Tuesday, October 17, 2006

செல்வம்

‘நம்மில் சிலர் திரண்ட செல்வத்துக்கு அதிபதிகளாக உள்ளோம். நம்மில் பலருடைய செல்வமோ நமக்கு அதிபதியாக உள்ளது.’

ஒரு நாள் ஏசுபிரான் மக்களிடையே போதித்துக்கொண்டிருந்த சமயத்தில் ஒரு வாலிபன் அவரை அணுகி ‘போதகரே நான் கடவுளுக்கு உகந்தவனாக ஆவலாய் உள்ளேன். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?’ என்றி வினவினான்.

‘நீ கடவுளுடைய கட்டளைகளைக் கடைபிடி. மீட்பு பெறுவாய்.’ என்றார் ஏசு.

அந்த இளைஞன் மறுமொழியாக, ‘போதகரே நான் கடவுளுடைய கட்டளைகள் யாவற்றையும் சிறுவயது முதலே கடைபிடித்து வருகிறேன்..’ என்றான்.

அந்த இளைஞன் ஒரு பெரும் செல்வந்தன் என்பதை ஏசு அறிந்திருந்தார். ஆகவே, ‘நீ போய் உன் செல்வத்தை விற்று வறியவர்களுக்குக் கொடு. பிறகு என்னை வந்து பின்செல்’ என்றார்.

இளைஞன் வாடிய முகத்தோடு திரும்பிச் சென்றான்.

ஏசு கூறியதன் பொருள் செல்வந்தர் எவரும் சொர்க்கத்தையடைய முடியாதென்றோ அல்லது செல்வந்தர்கள் இறைவனுக்கு உகந்தவர்களாக இருக்க் முடியாதென்rறோ பொருள் அல்ல.

செல்வந்தர்கள் இறைவனுக்கு உகந்தவர்கள்தான். செல்வத்துக்கு அடிமையாகிப் போனவர்கள் அல்ல.

நம்மில் பலருக்கும் நம்முடைய உடல் மற்றும் ஆத்ம நலனைவிட நம்மிட ஆஸ்திகள்தான் முக்கியமாகத் தெரிகிறது..

இளம் வயதில் நேரம் காலம் பாராமல் உழைக்கிறோம். எதற்கு? கூடிய மட்டும் செல்வம் சேர்ப்பதற்கு.

ஆனால் அதை ஆற அமர்ந்து அனுபவிக்கும் வயதில் நோய்க்கும் மருந்துக்குமே நம்முடைய செல்வம் கரைந்து போகிறது.

செல்வம் தேவைதான். ஆனால் அது நம்முடைய தேவைக்குள் இருக்க வேண்டும்.

நாம் எத்தனை செல்வந்தர்களாகவோ, செல்வாக்குள்ளவர்களாகவோ இருப்பினும் இறுதியில்நமக்கு கிடைக்கப்போவதென்னவோ ஆறடி நிலம்தான்.

அதை உணர்ந்திருந்தாலே போறும், குறைகள் தீரும், கவலைகள் மாறும், குழம்பிய மனதில் அமைதி வந்தேகும்..

***

6 comments:

SP.VR.சுப்பையா said...

இந்துக்களுக்கு அந்த ஆறடி நிலம்கூடக்கிடையாது தம்பி!
கட்டையைக் கொண்டுபோய் எரித்துவிடுவார்கள்.
முடிசார்ந்த மன்னனும் ஒருநாள் பிடி சாம்பலாகிப்போவான் என்பதுதான் உண்மை!
செல்வத்தை விடுங்கள் - ஒரு காது ஒடிந்த ஊசி கூட கடைசியில் உன்னுடன் வராது என்று தான் பட்டிணத்தார் பாடி வைத்துவிட்டுப்போனார்
அதை உணர்ந்தவன் எத்தனை பேர் என்கிறீர்கள்?

tbr.joseph said...

வாங்க சுப்பையா,

ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா என்ற பாட்டு நினைவுக்கு வந்தது..

அதுவும் சிலருக்கு இல்லையென்கின்றபோது விஷயம் இன்னும் சீரியசாகிறது..

நீங்க சொல்றாப்பல அதை உணர்ந்தவர் எத்தனை பேர்? பூஜ்யம் என்றுதான் கூறவேண்டும்..

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஜோசப் சார்; இது போல நிறையச் சொல்லுங்க வேதாகமத்தில் இருந்து! கருத்துக்குச் சுவையாக இருக்கிறது!

சுப்பையா சார் காதற்ற ஊசி பற்றிச் சொன்னார். "ஒட்டகம் ஊசியின் காதிலே நுழைவது எளிது. ஆனால் பணக்காரன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது கடினம்" என்ற வாக்கியம் வரும்.

