Friday, October 06, 2006

சமுதாயத்தில் நம் பங்கு

“ஒரு இன்னிசைக் குழுவிலுள்ள கீ போர்ட் வாசிப்பவரிலிருந்து வயலின், தபேலா, புல்லாங்குழல் என எந்த ஒரு சிறிய கருவியை இயக்குபவரும் முக்கியம். ஒருவர் சுருதி மாறினால் கூட கச்சேரி களைகட்டாது.”
வாழ்க்கையிலும் அப்படித்தான்.

நம் குடும்பத்திலும் சரி அலுவலகத்திலும் சரி, ஒவ்வொரு அங்கத்தினரும் தன்னுடைய இடத்தை உணர்ந்திருத்தல் மிக, மிக அவசியம்.

நான் கடைக்குட்டிதானே என்று குடும்பத்திலும் ஒரு சிப்பாந்திதானே அல்லது நான் கழிப்பிடத்தைச் சுத்தப்படுத்தும் கடைநிலை ஊழியந்தானே என்று கருதி அலுவலகத்திலும் அசிரத்தையாக இருந்தால் குடும்பமும் அலுவலகமும் சீராக இயங்க இயலாமற் போய்விட வாய்ப்பிருக்கிறது.

நான் குமாஸ்தாவாக பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் எனக்கு மேலதிகாரியாக இருந்த ஒரு கணக்காளர் தனக்கு கீழ் பணியாற்றுபவர்களை முக்கியமாக கடைநிலை ஊழியரான சிப்பந்தி மற்றும் அலுவலகத்தை சுத்தம் செய்பவரை மிகவும் கேவலமாக நடத்துவார்.

எனக்கு மேலாளராக இருந்தவர் மிகவும் தங்கமானவர். அவர் இந்த கணக்காளருடைய பொறுப்பற்ற நடத்தையைக் குறித்து கேள்விப்பட்டும் சிலகாலம் பொறுத்து பார்த்தார். அவர் திருந்துவதாகத் தெரியவில்லை. மேலாளருடைய அறிவுரையின்படி இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து அலுவலகத்தை சுத்தம் செய்பவரும் எங்களுடைய சிப்பந்தியும் முன்னறிவிப்பில்லாமல் விடுப்பில் சென்றனர்.

அலுவலகத்தை சுத்தம் செய்ய முடியாமல்போனது. எங்களைப் போன்ற குமாஸ்தாக்கள் பணியாற்ற தேவையான லெட்ஜர்கள், கோப்புகளை எடுத்து கொடுக்க சிப்பந்தியும் இல்லாமல் அலுவலகப் பணி ஸ்தம்பித்துபோனது.

அன்று மாலையே எங்களுடைய மேலாளர் எங்களையெல்லாம் கூட்டி இவ்வாறு கூறினார். ‘நான் லீவில போனாலும் பிராஞ்ச்ல பெரிசா எந்த ப்ராப்ளமும் வராது. என் வேலைய நம்ம அசிஸ்டெண்ட் மேனேஜர் பாத்துக்குவார். ஆனா ஸ்வீப்பரோ, ஸ்கேவஞ்சரோ ஏன் நம்ம பியூனோ ஒரு நாள் வராட்டியும் ஆஃபீஸ் என்னாவும்னு இப்ப தெரிஞ்சிக்கிட்டோமில்ல? அதனால இங்கருக்கறவங்கள்ல யாருமே யாருக்கும் தாழ்ந்தவங்க இல்ல. இந்த ஆஃபீச பொறுத்தவரை நம்ம ஒவ்வொருத்தருக்கும் ஒரு ரோல் இருக்கு. அத உணர்ந்து பொறுப்பா நடந்துக்கிட்டா எல்லாருக்குமே நல்லது.’

நேரிடையாக கணக்காளரை குறை கூறாமலே அவருக்கு உணர்த்தும் வகையில் மேலாளர் ப்ராக்டிக்கலாக செய்துக் காட்டியது அலுவலகத்திலிருந்த எல்லோருக்குமே பிடித்திருந்தது.

நம் குடும்பங்களிலும் குடும்பத் தலைவியரைப் பொருட்படுத்தாமல் இருக்கும் குடும்பத் தலைவர்கள் பலரை நான் சந்தித்திருக்கிறேன்.

‘அவ என்ன சார் ஹவுஸ் வைஃப் தானே? வீட்ல சும்மாதான இருக்கா? செஞ்சா என்ன? நம்மள மாதிரியா?’ என்று மிகவும் அலட்சியத்துடன் தங்களுடைய மனைவியரைப் பற்றி கூறுவதையும் கேட்டிருக்கிறேன்.

