Thursday, November 16, 2006

புகழ்ச்சியும் இகழ்ச்சியும்!

‘நம்மில் பலரும் புகழில் மட்டுமே பங்குகொள்ள விரும்புகிறோம்.. இகழ்வில் அல்ல.’

எந்த ஒரு செயலிலும் தனி நபராக ஈடுபடுவதைவிட ஒரு குழுவாக பலருடன் இணைந்து ஈடுபடுவது சற்று சிரமம்தான்.

நாம் தனியாக செயல்படுகையில் நம்முடைய மனதில் உருவகப்படுத்தியிருப்பதை அப்படியே செயல் வடிவில் கொண்டு வந்துவிட இயலும். சற்று சிரமம்தான் என்றாலும் அதே குறிக்கோளுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

ஆனால் சில விஷயங்களில் அது இயலாமற் போய்விடுகிறது. குறிப்பாக நம்முடைய அலுவலகங்களில்.

இத்தகைய சூழ்நிலைகளில் குழுவாக செயல்படவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

பலவிதமான பின்னணிகளிலிருந்து வரும் பலதரப்பட்ட குணாதிசயங்களைக் கொண்ட நபர்கள் அடங்கியுள்ள எந்த குழுவிலும் கருத்து பேதங்கள் இருக்கத்தான் செய்யும்.

குழுவினருக்கு முன்னேயுள்ள இலக்கை அடைவதுதான் அனைவருடைய நோக்கமாக இருந்தாலும் அவர்களுடைய சிந்தனைகள், செயல்பாடுகளில் ஒற்றுமை அல்லது ஒருமித்த கருத்து இருப்பது அபூர்வம்தான்.

குழுவின் ஒட்டுமொத்த செயல்பாடு தோல்வியுறும் நேரத்தில் அதற்கு பொறுப்பேற்க யாருமே முன்வராததை பார்க்கிறோம்.

அதுவே குழுவிலுள்ள வெகு சிலருடைய உழைப்பால் கிடைக்கும் வெற்றியில் பங்குக்கொள்ள குழுவிலுள்ள அனைவருமே முண்டியடிப்பதையும் பார்க்கிறோம்.

தோல்வியில் பங்குபெற விரும்பாத எவருக்கும் வெற்றியில் பங்குபெற உரிமையில்லை.

கடமைகள் இல்லாத பொறுப்புகள் இருக்க முடியாது என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதுபோலவே தோல்விகளில்லாத வெற்றிகளும் இல்லை என்பதும் சத்தியமான உண்மை.

நாம் அடையும் வெற்றி நம்முடைய உழைப்பால் மட்டும் கிடைத்ததல்ல என்பதை நாம் உணர்ந்திருக்கிறோமோ இல்லையோ நாம் அடையும் தோல்விகளுக்கு நாமும் ஒரு காரணம் என்பதை உணர்ந்திருத்தல் மிக அவசியம்.

தோல்விகளால் வரும் இகழ்வை தாங்கிக்கொள்ளக் கூடிய மனப்பக்குவம் நமக்கு வந்துவிட்டாலே புகழ் தரும் பெருமையில் மயங்கிவிடமாட்டோம்.

பிறர் நம்மைப் புகழும்போது விண்ணுக்கு உயராமலும் இகழப்படும்போது பாதாளம் அளவுக்கு சரியாமலும் இருக்கக் கூடிய வலுவான மனப்பக்குவமும் தன்னால் நமக்கு வந்துவிடும்.

புகழ்ச்சியும் இகழ்ச்சியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை நினைவில்கொள்வோம்!

If we want a share of the fame, we have got to be willing to take a share of the blame as well!
******

2 comments:

துளசி கோபால் said...

டீம் ஒர்க்ன்னா எல்லாரும் சேர்ந்து செய்யறதுதானே? சிலசமயம் இந்த 'டீம் லீடர்'ங்க
புகழ் வந்தா மட்டும் என்னமோ தானே செஞ்சமாதிரி இருக்கறதும், எதாவது குழப்பம்
வந்தா மத்தவங்களாலேன்னு சாதிக்கறதும் இப்ப அதிகமாக் காணப்படுற விஷயமாப் போச்சுங்க.(-:

இது இங்கேயும் கூட இருக்கு. மனுஷன் உலகம் முழுதும் ஒண்ணு போல இருக்கான்:-)

Hariharan # 26491540 said...

ஜோசப் சார்,

புகழ்ச்சி/இகழ்ச்சி மட்டுமில்லை, வெற்றி/தோல்வி, சந்தோஷம்/வருத்தம் என்று முதலாவதை முகட்டாகவும் இரண்டாவதை பள்ளத்தாக்கு மாதிரியும் தட்டையாகச் சிந்திப்பதினின்று விடுபட்டு அனைத்தையும் சலனத்தோடு உள்வாங்குவதிலிலிருந்து விடுபட தினசரி கொஞ்ச நேரம் தன்னோடு பேசவேண்டும், தான் யார் என்று அறிய முற்படுதல் வேண்டும், முழுமையாக உணர்வுகளால்
உந்தப்பட்டு சலனப்படாத "ஸ்திதப்ரக்ஞ்னாக" தன்னை ஆக்கிக்கொள்வதற்கு!

Post a Comment