Friday, November 24, 2006

Differently abled!

சிங்கத்திற்கு வாலாய் இருப்பதைவிட எலிக்கு தலையாய் இருப்பது மேல்.

என்னுடைய இளைய மகள் சுமார் மூன்று மாத காலமாக சென்னையிலுள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பயிற்சி மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்தார்.

அந்நிறுவனத்தில் அவளுக்கு கிடைத்த சில அனுபவங்கள் அவளுடைய பார்வையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையல்ல.

எடுத்ததற்கெல்லாம் கோபப்படும் அவள் இப்போதெல்லாம் கோபப்படுவதைக் கட்டுப்படுத்த  முயல்வது நன்றாகவே தெரிகிறது.

எனக்கு அது இல்லை இது இல்லை என்று சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் சோர்ந்து போகும் அவள் இப்போதெல்லாம் தனக்கு இருப்பதே அதிகம் என்று சிந்திக்க துவங்கியிருப்பதும் தெரிகிறது.

ஏன்? அப்படியென்ன அனுபவங்கள் என்னுடைய மகளை மாற்றியிருக்க முடியும்?

அவள் பணியாற்றிய அந்த நிறுவனத்தின் சிறப்பம்சம் அங்கு பணிபுரியும் ஊழியர்களில் சுமார் முப்பத்து விழுக்காடு உடல் ஊனமுற்றவர்கள்.

ஆங்கிலத்தில் முன்பெல்லாம் Disabled என்று குறிப்பிடப்பட்ட இவர்களை சமீப காலமாக மிகவும் பொருத்தமாக Differently abled என்று சொல்கிறார்கள்!

ஆம். உடலில் சில ஊனங்களை இவர்களுக்கு கொடுத்த இறைவன் அதனை ஈடுகட்டும் விதமாக அபிரிமிதமான ஆற்றலை அள்ளிக் கொடுத்திருக்கிறான் என்றால் மிகையாகாது.

அவர்களுடன் சேர்ந்து பழகி, பணியாற்றிய என்னுடைய மகளுடைய அனுபவம்தான் அவளை பெருமளவு மாற்றியிருக்கிறது!

அந்நிறுவனத்திற்கு நானும் பலமுறை சென்றிருக்கிறேன். துவக்கத்தில் ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் இத்தகையோர் பலரைப் பார்த்து சற்றே கலக்கமுற்ற எனக்கு இப்போது பழகிப் போனது.

‘அவங்க நம்ம கிட்டருந்து எதிர்பார்க்கிறது அனுதாபத்தையில்லப்பா.. சமமான ட்ரீட்மெண்ட்ட.’ என்பாள் என் மகள்.

உண்மைதான். அங்கீகாரத்தையுமல்ல. சமமான, தோழமையான நட்பை.

‘அவங்களோடல்லாம் நம்மள கம்பேர் பண்ணவே முடியாதுப்பா. அவ்வளவு ஷார்ப் அவங்க. கைவிரல்கள வச்சிக்கிட்டு அவங்களுக்குள்ள பேசி, சிரிச்சி, எங்க எல்லாரையும் கலாய்க்கிறப்ப ஆச்சரியமா இருக்கும்ப்பா..’ என்றாள் இன்னொரு நாள்..

உண்மைதான்.. தங்களுடைய நிலையை ஒரு குறையாக நினைக்காமல் அதையே ஒரு வலுவாக மாற்றிக்கொண்டவர்கள் அவர்கள்.

மென்பொருளில் அடிப்படை படிப்பு இல்லாத இத்தகையோர் பலரையும் பணிக்கு அமர்த்தி அவர்களுக்கு தேவையான பயிற்சியும் கொடுத்து நல்லதொரு வாழ்க்கையை கொடுத்துள்ள அந்நிறுவனத் தலைவரை எத்தனை போற்றினாலும் தகும்.

