Wednesday, November 29, 2006

நம்முடைய அனுபவங்கள்!

‘நம்முடைய ஒவ்வொரு அனுபவமும் நம்மை வலுவுள்ளவர்களாக மாற்றுகின்றது என்பதை மறக்கலாகாது’

நெடுஞ்சாலை ஓரங்களில் காணப்படும் மைல் கற்களைப் போன்றவைதான் நம்முடைய அனுபவங்களும்.

நம்முடைய வாழ்க்கையும் ஒருவகையில் ஒரு நெடுந்தூரப் பயணம்தானே!

நம்முடைய நெடுந்தூரப் பயணங்களில் சாலையில் ஒவ்வொரு மைல் கல்லையும் கடக்கும் போது நாம் அடையவிருக்கும் இடத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்கின்ற உவகை நம்மை மேலும் உற்சாகப் படுத்துகிறது அல்லவா?

இது ஒரு பார்வை.

ஆனால் சிலருக்கோ ச்சே.. இன்னும் இத்தனை தூரம் பயணம் செய்ய வேண்டுமா? எப்போதுதான் இப்பயணம் முடிவுக்கு வருமோ என்றும் தோன்றக்கூடும்.

இதுவும் ஒரு பார்வைதான்.

அதுபோலவேதான் நம்முடைய அனுபவங்களும்.

அது வெற்றியில் முடிந்தாலும் தோல்வியில் முடிந்தாலும் நமக்குக் கிடைக்கும் அனுபவங்கள் நம்மை வலுவிழக்கச் செய்யலாகாது. மாறாக நம்முடைய மன உறுதியை மேலும் வலுவுள்ளதாக்கி நம்முடைய நெடு நோக்கு பார்வையை மேலும் கூர்மையானதாக்க வேண்டும்.

என்னுடைய வாழ்க்கையில் நான் இதை அனுபவித்து அறிந்ததால்தான் என்னால் இத்தனை உறுதியாகக் கூற முடிகிறது.

என்னுடைய ஐம்பதாவது வயதில் என்னுடைய வங்கியின் புதிதாகத் துவக்கப்பட்ட கணினி இலாக்காவை தலைமையேற்று நடத்த நியமிக்கப்பட்ட போது எனக்கு மிகவும் மலைப்பாக இருந்தது.

நானோ வெறும் காமர்ஸ் பட்டம் பெற்று முழுக்க முழுக்க வங்கி அதிகாரியாக சுமார் இருபத்தைந்து ஆண்டு காலம் பணிபுரிந்தவன். நானாக ஒரு கணினியை வாங்கி அத்துடன் கையில் கிடைத்த புத்தகங்களையெல்லாம் வாங்கி எனக்கு நானே ஆசிரியனாக இருந்து அதை ஒருவாறு இயக்க அறிந்திருந்தவன். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதே என்றுதான் இருந்தது என் சிந்தனை அப்போது.

ஆரம்பகாலத்தில் நான் சந்தித்தது எல்லாமே கசப்பான அனுபவங்களதான். என்னால் புரிந்துக்கொள்ள முடியாததெல்லாம் தவறானவை என்று எண்ணம் கொண்டிருந்த மேலதிகாரிகளைத் திருப்திப்படுத்த முயன்று சோர்ந்துபோயிருக்கிறேன். எடுத்த எடுப்பிலேயே சுமார் முப்பது இளம் பொறியாளர்களை தேர்ந்தெடுத்து எனக்குக் கீழே பணிக்கு அமர்த்தியபோது அவர்களுக்கு என்ன வேலை கொடுக்க வேண்டும் என்றுக்கூட என்னால் தீர்மானிக்க முடியவில்லை.

பிறகு என்னுடன் முன்பு கிளைகளில் பணியாற்றிய இளம் வங்கி அதிகாரிகளுள் சிலபேரை திரட்டி அவர்களுடன் பல வாரங்கள் அமர்ந்து எங்களுடைய வங்கியிலுள்ள நிர்வாக அலுவலகங்களுடைய தினசரி செயல்பாட்டை கணினி மயமாக்குவதென தீர்மானித்து வாரங்கள், மாதங்களாக சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒரு ப்ராஜக்ட் திட்டத்தை முழுமையாக தயாரிக்க முடிந்தது.

இதோ ஐந்தாண்டுகள் உருண்டோடிவிட்டன.

துவக்கத்தில் முப்பது பொறியாளர்களுடன் துவக்கப்பட்ட என்னுடைய இலாக்கா இன்று சுமார் நூறு பேர் கொண்ட இலாக்காவாக, என்னுடைய வங்கியின் மென்பொருள் தேவையில் அறுபது விழுக்காடு வரை நாங்களாக வடிவமைத்து தயாரித்து அளிக்கக் கூடிய அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்றால் அதில் என்னுடன் இணைந்து பணிபுரிந்த என்னுடைய இளயை நண்பர்கள துவக்கக் காலத்தில் அவர்களுக்கு கிடைத்த ஏமாற்றங்களையும், சோதனைகளையும் ஒரு படிப்பினையாக எடுத்துக்கொண்டதுதான் காரணம்.

நம்முடைய முயற்சிகள் வெற்றிபெறும் சமயங்களில் அளவு கடந்த மகிழ்ச்சியில் தலைகால் தெரியாமல் ஆடுவதும் தோல்வியுறும் சமயங்களில் அதல பாதாளத்துக்கு சென்றுவிடுவதும் நல்லதல்ல.

நம்முடைய அனுபவங்கள் நமக்கு பாடமாக இருக்க வேண்டும். அதுதான் முக்கியம். அப்போதுதான அவை நம்மை வலுவுள்ளவர்களாக்கும்.

****Tuesday, November 28, 2006

காதலில் நம்பிக்கை அவசியம்!

‘காதலும்  நம்பிக்கையும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.’

காதல் என்பது காதலனுக்கும் காதலிக்கும் இடையில் உள்ளது மட்டுமல்ல.

கணவன், மனைவி, தந்தை, மகன்/மகள், நண்பர்கள் என எல்லா உறவுக்குமே காதல் பாலமாக அமைகிறது.

அத்தகைய காதலால் உருவாகும் நட்புக்கும், உறவுக்கும் பரஸ்பர நம்பிக்கை அடித்தளமாக அமைய வேண்டும்.

நம்பிக்கையில்லாத நட்பும் உறவும் வெறும் மேலோட்டமான, உடல் சம்பந்தப்பட்ட, செயற்கையான, உள் நோக்கம் கொண்டதாகவே இருக்க வாய்ப்புள்ளது.

மேலை நாடுகளில் ஏன் நம் இந்தியாவிலும் கூட சமீப காலமாக திருமண உறவுகளில் விரிசல் ஏற்பட முதன்மைக் காரணமாக இருப்பது இந்த நம்பிக்கையற்றத்தனம்தான் என்றால் மிகையாகாது.

பைபிளில் வருகின்ற ஒரு வாக்கியத்தை இங்கு குறிப்பிடலாம் என்று நினைக்கின்றேன்.

‘மலையை அசைக்கவல்ல நம்பிக்கை இருந்தும் உன்னிடம் அன்பில்லையென்றால் பயனில்லை..’

இது எதைக் காட்டுகிறது?

‘உன் மீது நான் அன்பு கொண்டிருக்கிறேன். ஆனால் உன் மீது எனக்கு நம்பிக்கையில்லை. நீ எனக்கு துரோகம் செய்கிறாய் என்று நினைக்கிறேன்.’ என்று காதலன் தன் காதலியிடமோ அல்லது கணவன் தன் மனைவியிடமோ கூறினால் அந்த உறவு நிலைத்திருக்க முடியுமா?

அந்த உறவில் காதல், அன்பு இருக்கத்தான் முடியுமா?

நான் உன்மீது வைத்திருக்கும் காதல் முழுமையானது ஆனால் நம்பிக்கை? அது சந்தர்ப்ப சூழலைப் பொறுத்தது. அப்படியென்றால் அந்த காதலும் அதே சூழலைப் பொறுத்ததுதான் என்று பொருளாகிறது.

நட்பிலும் பரஸ்பர நம்பிக்கை மிகவும் அவசியம்.

ஒரு குடும்பத்தில் அமைதியும், சமாதானமும், சந்தோஷமும் நிலைத்து நிற்க குடும்பத்தினரிடையில் பரஸ்பர நம்பிக்கை எந்த அளவுக்கு அவசியமோ அதே போன்ற ஏன் அதற்கும் மேலான அளவு நம்பிக்கை ஒரு நிறுவனம் சிறப்பாக பரிணமிக்க அவசியமாகிறது.

தனக்குக் கீழே பணிபுரிகிறவர்களுக்கு தேவைப்படும் அதிகாரத்தை வழங்க அவர்களுடைய தலைவருக்கு அவர்கள் மீது முழு நம்பிக்கை மிக, மிக அவசியமல்லவா?

அவர்களை நம்பாமல் முழு அதிகாரத்தையும் தன் வசம் வைத்துக்கொள்ளும் அதிகாரிக்கு எந்த அளவுக்கு ஊழியர்கள் விசுவாசத்துடன் உழைப்பார்கள் என்று நாம் அனுபவித்து உணர்ந்ததுதானே?

‘இந்த காலத்து ஆண் பிள்ளைகளை நம்ப முடியாது. அதனால அவனுங்களுக்கு கல்யாணம் செஞ்சி வைக்கறதுக்குள்ள அவன் சம்பாத்தியத்துல நமக்குன்னு தேவையானத சேர்த்து வச்சிக்கணும்.’ என்று சிந்திக்கும் பல பெற்றோர்களை திருமணம் முடிந்தவுடன் கைவிட்டு விட்டு செல்லும் பிள்ளைகளைப் பார்த்திருக்கிறேன்.

