வேலைக்கொரு ஜாதகம்!
இன்றைய ஃபைனான்ஷியல் எக்ஸ்ப்ரஸ் பத்திரிகையின் முதல் பக்கத்தில் வந்திருந்த இந்த தலைப்பைப் பார்த்ததும் இது ஏதோ வேடிக்கைக்காக கொடுத்த தலைப்பு என்று நினைத்தேன்.
Your horoscope holds the key to a plum job!
ஆனால் கட்டுரையைப் படித்துமுடித்ததும்தான் விளங்கியது இது வெறும் வேடிக்கைக்காக எழுதப்பட்டத்தல்ல என்பது.
இதை முழுவதும் படிக்க இங்கு
http://www.financialexpress.com/fe_full_story.php?content_id=150118
செல்லுங்கள்.
இதைப் படித்து முடித்ததும் என் உள்ளத்தில் எழுந்த வினாக்கள் இவை:
சாதாரணமாக முதல் தர நிறுவனங்களில் பணிக்கு அமர்த்த எழுத்துத் தேர்வு (Written Exam), குழு உரையாடல் (GD), தொழில் சம்பந்தப்பட்ட மற்றும் மனித வள நேர்காணல் (Technical and HR Interview) என மூன்று சுற்றுகள் நடத்தப்படுகின்றன. இனி ஜாதக பொருத்தம் என்ற நான்காவது சுற்றும் இருக்குமோ?
இந்த கேள்விக்கு ஆம் என்பது பதிலானால்..
எனக்கு தெரிந்தவரை இந்துக்கள் அல்லாதவர்கள் ஜாதகம் கணிப்பதில்லை. ஒருவேளை அவர்கள் இந்த சுற்றுக்கு தகுதி பெற மாட்டார்களோ?
அதுவரை எல்லா சுற்றுகளிலும் முதலாவதாக வந்தவருடைய ஜாதகம் சரியில்லை என்றால் அவர் நிராகரிக்கப்படுவாரோ?
சரி. நான்காவது சுற்றில் கலந்துக்கொள்ளும் ஜாதகம் யாருடைய ஜாதகத்துடன் பொருந்த வேண்டியிருக்கும்? நிறுவனத்துடனா? அப்படியொரு ஜாதகம் இருக்குமா? அல்லது அதன் முதல்வர் அல்லது மூத்த பங்குதாரர் இவர்களுடைய ஜாதகத்துடனா?
இன்னுமொரு கேள்வி. ஜாதகப் பொருத்தத்தை சரிவர கணிப்பதற்கு எல்லோரும் ஒத்துக்கொள்ளக் கூடிய தரத்தில் ஒரு கருவி அல்லது முறை வகுக்கப்பட்டுள்ளதா என்ன?
எங்களுடைய வங்கியில் கடன் பெற வருபவர்கள் வங்கிகளுக்கு ஒன்று, வரி இலாக்காவிற்கு ஒன்று என இரு வேறு நிதியறிக்கைகளை வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
அதுபோலவே திருமணத்திற்கு ஒன்று, பணியில் சேர ஒன்று என இரு ஜாதகத்தையும் குழந்தை பிறந்தவுடனே கணித்து வைத்து விட வேண்டும் போலிருக்கிறது!
இப்போதெல்லாம் குழந்தை நல்ல நேரத்தில் பிறந்துவிட வேண்டுமென்பதற்காக சுகப் பிரசவத்தை தவிர்த்து தங்களுக்கு வேண்டிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து குழந்தைப் பிறக்கச் செய்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
இந்த ஜாதகப் பொருத்தம் பார்த்து பணிக்கு சேர்க்கும் முறை பிரபலமானால் குழந்தைப்பேறு மருத்துவர்களுக்கு கொண்டாட்டம்தான்..
இது மூடநம்பிக்கையின் உச்சக்கட்டம் என்றல்லாமல் வேறென்ன!
வாழ்க இந்தியா!
*****
10 comments:
//இந்த ஜாதகப் பொருத்தம் பார்த்து பணிக்கு சேர்க்கும் முறை பிரபலமானால் குழந்தைப்பேறு மருத்துவர்களுக்கு கொண்டாட்டம்தான்..
//
பிறக்கும் குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்ற ஆர்வக்கோளாறினாலும், அரைவேக்காடு ஜாதக கணிப்பாளர்களாலும் இந்தக் கூத்துக்கள் ஏற்படுகிறது.
