Saturday, December 30, 2006

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

‘ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் நம்முடைய கணக்குப் புத்தகங்களை சரிபார்ப்பது போலவே நம்முடைய உள்ளத்தையும் ஆராய்ந்து பார்ப்போம். எதிர் வரும் புத்தாண்டுக்கு நம்மை நாமே தயார் செய்துக்கொள்வோம்.’

நம் அலுவலகங்களைப் பொருத்தவரை இன்று ஆண்டின் இறுதி வேலைநாள்.

முன்பெல்லாம் வங்கிகளின் கணக்குகளை முடிக்கும் நாளாகவும் இந்நாள் இருந்தது. அப்போதெல்லாம் வருட இறுதி வேலை நாளன்று வீடு திரும்பவே நள்ளிரவைக் கடந்துவிடும். பத்தாண்டுகளுக்கு முன் நிதியாண்டை ஏப்ரல் முதல் மார்ச் வரை என்று மாற்றிய பிறகு டிசம்பர் மாத இறுதி வேலை நாள் ஒரு சாதாரண வேலை நாள் போலாகிவிட்டது.

என்னுடைய வங்கியில் ஆண்டின் இறுதி வேலைநாளன்று வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட வைப்புக் கணக்குகளுக்கும், வழங்கப்பட்டிருந்த கடன் கணக்குகளுக்கும் கொடுக்க வேண்டிய, வரவு வைக்கப்பட வேண்டிய வட்டியைக் கணக்கிடுவது. மொத்த வருமானத்திலிருந்து வர்த்தகத்தை நடத்திச் செல்ல எத்தனை செலவழித்திருக்கிறோம் என்பதைக் கணக்கிட்டு என்னுடைய கிளையின் நிகர லாபம் என்ன என்பதை கணக்கிட்டு முடிக்கும் நேரத்தில் சில சமயம் மகிழ்ச்சியாகவும் சில சமயம் கவலையாகவும் இருக்கும்.

சில மேலாளர்களுக்கு பாராட்டும் சிலருக்கு ஏச்சும் மேலதிகாரிகளிடமிருந்து கிடைக்கும்.

அதுபோலவே நம்முடைய சொந்த வாழ்க்கையையும் ஆராய்ந்து பார்க்க வேண்டிய நாள் இது.

இன்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய சில கேள்விகள் இவை:

1. எனக்கு நானே உண்மையாக இருந்திருக்கிறேனா?

2. என்னுடைய உறவினர்கள், நண்பர்கள் இவர்களுக்கு உண்மையாக இருந்திருக்கிறேனா?

3. நான் கடமைப்பட்டவர்களிடத்தில் - பெற்றோர், மனைவி - மக்கள், நண்பர்கள் – விசுவாசமாக, நன்றியுள்ளவனாக இருந்திருக்கிறேனா?

4. உண்மைக்கு புறம்பாக பேசி பிறரை வஞ்சித்திருக்கிறேனா?

5. வேண்டுமே தெரிந்தும் பிறர் மீது சேற்றை வாரியிறைத்திருக்கிறேனா (Character assassination)?

6. பேராசை, அழுக்காறு கொண்டிருக்கிறேனா?

இன்னும் இதுபோன்ற எத்தனை கேள்விகளை வேண்டுமானாலும் நமக்கு நாமே கேட்டுக்கொள்ளலாம்.

நாம் புனிதர்கள் அல்ல. சாதாரண மனிதர்கள்.

ஒரு மனிதனுக்கு இயற்கையாகவே ஏற்படும் சபலம், சலனம், சஞ்சலம் எல்லாவற்றிற்கும் அடிமையானவர்கள் நாம்.

சோதனைகள் நிறைந்த இவ்வுலகில் இவற்றை முற்றிலுமாக விலக்கி வைக்க எந்த ஞானியாலும் இயலாது என்பதும் நமக்குத் தெரியும்.

இக்கேள்விகளுக்கு நம்மிடமிருந்து எத்தகைய பதில் வரவேண்டுமென்றோ அல்லது சரியாக வரும் பதில்களுக்கு இத்தனை மதிப்பெண், தவறான பதில்களுக்கு இத்தனை எதிர்மறை மதிப்பெண் (Negative marks) இரண்டையும் கூட்டிக் கழித்து பார்த்து இத்தனை மதிப்பெண் வந்தால் நான் நல்லவன்.. இல்லையென்றால்..

இதுவல்ல நாம் செய்ய வேண்டியது..

நம்முடைய பதில்கள் எதுவாக இருப்பினும் நம்முடைய த்ம சோதனையில் நாம் உண்மையாக இருந்தால் போதும்..

நாம் யாராக இருந்தோம், நாம் யாராக இருக்க வேண்டும் என்பது நமக்கு தெளிவாகிவிடும்.

கடந்த ஆண்டில் நாம் வாழ்ந்த வாழ்க்கையில் நமக்கு திருப்தி உண்டென்றால் அப்படியே தொடர்ந்து இருப்போம்.

இல்லையென்றால் நம்மை திருத்திக்கொள்ள முயல்வோம்.

மலரும் புத்தாண்டு நம் அனைவருடைய வாழ்க்கையிலும் மகிழ்ச்சியையும், வெற்றிகளையும் வாரி வழங்க வேண்டும் பிரார்த்திக்கிறேன்..

*****

Thursday, December 28, 2006

பணியில் சேர ஜாதகம் தேவை!!

