Wednesday, November 29, 2006

நம்முடைய அனுபவங்கள்!

‘நம்முடைய ஒவ்வொரு அனுபவமும் நம்மை வலுவுள்ளவர்களாக மாற்றுகின்றது என்பதை மறக்கலாகாது’

நெடுஞ்சாலை ஓரங்களில் காணப்படும் மைல் கற்களைப் போன்றவைதான் நம்முடைய அனுபவங்களும்.

நம்முடைய வாழ்க்கையும் ஒருவகையில் ஒரு நெடுந்தூரப் பயணம்தானே!

நம்முடைய நெடுந்தூரப் பயணங்களில் சாலையில் ஒவ்வொரு மைல் கல்லையும் கடக்கும் போது நாம் அடையவிருக்கும் இடத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்கின்ற உவகை நம்மை மேலும் உற்சாகப் படுத்துகிறது அல்லவா?

இது ஒரு பார்வை.

ஆனால் சிலருக்கோ ச்சே.. இன்னும் இத்தனை தூரம் பயணம் செய்ய வேண்டுமா? எப்போதுதான் இப்பயணம் முடிவுக்கு வருமோ என்றும் தோன்றக்கூடும்.

இதுவும் ஒரு பார்வைதான்.

அதுபோலவேதான் நம்முடைய அனுபவங்களும்.

அது வெற்றியில் முடிந்தாலும் தோல்வியில் முடிந்தாலும் நமக்குக் கிடைக்கும் அனுபவங்கள் நம்மை வலுவிழக்கச் செய்யலாகாது. மாறாக நம்முடைய மன உறுதியை மேலும் வலுவுள்ளதாக்கி நம்முடைய நெடு நோக்கு பார்வையை மேலும் கூர்மையானதாக்க வேண்டும்.

என்னுடைய வாழ்க்கையில் நான் இதை அனுபவித்து அறிந்ததால்தான் என்னால் இத்தனை உறுதியாகக் கூற முடிகிறது.

என்னுடைய ஐம்பதாவது வயதில் என்னுடைய வங்கியின் புதிதாகத் துவக்கப்பட்ட கணினி இலாக்காவை தலைமையேற்று நடத்த நியமிக்கப்பட்ட போது எனக்கு மிகவும் மலைப்பாக இருந்தது.

நானோ வெறும் காமர்ஸ் பட்டம் பெற்று முழுக்க முழுக்க வங்கி அதிகாரியாக சுமார் இருபத்தைந்து ஆண்டு காலம் பணிபுரிந்தவன். நானாக ஒரு கணினியை வாங்கி அத்துடன் கையில் கிடைத்த புத்தகங்களையெல்லாம் வாங்கி எனக்கு நானே ஆசிரியனாக இருந்து அதை ஒருவாறு இயக்க அறிந்திருந்தவன். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதே என்றுதான் இருந்தது என் சிந்தனை அப்போது.

ஆரம்பகாலத்தில் நான் சந்தித்தது எல்லாமே கசப்பான அனுபவங்களதான். என்னால் புரிந்துக்கொள்ள முடியாததெல்லாம் தவறானவை என்று எண்ணம் கொண்டிருந்த மேலதிகாரிகளைத் திருப்திப்படுத்த முயன்று சோர்ந்துபோயிருக்கிறேன். எடுத்த எடுப்பிலேயே சுமார் முப்பது இளம் பொறியாளர்களை தேர்ந்தெடுத்து எனக்குக் கீழே பணிக்கு அமர்த்தியபோது அவர்களுக்கு என்ன வேலை கொடுக்க வேண்டும் என்றுக்கூட என்னால் தீர்மானிக்க முடியவில்லை.

பிறகு என்னுடன் முன்பு கிளைகளில் பணியாற்றிய இளம் வங்கி அதிகாரிகளுள் சிலபேரை திரட்டி அவர்களுடன் பல வாரங்கள் அமர்ந்து எங்களுடைய வங்கியிலுள்ள நிர்வாக அலுவலகங்களுடைய தினசரி செயல்பாட்டை கணினி மயமாக்குவதென தீர்மானித்து வாரங்கள், மாதங்களாக சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒரு ப்ராஜக்ட் திட்டத்தை முழுமையாக தயாரிக்க முடிந்தது.

இதோ ஐந்தாண்டுகள் உருண்டோடிவிட்டன.

துவக்கத்தில் முப்பது பொறியாளர்களுடன் துவக்கப்பட்ட என்னுடைய இலாக்கா இன்று சுமார் நூறு பேர் கொண்ட இலாக்காவாக, என்னுடைய வங்கியின் மென்பொருள் தேவையில் அறுபது விழுக்காடு வரை நாங்களாக வடிவமைத்து தயாரித்து அளிக்கக் கூடிய அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்றால் அதில் என்னுடன் இணைந்து பணிபுரிந்த என்னுடைய இளயை நண்பர்கள துவக்கக் காலத்தில் அவர்களுக்கு கிடைத்த ஏமாற்றங்களையும், சோதனைகளையும் ஒரு படிப்பினையாக எடுத்துக்கொண்டதுதான் காரணம்.

நம்முடைய முயற்சிகள் வெற்றிபெறும் சமயங்களில் அளவு கடந்த மகிழ்ச்சியில் தலைகால் தெரியாமல் ஆடுவதும் தோல்வியுறும் சமயங்களில் அதல பாதாளத்துக்கு சென்றுவிடுவதும் நல்லதல்ல.

நம்முடைய அனுபவங்கள் நமக்கு பாடமாக இருக்க வேண்டும். அதுதான் முக்கியம். அப்போதுதான அவை நம்மை வலுவுள்ளவர்களாக்கும்.

****4 comments:

துளசி கோபால் said...

அனுபவத்தைப்போல ஒரு சிறந்த ஆசான் வேறு உண்டா இந்த உலகத்திலே?

'பட்டுத் தெரிஞ்சுக்கறோம்' பாருங்க. அது அப்படியே மனசுலே பதிஞ்சிரும்.

tbr.joseph said...

வாங்க துளசி,

'பட்டுத் தெரிஞ்சுக்கறோம்' பாருங்க. அது அப்படியே மனசுலே பதிஞ்சிரும்.//

உண்மையான வார்த்தைங்க..

வெற்றியான அனுபவங்கள விட நம்ம தோல்வியில கிடைக்கற அனுபவங்கள்தான் மனசுல பதிஞ்சிபோவும்..

அதுதான் நாம மறுபடியும் அந்த மாதிரி தோல்விய சந்திக்காம இருக்கறதுக்கு உதவியா இருக்கும்..

வெற்றி said...

ஜோசப் ஐயா,
மிகவும் நல்ல பதிவு. துளசி அம்மா மேலே சொன்னது போல்,
"அனுபவத்தைப்போல ஒரு சிறந்த ஆசான் வேறு உண்டா இந்த உலகத்திலே?".

நன்றி.

tbr.joseph said...

வாங்க வெற்றி,

துளசி அம்மா மேலே சொன்னது போல்,
"அனுபவத்தைப்போல ஒரு சிறந்த ஆசான் வேறு உண்டா இந்த உலகத்திலே?".//

உண்மைதான்.. அவங்களும் பலதையும் பட்டு தெரிஞ்சிக்கிட்டவங்களாச்சே.. அவங்க சொன்னா அப்பீல் ஏது?

Post a Comment