Thursday, October 12, 2006

சந்தேகம்.

“எந்த ஒரு விஷயத்திலும் நிதானித்து முடிவெடுங்கள். ஏனெனில் ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் என்பது அந்தக்காலம். இப்போதெல்லாம் இரண்டென்ன, மூன்று, நான்கு என பல கோணங்கள் இருக்க வாய்ப்புள்ளது.”

தனி நபர் உறவுகள் பாதிக்கப்படுவதே சில்லறை விஷயங்களினால்தான் என்பதை நாம் எல்லோரும் அறிந்தே இருக்கிறோம்.

"மலைபோலருக்கற விஷயத்துல ரோட்ல போறவனையெல்லாம் நம்பிருவா. துரும்பு மாதிரி விஷயத்துல யாரையும் நம்பாம.."

"இவர் கூட முப்பது வருசமா குடும்பம் நடத்தற என்னெ நம்பாம.. அவன் சொன்னா, இவன் சொன்னான்னு.."

இது சாதாரணமாக நம் குடும்பங்களில் கேட்கும் புகார்.

கணவன்-மனைவி, தந்தை-மகன்/மகள், அலுவலகத்தில் பணியாளர்-மேலாளர் ஏன் நெருங்கிய நண்பர்கள் மத்தியிலும் உறவுகள் பாதிக்கப்படுவதே எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுப்பதால்தான் என்றால் மிகையாகாது.

சந்தேகம் என்பது ஒரு பிசாசு.

அது ஒரு குடும்பத்திலோ, அலுவலகத்திலோ, நண்பர்கள் மத்தியிலோ நுழைந்துவிட்டால் அதன் ஆதிக்கம் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்குமே துக்கத்தை மட்டுமே அளித்துவிடுகிறது.

ஆகவே ஒரு விஷயத்தில் முடிவெடுப்பதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைவருடைய கோணத்திலிருந்தும் ஆராய்ந்து பாருங்கள்.

அதே சமயம் தனி மனித உறவுகளில் எல்லாவற்றையுமே ஆராய்ந்து பார்த்துக்கொண்டிருப்பது சாத்தியமல்ல. சிலவற்றை கண்டும் காணாமல் இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

தீர ஆராய்ந்த பிறகும் சந்தேகம் இருப்பின் அதன் சாதகத்தை சம்பந்தப்பட்டவருக்கு தாருங்கள். கிரிக்கெட் ஆட்டத்திலும் கூட the benefit of doubt should be given to the batsman என்பார்கள்.

உங்களுடைய பெருந்தன்மை பாதிக்கப்படுவதிலிருந்து தப்பித்தவர்களால் பாராட்டப்படுவதுடன் அவர்களுடைய பார்வையில் உங்களுடைய மதிப்பு பண்மடங்கு உயரவும் வாய்ப்புள்ளது.

உறவும் நட்பும் ஏற்பட பல ஆண்டுகள் தேவை.. ஆனால் அறுத்தெறிவதற்கு ஒரு நொடி போதும்..


சிந்திப்போம்..

4 comments:

துளசி கோபால் said...

//ஏனெனில் ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் என்பது அந்தக்காலம்.
இப்போதெல்லாம் இரண்டென்ன, மூன்று, நான்கு என பல
கோணங்கள் இருக்க வாய்ப்புள்ளது.”//

எப்படிங்க நான் நினைக்கிறதையே சொல்றீங்க? இங்கே என் தோழிகள் கிட்டே
இப்படியே சொல்லிக்கிட்டு இருக்கேன். எல்லாத்துக்கும் இப்பெல்லாம் 100 பக்கம் இருக்குன்னு.

tbr.joseph said...

வாங்க துளசி,

எப்படிங்க நான் நினைக்கிறதையே சொல்றீங்க? //

Great men (women too!)think alikeனு சும்மாவா சொன்னாங்க:))

G.Ragavan said...

நியாயமான பேச்சு. ஒரு பத்து ரூவாய எடுத்துக்கோங்க...அதுக்கு எத்தனை முகம். அரக்கிலோ அரிசி. அரக்கிலோ பருப்பு. கால் லிட்டர் எண்ணெய். ஒரு தேங்காய். ஒரு கைக்குட்டை. இன்னும் எக்கச் சக்கம்.

சந்தேகம் உடனிருந்து கொல்லும் வியாதி. சந்தேகமே வந்தாலும் அதை நேர்மையா அறிவுப்பூர்வமா சமாளிக்கனும். அத வெச்சுக்கிட்டு தானும் கஷ்டப்பட்டு அடுத்தவங்களையும் கஷ்டப்படுத்திக்கிட்டு கடைசியில அசிங்கப்பட்டு நிக்கக்கூடாது.

எனக்குத் தெரிஞ்சவரோட மனைவி ஆபீஸ்ல இருந்து வந்த ஒரு போன் கால நம்பி பெரிய சண்டையே போட்டு...அப்பப்பா....அந்த சமயத்துல அந்த நண்பரப் பாக்கனுமே!

tbr.joseph said...

வாங்க ராகவன்,

சந்தேகம் உடனிருந்து கொல்லும் வியாதி. சந்தேகமே வந்தாலும் அதை நேர்மையா அறிவுப்பூர்வமா சமாளிக்கனும். அத வெச்சுக்கிட்டு தானும் கஷ்டப்பட்டு அடுத்தவங்களையும் கஷ்டப்படுத்திக்கிட்டு கடைசியில அசிங்கப்பட்டு நிக்கக்கூடாது.//

சரியா சொன்னீங்க. இப்ப பெரும்பாலான உறவுகளும் நட்புகளும் நஷ்டப்படுவதே இந்த சந்தேகத்தாலதான்..

Post a Comment