Monday, November 13, 2006

நம்முடைய கடமையைச் செய்வோம்!

‘நாம் தினமும் ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை வழிபடவேண்டும் என்று இல்லை. அதை எந்த மதமும் வலியுறுத்துவதுமில்லை!’

இறைவன் ஒரு முறை தன்னை அன்றாடம் அழைக்கும் பக்தன் ஒருவனை சந்திப்பதென முடிவு செய்தாராம்.

அந்த பக்தனோ அன்று இரவு முழுவதும் கண்விழித்து பணியாற்ற வேண்டிய இரவு ஷிப்ட்டில் படு பிசியாக இருந்தார்.

இறைவன் அவன் முன்னால் நின்று பார்த்தார், பக்கத்தில் நின்று பார்த்தார், பின்புறம் நின்று பார்த்தார்.

ஹுஹும்.. பக்தன் தன்னுடைய கர்மமே கண்ணாயிருந்தார்.

இறைவனுக்கு மிகவும் ஏமாற்றமாகிப் போனது. அவனுக்கு மறைவாய் இருந்தபோது தன்னை அன்றாடம் அழைத்தவன் அருகில் வந்து நின்றும் கண்டுக்கொள்ள மாட்டேனென்கிறானே என்று நொந்துபோனார்.

சரி அவன் ஓய்வாய் இருக்கையில் தன்னை அழைப்பான் போலிருக்கிறது என்று நினைத்தவாறு விண்ணகம் திரும்பினார்.

அவர் விண்ணகம் சென்றடையும் வழியிலேயே பகதனின் அழைப்பு வந்தது. ‘என்ன?’ என்றார் இறைவன்.

‘சாரி சாமி.. நீங்க பக்கத்துல வந்து நின்னப்போ நா ரொம்ப பிசியா இருந்தேன்.. இப்பத்தான் ஓய்வு கிடைத்தது.’ என்றான் பக்தன்.

இறைவனுக்கு வியப்பு. ‘என்ன நான் பக்கத்தில் வந்து நின்றதைப் பார்த்தாயா?’ என்றார்.

‘நான் உங்களைப் பார்த்தேன் என்பதும் ஆனால் உங்களிடம் நின்று பேசக்கூட முடியாமல் நான் வேலையில் கவனமாயிருந்தேன் என்றும் உமக்கு தெரியுமே.. பிறகு ஏன் என்னை கேட்கிறீர்?’

இறைவன் சிரித்தார். ‘உண்மைதான்.. உன்னைக் குறை கூற விரும்பவில்லை.. உன்னுடைய அலுவலில் கடமையே கண்ணாக இருப்பதன் மூலம் என்னுடன் உரையாடிக்கொண்டிருக்கிறாய் என்பது எனக்கு தெரியும்.. இருந்தாலும் உன்னை சோதிக்கவே இப்படி கேட்டேன்.’

ஆம்..

நம்முடைய அனுதின அலுவல்களை, நம்முடைய கடமைகளை சரிவர செயலாற்றுவதன் மூலமாகவே நம்மால் இறைவனுடன் உரையாட முடியும்.

மாறாக நம்முடைய கடமைகளை புறக்கணித்துவிட்டு அனுதினமும் ஆலயத்தில் அமர்ந்து இறைவனே, இறைவனே என்று கூவுயழைப்பதில் இறைவனுக்கே விருப்பமில்லை..

செய்யும் தொழிலே தெய்வம் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருப்பது இதைக் குறித்துதான்.

கடவுளே, கடவுளே என்று கூறுபவனெல்லாம் இறையரசில் நுழைந்துவிட மாட்டான் என்று உறுதியாக உங்களுக்கு கூறுகிறேன் என்று ஏசு கூறியதாக பைபிளிலும் வருகிறது.

கிறித்துவ மதம் மட்டுமல்ல எல்லா மதங்களுமே இதைத்தான் வலியுறுத்துகின்றன.

***

6 comments:

ஜயராமன் said...

சத்தியமான வார்த்தைகள்,

இறைவனுடன் பேசவே நேரமில்லாமல் கடமையாற்ற, உழைக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லும்போது, நான் பிளாக்குக்கு பின்னூட்டம் எழுதிக்கொண்டிருக்கலாமா? கூடாது!

நன்றி

tbr.joseph said...

வாங்க ஜயராமன்,

பின்னூட்டம் போடுவதும் நம்முடைய தினசரி அலுவல்களில் ஒன்றாகிவிட்டதே:)

G.Ragavan said...

உண்மைதான் ஜோசப் சார். அதனால்தான் நம்மூரிலும் செய்யும் தொழிலே தெய்வம் என்று சொல்லி வைத்தார்கள். அந்தச் செய்கைகளின் விளைவே நன்மையும் தீமையும். அதனால்தான் தீதும் நன்றும் பிறர் தர வாரா!

tbr.joseph said...

வாங்க ராகவன்,

அந்தச் செய்கைகளின் விளைவே நன்மையும் தீமையும். அதனால்தான் தீதும் நன்றும் பிறர் தர வாரா! //

உண்மைதா.. நாம் செய்யும் செயலே நன்மையாகவும் தீமையாகவும் உருவெடுக்கிறது..

துளசி கோபால் said...

கடமையே கண்ணாயினான்.

அதாங்க செய்யும் தொழிலே தெய்வம். 'பலனை எதிர்பார்க்காமக் கடமையைச் செய்'ன்னு சொல்லி இருக்கே கீதையில்.

tbr.joseph said...

வாங்க துளசி,

நட்சத்திர வாரத்துல் மாஞ்சி, மாஞ்சி எழுதணுமே. இதுல மத்தவங்க பதிவுல பின்னூட்டம் போடறதுக்கு எங்கே நேரம்?

நீங்க பயங்கரமான டைம் மேனேஜ்மெண்ட் ஸ்பெஷலிஸ்ட் துளசி..

கேட்டா இதுவும் ஒரு கடமைதானேம்பீங்க..

Post a Comment