Wednesday, December 06, 2006

குழந்தைக் குறும்பு!

நம்முடைய குழந்தைகளிடம் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை நம்மில் பலரும் மறந்துபோகிறோம்.

பல சமயங்களில் அவர்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிப் போய்விடுவது சகஜம்.

உதாரணத்திற்கு சில:

ஏழு வயது சிறுமி தன்னுடைய தாயின் தலைமுடியில் சில நரைத்திருப்பதைப் பார்க்கிறாள்.

‘என்னம்மா சில முடிங்க மட்டும் நரைச்சிருக்கு?’

‘நீ வம்பு பண்ணும்போதெல்லாம் என்னோட தலைமுடியில ஒன்னு நரைச்சிருது.. அம்மா முடி நரைக்காம இருக்கணும்னா நீ நல்ல பிள்ளையா இருக்கணும்.’

சிறுமி சிறிது நேரம் தன்னுடைய தாயின் பதிலை அசைபோடுகிறாள். ‘ஓ! அதான் பாட்டியோட தலை சுத்தமா நரைச்சிருச்சா?’

***

டீச்சர்: திமிங்கிலம் பார்ப்பதற்கு பெரிசா இருந்தாலும் அதோட தொண்டை மிகவும் குறுகலானது. ஆகவே அது நம்மை விழுங்காது.

சிறுமி: டீச்சர்,  ஜோனாவை திமிங்கிலம் முழுங்கி வயித்துக்குள்ள மூனு நாள் வச்சிருந்து வெளியே துப்பிருச்சாமே.. எங்க சண்டே பைபிள் க்ளாஸ்ல சொல்லியிருக்காங்க.

டீச்சர்: (எரிச்சலுடன்): அதெல்லாம் இருக்காது.

சிறுமி: அப்படியா? நா மோட்சத்துக்கு போறப்போ அவரையே கேக்கப் போறேன்.

டீச்சர்: அவர் நரகத்துக்கு போயிருந்தா?

சிறுமி: அப்ப நீங்க கேளுங்க.

****

ஒரு LKG வகுப்பில் சிறுமிகள் மும்முரமாக வரைந்துக்கொண்டிருக்கின்றனர்.

டீச்சர்: என்னம்மா வரையறே?

சிறுமி: கடவுள்!

டீச்சர்: யாருக்குமே கடவுள் எப்படி இருப்பாருன்னு தெரியாதே.

சிறுமி: இன்னும் ஒரு நிமிஷத்துல தெரிஞ்சுரும்.

****

ஒரு வகுப்பிலுள்ள சிறுமிகளின் கூட்டு புகைப்படத்தின் (Group Photo) நகலை வாங்குவதற்கு அவர்களைத் தூண்டும் நோக்கத்துடன்:

டீச்சர்: நீங்க வளர்ந்து பெரியவங்களானதுக்கப்புறம் இதுலருக்கற ஒவ்வொருத்தரையா காமிச்சி இது மீனா.. இப்ப இவ பெரிய டாக்டர். இது லீனா இது பெரிய வக்கீல்னு சொல்லலாமீல்ல?’

வகுப்பின் பின்னாலிருந்து ஒரு சின்ன குரல்: இது எங்க டீச்சர். செத்துப் போய்ட்டாங்க. இப்படியும் சொல்லலாம்.

******

ஒரு வகுப்பில் ரத்த ஓட்டத்தைப் பற்றிய பாடம் நடத்தும்..

டீச்சர்: இங்க பாருங்க.. நா தலைகீழா நிக்கப் போறேன். என் உடம்புலருக்கற ரத்தம் முழுசும் என் தலையில இறங்கி முகம் முழுசும் சிவக்கப் போவுது.

சிறுமிகள்: ஆமாம் டீச்சர்!

டீச்சர்: இப்ப சொல்லுங்க. நாம நேரா நிக்கறப்போ ஏன் ரத்தம் முழுசும் காலுக்குள்ள இறங்க மாட்டேங்குது?

சிறுமி: ஏன்னா ஒங்க கால்ங்க காலியாயில்லையே!

******

ஒரு வகுப்பிலுள்ள குழந்தைகள் உணவகம் ஒன்றில் வரிசையில் நிற்கின்றன. அவர்களை அழைத்துச் சென்ற கன்னியர்களுள் ஒருவர்..

பிள்ளைங்களா.. இங்கருக்கற ஆப்பிள்கள்ல ஆளுக்கு ஒன்னுதான் எடுக்கணும்.. கடவுள் பாத்துக்கிட்டிருக்கார். மறந்துராதீங்க.

உணவகத்தின் மறுகோடியில் ஒரு இடத்தில் சாக்லேட் வைக்கப்பட்டிருந்தது. அதன் முன் சிறுமி அவசரமாக எழுதி வைத்திருந்த வாக்கியம்: ‘எவ்வளவு வேணும்னாலும் எடுத்துக்கலாம். ஏன்னா கடவுள் அங்க ஆப்பிள பாத்துக்கிட்டிருக்கார்.’

***

7 comments:

இலவசக்கொத்தனார் said...

:))

இவைகள் சிரிப்பு துணுக்குகளாகவே இருந்தாலும், குழந்தைகளின் கேள்விகள் சிந்தனைகளைத் தூண்டுவது நிஜம்.

tbr.joseph said...

வாங்க கொத்ஸ்,

குழந்தைகளின் கேள்விகள் சிந்தனைகளைத் தூண்டுவது நிஜம். //

பல பேருக்கு பதில் சொல்ல முடியாம எரிச்சலையும் தூண்டும்:)

Krishna said...

அவங்க கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாம எரிஞ்சி விழுந்தப்புறம், பதில் சொல்ல முயற்சிக்கும்போதுதான், எவ்வளவு விஷயங்கள கேள்வியே கேட்காம செஞ்சிக்கிட்டிருக்கம், ஏத்துக்கிட்டுருக்கம்னு தெரியுது சார். அதனாலேயே, அடுத்த கேள்விக்கு அதே மாதிரி எரிச்சலையிடறோமோ...

tbr.joseph said...

அடுத்த கேள்விக்கு அதே மாதிரி எரிச்சலையிடறோமோ... //

கரெக்டா சொன்னீங்க கிருஷ்ணா. நம்முடைய இயலாமைதான் இப்படி வெளிப்படுகிறது..

அப்புறம் ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்..

நான் இன்று கோவை சென்றுவிட்டு வெள்ளி காலைதான் வருவேன்.. ஆகவே சூரியன் இனி வெள்ளிதான்.. சனியும் வரும்..

சேதுக்கரசி said...

சிலவற்றை ஆங்கிலத்தில் வாசித்திருந்தாலும், தமிழில் வாசிக்க சுகம்...

tbr.joseph said...

வாங்க சேதுக்கரசி,

சிலவற்றை ஆங்கிலத்தில் வாசித்திருந்தாலும்...//

உண்மைதான். எனக்கு என்னுடைய மகளிடமிருந்து மயிலில் வந்ததன் மொழிபெயர்ப்புதான் இப்பதிவு.

கோபிநாத் said...

நல்ல நகைச்சுவையான பதிவு,

\\வகுப்பின் பின்னாலிருந்து ஒரு சின்ன குரல்: இது எங்க டீச்சர். செத்துப் போய்ட்டாங்க. இப்படியும் சொல்லலாம்.\\

இதா தான் குழந்தைங்க குசும்புங்கிறது... :))

Post a Comment