வருத்தமான விசயம்.
//எனக்கு தெரிந்தவரை இந்துக்கள் அல்லாதவர்கள் ஜாதகம் கணிப்பதில்லை. ஒருவேளை அவர்கள் இந்த சுற்றுக்கு தகுதி பெற மாட்டார்களோ?
//
சில கத்தோலிக்க கிருத்தவர்கள் ஜாதகம் கணிப்பதை நான் பார்த்துள்ளேன்.
பி.கு : "சரியான - உண்மையான" ஜாதக கணிப்பில் எனக்கு நம்பிக்கை உண்டு.
ஆனால் கணிப்பவர்கள்தாம் இல்லை.
Adap paavigaLaa!
வாங்க வினையூக்கி,
சில கத்தோலிக்க கிருத்தவர்கள் ஜாதகம் கணிப்பதை நான் பார்த்துள்ளேன். //
இருக்கலாம். மதுரை, தஞ்சை, தூத்துக்குடி போன்ற ஊர்களில் பணியாற்றியபோது நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆனால் அவர்கள் அதை திருமணங்களுக்கு பயன்படுத்தி நான் கண்டதில்லை.
"சரியான - உண்மையான" ஜாதக கணிப்பில் எனக்கு நம்பிக்கை உண்டு.
ஆனால் கணிப்பவர்கள்தாம் இல்லை. //
அதுதானே பிரச்சினையே.. அரைவேக்காடுகளின் கணிப்பின் படி ஒரு திறமையுள்ள, புத்திசாலியான இளைஞனுடைய எதிர்காலமே பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறதே..
வாங்க இப்னு,
அடப்பாவிகளா//
அவர்கள் பாவிகளாக இருந்துவிட்டுப் போகட்டும்.. பாதிக்கப்படும் இளைஞர்களின் நிலைதான் பரிதாபம்:(
//எனக்கு தெரிந்தவரை இந்துக்கள் அல்லாதவர்கள் ஜாதகம் கணிப்பதில்லை. //
//இது மூடநம்பிக்கையின் உச்சக்கட்டம் என்றல்லாமல் வேறென்ன!//
ஜோசப்,
என்ன பிற மதங்களில் மூட நம்பிக்கையே இல்லாதது போல் சொல்கிறீர்கள் :--)
நம்பிக்கை (கடவுள்,ஜாதி,மத..) என்ற ஒன்றை கட்டிக்காக்க பல மூட நம்பிக்கைச் சுவர்கள் அனைத்து மதங்களுக்கும் தேவை.
***
கல்யாணம் கருமாதி போன்றவற்றில் சாதி,மத,ஜாதகக் கூத்துகளை கேள்வியே கேட்காமல் ஏற்றுக்கொள்பவர்கள் இதனையும் கேள்வியே கேட்காமல் ஏற்றுக் கொள்ளலாம்.ஏனென்றால் அலுவலகக் கட்டிடங்கள் வாஸ்து என்ற தோஸ்தின் அட்வைஸ்படியே கட்டப்படுகின்றன.அதில் நம்பிக்கை வைத்துள்ள நிறுவனங்கள் அடுத்த கட்டமாக வேலைக்குச் சேர்பவரின் ஜாதகத்தை நோண்டுவது இயற்கையான ஒன்று.
வரும் கால கட்டங்களில் ஒருவர் இதய நோயால் பாதிக்கப்பட்டாலும் , அவரது ஜாதகத்தில் ஆயுள் கெட்டியாக இருந்தால் மட்டுமே ஆப்ரேசனுக்கு அனுமதிக்கும் கொடுமைகளும் வரலாம்.
மதம்,சாதி மற்றும் அது சார்ந்த நம்பிக்கைகள் மனிதனின் நடைமுறைவாழ்வில் இருக்கிறது. அதன் நீட்சிகளே ஜாதகம்,வாஸ்து...etc.
இறைவனே அனைத்தையும் படைத்து ஆட்டுவிக்கிறவர் ஆகையால் இதுவும் ஒரு இறைச் செயலே என்று இருக்கலாம்.
