Thursday, November 09, 2006

தீர்வுகள்!

‘பிரச்சினைகளின் தீவிரம் நம்மை பாரமாய் அழுத்தும் சமயங்களில் எத்தனை முயன்றும் தீர்வு கிடைக்கவில்லையா? கவலைப்படுவதை விட்டு விட்டு சற்றே எட்ட நின்று அதை மற்றவர்களுடைய கண்ணோட்டத்தில் காண முயலவேண்டும். அதுவரை நம்முடைய அறிவுக்கு எட்டாத தீர்வு சட்டென்று நம் முன்னே தென்பட வாய்ப்புள்ளது.’

என்னுடைய அலுவலக வாழ்விலே பல பிரச்சினைகளை சந்தித்திருக்கிறேன்.

சில சமயங்களில் எத்தனை முயன்றும் சில பிரச்சினைகளுக்கு தீர்வே இல்லையென்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டதுண்டு.

அப்போதெல்லாம் என்ன செய்தால் தீர்வு கிடைக்கும் என்ற நினைப்பிலேயே பிரச்சினைகளை மேலும் தீவிரப் படுத்தியிருக்கிறேன்.

சென்னையில் நான் பணியாற்றிக்கொண்டிருந்த காலம் அது. தத்துவ மேதை ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரையை கேட்கும் வாய்ப்பு கிடைத்டிருக்கிறது.

ஒருமுறை வாழ்க்கையும் கவலைகளும் என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரை இப்போது நினைவுக்கு வருகிறது.

“துவக்கத்தில் சவாலாக தென்படும் பிரச்சினைகளே இறுதியில் நம்முடைய திறமையை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்ட ஒரு வாய்ப்பாக அமைந்துவிடுகின்றன. தீர்வு காண முடியாத பிரச்சினைகள் என்று உலகில் ஒன்றுமே இல்லை..

நம் கண்முன்னே நிற்கும் பிரச்சினைகளை விட்டு சற்று நேரம் விலகியிருந்து பிரச்சினைகளை மட்டும் பாராமல் அதனுடன் தொடர்புடையவைகளை ஒரு விரிந்த கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும்..

அதுவரை நம்முடைய சிந்தனைக்கு புலப்படாதிருந்த தீர்வு நம் முன்னேயே இருப்பதை காண முடியும்..” என்றார்.

ஒரு பிரச்சினையை தீர்க்க இயலாத சில தீர்வுகள் வேறு சில பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைந்துவிடுவதும் உண்டு.

ஒரு அமெரிக்க நிறுவனம் பிரித்தெடுக்க முடியாத பசையை (Adhesive) உருவாக்க பல கோடி டாலர்களை செலவழித்து தோல்வியடைந்ததாம். அதாவது எத்தனை முயன்றும் பசை ஒட்டாமல் பிரிந்துக்கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் நிறுவனத்தின் கடைநிலை ஊழியர் ஒருவர் சட்டென்று இதையே நாம் ஒரு புதிய கண்டுபிடிப்பாக மாற்றலாமே என்றாராம். அப்படி தோன்றியதுதான் நாம் அன்றாடம் அலுவலகங்களில் உபயோகிக்கும் சதுர வடிவ மஞ்சள் நிற ஸ்டிக்கர்கள் (Sticker Pads).

ஆக, நம்முடைய ஆக்கபூர்வமான சிந்தனைகளுக்கும் உரமிடுவதுதான் பிரச்சினைகள்.

பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கை நாளடைவில் போரடித்துவிடும்..

உடனடி தீர்வு (Instant solution) என்று எதுவுமில்லை. அதுபோலவே தீர்வுகள் இல்லாத பிரச்சினைகளும் இல்லை.

உடனே கிடைக்கும் வெற்றியளிக்கும் மகிழ்ச்சியை விட நம்முடைய ஆக்க பூர்வமான சிந்தனைகளைத் தூண்டிவிட்டு அதன் பயனாக நாம் அடையும் வெற்றி தரும் மகிழ்ச்சி கூடுதல் நிறைவை அளிப்பதுடன் அது நிரந்தரமானதும் கூட..