‘நான் இப்படி செய்வேன்னு நினைச்சித்தான இதுவரைக்கும் நான் சம்பாதிச்சு குடுத்தத சேர்த்து வச்சிக்கிட்டீங்க? இப்ப அதையே வச்சிக்கிட்டு சந்தோஷமா இருங்க.. நான் எதுக்கு?’ என்று மகன் கேட்டால் அது நியாயந்தானே?

காகித மலர்களில் வாசத்தை எதிர்ப்பார்த்துப் பயனில்லை..

நம்பிக்கையில்லாத உறவுகளும் நாளடைவில் கசங்கி கிழியத்தான் செய்யும்..

*******

Monday, November 27, 2006

மற்றவர்களைப் பற்றி நம் கருத்து

‘மற்றவர்களைப் பற்றி நாம் என்ன நினைத்திருக்கிறோம் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடலாகாது. நம்மைப் பற்றி அவர்கள் நல்லவிதமாய் நினைக்கவேண்டுமெனில் நாம் அவர்களைப் பற்றி அதே முறையில் நினைக்கவேண்டும்.’

தினை விதைப்பவன் தினையையும் வினை விதைப்பவன் வினையையும் அறுப்பான் என்பது பண்டைய மொழி.

நீ எந்த அளவையால் அளக்கிறாயா அதை அளவையால்தான் உனக்கும் அளக்கப்படும் என்கிறது பைபிள்.

இதை எல்லா சமயங்களுமே வலியுறுத்துவதை நாம் பார்க்கிறோம்.

நான் நல்லவன் என்பது எத்தனை உண்மையோ அதே போன்றுதான் என்னைச் சுற்றிலும் இருப்பவர்களும் என்பதை நாம் பல நேரங்களில் உணர்வதில்லை.

நான் மட்டுமே நல்லவன் என்கின்ற மனப்போக்கு நம்மில் பலரிடமும் உள்ளதை நம்முடைய அன்றாட வாழ்விலே பார்க்கிறோம்.

பிறரை அவர்கள் நல்லவர்கள் என்று நிரூபிக்கப்படும் வரை அவர்கள் தீயவர்களே என்ற கண்ணோட்டமும் நம்மில் பலரிடமும் காணப்படுகிறது என்றால் அது மறுக்க முடியாத உண்மை.

The Law treats everyone innocent until proved otherwise. But the law enforcing authorities think otherwise. They feel everyone is guilty until proved otherwise.

சட்டத்தின் பார்வையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படும்வரை நிரபராதிகளே.. ஆனால் அச்சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளுடைய பார்வையோ இதற்கு நேர் எதிரானது. அவர்களைப் பொருத்தவரை எல்லோரும் குற்றவாளிகளே அவர்கள் நிரபராதிகள் என நிரூபிக்கப்படும்வரை.

நம்மில் பலரும் பல சமயங்களில் இவ்வாறே நினைக்கிறோம், நடக்கிறோம்.

ஏழை என்றால் அவன் கள்வன், பணம்படைத்தவன் களவில் ஈடுபடமாட்டான் என்பது நாமாகவே கற்பித்துக்கொள்கிறோம்.

களங்கமில்லா மனதுடன் நம்மைச் சுற்றியுள்ளவர்களை, நம்மைச் சார்ந்திருப்பவர்களைக் காணக் கூடிய மனப்பக்குவம் வரவேண்டும்.

நண்பர்களை, உறவுகளை அவர்களுடைய எல்லா குற்றங்குறைகளுடன் ஏற்றுக்கொள்ள நம்மை நாமே பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

எதையும் எதிர்பார்க்காத நட்பிலும் உறவிலும் எவ்வித ஏமாற்றங்களும், அபிப்பிராய பேதங்களும் இருப்பதில்லை.

அப்படிப்பட்ட நட்பும், உறவுமே தலைமுறைக்கும் நீடித்திருக்கும்.

****

Friday, November 24, 2006

Differently abled!

சிங்கத்திற்கு வாலாய் இருப்பதைவிட எலிக்கு தலையாய் இருப்பது மேல்.

என்னுடைய இளைய மகள் சுமார் மூன்று மாத காலமாக சென்னையிலுள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பயிற்சி மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்தார்.

அந்நிறுவனத்தில் அவளுக்கு கிடைத்த சில அனுபவங்கள் அவளுடைய பார்வையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையல்ல.

எடுத்ததற்கெல்லாம் கோபப்படும் அவள் இப்போதெல்லாம் கோபப்படுவதைக் கட்டுப்படுத்த  முயல்வது நன்றாகவே தெரிகிறது.

எனக்கு அது இல்லை இது இல்லை என்று சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் சோர்ந்து போகும் அவள் இப்போதெல்லாம் தனக்கு இருப்பதே அதிகம் என்று சிந்திக்க துவங்கியிருப்பதும் தெரிகிறது.

ஏன்? அப்படியென்ன அனுபவங்கள் என்னுடைய மகளை மாற்றியிருக்க முடியும்?

அவள் பணியாற்றிய அந்த நிறுவனத்தின் சிறப்பம்சம் அங்கு பணிபுரியும் ஊழியர்களில் சுமார் முப்பத்து விழுக்காடு உடல் ஊனமுற்றவர்கள்.

ஆங்கிலத்தில் முன்பெல்லாம் Disabled என்று குறிப்பிடப்பட்ட இவர்களை சமீப காலமாக மிகவும் பொருத்தமாக Differently abled என்று சொல்கிறார்கள்!

ஆம். உடலில் சில ஊனங்களை இவர்களுக்கு கொடுத்த இறைவன் அதனை ஈடுகட்டும் விதமாக அபிரிமிதமான ஆற்றலை அள்ளிக் கொடுத்திருக்கிறான் என்றால் மிகையாகாது.

அவர்களுடன் சேர்ந்து பழகி, பணியாற்றிய என்னுடைய மகளுடைய அனுபவம்தான் அவளை பெருமளவு மாற்றியிருக்கிறது!

அந்நிறுவனத்திற்கு நானும் பலமுறை சென்றிருக்கிறேன். துவக்கத்தில் ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் இத்தகையோர் பலரைப் பார்த்து சற்றே கலக்கமுற்ற எனக்கு இப்போது பழகிப் போனது.

‘அவங்க நம்ம கிட்டருந்து எதிர்பார்க்கிறது அனுதாபத்தையில்லப்பா.. சமமான ட்ரீட்மெண்ட்ட.’ என்பாள் என் மகள்.

உண்மைதான். அங்கீகாரத்தையுமல்ல. சமமான, தோழமையான நட்பை.

‘அவங்களோடல்லாம் நம்மள கம்பேர் பண்ணவே முடியாதுப்பா. அவ்வளவு ஷார்ப் அவங்க. கைவிரல்கள வச்சிக்கிட்டு அவங்களுக்குள்ள பேசி, சிரிச்சி, எங்க எல்லாரையும் கலாய்க்கிறப்ப ஆச்சரியமா இருக்கும்ப்பா..’ என்றாள் இன்னொரு நாள்..

உண்மைதான்.. தங்களுடைய நிலையை ஒரு குறையாக நினைக்காமல் அதையே ஒரு வலுவாக மாற்றிக்கொண்டவர்கள் அவர்கள்.

மென்பொருளில் அடிப்படை படிப்பு இல்லாத இத்தகையோர் பலரையும் பணிக்கு அமர்த்தி அவர்களுக்கு தேவையான பயிற்சியும் கொடுத்து நல்லதொரு வாழ்க்கையை கொடுத்துள்ள அந்நிறுவனத் தலைவரை எத்தனை போற்றினாலும் தகும்.

அந்நிறுவனத்திலிருந்த ஒருவர் வேறொரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் கூடுதல் ஊதியத்தில் வேலை கிடைத்து சென்று சில நாட்களிலேயே அங்கிருக்க விரும்பாமல் திரும்பி வந்தபோதும் எந்த வருத்தமுமில்லாமல் மீண்டும் பணிக்கு சேர்த்துக்கொண்ட அவரை என்னவென்று சொல்வது?

அப்படித் திரும்பி வந்தவர் கூறிய வார்த்தைகள்தான் இன்றைய சிந்தனையின் கரு: சிங்கத்திற்கு வாலாய் இருப்பதை விட எலிக்கு தலையாய் இருப்பது மேல்!

உண்மைதானே?

அந்நிறுவனத்தில் நம்முடைய தமிழ்மண நண்பர் ஒருவரும் பணியாற்றுகிறார் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியவில்லை!

Thursday, November 23, 2006

வாழ்க்கை லட்சியம்!

‘புலரும் ஒவ்வொரு பொழுதும் நாம் இழந்துவிட்டதை மீண்டும் அடைய ஒரு புது வாய்ப்பு!’

நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு லட்சியம் இருக்கும்.

நம்மில் சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட லட்சியங்களும் இருக்கும்!!

இன்னும் சிலருக்கு லட்சியங்கள் மாறிக் கொண்டேயிருக்கும்!!

ஒரு குட்டிக் கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு மூன்று வயது சிறுவனை அவனுடைய தாய் கண் மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறார். சிறுவன் மருத்துவரின் அறையை விட்டு வெளியே வந்ததும், ‘அம்மா நான் பெரியவனானதும் கண் டாக்டராகப் போகிறேன்.’ என்கிறான். தாய் தன் மகனுடைய லட்சியத்தை செவியுற்று மிகவும் மகிழ்ச்சியடைகிறாள். வருகின்ற வழியில் மாநகரப் பேருந்தில் பயணம் செய்துவிட்டு இறங்கி வீட்டை நோக்கி நடக்கையில் மகன், ‘அம்மா நான் பெரியவனானதும் கண்டக்டராகப் போகிறேன்.’ என்றான்.

நம்முடைய வயதும் அனுபவமும் அதிகரிக்க, அதிகரிக்க, நம்முடைய பார்வையின் கோணமும், ஆழமும் மாறத்தான் செய்கின்றன. இல்லையென்று சொல்வதற்கில்லை.

