Tuesday, November 21, 2006

வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும்!

‘உலகில் வல்லவர்களும் நல்லவர்களும் வாய் மூடி மெளனியாக இருப்பதால்தான் வாய்ச் சவடால் பேர்வழிகளும் தீயவர்களும் பலுகிப் பெருகி வருகிறார்கள்.’

இது இருபத்தியோரு நூற்றாண்டின் நிதர்சனம் என்றால் மிகையாகாது.

இது நம் நாட்டுக்கு மட்டும் பொருத்தமானதல்ல. அகில உலகத்துக்கும் மிகவும் பொருத்தமானது.

தடியெடுத்தவன் தண்டல்காரன் என்பது இப்போதெல்லாம் பரவலாகி வருகிறது.

இப்போது வெளிவரும் திரைப்படங்களும் இத்தகையோரைத்தானே வெளிச்சமிட்டு காட்டுகின்றன!

நம்முடைய அலுவலகங்களிலும், சமுதாயத்திலும் இத்தகையோரின் ஆதிக்கம் நாளுக்கு நாள் பலுகிக்கொண்டே போகிறது என்றாலும் மிகையாகாது.

வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும், அழுகின்ற குழந்தைக்குத்தான் பால் கிடைக்கும் என்பது பண்டைய மொழி.

அதற்கு நம்மைப் பற்றி, நம்முடைய அறிவாற்றலைப் பற்றி, நம்முடைய திறமைகளைப் பற்றி நாம்தான் எடுத்துரைக்க வேண்டும், அதை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என்பதும்
நமக்கு தேவையுள்ளதை நாம்தான் கேட்டுப் பெறவேண்டும் நாம் வாய் மூடி மவுனியாக இருந்தால் நம்முடைய தேவைகளை அதிகாரத்திலுள்ளவர்களுக்கு தெரியாமலே போய்விடும் என்பதும்தான் பொருள்.

ஆனால் இவ்விரண்டு பழமொழிகளையும் நன்றாக புரிந்து வைத்துக்கொண்டிருப்பவர்கள் நம்முடைய முன்னோர் எண்ணியிருந்த வல்லவர்களும், நல்லவர்களும் அல்ல..

மாறாக வாய்ச்சவடால் பேர்வழிகளும் தீயவர்களும்தான்.

வாயுள்ள பிள்ளை என்பவன் இன்று உரக்க பேசுபவன் என்றும், தீய வார்த்தகைளை சரமாரியாக உதிர்ப்பவன் என்றும், கைகளில் வாளுடனும், பட்டாக்கத்தியுடனும், உருண்டு திரண்ட சவுக்கு தடிகளுடனும் சாலைகளிலும் சந்தைகளிலும் உலா வருபவன் என்றும் உருபெற்றிருக்கிறான்.

அழுகின்ற குழந்தை என்பவன் இன்று என்ன நல்லது செய்தாலும் போறாது என்ற பேராசை மனப்பான்மையுடன் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று அலைகின்றவனாய் மாறியிருக்கிறான்.

இவ்விரு மனப்பாண்மைக் கொண்டவர்களால் நல்ல திறமை படைத்த, நல்ல மனம் படைத்த வல்லவர்கள், நல்லவர்கள் இன்று சமுதாயத்தில் அடையாளம் தெரியாமல் மறைந்துப் போயிருக்கிறார்கள்.

இத்தைகையோரை இணங்கண்டு வெளிக்கொண்டுவருவதே இன்றைய இளைய சமுதாயத்தின் தலையாயப் பணியாயிருக்க வேண்டும்..

அப்போதும் வீடும், நாடும் ஏன் இவ்வுலகமே உயர்வு பெறும்!

****

2 comments:

துளசி கோபால் said...

//இத்தைகையோரை இணங்கண்டு வெளிக்கொண்டுவருவதே
இன்றைய இளைய சமுதாயத்தின் தலையாயப்
பணியாயிருக்க வேண்டும்..//

ரொம்பக்கூட்டமா இருக்கு. அதுலே முன்னுக்கு வர்றதுக்குப் போட்டாப்போட்டி.

இதுலே இளைய சமுதாயம் 'தான்' முன்னே வரப் பார்க்குமா? இல்லேன்னா
நல்லவங்களை இனங் கண்டுக்குமா?

tbr.joseph said...

வாங்க துளசி,

இதுலே இளைய சமுதாயம் 'தான்' முன்னே வரப் பார்க்குமா? இல்லேன்னா
நல்லவங்களை இனங் கண்டுக்குமா? //

சரியான கேள்வி.

நான் இணம் காண்பது என்றது தேர்தல் சமயங்களில். ஒரு நாடு சுபிட்சமடைய நல்ல தலைவர்கள் தேவை. நல்ல தலைவர்கள் ஒரே நாளில் உருவாகிவிட முடியாதல்லவா.. இன்றைய தலைமுறையாவது அரசியல் செல்வாக்கையும், ஆதிக்க செல்வாக்கையும் பொருட்படுத்தாமல் தங்களுக்கு நல்லவர்கள், வல்லவர்கள் என்று தோன்றுபவர்களை தெரிந்தெடுக்க வேண்டும்..

இதைத்தான் சொல்ல வந்தேன்..

இது ஒரு கனவுதான்.. நனவாவது அவ்வளவு எளிதல்ல என்பது தெரிந்துதானிருக்கிறது..

இருந்தாலும், அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகராதா என்ற நப்பாசைதான்.

Post a Comment