நானும் பலமுறை யோசிப்பேன், ஏன் செல்வந்தர்களை ஏசுபிரான் புறம் தள்ளுகிறார் என்று. அப்பறம் வயதாக வயதாகத் தான் புரிந்தது. "கடினம்" என்று தான் சொல்கிறார். செல்வச் செருக்கு அழிந்த செல்வந்தனைப் புறம் தள்ளவில்லையே! உங்கள் பதிவைப் பாத்த பின்னர் இன்னும் நன்றாகவே புரிகிறது! நன்றி சார்.

செல்வத்தின் மீதுள்ள அதீத பற்று போகவில்லையா; சரி அதை விடப் பெருஞ்செல்வத்தைக் காட்டினால்? இந்த Shareஐ விட அந்த Shareஐ வாங்கினால், அதன் மீது பற்று வந்து விடுகிறது அல்லவா?
"செல்வச் செழிப்பாகவே இருந்து கொள்; மாற வேண்டாம்; வா, அந்தப் பெருஞ்செல்வத்தைக் காட்டுகிறேன்", என்று உடையவர் அரங்கன் திருமுகத்தைக் காட்டிய கதை தான் நினைவுக்கு வந்தது!

பள்ளியில் என் குரலை விரும்பி 1st Friday Mass-இல், "இன்றைய வேத வாசிப்பு" என்னைப் படிக்கச் சொல்வார், ஃபாதர். அந்த நாட்கள் மிக இனிமையானவை! மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்து விட்டீர்கள். மீண்டும் நன்றி!

G.Ragavan said...

ஜோசப் சார் எனக்குப் பட்டினத்தடிகள் வாழ்க்கை நினைவிற்கு வருகிறது. பல் துலக்குவது முத்துப் பொடி. வாய் கழுவப் பன்னீர். வேளைக்கு அறுசுவை உணவுகள். வாதுமைப் பருப்பை அரைத்துப் பன்னீரில் வெல்லமும் கலந்து பிசைந்து அதனை உருட்டி நெய்யில் பொரித்தெடுத்து மூன்று வேளையும் சாப்பாட்டிற்கு முன்னும் பின்னும் தங்கத் தட்டில் உண்ணக்கூடிய அளவிற்குச் செல்வம். அரிசி மூட்டிகள் வந்தால் வைக்க இடமில்லையெனில் வைரமூட்டைகளை வீதிக்கனுப்பும் பெருந்தனம். அவருக்கு ஒரு நாள் ஈசன் உணர்வித்தான். "காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே" என்று மகன் வாயினிற் சொல்லச் சொல்லி.

அதற்குப் பிறகு அவர் பட்டினத்தாராக மாறினார். அவருடைய நிலையைக் கண்டு சோழனிடம் போய்ச் சொன்னார்கள். சோழன் வெகுண்டான். நாட்டின் பெருஞ் செல்வந்தன் இப்படி ஆவதா என்று!

கோயில் மண்டபத்தில் உட்கார்ந்திருந்த அவரிடம் நேரடியாக வந்து நின்றான். இப்படி ஆனதால் என்ன பயன் என்றும் கேட்டான். அப்பொழுது அடியவர் சொன்னார். "வழக்கமாக மன்னன் உன்னைப் பார்க்கையில் நீ அமர்ந்திருக்க பிறகே நான் அமரும் நிலை. ஆனால் இன்று நான் அமர்ந்திருக்க நீ நின்று கொண்டிருக்கும் நிலை." என்றாராம்.

tbr.joseph said...

வாங்க KRS,

"செல்வச் செழிப்பாகவே இருந்து கொள்; மாற வேண்டாம்; வா, அந்தப் பெருஞ்செல்வத்தைக் காட்டுகிறேன்", என்று உடையவர் அரங்கன் திருமுகத்தைக் காட்டிய கதை தான் நினைவுக்கு வந்தது!//

உண்மைதாங்க. இந்த உலகத்துல நீ சேர்த்துவச்சிருக்கற சொத்து செல்லரித்துப் போக வாய்ப்புள்ளது. ஆனால் என்றும் அழியா சொத்து சொர்க்கத்தில் இருக்கு என்பார் ஏசு ஒரு இடத்தில்..

tbr.joseph said...

வாங்க ராகவன்,

"வழக்கமாக மன்னன் உன்னைப் பார்க்கையில் நீ அமர்ந்திருக்க பிறகே நான் அமரும் நிலை. ஆனால் இன்று நான் அமர்ந்திருக்க நீ நின்று கொண்டிருக்கும் நிலை." என்றாராம்.//

ஆஹா.. ரொம்ப நல்ல எடுத்துக்காட்டு ராகவன்.. அதுதான் பதவிக்கும், சொத்துக்கும் உள்ள மதிப்பு!

Post a Comment