Thursday, October 05, 2006

நம்பிக்கையோடு இருங்கள்

“நமக்கு எல்லாமே சாதகமாக இருக்கும் சூழலில் இறைவன் மீது நம்பிக்கை வைத்திருப்பது பெரிய விஷயமல்ல.. ஆனால் நாம் பலவித இக்கட்டுகளிலும், இடைஞ்சல்களிலும் சிக்கித் திணறும் நேரத்திலும் இறை நம்பிக்கையை விடாதிருப்பதுதான் பெரிய விஷயம்.”

என்னுடைய இரு மக்களும் படித்து முடித்துவிட்டார்கள். ஒருவருக்கு திருமணம் முடிந்துவிட்டது. மற்றவளுக்கு வேலை கிடைத்துவிட்டது.

எனக்கு சென்னையிலேயே மாற்றம் கிடைத்து மனைவி பிள்ளைகளோட மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

இந்த நேரத்தில் நான் இறைநம்பிக்கையைப் பற்றி எழுதுவது சுலபம். அது ஒரு பெரிய விஷயமல்ல..

ஆனால் நான் ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர் சந்திக்க நேர்ந்த இக்கட்டுகளையும், மன விசனங்களையும் இப்போது நினைத்துப் பார்க்கிறேன்..

கொச்சியில் நானும் என் மனைவியும். முக்கியமான ப்ராஜக்ட் ஒன்று பாதியில்.. முடியுமோ முடியாதோ என்ற ஒரு இக்கட்டான நிலையில். எங்களோடு இணைந்து ப்ராஜக்ட் செய்துக்கொண்டிருந்த மென்பொருள் நிறுவனம் மூடப்படும் சூழல்.. அதற்கு முழு பொறுப்பும் நான் தான் என்பதுபோன்ற மேலதிகாரிகளின் வசைபாடல்.

மூத்த மகள் சென்னையில் ஒரு ஹாஸ்டலில்.. படித்து முடித்து ஓராண்டாகியும் சரியான வேலை கிடைக்காமல் மனம் சோர்ந்து போயிருந்தாள்..

இளைய மகள் பள்ளி இறுதி வகுப்பில். தனியாக வேறொரு ஹாஸ்டலில்..

ஒரே ஊரிலிருந்தும் வாரம் ஒருமுறை மட்டும் சந்தித்து பேசிக்கொள்ளக் கூடிய சூழ்நிலை..

மனமும் உடலும் சோர்ந்துபோய் மாலையில் வீட்டுக்கு திரும்பும் நேரத்தில் ‘ரெண்டு பிள்ளைகளையும் தனியாக சென்னையில் விட்டுவிட்டு உங்களை நம்பி வந்தேனே என்னைச் சொல்லணும்.. என்னெ கொண்டுபோய் திரும்பி சென்னையிலயே விட்டுருங்க’ என்று நாள்தோறும் நச்சரிக்கும் மனைவி..

இத்தகைய சூழலில் இறைவன் என்றொருவர் இருக்கிறாரா என சலித்துப்போகும் சூழ்நிலையில் நான் இருந்தேன்.

எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை? என்றெல்லாம் பல முறை சிந்தித்திருக்கிறேன். இறைவனை நோக்கி கேட்டிருக்கிறேன்.

அப்போதெல்லாம் என் மனதில் எழுந்து ஓசை இதுதான்.

‘நம்பிக்கையோடு இரு.. காலம் மாறும்.. உன் கவலைகள் யாவும் தீரும். நான் இருக்கிறேன்..’

ஆம் நண்பர்களே..

நம்பிக்கையோடு இருந்தேன். நாள் தவறாமல் இந்த துன்பங்களிலிருந்து எனக்கு விடுதலை தாரும் என்று பிரார்த்தித்தேன்..

என் நம்பிக்கை வீண் போகவில்லை..

அந்த நன்றியுணர்வோடுதான் இப்போதும் அந்த இறைவனுடைய மகிமையை என்னால் இயன்றவரை எடுத்துரைக்கிறேன்..

நாம் வணங்கும் தெய்வம் இதுதான் என்றில்லை..

தெய்வங்கள் கோடி இருக்கலாம்.

நம்பிக்கை ஒன்றுதான்..

எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும் அதை மட்டும் இழந்துவிடாதீர்கள்..

தன்னம்பிக்கையும் இறைநம்பிக்கையும் கைகோர்த்து செல்லவேண்டும்..

வெற்றி நிச்சயம்..

******

6 comments:

dondu(#4800161) said...

அதனால்தானே கூறியுள்ளனர், "இதுவும் கடந்து போகும்" என்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்

துளசி கோபால் said...

நம்பிக்கைதாங்க வாழ்க்கை.

இல்லே வாழ்க்கையே நம்பிக்கையில்தானா?

'எப்படியோ நம்பினோர் கெடுவதில்லை'தானே?

tbr.joseph said...

வாங்க ராகவன் சார்,

அதனால்தானே கூறியுள்ளனர், "இதுவும் கடந்து போகும்" என்று.//

ஆமாம் சார்.

tbr.joseph said...

வாங்க துளசி,

நம்பினோர் கெடுவதில்லை'தானே?//

இது நான்கு மறை தீர்ப்பாயிற்றே.. உண்மையில்லாமல் இருக்குமா?

ஆத்மன் said...

தன்னம்பிக்கை - சிறப்பாக உழைக்க உதவும்.

இறை நம்பிக்கை - தீராத துன்பம் வந்தாலும் மனவலிமையுடன் சோராது உழைக்க உதவும்.

நமக்கு துன்பம் வருகையில், நமக்கும் மேலே தீராத வேதனைகள் கொண்டோரை, தீராத் துன்பத்திலும் மன வலிமையுடன் சாதிப்போரை நினைத்துக் கொண்டால், நம் துன்பம் ஒன்றுமே இல்லை என்றாகி விடும் - என்றுமே. உதாரணத்திற்கு - http://www.lifewithoutlimbs.org/
சென்று பார்க்கவும். ஏசுபிரான் இவருக்கு அளித்த மனவலிமையைப் பாரும்.

வாழ்க வளமுடன்!

- ஆத்மன்

tbr.joseph said...

வாங்க ஆத்மன்,

நீங்கள் பரிந்துரைத்த தளத்தில் என்னை மிகவும் தொட்ட வார்த்தைகள் இவை:

We all go through storms in life and sometimes we feel so helpless and feel that there is no hope. It’s so hard to understand, with our limited wisdom, why our Loving God would let “bad things” happen in our lives. //

என்ன அற்புதமான வார்த்தைகள். இதைத்தான் என்னுடைய பதிவிலும் சொல்ல நினைத்தேன். கடவுளின் செயல்களுக்கு விளக்கம் கேட்க முயல்வதைவிட அவர் மேல் நம்பிக்கை வைத்திருப்பது முக்கியம்!

Post a Comment