ஆனால் அந்த மாற்றம் நம்முடைய வாழ்க்கையின் போக்கை அடியோடு புரட்டிப் போட்டுவிட நாம் அனுமதிக்கலாகாது.

கள்வனைப் பார்த்து கள்வனைப் போலானால் என்ன என்றும் காவலனைப் பார்த்து காவலானானால் என்ன என்றும் நினைத்தால் அது ஒன்றுக்கொன்று முரணான பார்வையாகிவிடும்.

நம்முடைய லட்சியம் ஒன்றே ஒன்றுதான்..

அது என்னவென்பதைக் குறித்த காலத்தில் கணித்துக்கொண்டு அந்த இலக்கை நோக்கியே நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நகர்வும் அமைய வேண்டும்.

லட்சியத்தையடைய நாம் வகுத்திருக்கும் பாதைகள் மாறலாம், ஆனால் நோக்கம் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.

நம்முடைய தவறான பாதையால், அணுகு முறையால் தோல்விகளை, சரிவுகளைச் சந்திக்க நேரலாம்.

ஆனால் நம்முடைய லட்சியப்பயணத்தில் சோர்வோ, தயக்கங்களோ அல்லது தடுமாற்றங்களோ இருக்கலாகாது.

இன்று இல்லையேல் நாளை, நாளையில்லையேல் மறுநாள்..

புலரும் ஒவ்வொரு பொழுதும் நமக்கு புதுப்புது வாய்ப்புகளை ஏற்படுத்தும் யுகங்கள் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்..

புலரும் ஒவ்வொரு நாளும் எப்படி மடிகிறதோ அதுபோன்றே தோல்விகளும், சரிவுகளும்..

ஒரு சரிவு முடிவடையும் இடத்திலிருந்து மற்றொரு உயர்வு ஆரம்பமாகிறது என்பதையும் மறக்கலாகாது..

புலரும் ஒவ்வொரு பொழுதும் முந்தைய இரவின் முடிவுதானே!

********

Tuesday, November 21, 2006

வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும்!

‘உலகில் வல்லவர்களும் நல்லவர்களும் வாய் மூடி மெளனியாக இருப்பதால்தான் வாய்ச் சவடால் பேர்வழிகளும் தீயவர்களும் பலுகிப் பெருகி வருகிறார்கள்.’

இது இருபத்தியோரு நூற்றாண்டின் நிதர்சனம் என்றால் மிகையாகாது.

இது நம் நாட்டுக்கு மட்டும் பொருத்தமானதல்ல. அகில உலகத்துக்கும் மிகவும் பொருத்தமானது.

தடியெடுத்தவன் தண்டல்காரன் என்பது இப்போதெல்லாம் பரவலாகி வருகிறது.

இப்போது வெளிவரும் திரைப்படங்களும் இத்தகையோரைத்தானே வெளிச்சமிட்டு காட்டுகின்றன!

நம்முடைய அலுவலகங்களிலும், சமுதாயத்திலும் இத்தகையோரின் ஆதிக்கம் நாளுக்கு நாள் பலுகிக்கொண்டே போகிறது என்றாலும் மிகையாகாது.

வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும், அழுகின்ற குழந்தைக்குத்தான் பால் கிடைக்கும் என்பது பண்டைய மொழி.

அதற்கு நம்மைப் பற்றி, நம்முடைய அறிவாற்றலைப் பற்றி, நம்முடைய திறமைகளைப் பற்றி நாம்தான் எடுத்துரைக்க வேண்டும், அதை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என்பதும்
நமக்கு தேவையுள்ளதை நாம்தான் கேட்டுப் பெறவேண்டும் நாம் வாய் மூடி மவுனியாக இருந்தால் நம்முடைய தேவைகளை அதிகாரத்திலுள்ளவர்களுக்கு தெரியாமலே போய்விடும் என்பதும்தான் பொருள்.

ஆனால் இவ்விரண்டு பழமொழிகளையும் நன்றாக புரிந்து வைத்துக்கொண்டிருப்பவர்கள் நம்முடைய முன்னோர் எண்ணியிருந்த வல்லவர்களும், நல்லவர்களும் அல்ல..

மாறாக வாய்ச்சவடால் பேர்வழிகளும் தீயவர்களும்தான்.

வாயுள்ள பிள்ளை என்பவன் இன்று உரக்க பேசுபவன் என்றும், தீய வார்த்தகைளை சரமாரியாக உதிர்ப்பவன் என்றும், கைகளில் வாளுடனும், பட்டாக்கத்தியுடனும், உருண்டு திரண்ட சவுக்கு தடிகளுடனும் சாலைகளிலும் சந்தைகளிலும் உலா வருபவன் என்றும் உருபெற்றிருக்கிறான்.

அழுகின்ற குழந்தை என்பவன் இன்று என்ன நல்லது செய்தாலும் போறாது என்ற பேராசை மனப்பான்மையுடன் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று அலைகின்றவனாய் மாறியிருக்கிறான்.

இவ்விரு மனப்பாண்மைக் கொண்டவர்களால் நல்ல திறமை படைத்த, நல்ல மனம் படைத்த வல்லவர்கள், நல்லவர்கள் இன்று சமுதாயத்தில் அடையாளம் தெரியாமல் மறைந்துப் போயிருக்கிறார்கள்.

இத்தைகையோரை இணங்கண்டு வெளிக்கொண்டுவருவதே இன்றைய இளைய சமுதாயத்தின் தலையாயப் பணியாயிருக்க வேண்டும்..

அப்போதும் வீடும், நாடும் ஏன் இவ்வுலகமே உயர்வு பெறும்!

****

Monday, November 20, 2006

நம்மால் முடியும்!

‘நம்மில் பலருடைய வாழ்விலும் ‘முடிக்க முடிந்தது’ என்பதை விட ‘முடித்திருக்க முடியும்’ என்பதுதான் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறது.’

என்னுடைய வாழ்க்கையையும் திரும்பிப் பார்க்கிறேன்.

என்னுடைய தகுதிக்கும், திறமைக்கும் உட்பட்ட பல காரியங்களிலும் கூட, அதாவது அவற்றை வெற்றிகரமாக முடிக்கக் கூடிய எல்லா வாய்ப்புகளும் எனக்கு கிடைத்தும் கூட ஏதோ ஒரு காரணத்திற்காக அவற்றைத் தவற விட்டிருப்பது இப்போது தெளிவாக தெரிகிறது.

ஏன்?

ஏன் என்று அலசிப் பார்ப்பதை விட அப்படிப்பட்ட சூழலில் நான் இனி என்ன செய்யப் போகிறேன் என்று சிந்திப்பதுதான் இனி அப்படியொரு நிலமை ஏற்படாமலிருக்க சிறந்த வழி என்று எண்ணுகிறேன்.

ஆங்கிலத்தில் also ran, என்பார்களே அதுபோல ஒரு ஓட்டப் பந்தயத்தில் எட்டு பேர் கலந்துக்கொண்டாலும் ஒருவரால் மட்டுமே முதலில் வந்து கோப்பையைத் தட்டிச் செல்ல முடிகிறது.

ஆனால் ஒன்று. Could have run என்பவர்களை விட Also ran என்பவர்கள் எவ்வளவோ மேல்.

என்னால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்க முடியும் என்பவர்கள் வெறும் வாய்ச் சவடால் பேர்வழிகள். நானும் ஓடினேன், அல்லது நானும் முயற்சி செய்தேன் என்பவர்கள் குறைந்த பட்சம் இறுதி போட்டியில் கலந்துக் கொண்டார்கள் என்பதாவது உண்மை..

நம்முடைய வாழ்க்கையையும் திரும்பிப் பார்ப்போம்.

ஒரு காரியத்தை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கக் கூடிய எத்தனைச் சந்தர்ப்பங்களை நம்முடைய தவறுகளால், அல்லது ஆணவத்தால், அல்லது அளவுகடந்த நம்பிக்கையால் தவற விட்டிருக்கிறோம்.

நம்முடைய விளையாட்டு வீரர்களை, குறிப்பாக நம்முடைய கிரிக்கெட் அணியைக் குறித்து சொல்லக் கேட்டிருக்கிறோம்.. Capable of snatching defeat from the jaws of success என்று..

எளிதில் வெற்றிப் பெறக் கூடிய பல சந்தர்ப்பங்களிலும் அவர்கள் தோல்வியைத் தழுவ என்ன காரணம்?

அளவுகடந்த தன்னம்பிக்கையினாலா, ஆணவத்தாலா அல்லது மனித இயல்பான தவறுகளாலா?

நாம் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் வெற்றி பெறுவேன் அல்லது வெற்றி பெற்றே தீருவேன் என்ற உறுதியான முடிவுடன் அதற்கு என்னவெல்லாம் தேவையோ அவற்றிற்கெல்லாம் நம்மை நாமே தயாரித்துக்கொண்டு ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்..

நம்முடைய கடந்த கால தோல்விகளுக்கு காரணமாயிருந்தவை எவை என்பதை ஆராய்ந்து அவற்றை நம்மால் இயன்றவரைத் தவிர்த்தாலே போதும் எதிர்வரும் காலத்தில் நாம் ஈடுபடும் ஒவ்வொரு விஷயத்திலும் வெற்றி உறுதி!

********

Saturday, November 18, 2006

அழியா செல்வம்!

‘உலகின் மிகப் பெரிய செல்வந்தனும் ஏழைதான்.. உள்ளத்தில் அன்பு இல்லாவிட்டால்...’

உலகின் செல்வங்கள் உறவைத் தருவதில்லை.

அப்படியே புதிய உறவுகளை ஏற்படுத்தினாலும் அவை நிலைத்து நிற்பதில்லை.

பணம் வந்தால் பத்தும் பறந்துபோகும் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு உண்மை பணம் போனால் பந்துக்களும் பறந்துபோகும் என்பதும்.