வேலைக்கொரு ஜாதகம்!


இன்றைய ஃபைனான்ஷியல் எக்ஸ்ப்ரஸ் பத்திரிகையின் முதல் பக்கத்தில் வந்திருந்த இந்த தலைப்பைப் பார்த்ததும் இது ஏதோ வேடிக்கைக்காக கொடுத்த தலைப்பு என்று நினைத்தேன்.

Your horoscope holds the key to a plum job!

ஆனால் கட்டுரையைப் படித்துமுடித்ததும்தான் விளங்கியது இது வெறும் வேடிக்கைக்காக எழுதப்பட்டத்தல்ல என்பது.

இதை முழுவதும் படிக்க இங்கு

http://www.financialexpress.com/fe_full_story.php?content_id=150118
செல்லுங்கள்.

இதைப் படித்து முடித்ததும் என் உள்ளத்தில் எழுந்த வினாக்கள் இவை:

சாதாரணமாக முதல் தர நிறுவனங்களில் பணிக்கு அமர்த்த எழுத்துத் தேர்வு (Written Exam), குழு உரையாடல் (GD), தொழில் சம்பந்தப்பட்ட மற்றும் மனித வள நேர்காணல் (Technical and HR Interview) என மூன்று சுற்றுகள் நடத்தப்படுகின்றன. இனி ஜாதக பொருத்தம் என்ற நான்காவது சுற்றும் இருக்குமோ?

இந்த கேள்விக்கு ஆம் என்பது பதிலானால்..

எனக்கு தெரிந்தவரை இந்துக்கள் அல்லாதவர்கள் ஜாதகம் கணிப்பதில்லை. ஒருவேளை அவர்கள் இந்த சுற்றுக்கு தகுதி பெற மாட்டார்களோ?

அதுவரை எல்லா சுற்றுகளிலும் முதலாவதாக வந்தவருடைய ஜாதகம் சரியில்லை என்றால் அவர் நிராகரிக்கப்படுவாரோ?

சரி. நான்காவது சுற்றில் கலந்துக்கொள்ளும் ஜாதகம் யாருடைய ஜாதகத்துடன் பொருந்த வேண்டியிருக்கும்? நிறுவனத்துடனா? அப்படியொரு ஜாதகம் இருக்குமா? அல்லது அதன் முதல்வர் அல்லது மூத்த பங்குதாரர் இவர்களுடைய ஜாதகத்துடனா?

இன்னுமொரு கேள்வி. ஜாதகப் பொருத்தத்தை சரிவர கணிப்பதற்கு எல்லோரும் ஒத்துக்கொள்ளக் கூடிய தரத்தில் ஒரு கருவி அல்லது முறை வகுக்கப்பட்டுள்ளதா என்ன?

எங்களுடைய வங்கியில் கடன் பெற வருபவர்கள் வங்கிகளுக்கு ஒன்று, வரி இலாக்காவிற்கு ஒன்று என இரு வேறு நிதியறிக்கைகளை வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

அதுபோலவே திருமணத்திற்கு ஒன்று, பணியில் சேர ஒன்று என இரு ஜாதகத்தையும் குழந்தை பிறந்தவுடனே கணித்து வைத்து விட வேண்டும் போலிருக்கிறது!

இப்போதெல்லாம் குழந்தை நல்ல நேரத்தில் பிறந்துவிட வேண்டுமென்பதற்காக சுகப் பிரசவத்தை தவிர்த்து தங்களுக்கு வேண்டிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து குழந்தைப் பிறக்கச் செய்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

இந்த ஜாதகப் பொருத்தம் பார்த்து பணிக்கு சேர்க்கும் முறை பிரபலமானால் குழந்தைப்பேறு மருத்துவர்களுக்கு கொண்டாட்டம்தான்..

இது மூடநம்பிக்கையின் உச்சக்கட்டம் என்றல்லாமல் வேறென்ன!

வாழ்க இந்தியா!

*****

Wednesday, December 27, 2006

இன்றைய சாதனை!

‘இன்று ஒன்றும் பெரிதாக சாதிக்க முடியவில்லையே என்று கவலைப்படாதீர்கள். இன்று நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் உங்களுடைய அன்பை வெளிப்படுத்துங்கள். அதுவே ஒரு பெரிய வெற்றியை அடைந்த மகிழ்ச்சியை உங்களுக்கு அளிக்கும்.’

சாதனை என்பது தினமும் சாத்தியமல்ல.

தினமும் சாதிக்கக் கூடியது எதுவும் பெரிய சாதனையுமல்ல.

ஆனால் பிறரன்பு அப்படியல்ல.

நம்மை நாமே அன்பு செய்வது பெரிய விஷயமல்ல. அதை ஐந்தறிவு படைத்த விலங்குகளும் செய்கின்றன.

நம்மை நாம் அன்பு செய்வது போல பிறரையும் அன்பு செய்ய வேண்டும்!

செய்து பாருங்கள். அது எத்தனை சிரமம் என்பது விளங்கும்.

மனித இயல்புக்கு அப்பாற்பட்ட விஷயம் அது.

நம்மை நம்முடைய எல்லா குறைகளுடனும் நாம் ஏற்றுக்கொள்வதுபோல பிறரையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இயலாத காரியம்தான். ஆனால் முயன்றால் முடியாதது எதுவுமில்லையல்லவா?

