Thursday, October 26, 2006

பதவியும் பொறுப்பும்

‘மறதி இல்லாத மனிதன் எப்படி இருக்க முடியாதோ அதுபோல  பொறுப்புகளும், கடமைகளும் இல்லாத சுதந்திரமும் இருக்க முடியாது’

மறதி என்பது மனித இயல்புகளுள் ஒன்று.

எத்தனை படித்த மேதாவிக்கும், மாநிலத்திலேயே தேர்வில் முதலாவதாக வரும் மாணவனுக்கும் கூட மறதி என்பது மிகவும் சகஜம்.

மனதில் இருத்திக்கொள்ள தேவையில்லாதவற்றை சேமித்து வைத்துக் கொள்ள தேவையில்லை என்பதை நம்முடைய மூளையே தீர்மானித்துவிடுவதுதான் இதற்குக் காரணம்..

இது மனித இயல்பு. இதில் படித்தவன் படிக்காதவன் என்ற பாகுபாடு இல்லை.

மறதி இல்லாத மனிதன் இவ்வுலகில் இருக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை, நிதர்சனம்!

அதுபோலத்தான் பொறுப்புகள் இல்லாத சுதந்திரம் அல்லது அதிகாரமும்.

நம்மில் பலருக்கும் சுதந்திரமாக செயல்பட நம்முடைய பெற்றோரும் மேலதிகாரிகளும் அனுமதிப்பதில்லையே என்ற தங்கம் உள்ளது.

ஆனால் அந்த சுதந்திரத்தை தகுந்த வழியில் அதாவது ஆக்கபூர்வமாக செயல்படுத்த நம்மால் முடியுமா அல்லது அதன் விளைவாக நாம் செயல்படுத்த வேண்டிய கடமைகளை நிறைவேற்ற தேவையான தகுதிகள் நம்மிடம் உள்ளனவா என்பதை  ஆராய  தவறிவிடுகிறோம்.

‘என்ன பெரிய மேனேஜர் பதவி. எங்கிட்ட விட்டா இவர விட பிரமாதமா இந்த பிராஞ்ச மேனேஜ் செஞ்சிருப்பேன்.’ இது  நான் குமாஸ்தாவாகவும், கடை நிலை அதிகாரியாகவும் இருந்த நேரத்தில் மனதில் நினைத்துக் கொள்வதுமட்டுமல்லாமல் என்னுடைய மேலாளரின் முதுகுக்குப் பின்னால் பேசிய பொறுப்பில்லா பேச்சு.

ஆனால் நானே ஒரு கிளைக்கு மேலாளரான பிறகுதான் தெரிந்தது அந்த பதவியின் பொறுப்பும், கடமைகளும்.

தனக்கு வந்தாத்தான் தெரியும் தலவலியும், திருகுவலியும் என்பார்கள்..

அதுபோல்தான் அதிகாரமும், சுதந்திரமும்..

இவை கிடைக்கின்றவரை கிடைக்காதா என்று ஏக்கம் இருக்கும்.

கிடைத்தபிறகு அவற்றுடன் வரும் பொறுப்புகளும், கடமைகளும் நம்மில் பலருக்கும் தாங்கவொண்ணா பாரமாக தோன்றும்.

ஆகவே நம் பெற்றோர்களை, அதிகாரத்திலிருப்பவர்களைக் குறை கூற முயல்வதற்கு முன் நமக்கு அதற்குண்டான தகுதி இருக்கிறதா என்பதை ஆராய்வோம்..

சுதந்திரத்தையும், அதிகாரத்தையும் கேட்கும் நமக்கு அதனுடன் வரும் பொறுப்புகளையும், கடமைகளையும் சரிவர செயலாற்றும் தகுதியும் நமக்கு இருக்கிறதா என்பதையும் ஆராய்வோம்..

பதவி என்பது தூரத்து பச்சை. தொலைவிலிருந்து பார்ப்பதற்குத்தான் அழகாக இருக்கும். அருகில் சென்றால்தான் தெரியும் அது ஒரு முள் இருக்கை என்பது.

