Wednesday, November 08, 2006

அன்பு எங்கே?

‘அன்பு ஒரு மந்திரக்கோலைப் போன்றது. அது திறவாத வாசல்களையும் திறக்கவல்லது. காது கேளாதவர்களும் ரசிக்கக் கூடிய இசை, முடவர்களையும் நடனமாட தூண்டும் தாளம், பார்வையிழந்தவர்களுக்கும் தெரியும் சூரிய உதயம்!’

அன்பு என்பது நாம் மனத்தளவில் உணரக்கூடிய ஒன்று..

அன்பில்லாதவர்க்கு இல்லை இவ்வையகம்..

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்..

மாணவ பருவத்தில் இதை பள்ளி வகுப்புகளில் கேட்டு, கேட்டு நம்முடைய மனம் மரத்துப் போனதாலோ என்னவோ அதன் உள்ளர்த்தம் என்ன என்பதே மறந்துப் போய்விட்டது.

நம் உடலில் மனம் என்பதே எங்கிருக்கிறதென்று தெரியாதபோது அதில் சுரக்கும் அன்பை எப்படி உணர்வது என்று கேட்கிறோம்.

உண்மையான அன்பு என்பதே அரிதாகிப் போயிவிட்ட இக்காலத்தில் அதைப் பற்றி பேசுவது கூட ஒரு வீண் வேலை என்று நம்மில் பலரும் நினைக்கிறோம்.

Domestic violence Act நடைமுறைக்கு வந்த வெகு சில நாட்களிலேயே நாட்டிலேயே முதன்முதலாக தமிழகத்தில் ஒரு கணவருக்கெதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்த மனைவி..

இதில் விசித்திரம் என்னவென்றால் கிறித்துவர்கள் தங்களுக்கு முன்மாதிரியாக வரித்திருக்கிற சூசை-மரி (Joseph & Mary) என்ற தம்பதியரின் பெயரைத்தான் இவர்களுக்கும் சூடியிருக்கிறார்கள் இவர்களுடைய பெற்றோர்!

அன்பு அழுக்காறு கொள்ளாது, ஆணவம் கொள்ளாது, தன்னலம் பேணாது, பிறர் குறை காணாது என்று சிறுபருவ முதலே பைபிளின் வார்த்தைகளைக் கேட்டு, கேட்டு வளர்ந்த பாரம்பரியத்திலிருந்து வந்த தம்பதியரே இச்சட்டத்தின் கீழ் தங்களுடைய தாம்பத்திய சச்சரவை தீர்க்க முனைந்திருக்கிறார்கள்!

அடுத்த சில நாட்களில் ஆவேசத்தில் கணவனை சுட்டுக்கொன்ற பெண் காவல் நிலையத்தில் சரண் என்ற செய்தி!

இதெல்லாம் எதைக் காட்டுகிறது?

அன்பு இல்லாமல் போனதைத்தான்!

அன்பு மூன்றெழுத்து, காதல் மூன்றெழுத்து, நட்பு மூன்றெழுத்து என்று கலைஞர் அவர்கள் ஒரு விழாவில் அடுக்கிக் கொண்டே சென்றது நினைவுக்கு வருகிறது..

இத்தகைய அடுக்கு மொழி பேச்சைக் கேட்கும்போது அரங்கமே கரவொலி எழுப்பி ஆர்ப்பரிக்கிறது..

பேச்சு முடிந்து வீடு திரும்புகையில் கேட்டது மறந்துபோகிறது..

மறதியும் மூன்றெழுத்துதானே..

********

6 comments:

ஆத்மன் said...

நான் மற்றவரின் அன்பை அவர் எப்படி மற்றவரின் நல்ல செயல்களை, அவரின் ஆற்றல்களைப் பாராட்டுகிறார்கள் என்பதை வைத்தே கணிக்கிறேன்.

பரந்த (pure & full) அன்பு கொண்டவர்களால் மட்டுமே மற்றவரின் நல்ல செயல்களை, அவரின் ஆற்றல்களைத் தாராளமாக மனமுவந்து பாராட்ட இயலும்

ஆத்மன்

tbr.joseph said...

பரந்த (pure & full) அன்பு கொண்டவர்களால் மட்டுமே மற்றவரின் நல்ல செயல்களை, அவரின் ஆற்றல்களைத் தாராளமாக மனமுவந்து பாராட்ட இயலும்//

உண்மைதான் ஆத்மன். மற்றவர்களூடைய வெற்றியைக் கண்டு பொறாமையடைவது மனித இயல்புதான் என்றாலும் அத்தகைய உள்ளங்களில் உண்மையான அன்பு இருப்பது சந்தேகமே..

துளசி கோபால் said...

அன்புன்றது எல்லாருக்கும் பொதுவானதுதான்.
ஊர் உலகத்தோட கண்ணுலே கெட்டவனா இருக்குறவனுக்கும் கூட
மனசின் ஒரு ஓரத்துலே எதன்மேலாவது அன்பு இருக்குமுன்னு நான் நினைக்கிறேன்.
குறைஞ்சபட்சம் அவன் புள்ளைங்க மேலெ.

tbr.joseph said...

வாங்க துளசி,

ஊர் உலகத்தோட கண்ணுலே கெட்டவனா இருக்குறவனுக்கும் கூட
மனசின் ஒரு ஓரத்துலே எதன்மேலாவது அன்பு இருக்குமுன்னு நான் நினைக்கிறேன்.
குறைஞ்சபட்சம் அவன் புள்ளைங்க மேலெ. //

சத்தியமான வார்த்தை. இதை பைபிளும் இப்படி சொல்கிறது. 'கள்வனும் காமுகனும் தன்னுடைய பிள்ளைகள் மேல் அன்புகூருகையில் இறைவன் உங்கள் மேல் எவ்வளவு அன்புகூர்வார் என்பதை நினைத்துப் பாருங்கள்!'

மங்கை said...

அன்பு இயற்கையான ஒரு உணர்வுதான்.. நாம் தான் அதை சிறமபட்டு வெளிக்காட்டிகொள்ளாமல் இருக்கிறோம் என்று நினைக்கிறேன்

அருமையா இருக்கு

tbr.joseph said...

வாங்க மங்கை,

நாம் தான் அதை சிறமபட்டு வெளிக்காட்டிகொள்ளாமல் இருக்கிறோம் என்று நினைக்கிறேன்//

நீங்க நினைக்கிறது சரிதான். அன்பை வெளிக்காட்டினால் அதை முதலாக்கிக் (Advantage)கொள்வார்களோ என்ற தேவையில்லாத அச்சமும் இதற்கு ஒரு காரணம்.

Post a Comment