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் பிணைப்பை காதல் என்கிறோம்.

காதலின் அடித்தளமே இந்த பிறரன்புதான்.

இதில் கண்டதும் காதல் சேர்த்தியல்ல. இது கதைகளில் வேண்டுமானால் சாத்தியமாகலாம். ஆனால் நடைமுறை வாழ்வில் ஏற்படும் இத்தகைய காதல் நாளடைவில் வெறும் காகிதக் காதலாகிவிட வாய்ப்புண்டு.

இறைவனுக்கு மனிதர்களை இனம் பிரித்து பார்க்க தெரிவதில்லை. சாதி, மதம், மொழி, நிறம் இவை எவற்றையுமே பார்க்காமல் அன்பு செய்கிறவர் இறைவன்.

ஆகவேதான் அன்பே உருவானவர் இறைவன் என்கிறோம்.

இறைவனால் இது முடிகிறது. ஏனெனில் அவரே அனைத்தையும் படைத்தவர்.

நம்மால் இது முடிவதில்லை.

முடியாததை செய்து முடிப்பதே ஒரு சாதனைதானே..

பெரிதாய் எதையும் சாதிக்க முடியவில்லையே என வருந்துவதைத் தவிர்த்து இதையாவது சாதிக்க முயல்வோம்!

****


Monday, December 25, 2006

கிறிஸ்த்துமஸ் வாழ்த்துக்கள்!!

கடலைத் தேடி நதிகள் பாயும்,
மலரைத் தேடி வண்டுகள் நாடும்,

இது இயற்கை!

மனிதனைத் தேடி இறைவன் வந்த நாள் இது!!Photobucket - Video and Image Hosting
அனைவருக்கும் கிறிஸ்த்துமஸ் தின வாழ்த்துக்கள்!!!


அன்புடன்,
ஜோசஃப்

Wednesday, December 20, 2006

நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும்!

‘நமக்கு நல்லது நடக்கும் சமயங்களில் நாமும் பிறருக்கு அதை செய்ய முயல வேண்டும்.’

தினை விதைத்தவன் தினையையும் வினை விதைத்தவன் வினையையும் அறுவடை செய்வான் என்பதைக் கேட்டிருக்கிறோம்.

நமக்கு நல்லது  நடக்க வேண்டும் என்று  எப்படி விரும்புகிறோமோ அது பிறருக்கும் நடக்க வேண்டும் என்று விரும்ப வேண்டும்.

நாமும் நம்மைச் சார்ந்தவர்கள் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்று நாம் நினைப்பது போலவே மற்றவர்களும் நினைக்க வாய்ப்புள்ளது என்பதை நம்மில் பலரும் மறந்து போகிறோம்.

இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களை பலரும் இன்றும் பாசத்துடன் நினைவுகூரக் காரணம் அவர் தனக்கு கிடைத்த சன்மானங்களையெல்லாம் தொண்டு நிறுவனங்களுக்கு பகிர்ந்தளித்த அந்த நல்ல உள்ளம்!

இவரைப் போன்று நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கு சான்றாக சான்றோர்கள் பலர் வாழ்ந்த பூமி இது.

நாம் நல்லவற்றையே நினைத்தால் நமக்கும் நல்லது நடக்கும் நம்மால் பிறருக்கும் நல்லவற்றை செய்ய முடியும் என்பதை நம்புகிறவன் நான்.

பிறருடைய நல்லவைகளில், அவர்களுடைய வெற்றியில் நாம் பங்குகொள்கிறோமோ இல்லையோ அதைப் பார்த்து அழுக்காறு கொள்ளாமலாவது இருக்க முயல வேண்டும்.

ஆனால் அதற்கு மேலே ஒரு படி சென்று அவர்களுடைய மகிழ்ச்சியில் கலந்துக்கொள்ள முயன்றால் அதில்தான் மனிதம் முழுமைப் பெறுகிறது.

இப்படிப்பட்டவர்களைத்தான் சரித்திரம் என்றென்றும் நினைவில் கொண்டிருக்கும்.

நல்லதை நினைப்போம், நல்லதையே செய்வோம்.

*****

Monday, December 18, 2006

சாதனை படைப்போம்!!

‘பெரிய சாதனைகளை படைக்க பெரியவர்களாக (வல்லவர்கள்) இருக்க வேண்டும் என்பதல்ல.. பெரியவற்றை சாதிக்க வேண்டுமென்ற எண்ணமுள்ள சிறியவர்களாலும் முடியும்’

‘தம்மை உயர்த்திக்கொள்வோர் தாழ்த்தப்படுவோர். தம்மை தாழ்த்திக்கொள்வோர் உயர்த்தப்படுவோர்’ : இது பைபிள் வாக்கு

இறைவனின் படைப்பிலே உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்றில்லை.

அவரவர் சொல், செயல், சிந்தனை இவைகளை வைத்தே ஒருவர் பெரியவரா சிறியவரா என்பதை இவ்வுலகம் கணிக்கின்றது.

ஒருவரை பெரியவர் என்று கணிக்க அவருடைய  பணம், பதவி அல்லது செல்வாக்கு ஆகியவையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.

ஆனால் அத்தகைய கணிப்பு நிரந்தரமானதல்ல என்பதையும் நான் கண்டுணர்ந்திருக்கிறோம்.