அந்நிறுவனத்திலிருந்த ஒருவர் வேறொரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் கூடுதல் ஊதியத்தில் வேலை கிடைத்து சென்று சில நாட்களிலேயே அங்கிருக்க விரும்பாமல் திரும்பி வந்தபோதும் எந்த வருத்தமுமில்லாமல் மீண்டும் பணிக்கு சேர்த்துக்கொண்ட அவரை என்னவென்று சொல்வது?

அப்படித் திரும்பி வந்தவர் கூறிய வார்த்தைகள்தான் இன்றைய சிந்தனையின் கரு: சிங்கத்திற்கு வாலாய் இருப்பதை விட எலிக்கு தலையாய் இருப்பது மேல்!

உண்மைதானே?

அந்நிறுவனத்தில் நம்முடைய தமிழ்மண நண்பர் ஒருவரும் பணியாற்றுகிறார் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியவில்லை!

12 comments:

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஆங்கிலத்தில் முன்பெல்லாம் Disabled என்று குறிப்பிடப்பட்ட இவர்களை சமீப காலமாக மிகவும் பொருத்தமாக Differently abled என்று சொல்கிறார்கள்!//

ஆமாங்க ஜோசப் சார்!
physically handicapped கூட இப்ப physically challenged என்று இங்கே அழைக்கிறார்கள்!

இது போல பல சொற்கள் இருக்கு! Orphans, Destitutes என்று! இவற்றுக்கு எல்லாம் கூட நல்ல நம்பிக்கையூட்டும் சொற்களைக் கண்டுபிடிக்கணும்! தனிப்பதிவு இடுகிறேன் இது பற்றி!

//சிங்கத்திற்கு வாலாய் இருப்பதை விட எலிக்கு தலையாய் இருப்பது மேல்!//
முற்றிலும் உண்மை!

//அந்நிறுவனத்தில் நம்முடைய தமிழ்மண நண்பர் ஒருவரும் பணியாற்றுகிறார் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியவில்லை!//

அட, துளசி டீச்சருக்குப் பின் நீங்களும் புதிர் போட்டி வைக்கறீங்களே! நியாயமா? யாரோ அவர் யாரோ, என்ன ஊரோ, என்ன பேரோ!!!:-)

tbr.joseph said...

வாங்க KRS,

physically handicapped கூட இப்ப physically challenged என்று இங்கே அழைக்கிறார்கள்!//

உண்மைதான்

இது போல பல சொற்கள் இருக்கு! Orphans, Destitutes என்று! இவற்றுக்கு எல்லாம் கூட நல்ல நம்பிக்கையூட்டும் சொற்களைக் கண்டுபிடிக்கணும்! தனிப்பதிவு இடுகிறேன் இது பற்றி!//

போடுங்க சீக்கிரம்..

யாரோ அவர் யாரோ, என்ன ஊரோ, என்ன பேரோ/

இதை அவரே சொல்வார் என்று எதிர்பார்க்கிறேன்..

துளசி கோபால் said...

ரொம்ப நல்ல விஷயம்.

கடவுள் ஒன்னைக் குறைச்சுக் கொடுத்தாருன்னு நினைப்போம். ஆனா அதுக்கு பதிலா
வேறொரு புலனை இன்னும் நல்ல சக்தியாக் கொடுத்துருப்பார்.

கவனிச்சுப் பார்த்தா ரொம்ப ஆச்சரியமா இருக்கும். நாமெல்லாம் எதுக்கு
லாயக்குன்னுக்கூட தோணிப் போகும் சிலசமயம்.

இவுங்களுக்கு அனுதாபம் வேண்டாம். அன்பு மட்டும் போதுமுன்றது உண்மைதான்.


அந்த நிறுவனம் நல்லா இருக்கட்டும்.

tbr.joseph said...

வாங்க துளசி,

கவனிச்சுப் பார்த்தா ரொம்ப ஆச்சரியமா இருக்கும். நாமெல்லாம் எதுக்கு
லாயக்குன்னுக்கூட தோணிப் போகும் சிலசமயம்.//

எனக்கும் பல சமயங்கள்ல அப்படி தோணியிருக்கு..