வேறு சிலர், ‘வீட்லருக்கற பொம்பளைக்கு எதுக்கு சார் காஸ்ட்லி ட்ரெஸ்? சும்மா நூறு, நூத்தம்பது ரூபாய்க்குள்ள இருந்தா போறும்.’ என்பர்.

கடையிலிருப்பவர் தன்னைப் பற்றியோ அல்லது தன்னுடைய மனைவியைப் பற்றியோ என்ன நினைப்பார் என்பதையெல்லாம் பொருட்படுத்தமாட்டார்கள்.
இத்தகையவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டாலும் கடைக்காரர் பார்வையிலும் மற்றவர்கள் பார்வையில் தரமிறங்கிப் போவதை அவர்கள் உணர்வதில்லை.

குடும்பம் ஒரு கோவில். தெய்வம் இல்லாத கோவில் வெறும் கட்டடம்தான். தெய்வம் மட்டுமிருந்தால் போதாது.. தெய்வத்தை வணங்க பக்தர்கள் இல்லையென்றால் எப்பேர்பட்ட கோவிலும் பராமரிக்க ஆளின்றி சிதைந்து போகும்.

This is a house. To make this a home we need people. என்ற வாக்கியத்தை எங்கோ படித்த ஞாபகம் வருகிறது.

ஆம் நண்பர்களே.. நம்மில் ஒவ்வொருவருக்கும் நம் குடும்பத்திலும் இச்சமுதாயத்திலும் ஒரு முக்கியமான பங்கு இருக்கிறது. அதை உணர்ந்து செயல்பட்டால் நம் குடும்பமும் சரி, நாம் வாழும் சமுதாயமும் சரி அமைதியான, மகிழ்ச்சியான பூங்காவாக ஜொலிக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.


*******

12 comments:

துளசி கோபால் said...

பெண் இனத்தின் சார்பாக(!!!!!) நன்றிங்க.

இங்கே ஒரு சமயம் ஒரு சர்வே நடந்துச்சு. அதோட முடிவு என்னன்னா
பொம்பளைங்க வீட்டுலெ செய்யற ஒவ்வொரு வேலைக்கும் சம்பளம் போட்டு
கடைசியிலே கூட்டிப் பார்த்தா, கணவன் சம்பாரிகிறதைவிட அஞ்சு மடங்கு வந்துச்சு:-)

tbr.joseph said...

வாங்க துளசி,

பொம்பளைங்க வீட்டுலெ செய்யற ஒவ்வொரு வேலைக்கும் சம்பளம் போட்டு
கடைசியிலே கூட்டிப் பார்த்தா, கணவன் சம்பாரிகிறதைவிட அஞ்சு மடங்கு வந்துச்சு:-)//

அஞ்சு மடங்கா.. இது கொஞ்சம் ஓவரா தெரியல:)

செந்தழல் ரவி said...

////This is a house. To make this a home we need people////

இது மிக நல்ல வரி...எடுத்துக்காட்டியதற்க்கு நன்றி...

tbr.joseph said...

நன்றி ரவி:)

ஜடாயு said...

நல்ல பதிவு ஜோசப் அவர்களே. மிக எளிய வார்த்தைகளில் அரிய விஷயங்களைச் சொல்றீங்க - பாராட்டுக்கள்.

// நேரிடையாக கணக்காளரை குறை கூறாமலே அவருக்கு உணர்த்தும் வகையில் மேலாளர் ப்ராக்டிக்கலாக செய்துக் காட்டியது அலுவலகத்திலிருந்த எல்லோருக்குமே பிடித்திருந்தது.//

இங்கு தான் ஒரு உண்மையான leader உடைய டச் தெரிகிறது. நாம் பணிபுரியும் இடத்தில் பெரும்பாலானாவர்கள் ஈகோ உள்ள ஆசாமிகளாகவே இருப்பார்கள். அவர்களுக்குப் புரியவைக்க இந்த மாதிரி வழிமுறைகள் தான் சரி. இது கொஞ்சம் கடினமான வழி, ஆனால் கண்டிப்பாக ஒர்க் அவுட் ஆகும்.

// வேறு சிலர், ‘வீட்லருக்கற பொம்பளைக்கு எதுக்கு சார் காஸ்ட்லி ட்ரெஸ்? சும்மா நூறு, நூத்தம்பது ரூபாய்க்குள்ள இருந்தா போறும்.’ என்பர். //

நன்றாக சம்பாதித்தும் இப்படி சொல்பவர்களை பச்சை துரோகிகள் என்பேன். வாழ்க்கை என்பதை கணக்கு வழக்கு என்பதாகவே பார்ப்பவர்கள்.