நம்பிக்கையாளர்கள் ஏன் இதை +ve ஆக ..ஜோசியருக்கு கிடைத்த வேலைவாய்ப்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது.இதன் மூலம் இனி நிறைய ஜோசியக் கல்லுரிகள் வரலாம். சன்/ஜெயா/..தொலைக்காட்சிகள் எந்த இராசி நேயருக்கு என்று/எங்கு வேலை கிடைக்கும் என்று காலையில் சொல்வார்கள்.
உலகமே தமாசாக இருக்கும்.இதுவும் இருந்துவிட்டுப் போகட்டும்.
No tension please :-))
ஜோசப் சார்,
கம்ப்யூட்டர் ஜாதகமா? கிளி ஜோஸிய ஜாதகமா? கட்டம் கட்டி எழுதப்படும் ஜாதகங்கள் அடிக்கும் கொட்டத்தில் திறமைகள் கட்டம் கட்டப்படலாமா?
வினையூக்கியின் கருத்துடன் உடன்படுகிறேன். ஜாதகக் கலை உண்மையாக இருக்கலாம். ஆனால் இன்றைக்கு அக்கலையின் பயன்பாடும், ஜாதக வியாபரிகளும் கணிக்கின்ற திறனற்று கணினியிடம் கணிக்கும் பொறுப்பை விட்டிருக்கின்றார்கள்!
கே.எஸ். ரவிகுமாருக்கு ஜாதகம் சூப்பர் ஸ்டாருடன் முரண்பட்டதாலேயே சக்குபாய் டிராப் ஆகி சந்திரமுகி பி.வாசுவினால் இயக்கப்பட்டது!
எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் எனும் தவிப்பு! ஆன்க்ஸைட்டி ஆட்டிப்படைக்கிறது மக்களை வேறென்ன சொல்ல :-)))
வாங்க கல்வெட்டு,
என்ன பிற மதங்களில் மூட நம்பிக்கையே இல்லாதது போல் சொல்கிறீர்கள் //
இதில் மதம் எங்கிருந்து வருகிறது? இருப்பினும் சொல்கிறேன். மூட நம்பிக்கை என்பது இந்துக்களின் முழுச் சொத்தல்ல. அத்துடன் நம் நாட்டில் மட்டுமல்ல.. உலகமெங்கும் உள்ளதுதான். ஆனால் அது பிறரைப் பாதிக்காமல் இருக்கும் வரை பிரச்சினையில்லை.
உலகமே தமாசாக இருக்கும்.இதுவும் இருந்துவிட்டுப் போகட்டும்.//
படித்த இளைஞர்களுக்கு வந்திருக்கும் இப்புதிய பிரச்சினை தமாஷ் இல்லைங்க.
நான் டென்ஷனாகிறேனோ இல்லையோ இன்றைய பத்திரிகைக் கட்டுரையைப் படித்த நிறைய படித்த இளைஞர்கள் நிச்சயம் டென்ஷனாகியிருப்பார்கள்.
வாங்க ஹரிஹரன்
ஆன்க்ஸைட்டி ஆட்டிப்படைக்கிறது மக்களை //
Anxiety. இதுதான் இன்றைய பல பிரச்சினைகளுக்கும் மூல காரணம்..
எதிலும் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணம்.. எங்கே என்னுடைய ஜாதகத்துடன் ஒத்துபோகாதவன் வந்தால் என்னுடைய வர்த்தகம்/தொழில் நலிந்துவிடுமோ என்ற அச்சம்.
தன்னம்பிக்கையில் ஏற்படும் அவநம்பிக்கை..
"முயற்சி திருவினையாக்கும்" பதிவில் இருந்து, இந்த பதிவிற்கு வந்தேன்.
சாதி அடிப்படையில் வேலைக்கு ஆள் சேர்ப்பது போலவே உள்ளது, ஜாதகத்தின் படி செய்வது.
இந்த உலகத்தில் அனைத்து விதமான ஆட்களும் உண்டு.
ஆனால் இந்த மாதிரியான நிறுவனங்கள் குறைவாகவே இருக்கும் என்று நம்பி, "கருமமே கண்ணாயினார்" என்பதற்கிணங்க நடத்தலே நன்மை.
ஆனால் இந்த மாதிரியான நிறுவனங்கள் குறைவாகவே இருக்கும் என்று நம்பி, "கருமமே கண்ணாயினார்" என்பதற்கிணங்க நடத்தலே நன்மை//
கரெக்டா சொன்னீங்க.
Post a Comment