு மனிதனுக்கு இயற்கையாகவே ஏற்படும் சபலம், சலனம், சஞ்சலம் எல்லாவற்றிற்கும் அடிமையானவர்கள் நாம்.

சோதனைகள் நிறைந்த இவ்வுலகில் இவற்றை முற்றிலுமாக விலக்கி வைக்க எந்த ஞானியாலும் இயலாது என்பதும் நமக்குத் தெரியும்.

இக்கேள்விகளுக்கு நம்மிடமிருந்து எத்தகைய பதில் வரவேண்டுமென்றோ அல்லது சரியாக வரும் பதில்களுக்கு இத்தனை மதிப்பெண், தவறான பதில்களுக்கு இத்தனை எதிர்மறை மதிப்பெண் (Negative marks) இரண்டையும் கூட்டிக் கழித்து பார்த்து இத்தனை மதிப்பெண் வந்தால் நான் நல்லவன்.. இல்லையென்றால்..

இதுவல்ல நாம் செய்ய வேண்டியது..

நம்முடைய பதில்கள் எதுவாக இருப்பினும் நம்முடைய த்ம சோதனையில் நாம் உண்மையாக இருந்தால் போதும்..

நாம் யாராக இருந்தோம், நாம் யாராக இருக்க வேண்டும் என்பது நமக்கு தெளிவாகிவிடும்.

கடந்த ஆண்டில் நாம் வாழ்ந்த வாழ்க்கையில் நமக்கு திருப்தி உண்டென்றால் அப்படியே தொடர்ந்து இருப்போம்.

இல்லையென்றால் நம்மை திருத்திக்கொள்ள முயல்வோம்.

மலரும் புத்தாண்டு நம் அனைவருடைய வாழ்க்கையிலும் மகிழ்ச்சியையும், வெற்றிகளையும் வாரி வழங்க வேண்டும் பிரார்த்திக்கிறேன்..

*****

10 comments:

Anonymous said...

//மலரும் புத்தாண்டு நம் அனைவருடைய வாழ்க்கையிலும் மகிழ்ச்சியையும், வெற்றிகளையும் வாரி வழங்க வேண்டும் பிரார்த்திக்கிறேன்..//

உங்கள் பிரார்த்தனையில் நானும் பங்கேற்கிறேன் !

tbr.joseph said...

வாங்க மணியன்,

உங்கள் பிரார்த்தனையில் நானும் பங்கேற்கிறேன் !//

நன்றி. நம் அனைவருடைய பிரார்த்தனையும் அதுதானே:)

வெற்றி said...

ஜோசப் ஐயா,
உங்களுக்கு என் உளம் கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

tbr.joseph said...

நன்றி வெற்றி!

srishiv said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா :)
வரும் ஆண்டு, இனிமையையும், புதுமையையும், சமாதானத்தையும்,சாந்தியையும், திருப்தியையும் கொண்டுவர இறைவனிடம் பிரார்த்திப்போம்
ஸ்ரீஷிவ்...

tbr.joseph said...

வாங்க ஸ்ரீஷிவ்,

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா//

உங்களுக்கும் அதே வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறேன்.

வரும் ஆண்டு, இனிமையையும், புதுமையையும், சமாதானத்தையும்,சாந்தியையும், திருப்தியையும் கொண்டுவர இறைவனிடம் பிரார்த்திப்போம்//

நானும் உங்களுடைய அருமையான இந்த பிரார்த்தனையில் பங்குபெறுகிறேன்.

அன்புடன்,
ஜோசஃப்

கானா பிரபா said...

வணக்கம் ஜோசப் சார்

நேற்றும் ஒரு பின்னூட்டம் போட்டேன் கிடைக்கவில்லை போலும். தங்கள் குடும்பத்தினருக்கு என் ஆங்கிலப் புதுவருட வாழ்த்துக்கள்

tbr.joseph said...

வாங்க கானா பிரபா,

நேற்றும் ஒரு பின்னூட்டம் போட்டேன் கிடைக்கவில்லை போலும். தங்கள் குடும்பத்தினருக்கு என் ஆங்கிலப் புதுவருட வாழ்த்துக்கள் //

என்னுடைய இன் பாக்ஸ்ல இல்லீங்க. சரி பரவாயில்லை. உங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி.

உங்களுக்கும் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் புதுவருட வாழ்த்துக்கள்.

லக்கிலுக் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்!

tbr.joseph said...

மிக்க நன்றி லக்கிலுக்..

உங்களுக்கும் புதுவருட வாழ்த்துக்கள்.

Post a Comment