Friday, October 20, 2006

அன்பு செய்வோம்.

“அன்பு என்பது ஒரு வழி பாதையல்ல. இரும்புப் பெட்டகத்திற்குள் வைத்து பூட்டி வைக்க வேண்டிய புதையலும் அல்ல.”

அன்பு ஒரு வணிகப் பொருளும் அல்ல. காசு கொடுத்து வாங்குவதற்கு.

அன்பை அன்பால் மட்டுமே வாங்க முடியும், பெற முடியும்.

ஒருதலைக் காதலைப் போன்ற துன்பம் தரக்கூடிய துன்பம் உலகில் வேறொன்றும் இல்லை.

நான் அன்பு பிறரை அன்பு செய்கிறேன் என்று என்னுடைய மனதில் பூட்டி வைத்திருந்தால் போறாது. அதை வெளிப்படையாகக் காட்ட வேண்டும்.

என்னுடைய நண்பர் ஒருவர் இப்படித்தான்.

தன் மனைவி மக்களிடத்தில் அளவுகடந்த அன்பு வைத்திருந்தார் என்பது எனக்குத் தெரியும்.

ஆனால் அவர் இல்லாத நேரத்தில் ஒரு நாள் அவருடைய வீட்டிற்குச் சென்றிருந்தேன்.

அவருடைய மனைவி என்னிடம் சரமாரியாக கேள்வி கேட்டு துளைத்துவிட்டார்.

‘ஏங்க அவரோட பெஸ்ட் ஃப்ரெண்டுன்னு சொல்றீங்க. நீங்களாச்சும் அவர்கிட்ட கொஞ்சம் எடுத்துச் சொல்லக் கூடாதா?’ என்றார் எடுத்த எடுப்பில்.

நான் வியப்புடன், ‘ஏன், என்ன செஞ்சார்?’ என்றேன்.

அவர் சலிப்புடன் பேச ஆரம்பிக்க அவருடைய இரண்டு பிள்ளைகளும் (ஒரு ஆண், ஒரு பெண்) சேர்ந்துக்கொண்டனர்.

‘அவர கல்யாணம் செஞ்ச நாள்லருந்து அவர் மூஞ்சில சிரிப்பையே பார்த்ததில்லீங்க. எப்ப பார்த்தாலும் கடுவன் பூன கணக்கா மூஞ்ச வச்சிக்கிட்டு. சரிங்க.. என்னையத்தான் பிடிக்கலன்னு வச்சிக்குவம். எம் பிள்ளைங்க என்ன பாவம்க செஞ்சாங்க, இவருக்கு பிள்ளைங்களா வந்து பொறந்ததத் தவிர? அவர் ஆஃபீஸ்லயும் அப்படித்தான் இருப்பாரா?’

எனக்கு எப்படி சொல்லி விளக்குவதென தெரியவில்லை. என்னுடைய நண்பர் அலுவலகத்திலும் அப்படித்தான் இருப்பார். யாரையும் நெருங்க விடமாட்டார். கண்டிப்பு, கறார் பேர்வழி என்று அவருடைய முகத்தைப் பார்த்தாலே தெரியும்.

ஆனால் அவருடன் நெருங்கிய என்னைப் போன்ற நண்பர்கள் சிலருக்கே தெரியும் அவர் எத்தனை பூஞ்சை மனதுடையவர், தனக்கு வேண்டியவர்கள் மீது எத்தனை அன்பும் பாசம் வைத்திருப்பவர் என்று.

ஆம் அன்பு என்பது இரும்பு பெட்டகத்தில் பூட்டி வைக்க வேண்டிய புதையல் அல்ல.

அது ஒரு மணம் வீசும் மலரைப் போல.

நாம் பிறர் மீது அன்பு செய்கிறோம் என்பது நம்மால் அன்பு செய்யப்படுபவர்களுக்கு தெரியவேண்டும்.

நேசியுங்கள் நேசிக்கப்படுவீர்கள்..

நீங்கள் உலகை அன்பு செய்தால் உலகம் உங்களை அன்பு செய்யும்.

மாறாக நீங்கள் உலகை வெறுத்தால் உலகம் உங்களை நிச்சயம் வெறுத்து ஒதுக்கிவிடும்..

காசா, பணமா?

அன்பு கொடுக்க, கொடுக்க குறைந்துப் போகக்கூடிய செல்வமும் இல்லை. மாறாக நீங்கள் கொடுப்பதற்கு பண்மடங்கு அது உங்களிடமே திரும்பி வரும்.. வட்டியும், முதலுமாய்.. ஏன் போனசும் சேர்த்து.

தீபத் திருநாளாம் இந்நாள் முதல்..

நாம் அன்பு செய்வோம்.. அதை பிறர் அறியும் வண்ணம் வெளியில் காட்டவும் செய்வோம்..

என்னுடைய சக வலைப்பதிவாள நண்பர்கள் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்,
ஜோசப்

13 comments:

துளசி கோபால் said...

அன்பே கடவுள்.

இந்தப் பண்டிகைக்காலத்தில் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் அன்பான இனிய வாழ்த்து(க்)கள்.

என்றும் அன்புடன்,
துளசி

பழூர் கார்த்தி said...

