Friday, December 15, 2006

குழந்தைகளாய் மீண்டும் பிறப்போம்!

‘பிறர் மீது நம்பிக்கை வைப்பது, முழுமையான, எந்த நிபந்தனைகளும் இல்லாத அன்பு, மற்றும் மகிழ்ச்சி இவைகளில் குழைந்தகைளைப் போலவும் அனுபவம், பிறர் சிநேகம் மற்றும் விவேகம் இவற்றில் பெரியவர்களாகவும் இருப்போம்.’

நமக்கு பல உருவங்கள் உண்டு.

என்னுடைய குடும்பத்தினருக்கு பாசமுள்ள தலைவனாக, என் நண்பர்களுக்கு நல்லதொரு நண்பனாக, என்னுடைய அலுவலகத்தில் எனக்குக் கீழே பணிபுரிபவர்களுக்கு நல்ல பொறுப்புள்ள அதிகாரியாக, என் சக அதிகாரிகள் மத்தியில் நம்பிக்கையுள்ளவனாக, என்னுடைய மேலதிகாரிகளுக்கு நல்ல பணிவுள்ள ஊழியனாக, சமுதாயத்தில் சட்டத்தைக் கடைபிடிக்கும் நல்ல குடிமகனாக என பல உருவங்கள், பல முகங்கள் எனக்கு இருக்கின்றன.

இது நம் எல்லோருக்கும் பொருந்தும்.

நேரம், காலம், இடம் இவற்றிற்கேற்றார்போல் நம்முடைய நடத்தை, பேச்சு, குணாதிசயங்கள் ஆகியவை மாற வேண்டும்.

இல்லையேல் ஆங்கிலத்தில் சொல்வதுபோல சமுதாயத்தில் நாம் ஒரு misfit ஆகக் கருதப்பட்டுவிடுவோம்.

நான் என்னுடைய கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ள மாட்டேன், நான் செல்கின்ற பாதையில்தான் செல்வேன் என்று பிடிவாதத்துடன் செயல்பட்டால் நமக்கு மட்டுமல்ல நம்மைச் சார்ந்திருப்பவர்களுக்கும் பிரச்சினைதான்.

நம்முடைய குழந்தைகளைப் பாருங்கள்.

எந்த சூழலுக்கும் சட்டென்று தன்னுடைய நிறத்தை மாற்றிக்கொள்ளும் பச்சோந்தியைப் போல தங்களை flexible ஆக வைத்துக்கொள்வது குழந்தைகளுக்கு கைவந்த கலை.

அவர்களால் மட்டும் எப்படி முடிகிறது?

தங்களை சுற்றியுள்ள் எவரையும் எளிதில் நம்பிவிடும் வெள்ளை மனம், எந்த எதிர்பார்ப்புமில்லாத அன்பு, தொட்டதற்கெல்லாம் மகிழ்ச்சியடையும் உள்ளம், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என தரம் பிரிக்கத் தெரியாத பார்வை இவைதான் குழந்தைகள் தங்களை எந்த சூழலிலும் ஒன்றிப்போய்விட உதவுகிறது.

நாம் வளர்ந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும் சமயங்களிலெல்லாம் நானா, நானா இப்படியெல்லாம் இருந்தேன் என்றும் அந்த நாள் மீண்டும் திரும்பி வராதா என்றும் ஏங்குகிறோமே, ஏன்?

அந்த நாட்களில் நாம் எவ்வித கவலையும் இல்லாமல் இருந்தோம் என்பதால்தானே..

நாம் கடந்து வந்த பாதையில் நாம் சந்தித்த நபர்கள், நமக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியான, கசப்பான அனுபவங்கள், வெற்றி தோல்விகள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள்..

இவற்றிலிருந்து நாம் கற்று தெளிந்தது என்ன?

நம்முடைய நிழல் மீதே அவநம்பிக்கை, நம் உடன்பிறப்புகளின் மீதே பொறாமை, ஏன், நம்மில் சிலருக்கு நம்முடைய பிறப்புகளிடமே பொறாமை, எதிலும் குறைகளை மட்டுமே கண்டுபிடிக்கும் அபார திறமை.

நம்முடைய கடந்த கால அனுபவங்கள் நம்மை எதையும் மன முதிர்ச்சியுடனும் விவேகத்துடனும் எதிர்கொள்ளும் முழு மனிதர்களாக மாற்றியிருக்கிறதா? நம்முடைய குழந்தைப் பருவத்து குணங்களை இழந்துவிடாமல் இப்போதும் கொண்டிருக்கிறோமா?

நம்மை நாமே சோதித்துப் பார்ப்போம்..

****

6 comments:

வினையூக்கி said...

//எந்த சூழலுக்கும் சட்டென்று தன்னுடைய நிறத்தை மாற்றிக்கொள்ளும் பச்சோந்தியைப் போல தங்களை flexible ஆக வைத்துக்கொள்வது குழந்தைகளுக்கு கைவந்த கலை//
இந்த flxibility "பச்சோந்த்தி தனம் என நெகட்டிவ் ஆக விமர்சனம் செய்யப் படுகிறதே???.

வினையூக்கி said...

//நம்முடைய கடந்த கால அனுபவங்கள் நம்மை எதையும் மன முதிர்ச்சியுடனும் விவேகத்துடனும் எதிர்கொள்ளும் முழு மனிதர்களாக மாற்றியிருக்கிறதா?//

ம்ம் நிச்சயமாக

வினையூக்கி said...

அனுபவமே சிறந்த பாடம். நல்ல பதிவு சார்

tbr.joseph said...

வாங்க வினையூக்கி,

இந்த flxibility "பச்சோந்த்தி தனம் என நெகட்டிவ் ஆக விமர்சனம் செய்யப் படுகிறதே???. //

முதியவர்கள் மத்தியில்தானே.. உண்மைதான்.

பச்சோந்தியின் இயல்பை நாம் பல சமயங்களிலும் எதிர்மறையாகவே பார்த்திருப்பதால் வருகின்ற வினை இது.

tbr.joseph said...

ம்ம் நிச்சயமாக //

கேட்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது வினையூக்கி. அதை அப்படியே வைத்திருங்கள்.. வாழ்க்கையில் பல பிரச்சினைகளுக்கு அது தீர்வாக அமையும்.

tbr.joseph said...

அனுபவமே சிறந்த பாடம்//

உண்மைதான்..

Post a Comment