பணத்தால் ஏற்படும் பந்தம் பணம் இருக்கும்வரைதான். பாசத்தால் ஏற்படும் பந்தமோ பத்து தலைமுறைக்கும் நிலைத்து நிற்கும்..

‘நீ உலகையே தனதாக்கிக் கொண்டாலும் உன் ஆன்மாவை இழந்துவிட்டால் என்ன பயன்?’ என்றார் கிறித்துவ புனிதர் ஒருவர்.

ஆன்மாவையே இழந்துவிடுவதென்றால் அன்பு இல்லாத, பாவ சிந்தனைகள் நிறைந்த உள்ளம்.. அது இருந்தென்ன பயன்?

ஆணவம் பிடித்த மனிதனிடத்தில் அன்பை எப்படி எதிர்பார்ப்பது?

பிறருடைய வெற்றியைச் சகித்துக்கொள்ள இயலாத ஒரு மனிதனிடத்தில் அன்பை எப்படி எதிர்பார்ப்பது?

பணம் பாதாளம்வரை பாயும் என்பது உண்மைதான்.

அன்பு இல்லாத பணம் படைத்த மனிதன் மரணத்திற்குப் பிறகு செல்லும் இடமும் பாதாளம்தான்.

செல்வந்த குடும்பத்திலிருந்து வந்த அன்னைத் திரேசா ஏழை எளியவர்கள் மீது மாளா அன்பு கொண்டிருந்தார்.

அவருடைய ஆசிரமத்தைத் துவங்கிய சமயத்தில் அவரிடம் பணம் இருக்கவில்லை, நிம்மதியாக வசிக்க இடம் இருக்கவில்லை. ஆனால் அவருடைய உள்ளத்தில் அன்பு நிறைந்து வழிந்தது.

அந்த அன்புதான் கொல்கொத்தா வணிகர்கள், செல்வந்தர்கள் ஏன் அவருடைய அலுவலிலே இடைஞ்சலாயிருந்தவர்களுடைய கடின மனதையும் கரைத்தது..

பொருளில்லார்க்கு இல்லை இவ்வையகம் என்றான் வள்ளுவன்..

ஆனால் அன்பில்லார்க்கு இல்லை சொர்க்கம், மறுவாழ்வு!

இதுதான் நிரந்தர உண்மை!

Friday, November 17, 2006

உங்க தயவை விரும்பவில்லை=உதவி!

‘மகிழ்ச்சியோடு நாம் பிறருக்கு செய்யும் உதவி நாம் எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத திசையிலிருந்து திரும்பி நம்மிடமே வந்து சேரும்.’

இந்த அவசர உலகத்தில் நம்முடைய தேவைகளையே பூர்த்தி செய்ய நமக்கு அவகாசம் இல்லாதபோது பிறருடைய தேவைகளைப் பற்றி சிந்திக்க நேரம் எங்கே?

இது நம்மில் பலரும் கேட்கும் கேள்வி.

ஆனால் அதே சமயம் நமக்கு தேவை என்று தோன்றும்போது நமக்கு தெரிந்தவர், தெரியாதவர் யாராயிருந்தாலும் உதவி கேட்க தயங்குவதில்லை.

அச்சமயங்களில் நாம் உதவி கோரும் நபர் தன்னுடைய இயலாமையை பணிவுடன் தெரிவித்தாலும் அதை நாம் முழு மனதுடன் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதில்லை.

அன்றுமுதல் அவரை நம்முடைய ஜன்ம விரோதியாக பாவிக்கத் துவங்கிவிடுகிறோம்.

இது மனித இயல்புதான். இல்லையென்று மறுப்பதற்கில்லை.

இது நம்முடைய சமுதாயத்தில் நான் மிகச் சாதாரணமாக காணும் ஒன்று.

முக்கியமாக சென்னை, மும்பை, கொல்கொத்தா போன்ற பெரு நகரங்களில் ஒரே குடியிருப்பில் வசிக்கும் பல நூறு குடும்பங்கள் தனித்தனி தீவுகளாக வசிப்பதைப் பார்த்திருக்கிறோம்.

நான் தற்போது வசிக்கும் குடியிருப்பிலும் இதே நிலைதான். இந்தியாவிலுள்ள சகல மொழி பேசுபவர்களும் இங்கு வசிக்கின்றோம். நான் புதிதாக குடியேறிய சமயத்தில் நான் வசிக்கும் தளத்தில் குடியிருந்தவர்களிடம் நானாக வலியச் சென்று என்னை அறிமுகப்படுத்திக்கொண்ட போதும் என்னை ஏதோ அயல் கிரகத்திலிருந்து வந்தவனைப் போன்று பார்த்தவர்கள்தான் அதிகம்.

சிரித்துப் பேசினால் எங்கே உதவி கேட்டு வந்து நிற்பாரோ என்ற அச்சம் காரணமாக இருக்கலாம்.

இப்படி செய்பவர்கள் தங்களுக்கும் பிறருடைய உதவி தேவைப்படும் காலம் ஒன்று வரும் என்பதை மறந்துவிடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

என்னுடைய குடியிருப்பில் வசித்து வந்த ஒருவருக்கு ஒரு நாள் விடியற்காலையில் மாரடைப்பு ஏற்பட்டு ஒரு கையும் காலும் செயலிழந்துப் போனது. வீட்டில் மனைவியும் அவரும் மட்டுமே. ஒரேயொரு மகள். அண்டை மாநிலத்தில் பணிபுரிகிறார்.

அவருடைய மனைவியே அண்டையில் யாரிடமும் உதவி கோராமல் அப்போலோ மருத்துவமனைக்கு தொலைப்பேசி செய்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் சயரன் ஒலியுடன் வாசலில் வந்து நின்றபோதுதான் குடியிருப்பிலிருந்த பலருக்கும் தெரியவந்தது.

மருத்துவ மனை ஊழியர்கள் அவரை ஆம்புலன்சில் ஏற்றி புறப்பட்டுச் செல்வதை அடுத்த குடியிருப்பில் குடியிருந்தவர்கள் முதல் ஜன்னல் வழியாக பார்த்தவாறு நின்றிருந்தனரே தவிர யாரும் வெளியில் வந்து என்ன ஏது என்று விசாரிக்க முன் வரவில்லை.

அவரைச் சந்திக்க நானும் என் மனைவியும் மருத்துவமனைக்கு சென்றிருந்தபோதுதான் தெரிந்தது அவருடைய மனைவி, கணவன் வலியால் துடித்துக்கொண்டிருந்த நேரத்தில் என்ன பாடுபட்டிருக்கிறார் என்பது தெரியவந்தது.

‘ஏன் யாருக்கும் தெரிவிக்காமல் இருந்துவிட்டீர்கள்?’ என்றேன். அதற்கு ‘எதுக்கு சார்? கேட்டாலும் யாரும் உதவி பண்ண வரமாட்டாங்கன்னு தெரியும். அதான் எதுக்குன்னு விட்டுட்டோம்.’

என்னுடைய நீண்ட கால நண்பர், சென்னை வாசி ஒருமுறை வேடிக்கையாகக் கூறினார். ‘சார் இங்க நீங்களா போய் உதவி செஞ்சாக் கூட ஏத்துக்கமாட்டாங்க. இவன் எதுக்கோ அடி போடறான்னு நினைப்பாங்க. இங்க உதவிங்கற வார்த்தைக்கு ஒரு புது அர்த்தம் இருக்கு. அதாவது ங்க யவை விரும்பவில்லை! அதனால நம்ம வேலைய பாத்துக்கிட்டு போறதுதான் சேஃப்.’

என்ன கொடுமை பாருங்கள்!

Thursday, November 16, 2006

புகழ்ச்சியும் இகழ்ச்சியும்!

‘நம்மில் பலரும் புகழில் மட்டுமே பங்குகொள்ள விரும்புகிறோம்.. இகழ்வில் அல்ல.’

எந்த ஒரு செயலிலும் தனி நபராக ஈடுபடுவதைவிட ஒரு குழுவாக பலருடன் இணைந்து ஈடுபடுவது சற்று சிரமம்தான்.

நாம் தனியாக செயல்படுகையில் நம்முடைய மனதில் உருவகப்படுத்தியிருப்பதை அப்படியே செயல் வடிவில் கொண்டு வந்துவிட இயலும். சற்று சிரமம்தான் என்றாலும் அதே குறிக்கோளுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

ஆனால் சில விஷயங்களில் அது இயலாமற் போய்விடுகிறது. குறிப்பாக நம்முடைய அலுவலகங்களில்.

இத்தகைய சூழ்நிலைகளில் குழுவாக செயல்படவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

பலவிதமான பின்னணிகளிலிருந்து வரும் பலதரப்பட்ட குணாதிசயங்களைக் கொண்ட நபர்கள் அடங்கியுள்ள எந்த குழுவிலும் கருத்து பேதங்கள் இருக்கத்தான் செய்யும்.

குழுவினருக்கு முன்னேயுள்ள இலக்கை அடைவதுதான் அனைவருடைய நோக்கமாக இருந்தாலும் அவர்களுடைய சிந்தனைகள், செயல்பாடுகளில் ஒற்றுமை அல்லது ஒருமித்த கருத்து இருப்பது அபூர்வம்தான்.

குழுவின் ஒட்டுமொத்த செயல்பாடு தோல்வியுறும் நேரத்தில் அதற்கு பொறுப்பேற்க யாருமே முன்வராததை பார்க்கிறோம்.

அதுவே குழுவிலுள்ள வெகு சிலருடைய உழைப்பால் கிடைக்கும் வெற்றியில் பங்குக்கொள்ள குழுவிலுள்ள அனைவருமே முண்டியடிப்பதையும் பார்க்கிறோம்.

தோல்வியில் பங்குபெற விரும்பாத எவருக்கும் வெற்றியில் பங்குபெற உரிமையில்லை.

