Friday, November 03, 2006

பிரச்சினைகள் இல்லாத பொழுது!

“நம்முடைய வாழ்வில் ஒவ்வொரு நாளும் ஒரு புது பிரச்சினைகளுடனே விடிகின்றது. இப்பிரச்சினைகளை எதிர் கொள்வதை தவிர்த்து ஒளிந்து ஓடுவதில் பலனில்லை.”

நம்மில் யாராவது என்னுடைய நிழலை அறவே ஒழித்துவிட்டேன் என்று கூற இயலுமா?

என்னால் முடியும் என்றால் என்னைப் பார்த்து எள்ளி நகையாட எனக்கு நெருங்கிய நண்பர்களும் தயங்கமாட்டார்கள்.

அப்படித்தான் நம்முடைய பிரச்சினைகளும்.

பிரச்சினைகள் இல்லாத மனிதனும் இல்லை. பிம்பங்கள் இல்லாத பொருளும் இல்லை.

எனக்கு எந்தவித பிரச்சினையுமில்லை நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று எவராவது கூறினால் அதுவேதான் அவர்களுக்கு பிரச்சினை!

‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே..’

இந்த பாடல் வரிகளை மறக்க முடியுமா?

எத்தனை சத்தியமான உண்மையை எவ்வளவு எளிதாக அளித்திருக்கிறார் பாடலாசிரியர்!

பிரச்சினைகளைக் கண்டு ஓடி ஒளிவதைக் காட்டிலும் அவற்றை எதிர்கொள்வது எப்படி என்பதை நாம் கண்டுணரவேண்டும்.

எப்படி பிரச்சினைகள் இல்லாமல் இருக்காதோ அதுபோன்று தீர்வுகள் இல்லாத பிரச்சினைகளும் இருக்க முடியாது.

அது என்ன என்பதைக் கண்டுணர்வதில்தான் நம்முடைய செயல்பாடு இருக்க வேண்டும்.

நேற்றைய பிரச்சினைகளுக்கு நாம் கண்டுணர்ந்த தீர்வு இன்றைய பிரச்சினைக்கு தீர்வாக இருக்க முடியாது என்பதையும் நாம் உணர வேண்டும்.

பிரச்சினைகள் புதிது புதிதாய் முளைத்துவரும் நேரங்களில் அவற்றிற்கு தீர்வு காண நாமும் புதிய வழிகளைக் காண வேண்டும்.

நேற்றைய பிரச்சினையை வெற்றிகொண்டவந்தானே நான் என்று இன்றைய பிரச்சினையை அணுகலாகாது.

இன்றைய பிரச்சினையை எல்லா கோணங்களிலுமிருந்து ஆராய்ந்து அதற்கு தீர்வு காண முயல்வதை விட்டுவிட்டு கடந்த கால வெற்றியில் களித்திருப்பதில் பலனில்லை.

நம்முடைய ஐந்து விரல்களும் ஒன்றில்லையல்லவா?

அதுபோல்தான் பிரச்சினைகளும்.

இன்றைய பொழுது நாளைய பொழுதாகும் முன் இன்றைய பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டால் எந்த பிரச்சினைக்கும் தீர்வு கிடைத்துவிடும்.

சோர்ந்து போகாமல் சிந்தித்து செயல்படுவோம். வெற்றிகொள்வோம்






2 comments:

கோவி.கண்ணன் [GK] said...

//நேற்றைய பிரச்சினைகளுக்கு நாம் கண்டுணர்ந்த தீர்வு இன்றைய பிரச்சினைக்கு தீர்வாக இருக்க முடியாது என்பதையும் நாம் உணர வேண்டும்.//

ஜோசப் ஐயா !

பிரச்சனைகள் பரிணாமம் அடைகிறது. நேற்றைய தீர்வு, இன்றைக்கு உதவாது என்ற மையக் கருத்தை நன்றாக உள்வாங்கி எழுதியிருக்கிறீர்கள்.

பிரச்சனையை பிரச்சனையாக நினைக்காமல் அது ஒரு நிகழ்வு என்று அதன் போக்கை ஏற்றுக் கொண்டு அதை சுமூகமாக வெற்றி கொள்ளவேண்டும் என்பது என் கருத்து !

pushparaj ramakrishnan said...

அருமையான கட்டுரை... நன்றாக உள்ளது....

Post a Comment