Tuesday, October 03, 2006

தம்மை மறந்தோர்..

‘எவனொருவன் தன்னையே மறக்கிறானோ.. அவனைத்தான் மற்றவர்கள் மறக்காதிருப்பர்..’

உண்மைதானே..

நம்முடைய வாழ்க்கைக் காலத்தில் நாம் இன்றும் நினைவில் வைத்திருக்கும்  இப்படிப்பட்ட மனிதர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய எண்ணிக்கையில்தான் என்றாலும் அவர்களை நினைக்கும்போதெல்லாம் நம் மனதில் ஒரு இனம்புரியாத சந்தோஷம் ஏற்படுகிறதே.

பொது வாழ்வில் எடுத்துக்கொண்டால் நம்முடைய நினைவில் நிற்கும் மனித தெய்வங்களை எண்ணிப் பாருங்கள்?

மகாத்மா, வினோபாஜி, பெருந்தலைவர் காமராஜ், அன்னைத் திரேசா, மார்ட்டின் லூத்தர் கிங், நெல்சன் மண்டேலா..

இன்னும் எத்தனையோ பேர்..

நம் குடும்பத்தில் நமக்காக தன்னையே மறந்து செருப்பாய் தேய்ந்த, மெழுகாய் உருகிய நம் பெற்றோர்..

நம் குடும்பத்தைப் பொருத்தவரை நான் மேலே குறிப்பிட்டுள்ள வாக்கியத்திற்கு மிகவும் பொருத்தமானவர்கள் இவ்விருவர்தானே?

அதை நாம் உணர்ந்திருக்கிறோமா?

நான் சென்னையில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் சில ஆண்டுகள் வாலண்டியராக பணியாற்றியுள்ளேன் என்பதை முன்பே கூறியிருக்கிறேன்..

அதில் நான் கண்டவர்களுள் பெரும்பாலோனோர்.. ஏன்? ஏறக்குறைய எல்லோருமே பிள்ளைகளால் கைவிடப்பட்டோர்தானே..

அவர்களுடைய கண்களில் நான் கண்ட சோகம், ஏமாற்றம்.. அதை மறக்க நான் பட்ட கஷ்டம் எவ்வளவு தெரியுமா?

இன்று ஊர்தோரும், நகர்தோரும் பெருகிவரும் இத்தகைய இல்லங்களுக்கு காரணகர்த்தா நீங்களும் நானுந்தானே?

நம்முடைய அன்றைய வாழ்விலும் சரி.. இதோ சகல வசதிகளுடன் நம் குழந்தைகளோடு சந்தோஷமாக வாழ்கிறோமே.. இந்த சந்தோஷத்துக்காக தங்களுடைய சந்தோஷத்தைத் தொலைத்தவர்களாயிற்றே நம் பெற்றோர்?

என்னுடைய இரு மகள்களில் மூத்தவள் இளவயதில் சற்று சுகம் இல்லாதவள். எப்போதும் நோய்வாய்பட்டு சுகவீனமாகிப்போவாள். களைப்போடு அலுவலகத்திலிருந்து வந்து நிற்பேன்.. ‘என்னங்க காலையிலருந்து பாப்பவுக்கு மேலுக்கு சரியில்லீங்க..’ என்பார் என் மனைவி..

உடல் களைப்பு மறந்துபோகும்.. என்னுடைய ஆயாசம் அடியோடு மறைந்துபோகும்.. குழந்தையை அள்ளி எடுத்துக்கொண்டு ஓடுவோம்.. திரும்பிவர இரவு எந்நேரமாகுமோ..

அப்படித்தானே நம்மையும் வளர்த்தவர்கள் நம் பெற்றோர்?

இதை நாம் உணர்ந்திருக்கிறோமா?

தம்மை மறந்த அவர்களை நாம் நினைத்திருக்கிறோமா?

சிந்திப்போம்..

2 comments:

G.Ragavan said...

ஜோசப் சார். எனக்கு ஒரு கந்தரநுபூதி வரி நினைவிற்கு வருகிறது. நீங்கள் சொல்லும் வரிகள் வேதாகமத்தில் வருகின்றவா? பொதுவாகவே எல்லாவூர் வேதங்களிலும் ஒரே மாதிரியான நல்ல கருத்துகள் சொல்லப்பட்டிருக்கும்.

"அறிவொன்று அறவந்து அறிவார் அறிவில்" என்பது அநுபூதிச் செய்யுள். நீங்கள் சொல்லியிருப்பதும் அதுதான்.

அறிவொன்று அறவந்து அறிவார் அறிவில்
பிரிவொன்று அறநின்ற பிரான் அலையோ
செறிஒன்று அறநின்று இருளே சிதைய
வெறி வென்றவரோடு உறும் வேலவனே

இதுக்கு விளக்கம் எழுதினால் அதுவே ஒரு பதிவாகும். குமரன், எஸ்.கே போன்றவர்கள் எடுத்துச் சொன்னால் நன்றாக இருக்கும்.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

நீங்கள் சொல்லும் வரிகள் வேதாகமத்தில் வருகின்றவா? //

இல்லைங்க.

தினமொரு சிந்தனை என்று கடந்த இரு வாரங்களாக என் மனதில் பட்டதை மேற்கோள்களாக காட்டி எழுதி வருகிறேன்..

இதுபோன்ற வசனங்கள் வேதாகமத்தில் வருகின்றனவா என்று தேடித்தான் பார்க்க வேண்டும்..

சிறில் அலெக்ஸ் அவர்களுக்கு தெரிந்திருந்திருக்க வாய்ப்புண்டு..

மற்றபடி நீங்கள் கூறிய வசனத்தை வைத்து ஒரு தனி பதிவு இனியது கேட்கின் வலைப்பூவில் எழுதுங்களேன்..

Post a Comment