கடமைகள் இல்லாத பொறுப்புகள் இருக்க முடியாது என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதுபோலவே தோல்விகளில்லாத வெற்றிகளும் இல்லை என்பதும் சத்தியமான உண்மை.

நாம் அடையும் வெற்றி நம்முடைய உழைப்பால் மட்டும் கிடைத்ததல்ல என்பதை நாம் உணர்ந்திருக்கிறோமோ இல்லையோ நாம் அடையும் தோல்விகளுக்கு நாமும் ஒரு காரணம் என்பதை உணர்ந்திருத்தல் மிக அவசியம்.

தோல்விகளால் வரும் இகழ்வை தாங்கிக்கொள்ளக் கூடிய மனப்பக்குவம் நமக்கு வந்துவிட்டாலே புகழ் தரும் பெருமையில் மயங்கிவிடமாட்டோம்.

பிறர் நம்மைப் புகழும்போது விண்ணுக்கு உயராமலும் இகழப்படும்போது பாதாளம் அளவுக்கு சரியாமலும் இருக்கக் கூடிய வலுவான மனப்பக்குவமும் தன்னால் நமக்கு வந்துவிடும்.

புகழ்ச்சியும் இகழ்ச்சியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை நினைவில்கொள்வோம்!

If we want a share of the fame, we have got to be willing to take a share of the blame as well!
******

Wednesday, November 15, 2006

இளைய தலைமுறை!

‘நம்முடைய குழந்தைகளுக்கு முன்பு நாம் நல்லது செய்தாலும், தீயது செய்தாலும் அது அவர்களுடைய மனதில் ஆழமாய் பதிந்துவிடும்.’

எல்லா தலைமுறையினருமே அவர்களுக்கு அடுத்து வரும் தலைமுறையினரைக் குறை கூறுவதிலேயே முனைப்பாயிருப்பதைப் பார்த்திருக்கிறோம்.

நான் என்னுடைய தாத்தா, தந்தை என்னுடைய தலைமுறையினரிடம் கண்ட அதே குற்றத்தையே நானும் இப்போது என்னுடைய மக்களிடத்தில் காண்கிறேன்.

இது இனி வரும் எல்லாத் தலைமுறையினரும் பாடும் பாட்டாகவே இருக்கும்.

ஆனால் இதற்கு காரணம் யார் என்பதை நாம் அனைவருமே மறந்துபோகிறோம்.

நம்முடைய பெற்றோர்கள் நம்முடைய இளம் பருவத்தில் நம் கண்ணெதிரே பேசிய பேச்சு, செய்த செய்கைகள் இவைகளைத்தானே நாமும் நம்முடைய பிள்ளைகளுக்கும் எதிரில் பேசுகிறோம், செய்கிறோம்?

நம்முடைய பெற்றோர்கள் பேசிய பேச்சும், செய்த செய்கைகளும் நல்லவைகளாய் இருந்திருந்தால் நாமும் நல்லதையே பேசி, நல்லதையே செய்திருப்போம்.

அதையே நம்முடைய பிள்ளைகளும் கடைப்பிடித்திருப்பார்கள். நாமும் நம்முடைய பெற்றோர்கள் செய்த தவறுகளையே செய்துவிட்டு நம்முடைய இளைய தலைமுறையனரை மட்டும் இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே என்று குறை காணுவதில் என்ன பயன்?

ஏசு வாழ்ந்த காலத்தில் ஒருமுறை தன்னைக் காண வந்த இளஞ்சிறார்களை சீடர்கள் தடுத்து நிறுத்துவதைப் பார்த்து இவ்வாறு கூறுவார். ‘குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள். ஏனெனில் மோட்ச ராச்சியம் இத்தகையோரதே..’ மேலும் ‘இச்சிறார்களுக்கு யாரேனும் இடைஞ்சலாயிருந்தால் (அதாவது அவர்கள் வழிதவறிச் செல்ல காரணமாயிருந்தால்) அவர்களுடைய கழுத்தில் இயந்திரக் கல்லைக் கட்டி நடுக்கடலில் தள்ளவேண்டும்’ என்பார்.

ஆம்..

மாசு, மருவற்ற இளம் உள்ளங்களில் தவறான சிந்தனைகளை விதைப்பது அவர்களுக்கு விஷத்தை ஊட்டுவதற்கு சமம்.

நம்முடைய பெற்றோர்களுக்கு அவர்களுடைய வயதான காலத்தில் நாம் செய்வது: அது நல்லதாக இருந்தாலும் சரி, தீயதாக இருந்தாலும் சரி அதையேத்தான் நம்முடைய பிள்ளைகளும் நமக்குச் செய்வார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

ஆகவெ இன்று முதல் நம்முடைய பிள்ளைகளுக்கு முன்பு நல்லதையே பேசுவோம், நல்லதையே செய்வோம்.

****

Tuesday, November 14, 2006

நம்மால் பிறருக்கு ஏற்படும் பிரச்சினைகள்

‘நாம் பிறருடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் அவர்களுடைய பிரச்சினைகளுக்கு நாமே காரணமாக இல்லாமல் இருக்க வேண்டும்.’

பிரச்சினைகளில் இரு வகை உண்டு.

ஒன்று நமக்கு நாமே உண்டாக்கிக்கொள்ளும் பிரச்சினை.

மற்றவர்களுடைய நலன் இவற்றால் பாதிக்கப்படாதவரை இத்தகைய பிரச்சினைகளால் நமக்கு மட்டுமே தொல்லைகள், துன்பங்கள்.

நம்மால் உண்டாக்கப்படும் பிரச்சினைகளுக்கு நாமேதான் தீர்வு காண வேண்டியிருக்கும்.

ஆனால் இரண்டாவது வகை பிரச்சினை மற்றவர்களால் ஏற்படுவது.

இத்தகைய பிரச்சினைகளை நம்முடைய அலுவலகத்திலும் சரி குடும்ப வாழ்க்கையிலும் சரி அன்றாடம் சந்திக்கிறோம்.

குடும்பத்தில் மனைவியால், மக்களால் ஏன் சில சமயங்களில் நம்முடைய பெற்றோர்களாலும்..

‘ஒங்க வேலைய பார்த்துக்கிட்டு இருக்காம ஏம்மா அவ கிட்ட போய் வாய குடுத்து வாங்கிக் கட்டிக்கிறீங்க? இதுனால ஒங்களுக்கு மட்டுமா டென்ஷன், எனக்குந்தான்.. ஒங்க ரெண்டு பேரோட சண்டையால ஆஃபீசுக்கு போனாக் கூட எதுலயும் கவனம் செலுத்த முடியமாட்டேங்குது..’

இது தினந்தோறும் காலை நேரங்களில் ஏறத்தாழ எல்லா கூட்டுக் குடும்பங்களிலும் கேட்கக்கூடிய வசனம்.

‘டேய்.. காலேஜுக்கு போனமா வந்தமான்னு இல்லாம என்னடா இது தினம் ஒரு பிரச்சினைய வீட்டுக்கு கொண்டுவரே.. இருக்கற தொல்லை போறாதுன்னு ஒங்க பிரின்சிக்கிட்ட வேற வந்து நிக்கணுமாக்கும்?’

இது தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளிடம் எல்லா தகப்பன்களுக்கும் அடிக்கும் லெக்சர்.

‘ஏங்க ஒங்கக்கிட்ட எத்தன தரம் சொல்லியிருக்கேன். மத்தவங்க விஷயத்துல தலையிடாதீங்கன்னு.. ஒங்களால எனக்குதான் கெட்ட பேர்.’ இது மனைவியர் கணவன்மாருக்கு கொடுக்கும் டோஸ்..

ஆக, நாம் எல்லோருமே சில நேரங்களில் மற்றவர்களுக்கு பிரச்சினைகளாகவே இருக்கிறோம்..

குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகளாவது பரவாயில்லை.

ஆனால் அலுவலகங்களில் ஏற்படும் போட்டி பொறாமைகளால் ஒருவர் மற்றவருக்கு ஏற்படுத்தும் பிரச்சினைகள் இருக்கிறதே..

அதனால் ஏற்படும் விளைவுகள் பயங்கரமானவை.

அது சில சமயங்களில் மிகவும் மோசமான விளைவுகளையும், பாதிப்புகளையும் மற்றவர்களுடைய வாழ்க்கையில் ஏற்படுத்திவிடுவதை பார்க்கிறோம்.

என்னுடைய அலுவலக அனுபவத்தில் ஒரு சிலருடைய வக்கிரமங்களால் பலரும் தங்களுடைய நிம்மதியை இழந்து தவிப்பதை கண்கூடாக பார்த்திருக்கிறேன்.

இதைத்தான் நம்மால் இயன்றவரை தவிர்க்க வேண்டும்.

நம்மால் இயன்றவரை மற்ற எவருக்கும் பிரச்சினையாக இல்லாமலிருக்க இன்று முதல் முயற்சி செய்வோம்.

***

Monday, November 13, 2006

நம்முடைய கடமையைச் செய்வோம்!

‘நாம் தினமும் ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை வழிபடவேண்டும் என்று இல்லை. அதை எந்த மதமும் வலியுறுத்துவதுமில்லை!’

இறைவன் ஒரு முறை தன்னை அன்றாடம் அழைக்கும் பக்தன் ஒருவனை சந்திப்பதென முடிவு செய்தாராம்.

அந்த பக்தனோ அன்று இரவு முழுவதும் கண்விழித்து பணியாற்ற வேண்டிய இரவு ஷிப்ட்டில் படு பிசியாக இருந்தார்.

இறைவன் அவன் முன்னால் நின்று பார்த்தார், பக்கத்தில் நின்று பார்த்தார், பின்புறம் நின்று பார்த்தார்.

ஹுஹும்.. பக்தன் தன்னுடைய கர்மமே கண்ணாயிருந்தார்.