********

6 comments:

துளசி கோபால் said...

பிரச்சனையே இதுதான்.
நம்மதுன்னா தள்ளி நின்னு பார்க்கறது கஷ்டம்.
அடுத்தவங்கதுன்னா கூட 'ஒட்டி நின்னு' பார்க்கறது இன்னும் கஷ்டம்.

வடுவூர் குமார் said...

சில சமயம் பிரச்சனைகளை ஆறப்போடுவதாலும்,இரு பக்கமும் கொஞ்சம் இளகி- தீர்வு தீர்ந்து போவதை பல முறை பார்த்திருக்கேன்.

tbr.joseph said...

வாங்க துளசி,

பிரச்சனையே இதுதான்.
நம்மதுன்னா தள்ளி நின்னு பார்க்கறது கஷ்டம்.//

உண்மைதான்.. ஆனா அதைத்தான் பழகிக்கொள்ளணும்னு சொல்றாங்க..

tbr.joseph said...

வாங்க குமார்,

சில சமயம் பிரச்சனைகளை ஆறப்போடுவதாலும்,இரு பக்கமும் கொஞ்சம் இளகி- தீர்வு தீர்ந்து போவதை பல முறை பார்த்திருக்கேன். /

ரொம்ப சரி.. ஆனா எவ்வளவு நேரம் ஆறப்போடணுங்கறத தீர்மானிக்கறதும் கஷ்டம்..

எடுத்தோம் கவிழ்த்தோம்னு முடிவெடுக்கறதுக்கு இது தேவலைதான்.

G.Ragavan said...

சரியாச் சொன்னீங்க ஜோசப் சார். Gone with the windன்னு ஒரு பழைய கதைப் புத்தகம். ரொம்பப் பெருசு. அதுல கதையோட நாயகியா வர்ரவ ஸ்கார்லட் ஓ ஹாரா (scarlet O'hara). எல்லாருக்கும் வாழ்க்கையில துன்பம் வந்தா...அவங்களுக்கு துன்பமே வாழ்க்கையா வரும். ஒவ்வொரு துன்பம் வரும் போதும் அவ கிட்ட உடனடி முடிவு இருக்காது. ஏதாவது யோசிச்சுதான் செய்யனும்னு இருக்கும். அப்ப சொல்வா "I will think about it tomorrow" அடுத்த நாள் காலையில ஏதாவது ஒரு செய்தியோ...இல்ல புதிய எண்ணமோ...இல்ல உதவியோ...ஏதாவது ஒரு வகையில செஞ்சி முடிக்கத் தெள்வு கிடைக்கும். இதை நானும் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன். வேலை செய்திருக்கிறது. முதலில் முயற்சி செஞ்சு பாக்குறது. ஒன்னும் புலப்படலையா....ஓக்கே....கொஞ்சம் ரிலாக்ஸ்...அப்புறமா பிரச்சனைக்குள்ள போறது.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

நிஜங்களின் நிழல்தான் கதைகளும் என்பதை சரியாக எடுத்துக்காட்டியிருக்கிறீர்கள். நம்முடைய நடைமுறை வாழ்க்கையை பிரதிபலிக்கும் இத்தகைய ஆங்கில நாவல்களிலிருந்து நானும் நிறைய பாடங்களைக் கற்றிருக்கிறேன்.

பிரச்சினைகளை ஒரே கோணத்திலிருந்து ஆராய்ந்துக்கொண்டிருந்தால் தீர்வு கிடைப்பது கடினம்தான். அதையே சிறிது நேரம் கழித்து முற்றிலும் மாறுபட்ட கோணத்திலிருந்து அணுகும்போது நம்மையும் அறியாமல் தீர்வு கிடைத்துவிடுவதை நானும் உணர்ந்திருக்கிறேன்.

Post a Comment