Saturday, November 04, 2006

தானம்!

“தானம் பிறரன்பின் வெளிப்பாடு. குறிப்பாக தனக்குள்ளதையும் பிறருக்கு தானம் செய்யும்போது.”

தானத்திற்கு முன்மாதிரியாக கொடிக்கு தன்னுடைய தேரையே வழங்கிவிட்டு தன் வழியே நடந்த பாரி வள்ளலைக் குறிப்பிடுவதுண்டு.

ஆனால் இப்போதெல்லாம் சுயவிளம்பரத்திற்காக தானம் செய்யும் சிலரால் தானம் என்ற சொல்லே மதிப்பிழந்து போய்விட்டது.

வலக்கை செய்வதை இடக்கை அறியாமல் தானம் செய் என்பது நமக்கெல்லாம் மறந்துபோனது.

நன்கொடை வழங்கியதுமே அதற்குரிய ரசீதைப் பெற்று அதற்குண்டான வருமான வரி விலக்கைப் பெறுவதிலேயே குறியாயிருக்கிறோம்.

இன்னும் சிலர் நன்கொடை வழங்காமலேயே போலி ரசீதுகளைப் பெற்று வருமான வரி விலக்கைப் பெறுவதிலும் கைதேர்ந்தவர்களாயிருக்கிறார்கள்.

இதுவல்ல தானம்.

ஒருமுறை ஏசு தன்னுடைய சீடர்களுடன் தேவாலய காணிக்கைப் பெட்டியில் காணிக்கை செலுத்திக் கொண்டிருந்தவர்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

இறுதியில் ஒரு ஏழைப் பெண்மனி தன்னுடைய கையிலிருந்த இரண்டு செப்புக் காசுகளையும் காணிக்கைப் பெட்டியில் போடுவதைப் பார்த்த ஏசு தன் சீடர்களிடம் இவள்தான் மிக அதிகமான காணிக்கையை அளித்தாள் என்று கூறுகிறார்.

சீடர்களோ அதிர்ந்துபோய், ‘என்ன போதகரே, எத்தனையோ பேர் பொன் மற்றும் வெள்ளிக் காசுகளை செலுத்திவிட்டு சென்றனரே?’ என்கின்றனர்.

ஏசு புன்னகையுடன் அவர்கள் தங்களுக்குள்ளவற்றில் மிகுதியையே கடவுளுக்கு காணிக்கையாக செலுத்தினர். இவளோ தன்னிடமிருந்த அனைத்தையுமே செலுத்தினாள் என்கிறார்.

இக்காலத்தில் தனக்குள்ள அனைத்தையும் தானம் செய்துவிட்டால் அவனுக்குப் பைத்தியக்காரன், பிழைக்கத் தெரியாதவன் என்ற பட்டமே கிடைக்கும்.

ஆனால் உண்மையான பிறரன்பு அதில்தான் இருக்கிறது என்று நம் மதங்கள் கூறுகின்றன.

அதை அப்படியே கடைப்பிடிப்பதென்பது நடைமுறைக்கு ஒவ்வாத விஷயம்தான்..

ஆனாலும் நம்மால் இயன்றவரை, நம்முடைய வருட வருமானத்தில் ஒரு பங்கை தானம் வழங்குவதென்ற முடிவை இன்று எடுப்போம்.

இறைவன் நமக்கு வாரி வழங்கியவற்றில் ஒரு சிறு துளியை நம் சகோதரர்களுக்கு வழங்க முன் வருவோம், நம் பிறரன்பை வெளிப்படுத்துவோம்.

***

2 comments:

Anonymous said...

ஆனால் அதே ஏசு சீசருக்கு உள்ளதை சீசருக்கு கொடு என்று ஏகாதிபத்தியத்தை நியாயப்படுத்தி அடிமைப்பட்ட யூதர்களுக்கு துரோகம் செய்ததாகவும் சொல்லப்படுகிறெதே ஐயா. அத்துடன் வாசனை திரவியத்தை எல்லார் முன்னாலேயும் தனக்கு பூசுகிற பெண்ணிடம் இந்த மாதிரி சொல்லுவதை விட்டுவிட்டு ஏழைங்க எப்பவும் உங்கூட இருப்பாங்க அவங்களை எப்பன்னாலும் கவனிக்கலாம் இப்ப என்னை கவனின்னுங்கறாரே. இன்னைக்கு கிறிஸ்தவ பிரச்சாரத்தை வாழ வைக்கிற மேற்கத்திய பணம் கூட கண்டம் கண்டமாக மக்களை அடிமைப்படுத்தி சம்பாதித்த பணத்தில் நடத்தப்படும் ஆன்ம அறுவடைதானே. பிரச்சனை தொடங்குறதே ஏசு அப்படீங்கிற கற்பனையிலிருந்துதான். 100 - 90 இத போடமாட்டீங்கன்னு தெரியும். இப்படி எழுதுனதாலயே போட்டாலும் போடுவீங்க!

tbr.joseph said...

அரவிந்தன்,

ஏசு கூறினார் என்பதற்காகவே தானம் செய்ய வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை..

அது ஒரு எடுத்துக்காட்டு. அவ்வளவுதான்..

சொல்வதில் நல்லது இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள்..

இல்லாவிட்டால் விட்டுவிடுங்கள்..

எதற்கெடுத்தாலும் குதர்க்கம் பேச வராதீர்கள்..

Post a Comment