Wednesday, October 18, 2006

பிரார்த்தனையும் கோரிக்கையும்

‘பிரார்த்தனை. அதன் வலிமையை உலகெங்குமுள்ள கோடானு கோடி மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். பிரார்த்தனையில் வலிமையை நாம் பரீட்சித்து பார்க்க வேண்டாமா? காசா, பணமா?’

பிரார்த்தனை என்றவுடனே அது கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே செய்கிற வேலை. அது மூட நம்பிக்கையை தூண்டுகிறது என்று நம்மில் சிலருக்கு தோன்றுகிறது.

ஆனால் பிரார்த்தனை என்ற சொல்லுக்கு 'நம்பிக்கையுடனான கோரிக்கை' என்றும் கூறுகின்றன அகராதிகள்.

‘சார்.. என் மனைவிக்கு சென்னையில வேல கிடைச்சிருக்கு. அதனால எனக்கும் சென்னைக்கே மாற்றம் கொடுத்தீங்கன்னா நல்லாருக்கும். ஒங்களால செய்ய முடியுங்கற நம்பிக்கையிலதான் கேக்கேன் சார், ப்ளீஸ்.’

இது நம்மில் பலரும் நம்முடைய உயர் அதிகாரிகளிடத்தில் வைக்கும் கோரிக்கை.

இதுவும் ஒருவகை பிரார்த்தனைதான்.

நம்முடைய சக்திக்கு அப்பாற்பட்ட சில காரியங்கள் நடைபெற பிறருடைய அதாவது, அதை செய்து முடிக்கக் கூடிய சக்தி அல்லது திறன் படைத்தவர்களுடைய உதவியைக் கேட்பது.

அதில் தவறு இருக்கிறதா என்ன?

அதுபோல்தான் இறைவன் முன் வைக்கும் பிரார்த்தனையும்.

இறைவன் என்றால் ஒரு சக்தி. கண்ணுக்கு தெரியாத, என் அறிவுக்கு எட்டாத ஒரு சக்திவாய்ந்த சக்தி என்று வைத்துக் கொள்வோம்.

அநத சக்திக்கு ஏசு என்றோ, புத்தர் என்றோ அல்லது ராமர் என்றோ, விநாயகர் என்றோ உருவம் கொடுக்க விரும்புவர்கள் கொடுத்துக்கொண்டு தங்களுடைய கோரிக்கையை முன்வைப்பதில் மட்டும் என்ன தவறு? அதை மட்டும் ஏன் மூட நம்பிக்கை என்று நின¨க்கிறோம்?

இறைவன் மீது நமக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ அது வேறு விஷயம்.

ஆனால் நம்பிக்கையுடன் வைக்கும் எந்த கோரிக்கையும் நிச்சயம் நமக்கு கிடைக்கும்.

அதற்காக சைக்கிள் ஓட்டிக்கொண்டிருப்பவர் ‘சாமி எனக்கு நாளைக்கே ஒரு ஓப்பல் ஆஸ்ட்ரா கார் வேணும்’ என்று கேட்டால் கிடைக்குமா என்று வாதாட வராதீர்கள்.

‘சரி நமக்கு என்ன தேவை என்று இறைவனுக்கு தெரியுமே பிறகெதற்கு கேட்பது?’ என்றும் வாதாடாதீர்கள்.

எனக்கு மாற்றம் தேவை என்று என்னுடைய சேர்மனுக்கும் தெரிந்துதானிருந்தது. ஆனால் அதை நான் கேட்கவேண்டும் என்று எதிர்பார்த்தார். நான் கேட்டால் எங்கே கிடைக்கப் போகிறதென்ற என்ற அவநம்பிக்கையில் நான்கு வருடம் கேட்காதிருந்தேன்.

ஒரு நாள் திடீரென்று தோன்றியது, காசா, பணமா? கேட்டுத்தான் பார்ப்போமே என்று கேட்டேன்.

‘அப்படியா? சரி, நேரம் வரும்போது நிச்சயம் ஒங்க ரிக்வெஸ்ட்ட எச்.ஆர். கமிட்டியில வைக்கறேன்.. சரின்னு சொன்னா.. செஞ்சிரலாம் என்றார் என் சேர்மன். அடுத்த கமிட்டி கூட்டத்திலேயே என்னுடைய மாற்றத்திற்கு ஒப்புதல் கிடைத்தது.