இன்று முதல்வராயிருந்தவர் நாளை கைதியாவதும், இன்று கைது செய்யப்படுபவர் நாளை முதல்வராவதும் சரித்திரம்!

சமுதாயத்தின் அடிமட்டத்தில் வறுமையில் உழலும் குடும்பத்திலிருந்து வந்த எத்தனையோ இளைஞர், இளைஞிகள் உலகில் எவரும் கனவிலும் நினைத்துப் பார்க்கவியலாத சாதனைகள¨ நிகழ்த்தியிருப்பதை சமீப காலமாக பல பத்திரிகைகளில் வாசித்திருக்கிறோம்.

சாதனைகளைப் படைப்பதற்கு நாம் பெரியவர்களாக, அதாவது மெத்தப் படித்த மேதைகளாகவோ, அல்லது செல்வாக்குள்ளவர்களாகவோ அல்லது செல்வாக்குள்ளவர்களை பரிச்சயமுள்ளவர்களவோ இருக்க வேண்டும் என்பது அவசியமல்ல என்பதை இவை நிரூபித்துள்ளன.

சாதனைகளைப் படைக்க நம்முடைய சமுதாய மற்றும் பொருளாதார நிலை ஒரு பொருட்டே இல்லை.

சாதனைகளைப் படைக்க அதை படைக்க வேண்டுமென்ற எண்ணம், நம்மால் அதை அடைய முடியும் என்ற ஒரு முழுமையான ஈடுபாடு இருந்தாலே போதும்.

சாதனைகள் நம் காலடியில் வந்து விழும் என்பது நிச்சயம்!

சாதனைகள் படைக்க சந்திரனை எட்டிப் பிடிக்க வேண்டுமென்பதில்லை.

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நம்மால் எட்ட முடியாதவற்றை எட்டிப்பிடிப்பதும் சாதனைதான்.

சாதனை படைப்போர் புது சரித்திரத்தையே எழுதுபவர்கள் என்பதை மறக்கலாகாது..

வாருங்கள். புது சாதனை படைப்போம், புது சரித்திரம் எழுதுவோம்!!

****Friday, December 15, 2006

குழந்தைகளாய் மீண்டும் பிறப்போம்!

‘பிறர் மீது நம்பிக்கை வைப்பது, முழுமையான, எந்த நிபந்தனைகளும் இல்லாத அன்பு, மற்றும் மகிழ்ச்சி இவைகளில் குழைந்தகைளைப் போலவும் அனுபவம், பிறர் சிநேகம் மற்றும் விவேகம் இவற்றில் பெரியவர்களாகவும் இருப்போம்.’

நமக்கு பல உருவங்கள் உண்டு.

என்னுடைய குடும்பத்தினருக்கு பாசமுள்ள தலைவனாக, என் நண்பர்களுக்கு நல்லதொரு நண்பனாக, என்னுடைய அலுவலகத்தில் எனக்குக் கீழே பணிபுரிபவர்களுக்கு நல்ல பொறுப்புள்ள அதிகாரியாக, என் சக அதிகாரிகள் மத்தியில் நம்பிக்கையுள்ளவனாக, என்னுடைய மேலதிகாரிகளுக்கு நல்ல பணிவுள்ள ஊழியனாக, சமுதாயத்தில் சட்டத்தைக் கடைபிடிக்கும் நல்ல குடிமகனாக என பல உருவங்கள், பல முகங்கள் எனக்கு இருக்கின்றன.

இது நம் எல்லோருக்கும் பொருந்தும்.

நேரம், காலம், இடம் இவற்றிற்கேற்றார்போல் நம்முடைய நடத்தை, பேச்சு, குணாதிசயங்கள் ஆகியவை மாற வேண்டும்.

இல்லையேல் ஆங்கிலத்தில் சொல்வதுபோல சமுதாயத்தில் நாம் ஒரு misfit ஆகக் கருதப்பட்டுவிடுவோம்.

நான் என்னுடைய கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ள மாட்டேன், நான் செல்கின்ற பாதையில்தான் செல்வேன் என்று பிடிவாதத்துடன் செயல்பட்டால் நமக்கு மட்டுமல்ல நம்மைச் சார்ந்திருப்பவர்களுக்கும் பிரச்சினைதான்.

நம்முடைய குழந்தைகளைப் பாருங்கள்.

எந்த சூழலுக்கும் சட்டென்று தன்னுடைய நிறத்தை மாற்றிக்கொள்ளும் பச்சோந்தியைப் போல தங்களை flexible ஆக வைத்துக்கொள்வது குழந்தைகளுக்கு கைவந்த கலை.

அவர்களால் மட்டும் எப்படி முடிகிறது?

தங்களை சுற்றியுள்ள் எவரையும் எளிதில் நம்பிவிடும் வெள்ளை மனம், எந்த எதிர்பார்ப்புமில்லாத அன்பு, தொட்டதற்கெல்லாம் மகிழ்ச்சியடையும் உள்ளம், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என தரம் பிரிக்கத் தெரியாத பார்வை இவைதான் குழந்தைகள் தங்களை எந்த சூழலிலும் ஒன்றிப்போய்விட உதவுகிறது.

நாம் வளர்ந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும் சமயங்களிலெல்லாம் நானா, நானா இப்படியெல்லாம் இருந்தேன் என்றும் அந்த நாள் மீண்டும் திரும்பி வராதா என்றும் ஏங்குகிறோமே, ஏன்?