இறைவனுக்கு மிகவும் ஏமாற்றமாகிப் போனது. அவனுக்கு மறைவாய் இருந்தபோது தன்னை அன்றாடம் அழைத்தவன் அருகில் வந்து நின்றும் கண்டுக்கொள்ள மாட்டேனென்கிறானே என்று நொந்துபோனார்.

சரி அவன் ஓய்வாய் இருக்கையில் தன்னை அழைப்பான் போலிருக்கிறது என்று நினைத்தவாறு விண்ணகம் திரும்பினார்.

அவர் விண்ணகம் சென்றடையும் வழியிலேயே பகதனின் அழைப்பு வந்தது. ‘என்ன?’ என்றார் இறைவன்.

‘சாரி சாமி.. நீங்க பக்கத்துல வந்து நின்னப்போ நா ரொம்ப பிசியா இருந்தேன்.. இப்பத்தான் ஓய்வு கிடைத்தது.’ என்றான் பக்தன்.

இறைவனுக்கு வியப்பு. ‘என்ன நான் பக்கத்தில் வந்து நின்றதைப் பார்த்தாயா?’ என்றார்.

‘நான் உங்களைப் பார்த்தேன் என்பதும் ஆனால் உங்களிடம் நின்று பேசக்கூட முடியாமல் நான் வேலையில் கவனமாயிருந்தேன் என்றும் உமக்கு தெரியுமே.. பிறகு ஏன் என்னை கேட்கிறீர்?’

இறைவன் சிரித்தார். ‘உண்மைதான்.. உன்னைக் குறை கூற விரும்பவில்லை.. உன்னுடைய அலுவலில் கடமையே கண்ணாக இருப்பதன் மூலம் என்னுடன் உரையாடிக்கொண்டிருக்கிறாய் என்பது எனக்கு தெரியும்.. இருந்தாலும் உன்னை சோதிக்கவே இப்படி கேட்டேன்.’

ஆம்..

நம்முடைய அனுதின அலுவல்களை, நம்முடைய கடமைகளை சரிவர செயலாற்றுவதன் மூலமாகவே நம்மால் இறைவனுடன் உரையாட முடியும்.

மாறாக நம்முடைய கடமைகளை புறக்கணித்துவிட்டு அனுதினமும் ஆலயத்தில் அமர்ந்து இறைவனே, இறைவனே என்று கூவுயழைப்பதில் இறைவனுக்கே விருப்பமில்லை..

செய்யும் தொழிலே தெய்வம் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருப்பது இதைக் குறித்துதான்.

கடவுளே, கடவுளே என்று கூறுபவனெல்லாம் இறையரசில் நுழைந்துவிட மாட்டான் என்று உறுதியாக உங்களுக்கு கூறுகிறேன் என்று ஏசு கூறியதாக பைபிளிலும் வருகிறது.

கிறித்துவ மதம் மட்டுமல்ல எல்லா மதங்களுமே இதைத்தான் வலியுறுத்துகின்றன.

***

Saturday, November 11, 2006

தவறுகள்!

‘வாழ்க்கையில் நாம் அவ்வப்போது செய்யும் தவறுகள் நமக்கு பாடம் கற்பிப்பதுடன் மற்றவர்களுடைய தவறுகளையும் பொறுத்துக்கொள்ள உதவுகிறது.’

தவறு செய்வது மனித இயல்பு.

ஆனால் செய்த தவறுகளை திருத்திக்கொள்வதுடன் மீண்டும் அதே தவறுகளை செய்யாமல் இருப்பதை இயல்பாக்கிக் கொள்வது அவசியம்.

தவறு செய்வது மனித இயல்பு என்பதை நாம் உணர்ந்துவிட்டால் போதும் பிறர் செய்யும் தவறுகளை மன்னித்து மறப்பது எளிதாகிவிடும்.

பைபிளிலும் இதைக் குறித்து ஒரு வாசகம் வருகிறது. ‘உன் கண்ணில் இருக்கும் உத்தரத்தை மறந்துவிட்டு உன் அயலான் கண்ணில் இருக்கும் துரும்பைப் பார்க்காதே.’

உண்மைதானே..

நம்முடைய தவறுகளால் நமக்கு ஏற்படும் இழப்பைத் தாங்கிக்கொள்வது நமக்கு எளிதாகத் தெரிகிறது.

அதுவே பிறருடைய தவற்றால் என்றால் மட்டும் நம்மால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை.

இதுவும் மனித இயல்புதான். அப்படி நினைக்காமல் இருப்பதற்கு மிகுந்த மனப்பக்குவம் தேவை.

அது போகப் போக, நம்முடைய வாழ்நாளில் கிடைக்கும் அனுபவங்களே நம்மை அத்தகைய பக்குவத்துக்கு இட்டுச் செல்லக் கூடும்.

அத்தகைய மனப்பக்குவமே நம்முடைய இலக்காக இருக்க வேண்டும்.

இன்றைய குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் அத்தனை விரிசல்களுக்கும் இத்தகைய மனப்பக்குவம் இல்லாமலிருப்பதே காரணம் என்றால் மிகையாகாது.

மாமியார் உடைத்தால் மண்குடம். மருமகள் உடைத்தால் பொன்குடம் என்ற பண்டைய காலத்து சொல் இப்போதும், இந்த 21ம் நூற்றாண்டிலும் பொருத்தமாக இருப்பதுதான் வேதனை, வெட்கக் கேடு.

சுருங்கிக் கிடக்கும் நம்முடைய மனதை விசாலப்படுத்தி பிறருடைய தவறுகளைப் பொருத்துக்கொள்ளக் கூடிய மனப்பக்குவம் பெற என்ன செய்ய வேண்டும் என்று நாம் எல்லோருமே சிந்திக்க வேண்டும்..

சிந்திப்போமா?

Friday, November 10, 2006

இறுதி தீர்ப்பு

‘இன்று உங்களுடைய வாழ்நாளின் இறுதி நாள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். இந்த இருபத்தி நாலு மணி நேரத்தில் என்னவெல்லாம் செய்வீர்கள்?’

சில ஆண்டுகளுக்கு முன்பு நான் பங்குகொண்ட ஒரு மனித வள மேம்பாட்டு கருத்தரங்கில் கேட்கப்பட்ட கேள்வி இது.

அரங்கத்தில் என்னுடன் இருந்தவர்கள் வங்கித் துறையின் உயர் அதிகாரிகள்.

பலரும் பணியிலிருந்து ஓய்வு பெறும் தருவாயில் இருந்தவர்கள்.

அவர்களில் பலர் அளித்த பதில்கள் என்னை வெகுவாக சிந்திக்க வைத்தன.

ஒருவர் சொன்ன பதில் மட்டும் என் மனதில் அப்படியே பதிந்துபோனது.

‘என்னுடைய முப்பதாண்டு கால அலுவலக வாழ்க்கையில் நான் எத்தனையோ நண்பர்களால் நிந்திக்கப்பட்டிருக்கிறேன். அவர்களையெல்லாம் மனமுவந்து மன்னிக்கிறேன். அதுபோன்றே நானும் பலரை நிந்தித்திருக்கலாம். அவர்களிடமெல்லாம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். குற்ற உணர்வு இல்லாத மனதுடன் இன்றைய நாளை முடித்திடுவதே என்னுடைய இறுதி விருப்பம்.’

மறப்பதும் மன்னிப்பதும் இறை இயல்பு என்பது உண்மைதான். ஆனால் அதை மனிதன் செயல்படுத்துகையில் இறைவனாகிறான்.

உலக அழிவு என்பது நம் ஒவ்வொருவருடைய இறுதி நாளையே குறிக்கிறது என்றுதான் நான் நினைக்கிறேன்.

கிறிஸ்த்துவ சமயத்தில் இறுதி தீர்ப்பு உண்டு என்ற நம்பிக்கை உள்ளது.

நாம் மரித்தவுடன் இறைவன் சன்னதியில் நிறுத்தப்பட்டு நம்முடைய வாழ்நாளிலே செய்த நல்லவை, தீயவை யாவும் அலசப்பட்டு தீர்ப்பிடப்படுவோம் என்று கிறிஸ்த்துவர்கள் நம்புகிறார்கள்.

உன் வாழ்நாளில் உனக்கு தீங்கிழைத்த யாரையுமே நீ மன்னிக்க தயாராக இருக்கவில்லையே. நான் மட்டும் உன்னை எதற்கு மன்னிக்க வேண்டும் என்று இறைவன் கேட்கும் பட்சத்தில் நம்முடைய பதில் என்னவாயிருக்கும்?

********Thursday, November 09, 2006

தீர்வுகள்!

‘பிரச்சினைகளின் தீவிரம் நம்மை பாரமாய் அழுத்தும் சமயங்களில் எத்தனை முயன்றும் தீர்வு கிடைக்கவில்லையா? கவலைப்படுவதை விட்டு விட்டு சற்றே எட்ட நின்று அதை மற்றவர்களுடைய கண்ணோட்டத்தில் காண முயலவேண்டும். அதுவரை நம்முடைய அறிவுக்கு எட்டாத தீர்வு சட்டென்று நம் முன்னே தென்பட வாய்ப்புள்ளது.’

என்னுடைய அலுவலக வாழ்விலே பல பிரச்சினைகளை சந்தித்திருக்கிறேன்.

சில சமயங்களில் எத்தனை முயன்றும் சில பிரச்சினைகளுக்கு தீர்வே இல்லையென்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டதுண்டு.

அப்போதெல்லாம் என்ன செய்தால் தீர்வு கிடைக்கும் என்ற நினைப்பிலேயே பிரச்சினைகளை மேலும் தீவிரப் படுத்தியிருக்கிறேன்.

சென்னையில் நான் பணியாற்றிக்கொண்டிருந்த காலம் அது. தத்துவ மேதை ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரையை கேட்கும் வாய்ப்பு கிடைத்டிருக்கிறது.