****6 comments:

கோவி.கண்ணன் [GK] said...

//பதவி என்பது தூரத்து பச்சை. தொலைவிலிருந்து பார்ப்பதற்குத்தான் அழகாக இருக்கும். அருகில் சென்றால்தான் தெரியும் அது ஒரு முள் இருக்கை என்பது.//

ஜோசப் ஐயா !

என்ன ஆச்சு ? இன்னிக்கு ஏதாவது அலுவலகத்தில் விவகாரமா ? கீழே வேலை பார்ப்பவர்கள் யாரும் நீங்கள் சொல்கிறபடி கேட்கவில்லையா ?

Just kidding !
:))

tbr.joseph said...

வாங்க கண்ணன்,

கீழே வேலை பார்ப்பவர்கள் யாரும் நீங்கள் சொல்கிறபடி கேட்கவில்லையா ?//

ஆஃபீஸ்ல என்ன வீட்லயும் யார் நம்ம சொல்றத கேக்காங்க:)

நீங்க மட்டும் நா சொல்றத கேக்கறதில்ல அப்ப நா மட்டும் எதுக்கு நீங்க சொல்றத கேக்கணும்?

இது வீட்டுல தெனமும் கேக்கற கேள்வி..

சார் எதையாச்சும் சொல்லிக்கிட்டே இருப்பாரு.. செஞ்சு பாத்தாத் தானே தெரியும்?

இது ஆஃபீஸ்ல..

ஹூம்.. போறும்டா சாமின்னு தோனும்:(

G.Ragavan said...

உண்மைதான் ஜோசப் சார். விலைமாது ஒருத்தியின் மீது கல்லெறிந்தவர்களுக்கு ஏசுபிரான் சொன்ன நல்மொழி அனைவருக்கும் பொருந்தும். நம்முடைய விபச்சாரத்தனம் நமக்குத் தெரியாமையால் அடுத்தவர் மீது கல்லெறிந்து கொண்டேயிருக்கிறோம். இது மாற வேண்டும். கண்டிப்பாக மாற வேண்டும்.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

கல்லெறிவதற்கு பெரிதாக திறமையென்று ஒன்றும் தேவையில்லையே..

நேற்றுவரை கல்லெறிந்துக் கொண்டிருப்பவன் கல்லடிபட்டவர்களுடைய இடத்தில் நிற்கும்போதுதான் வேதனை புரிகிறது.

மணியன் said...

அனுபவம் பேசுகிறது :)

நம்நிலையில் மிக எளிமையான முடிவுகள் கூட மேல்நிலையில் இருப்பவர்கள் ஏன் எடுக்கத் தயங்குகிறார்கள் என்பது நாம் அந்த நிலையை அடையும் போதுதான் புரிந்து கொண்டிருக்கிறேன்.

இதன் மறுபக்கமாக கீழ்நிலையில் முடியாது என மலைத்திருந்த சில செயல்களை மேல்நிலையில் எளிமையாக நிறைவேற்ற முடிந்தது.

இதன் காரணிகளாக அதிகபொறுப்பு என்பதைத்தவிர அந்நிலையில் கிடைக்கும் விரிவான பார்வை (outlook), முடிவுகள் ஏற்படுத்தும் தாக்கங்களின் புரிதல் ஆகியனவும் அடங்கும்.

tbr.joseph said...

வாங்க மணியன்,

இதன் மறுபக்கமாக கீழ்நிலையில் முடியாது என மலைத்திருந்த சில செயல்களை மேல்நிலையில் எளிமையாக நிறைவேற்ற முடிந்தது.

இதன் காரணிகளாக அதிகபொறுப்பு என்பதைத்தவிர அந்நிலையில் கிடைக்கும் விரிவான பார்வை (outlook), முடிவுகள் ஏற்படுத்தும் தாக்கங்களின் புரிதல் ஆகியனவும் அடங்கும். //

ரொம்ப அருமையா சொல்லிருக்கீங்க மணியன்..

அத்தனையும் உண்மைதான்..

வாழ்த்துக்கள்..

Post a Comment