அந்த நாட்களில் நாம் எவ்வித கவலையும் இல்லாமல் இருந்தோம் என்பதால்தானே..

நாம் கடந்து வந்த பாதையில் நாம் சந்தித்த நபர்கள், நமக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியான, கசப்பான அனுபவங்கள், வெற்றி தோல்விகள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள்..

இவற்றிலிருந்து நாம் கற்று தெளிந்தது என்ன?

நம்முடைய நிழல் மீதே அவநம்பிக்கை, நம் உடன்பிறப்புகளின் மீதே பொறாமை, ஏன், நம்மில் சிலருக்கு நம்முடைய பிறப்புகளிடமே பொறாமை, எதிலும் குறைகளை மட்டுமே கண்டுபிடிக்கும் அபார திறமை.

நம்முடைய கடந்த கால அனுபவங்கள் நம்மை எதையும் மன முதிர்ச்சியுடனும் விவேகத்துடனும் எதிர்கொள்ளும் முழு மனிதர்களாக மாற்றியிருக்கிறதா? நம்முடைய குழந்தைப் பருவத்து குணங்களை இழந்துவிடாமல் இப்போதும் கொண்டிருக்கிறோமா?

நம்மை நாமே சோதித்துப் பார்ப்போம்..

****

Thursday, December 14, 2006

ஆக்கபூர்வமான அறிவு!

‘அறிவை (Knowledge) வளர்த்துக்கொள்வது நம்முடைய நோக்கத்தை அடைய உதவும் பாதை மட்டுமே. அதுவே நம்முடைய நோக்கமல்ல. நோக்கம் இல்லாத அறிவு அழிவுக்கு இட்டுச் செல்லும் பாதையாகவும் மாறிவிடக்கூடும்’

மனித படைப்பிலே மிகவும் அற்புதமானது மனிதனுடைய மூளை.

அது நம் எல்லோருக்குமே பொதுவானது, அதாவது அளவைப் பொருத்தவரை.

ஆனால் அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறோம்.

ஆயிரம் மனிதர்கள் ஒன்று சேர்ந்து சாதிப்பதைவிட பன்மடங்கு ஒரு இயந்திர மனிதனால் (Robot) சாதித்துவிட முடியும் என்பதை மனிதன் நிரூபித்திருக்கிறான். ஏனெனில் அதன் கர்த்தா மனிதன்!

மனித மூளையில் இத்தனை விஷயத்தைத்தான் சேமித்து வைக்க முடியும் என்ற எல்லையை இதுவரை எவரும் கண்டறிந்ததில்லை. இத்தனை கிலோ பைட்ஸ் விவரங்களை மட்டுமே சேமித்து வைக்க முடியும் என்ற எவ்வித எல்லையும் இல்லை.

ஆனால் மனிதன் சேகரித்து வைக்கும் இத்தகைய அறிவு (விஷய ஞானம்) மட்டுமே ஒரு மனிதனை அறிவாளியாக்கிவிட முடியாது.

ஒரு ஆக்கபூர்வமான விஞ்ஞானிக்கு நிகராக விஷய ஞானமுள்ள தீவிரவாதியையும் இன்றைய உலகில் நம்மால் ஒருசேர பார்க்க முடிகிறது.

எத்தனை பாதுக்காப்புகள் நிறைந்த மென்பொருளை ஒரு ஆக்கபூர்வமான மென்பொருள் பொறியாளன் கண்டுபிடித்தாலும் அடுத்த நிமிடமே அதை ஊடுருவி நாசப்படுத்தக்கூடிய கிருமியையும் கண்டுபிடித்துவிடுகிறான் அவனுக்கு நிகரான அல்லது அவனை விடவும் விஷய ஞானமுள்ள, ஆற்றல்படைத்த வேறொரு பொறியாளன்!

இருவருமே ஒரே அளவுள்ள மூளையைக் கொண்டவர்கள்தான். ஒருவேளை ஒரே பல்கலைக்கழகத்தில் ஏன் ஒரே ஆசிரியரிடம் பயின்ற மாணவர்களாகக் கூட இருக்கலாம்.

தான் சேகரித்து வைத்த சேமிப்பை அது பணமாக இருந்தாலும், பொருளாக இருந்தாலும் அல்லது இவை இரண்டையும் பெருமளவில் ஈட்டக் கூடிய விஷய ஞானமாக இருந்தாலும் அதை எந்த நோக்கத்திற்கு பயன்படுத்துகிறான் என்பதில்தான் மனிதன் வேறுபடுகிறான்.

ஏவுகணை தயாரிப்பில் பயிற்சி பெறும் ஒரு ஆக்கபூர்வமான விஞ்ஞானி தன்னுடைய விஷய ஞானத்தை தன் நாட்டின் பாதுகாப்புக்கு பயன்படுத்துகிறார் என்றால் அதே விஷய ஞானத்தை ஒரு தீவிரவாதி அழிவுக்கு பயன்படுத்துகிறான்.

ஆக்கபூர்வமான நோக்கம் இல்லாத அறிவு அழிவுக்கு இட்டுச் செல்லும் ஒரு கருவி, ஒரு பாதை என்பதில் சந்தேகமேயில்லை.

அறிவை வளர்ப்போம். அதை ஆக்கபூர்வமாக பயன்படுத்துவோம்.

*****

Tuesday, December 12, 2006

உதவி கோருவது யாசகம் அல்ல!