ஒருமுறை வாழ்க்கையும் கவலைகளும் என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரை இப்போது நினைவுக்கு வருகிறது.

“துவக்கத்தில் சவாலாக தென்படும் பிரச்சினைகளே இறுதியில் நம்முடைய திறமையை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்ட ஒரு வாய்ப்பாக அமைந்துவிடுகின்றன. தீர்வு காண முடியாத பிரச்சினைகள் என்று உலகில் ஒன்றுமே இல்லை..

நம் கண்முன்னே நிற்கும் பிரச்சினைகளை விட்டு சற்று நேரம் விலகியிருந்து பிரச்சினைகளை மட்டும் பாராமல் அதனுடன் தொடர்புடையவைகளை ஒரு விரிந்த கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும்..

அதுவரை நம்முடைய சிந்தனைக்கு புலப்படாதிருந்த தீர்வு நம் முன்னேயே இருப்பதை காண முடியும்..” என்றார்.

ஒரு பிரச்சினையை தீர்க்க இயலாத சில தீர்வுகள் வேறு சில பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைந்துவிடுவதும் உண்டு.

ஒரு அமெரிக்க நிறுவனம் பிரித்தெடுக்க முடியாத பசையை (Adhesive) உருவாக்க பல கோடி டாலர்களை செலவழித்து தோல்வியடைந்ததாம். அதாவது எத்தனை முயன்றும் பசை ஒட்டாமல் பிரிந்துக்கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் நிறுவனத்தின் கடைநிலை ஊழியர் ஒருவர் சட்டென்று இதையே நாம் ஒரு புதிய கண்டுபிடிப்பாக மாற்றலாமே என்றாராம். அப்படி தோன்றியதுதான் நாம் அன்றாடம் அலுவலகங்களில் உபயோகிக்கும் சதுர வடிவ மஞ்சள் நிற ஸ்டிக்கர்கள் (Sticker Pads).

ஆக, நம்முடைய ஆக்கபூர்வமான சிந்தனைகளுக்கும் உரமிடுவதுதான் பிரச்சினைகள்.

பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கை நாளடைவில் போரடித்துவிடும்..

உடனடி தீர்வு (Instant solution) என்று எதுவுமில்லை. அதுபோலவே தீர்வுகள் இல்லாத பிரச்சினைகளும் இல்லை.

உடனே கிடைக்கும் வெற்றியளிக்கும் மகிழ்ச்சியை விட நம்முடைய ஆக்க பூர்வமான சிந்தனைகளைத் தூண்டிவிட்டு அதன் பயனாக நாம் அடையும் வெற்றி தரும் மகிழ்ச்சி கூடுதல் நிறைவை அளிப்பதுடன் அது நிரந்தரமானதும் கூட..

********

Wednesday, November 08, 2006

அன்பு எங்கே?

‘அன்பு ஒரு மந்திரக்கோலைப் போன்றது. அது திறவாத வாசல்களையும் திறக்கவல்லது. காது கேளாதவர்களும் ரசிக்கக் கூடிய இசை, முடவர்களையும் நடனமாட தூண்டும் தாளம், பார்வையிழந்தவர்களுக்கும் தெரியும் சூரிய உதயம்!’

அன்பு என்பது நாம் மனத்தளவில் உணரக்கூடிய ஒன்று..

அன்பில்லாதவர்க்கு இல்லை இவ்வையகம்..

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்..

மாணவ பருவத்தில் இதை பள்ளி வகுப்புகளில் கேட்டு, கேட்டு நம்முடைய மனம் மரத்துப் போனதாலோ என்னவோ அதன் உள்ளர்த்தம் என்ன என்பதே மறந்துப் போய்விட்டது.

நம் உடலில் மனம் என்பதே எங்கிருக்கிறதென்று தெரியாதபோது அதில் சுரக்கும் அன்பை எப்படி உணர்வது என்று கேட்கிறோம்.

உண்மையான அன்பு என்பதே அரிதாகிப் போயிவிட்ட இக்காலத்தில் அதைப் பற்றி பேசுவது கூட ஒரு வீண் வேலை என்று நம்மில் பலரும் நினைக்கிறோம்.

Domestic violence Act நடைமுறைக்கு வந்த வெகு சில நாட்களிலேயே நாட்டிலேயே முதன்முதலாக தமிழகத்தில் ஒரு கணவருக்கெதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்த மனைவி..

இதில் விசித்திரம் என்னவென்றால் கிறித்துவர்கள் தங்களுக்கு முன்மாதிரியாக வரித்திருக்கிற சூசை-மரி (Joseph & Mary) என்ற தம்பதியரின் பெயரைத்தான் இவர்களுக்கும் சூடியிருக்கிறார்கள் இவர்களுடைய பெற்றோர்!

அன்பு அழுக்காறு கொள்ளாது, ஆணவம் கொள்ளாது, தன்னலம் பேணாது, பிறர் குறை காணாது என்று சிறுபருவ முதலே பைபிளின் வார்த்தைகளைக் கேட்டு, கேட்டு வளர்ந்த பாரம்பரியத்திலிருந்து வந்த தம்பதியரே இச்சட்டத்தின் கீழ் தங்களுடைய தாம்பத்திய சச்சரவை தீர்க்க முனைந்திருக்கிறார்கள்!

அடுத்த சில நாட்களில் ஆவேசத்தில் கணவனை சுட்டுக்கொன்ற பெண் காவல் நிலையத்தில் சரண் என்ற செய்தி!

இதெல்லாம் எதைக் காட்டுகிறது?

அன்பு இல்லாமல் போனதைத்தான்!

அன்பு மூன்றெழுத்து, காதல் மூன்றெழுத்து, நட்பு மூன்றெழுத்து என்று கலைஞர் அவர்கள் ஒரு விழாவில் அடுக்கிக் கொண்டே சென்றது நினைவுக்கு வருகிறது..

இத்தகைய அடுக்கு மொழி பேச்சைக் கேட்கும்போது அரங்கமே கரவொலி எழுப்பி ஆர்ப்பரிக்கிறது..

பேச்சு முடிந்து வீடு திரும்புகையில் கேட்டது மறந்துபோகிறது..

மறதியும் மூன்றெழுத்துதானே..

********

Tuesday, November 07, 2006

நான், நீ, நாம்..

‘நீ, நான், நாம்.. தன்னலம், பிறர்நலம், நம்நலம்.. இதில் எது முக்கியம் என்றால்? எல்லாமேதான்..’

தன்னலம் கருதாது பிறர்நலம் பேண்.. அதுவே உண்மையான மகிழ்ச்சிக்கு வழி.

இது நம் முதியோர் நமக்கு கற்றுத் தந்த பாடம்.

ஆனால் இதை நடைமுறை வாழ்க்கையில் கடைபிடிப்பது அத்தனை எளிதல்ல.

அதற்கு ஒரு தேர்ந்த மனமுதிர்வு, பக்குவம் வேண்டும்.

ஆனால் இதற்கு மாற்றாக நம் எல்லோருடைய நலம் என்று சிந்தித்துப் பாருங்கள்..

இதில் என்னுடைய நலம், பிறருடைய நலம் எல்லாமே அடங்கியிருக்கிறதல்லவா?

ஆனால் இப்போதெல்லாம் தன்னலமே மேல்நோங்கி நிற்கிறது.

அதனால்தானோ என்னவோ கூட்டுக்குடும்பம் என்ற தத்துவம் செல்லாத காசாகிப் போய்விட்டது.

என் மனைவி, என் கணவன், என் பிள்ளை என்று குடும்பம் சுருங்கிப் போய்விட்டது.

நம்முடைய அலுவலகங்களிலும் ஏன் பொதுவாழ்விலும் இத்தகைய எண்ணம் பெருகி சமுதாயநலம் என்ற எண்ணமே நம்மில் பலருக்கும் இல்லாமல் போய்விட்டது.

தனி மரம் தோப்பாகாது.. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை..

இதெல்லாம் வெறும் தத்துவ சிந்தனைகளாகவே நின்றுபோனதுதான் இன்றைய சமுதாய சீர்கேட்டுக்கு அடிப்படைக் காரணம்..

இன்றைக்கு, இந்த நொடியில் கிடைக்கும் வெற்றியே நமக்கு முக்கியம் என்ற சிந்தனை நம்மில் பலருக்கும் மேலோங்கி நிற்பதும் இந்த சீர்கேட்டுக்கு காரணம் என்பதை நாம் உணரவேண்டும்..

அதற்காக நான், எனக்கு என்பது தவறு என்று சொல்ல வரவில்லை.

அதையே நாம், நமக்கு என்று சிந்தித்து பார்க்க முயல வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள்..

தனிநபராய் ஒரு காரியத்தை அணுகுவதைவிட ஒரு குழுவாய் அணுகுவது மிகவும் எளிது..

தனிநபர் வெற்றி அளிக்கும் மகிழ்ச்சியை விட ஒரு குழுவாய் இணைந்து செயல்பட்டு கிடைக்கும் வெற்றி அளிக்கும் மகிழ்ச்சி பன்மடங்கு பெரிது.

இது நம் விளையாட்டு வீரர்களுக்கும் பொருந்தும்..

சமீப காலமாக இதை அவர்கள் மறந்துபோனதன் விளைவுதான் தொடர்ந்து அடையும் தோல்விகள்..

இதை செயல்படுத்துவது கடினம்தான்..

ஆனால் முயன்றால் முடியும்தானே..

****

  

Monday, November 06, 2006

வண்ணங்கள்!

‘ஒரு ஒவியத்தின் முழுமைக்கு சகல வண்ணங்களும் தேவை. அவற்றில் தேவை என்றோ தேவையில்லாதவை என்றோ வேறுபாடு இருப்பதில்லை.’

வண்ணங்களின் அடிப்படை சிவப்பு, பச்சை, நீலம் என்ற மூன்று வண்ணங்களே.