இதோ.. நான் சென்னையில் என் மனைவி மக்களுடன்..

‘கதவு தட்டுனாத்தான் திறக்கும்.. உள்ள வேலையா இருக்கறவங்களுக்கு நீங்க வெளிய நிக்கறீங்கன்னு ஜோஸ்யமா தெரியும்?’

அதுபோல்தான் நம்முடைய பிரார்த்தனையும்.

‘கிடைத்துவிட்டதென்ற விசுவாசத்துடன் நீங்கள் எதைக் கேட்டாலும் வானகத்திலுள்ள என் தந்தை உங்களுக்கு அருள்வார்.’ என்றார் ஏசுபிரான்.

கிடைக்குமா கிடைக்காதா என்ற அவநம்பிக்கையுடன் வைக்கும் எந்த கோரிக்கையும் நிறைவேறாதல்லவா?

ஆகவே நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்யுங்கள்.. அதாவது, நாம் கேட்பது கிடைத்துவிட்டதென்ற நம்பிக்கையுடன்..

******

4 comments:

ஜோ / Joe said...

//எனக்கு மாற்றம் தேவை என்று என்னுடைய சேர்மனுக்கும் தெரிந்துதானிருந்தது. ஆனால் அதை நான் கேட்கவேண்டும் என்று எதிர்பார்த்தார். நான் கேட்டால் எங்கே கிடைக்கப் போகிறதென்ற என்ற அவநம்பிக்கையில் நான்கு வருடம் கேட்காதிருந்தேன்.//

ஜோசப் சார்,
உங்கள் சேர்மனிடம் நீங்கள் கேட்டால் தான் காரியம் நடக்கும் .வேண்டுமானால் சேர்மன் நல்ல முடிவு எடுக்க பிராத்தனை செய்யலாம் .ஆனால் சேர்மனிடம் கேட்கத் தேவையில்லை .கடவுளிடம் மட்டும் பிராத்தனை செய்வேன் .சேர்மன் தானாகவே என்னைக் கூப்பிட்டு நான் நினைப்பதை கொடுத்துவிடுமாறு இறைவன் பார்த்துக்கொள்வார் என்று நம்பிக் கொண்டு எல்லா பழியையும் இறைவன் மேலே போட்டுக்கொண்டு வாளாவிருப்பது மூட நம்பிக்கை இல்லையா?

கோவி.கண்ணன் [GK] said...

வழக்கம் போலவே சொல்லவேண்டியதை அழகாக எளிமையாகவும் எழுதியிருக்கிறீர்கள் .

பிரார்த்தனை என்று சொல்வதும், முயற்சி என்று சொல்வதும் ஒன்று போல் தெரிகிறது எனக்கு !

tbr.joseph said...

வாங்க ஜோ,

சேர்மன் தானாகவே என்னைக் கூப்பிட்டு நான் நினைப்பதை கொடுத்துவிடுமாறு இறைவன் பார்த்துக்கொள்வார் என்று நம்பிக் கொண்டு எல்லா பழியையும் இறைவன் மேலே போட்டுக்கொண்டு வாளாவிருப்பது மூட நம்பிக்கை இல்லையா? //

கண்டிப்பாக முட நம்பிக்கைதான்.

முயற்ச்சியற்ற பிரார்த்தனையும் பிரார்த்தனையில்லாத முயற்சியும் வீண்..

வாளாவிருந்துவிட்டு கடவுளே, கடவுளே என்று புலம்புவது மூடநம்பிக்கை. சந்தேகமேயில்லை.

tbr.joseph said...

வாங்க கண்ணன்,

பிரார்த்தனை என்று சொல்வதும், முயற்சி என்று சொல்வதும் ஒன்று போல் தெரிகிறது எனக்கு !//

ஒருவகையில் உண்மைதான்.

மனித முயற்சிகளுடன் இறைசித்தமும் சேர்ந்தால் பலன் கூடும் என்பதுதான் என் வாதம்.

இறைசித்தம் நமக்கு சாதகமாயிருக்க உதவுவதுதான் பிரார்த்தனை.

Post a Comment