‘பிறருதவி என்பது ஒருவழிப்பாதையல்ல’

நாம் செயல்படுத்த நினைத்ததை செயல்படுத்த இயலாமல் தடங்கலையோ, தாமதங்களையோ எதிர்கொள்ளும் நேரங்களில் மற்றவர் உதவியை நாடுவதில் தயக்கம் காட்டலாகாது.

நம் ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை உள்ளது.

சிலர் சிறுவயது முதலே நினைவாற்றல் உள்ளவர்களாக இருப்பார்கள். சிறிது நேரம் படித்தாலே போதும். அப்படியே மனதில் பதிந்துவிடும். படித்தவற்றை அப்படியே தேர்வில் எழுதி சிறந்த மதிப்பெண்களைப் பெற்றுவிடுவர்.

வேறு சிலருக்கு படித்ததையே மீண்டும், மீண்டும் படித்தால்தான் நினைவில் நிற்கும்.

இன்னும் சிலருக்கு எத்தனை முறை படித்தாலும் நினைவில் நிற்கவே நிற்காது.

இது மாணவப் பருவத்தில்.

படிப்பு முடிந்து ஒரு அலுவலில் அமர்ந்தாயிற்று.

சிலர் தங்களுடைய அலுவல்களில் முதல் முயற்சியிலேயே வெற்றியடைந்துவிடுவார்கள்.

அவர்களுக்கு நிகரான அறிவாற்றலும் செயல்திறனும் இருந்தும் சிலருக்கு எத்தனை கடினமாக முயற்சி செய்தாலும் வெற்றி கிடைப்பது அரிதாக இருக்கும். பல தோல்விகளுக்குப் பிறகே வெற்றிக்கனியை அவர்கள் அடையமுடிகிறது.

இன்னும் சிலருக்கோ எத்தனை முயன்றாலும் தாங்கள் நினைத்ததை அடைய முடியாமல் தோல்வியிலேயே முடிவதுண்டு.

இத்தகைய சூழலில் நம்மில் பலரும் இருந்திருக்க வாய்ப்புண்டு.

முதல் சாரார், அதாவது முதல் முயற்சியிலேயே வெற்றியடைந்துவிடுபவர்களுடைய அணுகு முறையைக் கூர்ந்து கவனித்தால் அவர்களுடைய வெற்றியின் ரகசியம் நமக்கு தெரியவரும்.

எந்த ஒரு காரியத்திலும் நாம் ஈடுபடுவதற்கு முன் அதை முழுமையாக செய்து முடிக்கக் கூடிய ஆற்றல் நம்மிடம் உள்ளதா என்பதை ஆராய்ந்து தேவைப்பட்டால் நம்முடைய சக அலுவலர்களுடைய உதவியை நாடிப் பெற்றால் வெற்றி நிச்சயம்.

உதவி கோருவதை யாசகம் என்று கருதுபவர்களும் மற்றவர்களிடம் உதவி கேட்டு சென்றால் அவர்களும் பிறகு நம்மிடம் உதவி கேட்டு வந்து நிற்பார்களே என்றும் கருதுபவர்களுமே தங்களுடைய முயற்சிகளில் தேக்கத்தையும், தோல்விகளையும் சந்திக்கிறார்கள் என்பதை நான் என்னுடைய அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.

உதவி கேட்டு நிற்பது நம்முடைய கையாலாகாத்தனத்தை மற்றவர்களுக்கு காட்டிவிடுமே என்று ஒருபோதும் சிந்திக்கலாகாது.

ஆனால் ஒன்று. நாம் பிறருக்கு உதவி செய்திருந்தால் மட்டுமே நமக்கு தேவைப்படும் நேரத்தில் மற்றவர்கள் நம்முடைய துணைக்கு வர தயாராயிருப்பார்கள்!

பிறருதவியைக் கோருவதென்பது ஒரு வழிப்பாதையல்ல என்பதையும் நாம் மறந்துவிடலாகாது.

நாம் செய்யும் உதவி நமக்கு தேவைப்படும்போது கேட்காமலே திரும்பி வரும்!

*******


Wednesday, December 06, 2006

குழந்தைக் குறும்பு!

நம்முடைய குழந்தைகளிடம் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை நம்மில் பலரும் மறந்துபோகிறோம்.

பல சமயங்களில் அவர்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிப் போய்விடுவது சகஜம்.

உதாரணத்திற்கு சில:

ஏழு வயது சிறுமி தன்னுடைய தாயின் தலைமுடியில் சில நரைத்திருப்பதைப் பார்க்கிறாள்.

‘என்னம்மா சில முடிங்க மட்டும் நரைச்சிருக்கு?’

‘நீ வம்பு பண்ணும்போதெல்லாம் என்னோட தலைமுடியில ஒன்னு நரைச்சிருது.. அம்மா முடி நரைக்காம இருக்கணும்னா நீ நல்ல பிள்ளையா இருக்கணும்.’

சிறுமி சிறிது நேரம் தன்னுடைய தாயின் பதிலை அசைபோடுகிறாள். ‘ஓ! அதான் பாட்டியோட தலை சுத்தமா நரைச்சிருச்சா?’

***

டீச்சர்: திமிங்கிலம் பார்ப்பதற்கு பெரிசா இருந்தாலும் அதோட தொண்டை மிகவும் குறுகலானது. ஆகவே அது நம்மை விழுங்காது.