//நாம் அன்பு செய்வோம்.. அதை பிறர் அறியும் வண்ணம் வெளியில் காட்டவும் செய்வோம்..//

வழிமொழிகிறேன், இதன் படி அனைவரும் நடப்போம் !

***

:-)))o

தீப ஓளி வீசும்
பண்டிகைத் திருநாளாம்
தீபாவளியை
இனிதே கொண்டாடி
மகிழ்ந்திட வாழ்த்துகிறோம் !!

:-)))o

அன்புடன்,
'சுறுசுறுப்பான' சோம்பேறி பையன்

ஜோ / Joe said...

ஜோசப் சார்,
எவ்வளவு அருமையா சொல்லியிருக்கீங்க!

அனைவருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்!

அன்பே சிவம்! ஆமென்!

tbr.joseph said...

வாங்க சுறுசுறுப்பான பையன்,

'சுறுசுறுப்பான' சோம்பேறி பையன்//

இந்த வரி ரொம்ப புடிச்சிருச்சிங்க..

இனி நீங்க சோ.பையன் இல்லை.. சு. பையன்..

தீபாவளி வாழ்த்துக்கள்:)

tbr.joseph said...

வாங்க ஜோ,

அன்பே சிவம்! ஆமென்! //

அழகா ரெண்டே வார்த்தைகள்ல அன்புக்கு மதம் இல்லையென்பதை சொல்லிவிட்டீர்கள்..

அதற்கு மொழியும் இல்லையல்லவா?

tbr.joseph said...

வாங்க துளசி,

அன்பே கடவுள்.//

ஆமாங்க.. கடவுளுக்கு கண் இல்லைன்னு சிலவங்க சொல்றா மாதிரி அன்புக்கும் கண் இல்லை.. கண்ணெ மூடிக்கிட்டு எல்லாரிடத்திலும் காட்டுவதுதான் அன்பு..

க்ளோப்ல (Globe) நீங்கதான் முதல்ல தீபாவளி கொண்டாடுவீங்க.. ஜமாய்ங்க..

தீபாவளி வாழ்த்துக்கள்.. ஒங்களுக்கு சொன்னா தமிழ்மணத்துல இருக்கற எல்லாருக்குமே சொன்னா மாதிரியாமே:))

கோவி.கண்ணன் [GK] said...

//ஆம் அன்பு என்பது இரும்பு பெட்டகத்தில் பூட்டி வைக்க வேண்டிய புதையல் அல்ல.//

ஐயா !

மிக நல்ல பதிவு !

இதயத்திலிருந்து
கொடுத்தாலும் குறையாது, பிறரிடம்
எடுத்தாலும் மாளாது, அத்தகைய
அன்பை வைத்துக் கொண்டு அதை மறந்து வஞ்சனை செய்வோரை என்ன வென்று சொல்வது ? அன்பின்
இருப்பை கண்டுகொள்வதில் குறை இருந்திருக்குமோ!

மணியன் said...

அன்புடைமை என திருவள்ளுவர் சிறப்பிப்பதை பெட்டகத்தில் பூட்டாமல் நாலாதிசைகளிலும் பரப்பிடுக என்று கூறும் உங்கள் பதிவிற்கு நன்றி.

இந்த பண்டிகைதினத்தில் இந்த உறுதிமொழி எடுப்போம். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்துக்கள்.

ilankai pen said...

யோசப் அவர்களே நான் உங்களுக்கு மன்றத்தில் தனிமடல் அனுப்ப வந்த போது தான் உங்கள் (என் உலகம்) வலையினை பார்வையிட கிடைத்தது..ஆனதமாய் இருக்கின்றது...அத்துடன் அன்பு பற்றிய உங்கள் ஆக்கம் உண்மையிலே..என் மனதில் பதிந்தது...நேசியுங்கள் நேசிக்கப்படுவீர்கள் இந்த வசனத்தையும் நான் திருடிக்கொண்டேன் உங்கள் அனுமதியின்றி...தொடருங்கள் யோசப்

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள்...

துளசி கோபால் said...

:-))))))))))))))))))))

tbr.joseph said...

வாங்க கண்ணன்,

இதயத்திலிருந்து
கொடுத்தாலும் குறையாது, பிறரிடம்
எடுத்தாலும் மாளாது..//

எத்தனை அழகான வரிகள்..

நன்றி கண்ணன்..

tbr.joseph said...

வாங்க மணியன்,

அன்புடைமை என திருவள்ளுவர் சிறப்பிப்பதை பெட்டகத்தில் பூட்டாமல் நாலாதிசைகளிலும் பரப்பிடுக..//

ஆமாங்க.. அது நமக்குன்னு தந்த சொத்தில்லையே..

நன்றி மணியன்.. தீபாவளி வாழ்த்துக்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்..

tbr.joseph said...

வாங்க இலங்கைப் பெண்,

நேசியுங்கள் நேசிக்கப்படுவீர்கள் இந்த வசனத்தையும் நான் திருடிக்கொண்டேன் உங்கள் அனுமதியின்றி...//

நேசம் என்பது பொதுச் சொத்து.. அது எனக்கு எவ்வளவு சொந்தமோ அதுபோல உங்களுக்குந்தான்..

உங்களுக்கும் உங்களைச் சார்ந்த அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

Post a Comment