இம்மூன்று வண்ணங்களையும் வெவ்வேறு விகிதத்தில் கலக்கும் ஒரு ஒவியனின் கைத்திறனே பலவித வண்ணங்களின் பிறப்பிடம்.

ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒரு பொருளையும் நாம் காலப்போக்கில் அளித்திருக்கிறோம்.

கருப்பு என்றால் துக்கம், எதிர்மறை (Negativity), துவேஷம் (hatred), குற்ற உணர்வு (Guilt), தோல்வி (Defeat) என்றும்

பச்சை என்றால் பசுமை, நல்லுணர்வு, அமைதி, பக்குவம் (Balance or wisdom) என்றும்

சிகப்பு என்றால் தீவிரம் (Aggression), சந்தோஷம் (Joy) என்றும் வரித்திருக்கிறோம்..

ஆனால் அதற்கு அந்த வண்ணங்கள் பொறுப்பல்ல..

ஓரு ஓவியனின் பார்வையில் எல்லா வண்ணங்களும் ஒன்றுதான்.. எந்தெந்த இடத்தில் எந்த வண்ணத்தைக் கலந்தால் ஓவியம் முழுமைப் பெறுமோ அந்த வண்ணங்களை தேவையான விகிதத்தில் கலப்பதில் மட்டுமே தன்னுடைய கவனத்தைச் செலுத்துகிறான்.

அதுபோல்தான் மனிதர்களும்..

ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு குணம்..

பறவைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்..

இது மனிதர்களுக்கும் பொருந்தும்..

பிறவியிலேயே ஒருவன் நல்லவனாகவோ தீயவனாகவோ பிறப்பதில்லை..

காலப் போக்கில் குடும்பம், உறவுகள், நட்பு மற்றும் அவன் வாழும் சமுதாயம் ஒருவனை நல்லவனாகவோ தீயவனாகவோ உருவாக்கிவிடுகின்றது..

ஓவியனுக்கு வண்ணங்கள் எப்படியோ அப்படித்தான் இறைவனுக்கும்..

கடவுளின் பார்வையில் அவருடைய படைப்புகளில் மிகவும் உன்னத படைப்பான மனிதர்கள் எல்லாருமே ஒன்றுதான்..

நல்லவன் அல்லது தீயவன் என்றோ,
பணம் படைத்தவன் அல்லது வறியவன் என்றோ,
தலைவன் அல்லது தொண்டன் என்றோ
மேல் ஜாதி அல்லது கீழ் ஜாதி என்றோ..

எந்தவித பாகுபாடும் இல்லை..

கடவுள் நல்லது என்று படைத்ததை நீ தீயது என்று சொல்லாதே என்று பைபிளில் ஒரு வாக்கியம் உள்ளது..

ஆம் நண்பர்களே..

நம்மில் தாழ்ந்தவர் என்றோ.. தீண்டப்படாதவர் என்றோ எவரும் இல்லை..

நம்முடைய தோலின் நிறம் வேண்டுமானால் கறுப்பு என்றோ வெள்ளை என்றோ இருக்கலாம்..

நம்முடைய ரத்தத்தின் நிறம் ஒன்றுதான்..

சிகப்பு என்றால் சந்தோஷமாம்..

நினைவில் கொள்வோம்..

****

Saturday, November 04, 2006

தானம்!

“தானம் பிறரன்பின் வெளிப்பாடு. குறிப்பாக தனக்குள்ளதையும் பிறருக்கு தானம் செய்யும்போது.”

தானத்திற்கு முன்மாதிரியாக கொடிக்கு தன்னுடைய தேரையே வழங்கிவிட்டு தன் வழியே நடந்த பாரி வள்ளலைக் குறிப்பிடுவதுண்டு.

ஆனால் இப்போதெல்லாம் சுயவிளம்பரத்திற்காக தானம் செய்யும் சிலரால் தானம் என்ற சொல்லே மதிப்பிழந்து போய்விட்டது.

வலக்கை செய்வதை இடக்கை அறியாமல் தானம் செய் என்பது நமக்கெல்லாம் மறந்துபோனது.

நன்கொடை வழங்கியதுமே அதற்குரிய ரசீதைப் பெற்று அதற்குண்டான வருமான வரி விலக்கைப் பெறுவதிலேயே குறியாயிருக்கிறோம்.

இன்னும் சிலர் நன்கொடை வழங்காமலேயே போலி ரசீதுகளைப் பெற்று வருமான வரி விலக்கைப் பெறுவதிலும் கைதேர்ந்தவர்களாயிருக்கிறார்கள்.

இதுவல்ல தானம்.

ஒருமுறை ஏசு தன்னுடைய சீடர்களுடன் தேவாலய காணிக்கைப் பெட்டியில் காணிக்கை செலுத்திக் கொண்டிருந்தவர்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

இறுதியில் ஒரு ஏழைப் பெண்மனி தன்னுடைய கையிலிருந்த இரண்டு செப்புக் காசுகளையும் காணிக்கைப் பெட்டியில் போடுவதைப் பார்த்த ஏசு தன் சீடர்களிடம் இவள்தான் மிக அதிகமான காணிக்கையை அளித்தாள் என்று கூறுகிறார்.

சீடர்களோ அதிர்ந்துபோய், ‘என்ன போதகரே, எத்தனையோ பேர் பொன் மற்றும் வெள்ளிக் காசுகளை செலுத்திவிட்டு சென்றனரே?’ என்கின்றனர்.

ஏசு புன்னகையுடன் அவர்கள் தங்களுக்குள்ளவற்றில் மிகுதியையே கடவுளுக்கு காணிக்கையாக செலுத்தினர். இவளோ தன்னிடமிருந்த அனைத்தையுமே செலுத்தினாள் என்கிறார்.

இக்காலத்தில் தனக்குள்ள அனைத்தையும் தானம் செய்துவிட்டால் அவனுக்குப் பைத்தியக்காரன், பிழைக்கத் தெரியாதவன் என்ற பட்டமே கிடைக்கும்.

ஆனால் உண்மையான பிறரன்பு அதில்தான் இருக்கிறது என்று நம் மதங்கள் கூறுகின்றன.

அதை அப்படியே கடைப்பிடிப்பதென்பது நடைமுறைக்கு ஒவ்வாத விஷயம்தான்..

ஆனாலும் நம்மால் இயன்றவரை, நம்முடைய வருட வருமானத்தில் ஒரு பங்கை தானம் வழங்குவதென்ற முடிவை இன்று எடுப்போம்.

இறைவன் நமக்கு வாரி வழங்கியவற்றில் ஒரு சிறு துளியை நம் சகோதரர்களுக்கு வழங்க முன் வருவோம், நம் பிறரன்பை வெளிப்படுத்துவோம்.

***

Friday, November 03, 2006

பிரச்சினைகள் இல்லாத பொழுது!

“நம்முடைய வாழ்வில் ஒவ்வொரு நாளும் ஒரு புது பிரச்சினைகளுடனே விடிகின்றது. இப்பிரச்சினைகளை எதிர் கொள்வதை தவிர்த்து ஒளிந்து ஓடுவதில் பலனில்லை.”

நம்மில் யாராவது என்னுடைய நிழலை அறவே ஒழித்துவிட்டேன் என்று கூற இயலுமா?

என்னால் முடியும் என்றால் என்னைப் பார்த்து எள்ளி நகையாட எனக்கு நெருங்கிய நண்பர்களும் தயங்கமாட்டார்கள்.

அப்படித்தான் நம்முடைய பிரச்சினைகளும்.

பிரச்சினைகள் இல்லாத மனிதனும் இல்லை. பிம்பங்கள் இல்லாத பொருளும் இல்லை.

எனக்கு எந்தவித பிரச்சினையுமில்லை நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று எவராவது கூறினால் அதுவேதான் அவர்களுக்கு பிரச்சினை!

‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே..’

இந்த பாடல் வரிகளை மறக்க முடியுமா?

எத்தனை சத்தியமான உண்மையை எவ்வளவு எளிதாக அளித்திருக்கிறார் பாடலாசிரியர்!

பிரச்சினைகளைக் கண்டு ஓடி ஒளிவதைக் காட்டிலும் அவற்றை எதிர்கொள்வது எப்படி என்பதை நாம் கண்டுணரவேண்டும்.

எப்படி பிரச்சினைகள் இல்லாமல் இருக்காதோ அதுபோன்று தீர்வுகள் இல்லாத பிரச்சினைகளும் இருக்க முடியாது.

அது என்ன என்பதைக் கண்டுணர்வதில்தான் நம்முடைய செயல்பாடு இருக்க வேண்டும்.

நேற்றைய பிரச்சினைகளுக்கு நாம் கண்டுணர்ந்த தீர்வு இன்றைய பிரச்சினைக்கு தீர்வாக இருக்க முடியாது என்பதையும் நாம் உணர வேண்டும்.

பிரச்சினைகள் புதிது புதிதாய் முளைத்துவரும் நேரங்களில் அவற்றிற்கு தீர்வு காண நாமும் புதிய வழிகளைக் காண வேண்டும்.

நேற்றைய பிரச்சினையை வெற்றிகொண்டவந்தானே நான் என்று இன்றைய பிரச்சினையை அணுகலாகாது.

இன்றைய பிரச்சினையை எல்லா கோணங்களிலுமிருந்து ஆராய்ந்து அதற்கு தீர்வு காண முயல்வதை விட்டுவிட்டு கடந்த கால வெற்றியில் களித்திருப்பதில் பலனில்லை.

நம்முடைய ஐந்து விரல்களும் ஒன்றில்லையல்லவா?

அதுபோல்தான் பிரச்சினைகளும்.

இன்றைய பொழுது நாளைய பொழுதாகும் முன் இன்றைய பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டால் எந்த பிரச்சினைக்கும் தீர்வு கிடைத்துவிடும்.

சோர்ந்து போகாமல் சிந்தித்து செயல்படுவோம். வெற்றிகொள்வோம்