அந்த நிறுவனம் நல்லா இருக்கட்டும்.//

நீங்க வாழ்த்திட்டீங்கல்லே.. நிச்சயம் நல்லாத்தான் இருக்கும்:))

துளசி கோபால் said...

சிங்கம் -எலி

இது புலி -எலின்னு இருக்கவேணாமா?

ச்சும்மா ஒரு எதுகைக்குத்தான்:-))))

tbr.joseph said...

புலி -எலின்னு..//

எதுகையென்னவோ நல்லாத்தானிருக்கு..

ஆனா இது இன்னொருத்தர் சொன்னதாச்சே..

சரி உங்க திருப்திக்கு 'புலிக்கு தலையாருக்கறத விட எலிக்கு வாலாருக்கறது மேல்'

போறுமா:)))

துளசி கோபால் said...

"புலிக்கு வாலா இருக்கறதைவிட
எலிக்குத் தலையா இருக்கறது எவ்வளவோ மேல்"

தலையும் வாலும் இடம் மாறிக்கிடக்கு பாருங்க :-)))))

tbr.joseph said...

அடடடா..

இந்த தலையும் வாலுமா சேர்ந்துக்கிட்டு பேஜார் பண்ணுதே..

சரி.. இடம் மாத்தி படிச்சிக்குங்க..

மறுபடியும் மாத்தப் போயி வேற ஏதும் ஆயிரப் போகுது:))))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

டீச்சர், ஜோசப் சாருக்கேவா?
இவ்வளவு ஸ்ட்ரிக்டா நம்ம டீச்சர்? இப்படி கேள்வி கேட்டு, குழப்பியும் விட்டு,....
மார்க் மட்டும் நல்லா போடுவாங்கன்னு நம்புவோம், எங்க ஷீலா டிகுருஸ் டீச்சர் மாதிரியே! :-)

tbr.joseph said...

டீச்சர், ஜோசப் சாருக்கேவா?//

அதானே:)

இப்படி கேள்வி கேட்டு, குழப்பியும் விட்டு,....//

டீச்சர்ங்க வேலையே அதானே:)

G.Ragavan said...

உண்மைதான் சார். தங்கள் ஊனங்களை மறந்து வாழ நினைப்பவர்களுக்கு நமது அனுதாபம் அந்த ஊனத்தை நினைவுதான் படுத்தும். அவர்களை நமக்குச் சமமாகவே நினைக்க வேண்டும். அதுதான் மிகச்சரி.

அந்த நிறுவனத் தலைவரை பாராட்டுவது மிகச் சிறப்பு. அவர் வாழ்க. வளர்க.

அது சரி...அந்த நிறுவனத்தில் பணிபுரியும் அந்தத் தமிழ்மண நண்பர் யாராம்?

tbr.joseph said...

வாங்க ராகவன்,

அவர்களை நமக்குச் சமமாகவே நினைக்க வேண்டும். அதுதான் மிகச்சரி.//

ஆமாம் ராகவன்.. அதைத்தான் அவர்களும் விரும்புகிறார்கள்..

அந்த நிறுவனத் தலைவரை பாராட்டுவது மிகச் சிறப்பு. அவர் வாழ்க. வளர்க.//

அவரை நேரில் கண்டு ஒரு பேட்டி கண்டால் என்ன என்றுகூட தோன்றுகிறது..

அது சரி...அந்த நிறுவனத்தில் பணிபுரியும் அந்தத் தமிழ்மண நண்பர் யாராம்? //

அவர் இதை படித்திருப்பாரா என்று தெரியவில்லை. ஒருவேளை படித்தும் தன்னை இணம் காட்டிக்கொள்ள விரும்பவில்லையோ என்றும் தோன்றுகிறது. ஆகவே அவராக தன்னை வெளிக்காட்டாதவரை அவரைப் பற்றி நான் குறிப்பிட விரும்பவில்லை..

Post a Comment