// குடும்பம் ஒரு கோவில். தெய்வம் இல்லாத கோவில் வெறும் கட்டடம்தான். தெய்வம் மட்டுமிருந்தால் போதாது.. தெய்வத்தை வணங்க பக்தர்கள் இல்லையென்றால் எப்பேர்பட்ட கோவிலும் பராமரிக்க ஆளின்றி சிதைந்து போகும். //

தெய்வம் யாரு பக்தன் யாருன்றதுல குழப்பமே இல்லை :))

கோவி.கண்ணன் [GK] said...

பதிவு அருமை !

சமிபத்தில் வந்த மற்றவர்களின் பதிவை இணைத்துப் பார்த்தால் இது எதோ உ.கு பதிவு போல உள்ளது !

உயர்ந்தோர் தாழ்ந்தோர் ஒருவரும் இல்லை !

:)))

tbr.joseph said...

வாங்க ஜடாயு,

தெய்வம் யாரு பக்தன் யாருன்றதுல குழப்பமே இல்லை //

வெளிய சொல்லிக்கறமோ இல்லையோ இது எல்லாருக்குமே தெரியும்.. அவங்கதானங்க ஒரு வீட்ட கோவிலாக்கறதும் சுடுகாடாக்கறதும்?

தெய்வம்னு நினைச்சா குடும்பத்துல அமைதியும் சந்தோஷமும் இருக்கும். இல்ல வேற ஏதாச்சும்னு நினைச்சா சண்டையும் சச்சரவும்தான்..

tbr.joseph said...

வாங்க கண்ணன்,

சமிபத்தில் வந்த மற்றவர்களின் பதிவை இணைத்துப் பார்த்தால் இது எதோ உ.கு பதிவு போல உள்ளது !//

நிச்சயமா இல்லீங்க. நீங்க குறிப்பிட்ட எந்த பதிவையும் நான் படிக்கல..

உயர்ந்தோர் தாழ்ந்தோர் ஒருவரும் இல்லை !//

நூத்துல ஒரு வார்த்தை.. அதை உணர்ந்திருக்கறவங்க சந்தோஷமாவும் உணராதவங்க வியாதியோடயும் (மன, உடல் ரெண்டும்) இருப்பாங்க..

G.Ragavan said...

தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம்னு பாரதியார் சொல்லீருக்காரே. அது குலத்துக்கு இனத்துக்கு மட்டுமல்ல வீட்டுக்குந்தான்.

குடுக்க வேண்டிய மரியாதையக் குடுக்கலைன்னா அது திரும்பிக் கிடைக்கும் போது நல்லா வசமாக் கிடைக்கும். அப்ப ஐயோன்னாலும் வராது. அப்பான்னாலும் வராது.

எங்க பள்ளிக்கூடத்துல ஒரு வாத்தியார் இருந்தாரு. அவரு பசங்கள வேலைக்கு அனுப்பிக்கிட்டேயிருப்பாரு. போயி மிச்சரு வாங்கீட்டு வா. காராச்சேகு வாங்கீட்டு வா. ஞானம் பேக்கரி பன்னு....அது இதுன்னு. அவரு பையன் டியூஷன் படிக்கிற எடத்துல அந்த டீச்சரு அவரு பையனத்தான் இப்பிடியே அனுப்புறது. அது அவருக்குத் தெரிஞ்சப்புறமா பசங்கள வேலைக்கு ஏவுறத நிறுத்தீட்டாரு.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

அது அவருக்குத் தெரிஞ்சப்புறமா பசங்கள வேலைக்கு ஏவுறத நிறுத்தீட்டாரு. //

இந்த மாதிரி நிறைய உதாரணங்கள் சொல்லலாம்.. அவங்கவங்களுக்கு வரும்போதுதான் தெரியும் தல வலி!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இந்த ஆஃபீச பொறுத்தவரை நம்ம ஒவ்வொருத்தருக்கும் ஒரு ரோல் இருக்கு. அத உணர்ந்து பொறுப்பா நடந்துக்கிட்டா எல்லாருக்குமே நல்லது.//

ரொம்ப அருமையாச் சொன்னார். அவரவர் ரோல், அவரவர் பங்களிப்பு என்ன-ன்னு ஒரு புரிதல் வந்துடுச்சுன்னா
அதுக்கப்புறம் இந்த வெட்டி பந்தா எல்லாம் பறந்தே போய்விடும்!

அலுவலகத்தில் ரோல் மாடல் போல் ஒரு மேலாளரோ இல்லை இன்னொருவரோ ஒரு பிரச்னையை அழகாகச் சமாளிப்பதைப் பார்க்கும் போது, அந்தப் பண்பும், குணமும் நம்மை அறியாமல் ஒட்டிக் கொள்ளும். வீட்டிலும் அதே நல்ல அணுகுமுறைகளைக் கையாளத் தொடங்குவோம்.

நல்ல பதிவு ஜோசப் சார்!

tbr.joseph said...

நன்றி KRS

Post a Comment