சிறுமி: டீச்சர்,  ஜோனாவை திமிங்கிலம் முழுங்கி வயித்துக்குள்ள மூனு நாள் வச்சிருந்து வெளியே துப்பிருச்சாமே.. எங்க சண்டே பைபிள் க்ளாஸ்ல சொல்லியிருக்காங்க.

டீச்சர்: (எரிச்சலுடன்): அதெல்லாம் இருக்காது.

சிறுமி: அப்படியா? நா மோட்சத்துக்கு போறப்போ அவரையே கேக்கப் போறேன்.

டீச்சர்: அவர் நரகத்துக்கு போயிருந்தா?

சிறுமி: அப்ப நீங்க கேளுங்க.

****

ஒரு LKG வகுப்பில் சிறுமிகள் மும்முரமாக வரைந்துக்கொண்டிருக்கின்றனர்.

டீச்சர்: என்னம்மா வரையறே?

சிறுமி: கடவுள்!

டீச்சர்: யாருக்குமே கடவுள் எப்படி இருப்பாருன்னு தெரியாதே.

சிறுமி: இன்னும் ஒரு நிமிஷத்துல தெரிஞ்சுரும்.

****

ஒரு வகுப்பிலுள்ள சிறுமிகளின் கூட்டு புகைப்படத்தின் (Group Photo) நகலை வாங்குவதற்கு அவர்களைத் தூண்டும் நோக்கத்துடன்:

டீச்சர்: நீங்க வளர்ந்து பெரியவங்களானதுக்கப்புறம் இதுலருக்கற ஒவ்வொருத்தரையா காமிச்சி இது மீனா.. இப்ப இவ பெரிய டாக்டர். இது லீனா இது பெரிய வக்கீல்னு சொல்லலாமீல்ல?’

வகுப்பின் பின்னாலிருந்து ஒரு சின்ன குரல்: இது எங்க டீச்சர். செத்துப் போய்ட்டாங்க. இப்படியும் சொல்லலாம்.

******

ஒரு வகுப்பில் ரத்த ஓட்டத்தைப் பற்றிய பாடம் நடத்தும்..

டீச்சர்: இங்க பாருங்க.. நா தலைகீழா நிக்கப் போறேன். என் உடம்புலருக்கற ரத்தம் முழுசும் என் தலையில இறங்கி முகம் முழுசும் சிவக்கப் போவுது.

சிறுமிகள்: ஆமாம் டீச்சர்!

டீச்சர்: இப்ப சொல்லுங்க. நாம நேரா நிக்கறப்போ ஏன் ரத்தம் முழுசும் காலுக்குள்ள இறங்க மாட்டேங்குது?

சிறுமி: ஏன்னா ஒங்க கால்ங்க காலியாயில்லையே!

******

ஒரு வகுப்பிலுள்ள குழந்தைகள் உணவகம் ஒன்றில் வரிசையில் நிற்கின்றன. அவர்களை அழைத்துச் சென்ற கன்னியர்களுள் ஒருவர்..

பிள்ளைங்களா.. இங்கருக்கற ஆப்பிள்கள்ல ஆளுக்கு ஒன்னுதான் எடுக்கணும்.. கடவுள் பாத்துக்கிட்டிருக்கார். மறந்துராதீங்க.

உணவகத்தின் மறுகோடியில் ஒரு இடத்தில் சாக்லேட் வைக்கப்பட்டிருந்தது. அதன் முன் சிறுமி அவசரமாக எழுதி வைத்திருந்த வாக்கியம்: ‘எவ்வளவு வேணும்னாலும் எடுத்துக்கலாம். ஏன்னா கடவுள் அங்க ஆப்பிள பாத்துக்கிட்டிருக்கார்.’

***

Monday, December 04, 2006

மகிழ்ச்சியும் உற்சாகமும்..

‘நாம் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இருக்க வேண்டுமென்றால் அதை மற்றவர்களுக்கு உணர்த்தும் வண்ணம் இருக்க வேண்டும் நம்முடைய நடவடிக்கைகள். அப்போதுதான் நாமும் உண்மையில் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இருக்கவியலும்.’

நான் உள்ளூர உற்சாகமாக இருக்கிறேன் என்று கூறிவிட்டு நம்முடைய கிரிக்கெட் வீரர்கள் தலையைத் தொங்க போட்டுக்கொண்டு மைதானத்தில் காட்சியளிப்பதைப் போல நடந்தால் யார் அதை நம்புவார்கள்?

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருப்பது எத்தனை உண்மை!

மகிழ்ச்சி உள்ளத்தில் இருந்தால் அது நிச்சயம் நம்முடைய பிரகாசமான முகத்தில் தெரியும்.

துக்கத்தை வேண்டுமானாலும் மறைத்துவிடலாம். ஆனால் மகிழ்ச்சியை நம்மால் மறைக்க முடியாது.

துக்கம் பகிரப் பகிர குறையும்.. மாறாக மகிழ்ச்சி பலுகிப் பெருகும்.

மற்றவர்களுடன் நம்முடைய மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொள்ள அதை நம்முடைய முகத்தைத் தவிர வேறு எதில் காட்டமுடியும்?

உற்சாகமும் அப்படித்தான். அது ஒரு தொற்று நோய் போல என்றாலும் மிகையாகாது.

நம்முடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் அனைவரையும் நம்முடைய மகிழ்ச்சியும் உற்சாகமும் தொற்றிக்கொள்ளும், பாதிக்கும்..

நாம் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறோமோ அதுபோலத்தான் நாமும் ஒரு நாள் ஆவோம் என்பது உண்மைதானே..

நான் இன்று செய்யும் ஒவ்வொரு செயலிலும் வெற்றியடையப் போகிறேன் என்று நமக்கு நாமே கூறிக்கொள்ள வேண்டும்.

நம்மையுமறியாமலே நாம் இன்று செய்யவிருக்கும் ஒவ்வொரு செயலிலும் நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் ஈடுபடுவோம்.

உற்சாகத்துடனும், நம்பிக்கையுடனும் நாம் செய்யும் எந்த ஒரு செயலாவது தோல்வியில் முடியுமா?

வெற்றியில் முடியும் எந்த ஒரு செயலும் நமக்கு மகிழ்ச்சியை அளிக்காது இருக்கவியலுமா?

ஒவ்வொரு நாளையும் நம்பிக்கையான, மகிழ்ச்சியான, உற்சாகமான சிந்தனைகளுடன் துவக்குவோமானால் அந்த நாள் மிக மகிழ்ச்சியான நாளாக முடியும் என்பதில் சந்தேகமேயில்லை..

இது நான் என் அனுபவத்தில் கண்டுணர்ந்த உண்மை..

என்னுடைய அலுவலக அனுபவங்களை என்னுடன் பகிர்ந்துக்கொள்ள விரும்புவோர் என் உலகத்திற்கு வருமாறு அழைக்கிறேன்: http://ennulagam.blogspot.com/2006/12/ii-1.html

***Friday, December 01, 2006

முயற்சி திருவினையாக்கும்!

‘நாம் எந்த ஒரு விஷயத்தையும் செயல்படுத்த முயற்சி செய்தால் மட்டுமே அது நம்மால் இயலுமா, இயலாதா என்பது நமக்கே தெரியவரும்.’

இயலாமை என்று ஒன்றும் இல்லை.

பள்ளிப் பயிலும் சிறுவனுக்கு இரு சக்கர சைக்கிள் ஓட்டுவது மலைப்பாகத்தான் தோன்றுகிறது.

ஆனால் தந்தையின் உதவியுடன் தட்டுத் தடுமாறி பயிலும்போது பலமுறை விழுந்து, சிறாய்ப்புக் காயங்களுக்கு ஆளாகி நாளடைவில் சில்லென்று காற்று முகத்தில் வீச தன்னுடைய நண்பர்கள் முன்னிலையில் ஹாண்டில்பாரிலிருந்த கைகளையும் எடுத்துவிட்டு ஜாலவித்தைக் காட்டுகையில் மனதில் தோன்றும் மகிழ்ச்சி!

அதற்கு ஈடு இணை உண்டா என்ன?

அதை செயல்படுத்த அச்சிறுவன் எடுத்துக்கொண்ட முயற்சிகளில் சந்திக்க வேண்டிய தோல்விகளையும் வேதனைகளையும் முன்கூட்டியே சிந்தித்துப் பார்த்திருந்தால் அவனால் அதில் இறங்கியிருக்க முடிந்திருக்குமா என்பது சந்தேகமே..

ஆனால் நம்முடைய வயதும் படிப்பும் அளித்திருக்கும் இந்த  அனுபவம் சில சமயங்களில் நம்மால் எந்த ஒரு விஷயத்திலும் இறங்குவதற்கு முன்பு அதனால் ஏற்படப் போகும் விளைவுகளை எல்லாம் சிந்தித்துப் பார்த்து அதில் நம்மை இறங்கவிடாமலே செய்துவிடுகிறது.

எழுந்து நடந்தால் விழுந்துவிடுவேன் என்று பத்து மாத பாலகனுக்கு தெரியாததால்தானே பல முறை விழுந்தும் எழுந்து நடப்பதில் குறியாயிருக்கிறது?

அதுபோன்ற மனநிலையுடன்தான் நாமும் ஒவ்வொரு விஷயத்திலும் இறங்குகையில் இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.

ஒரு விஷயத்தை செயல்படுத்த முனைகையில் அது நம்மால் முடியுமா, முடியாதா என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொள்வதில் தவறில்லைதான்.

ஆனால் முடியாது என்று நம்முடைய உள்ளுணர்வு கூறுமானால் அதை உடனே ஏற்றுக்கொண்டு நம்மால் முடியாது என்ற முடிவுக்கு வரலாகாது.

ஏன் முடியாது என்ற எதிர்கேள்வியையும் நம்மை நாமே கேட்டு அதற்கு நம்முடைய பகுத்தறிவு கூறும் காரணங்கள் என்னென்ன என்பதை அமர்ந்து ஆராய்ந்து அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி என்பதைக் கண்டுணரவேண்டும்.

அப்போதுதான் நம்முடைய முயற்சி வெற்றியைத் தரும்..

சரி.. அப்படியே நம்முடைய முயற்சி தோல்வியில் முடிந்தாலும் சோர்வடையாமல் மீண்டும் அமர்ந்து நம்முடைய முயற்சி ஏன் தோல்வியில் முடிந்தது என்பதை அலசி ஆராய தயக்கம் காட்டக்கூடாது.

இன்றைய தோல்வியில் நாளைய வெற்றி உதயமாகலாம் அல்லவா?

********